எனது நாடக வாழ்க்கை/பூலோக ரம்பை

பூலோகரம்பை

ஈ. வெ. ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, இப்போது பொதுவுடைமைப் புரட்சி வீரராக விளங்கினார் தோழர் ஜீவானந்தம். அவர்மூலம்பொதுவுடைமை வீரர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகமாயினார். இவர்களில் ஏ. கே கோபாலன், பி.இராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாலதண்டாயுதம் தம்பதி சமேதராகவே நாடகம் பார்க்க வருவார். எனக்கு அவர் அளித்த ஒரு சிறிய வெள்ளிப் பரிசினைக்கூட நான் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறேன். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வெளிப்படையாகவே எழுதித் தொங்கவிட்ட எங்கள் முகப்புத் திரை பல்வேறு அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் காரணமாக சர்க்கார் அதிகாரிகளின் தொல்லையும் அதிகரித்தது. பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வெளியிடப் பெற்ற ‘ஜன சக்தி’ வார இதழுக்கு எங்கள் குழுவின் நடிகர் ராஜநாயகம் ஏஜண்டாகவே இருந்தார். சமுதாய நாடகங்களில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் சமதர்மக்கருத்துக்களைப் பிரசாரம் செய்து வந்தோம்.

பூலோகரம்பையில் ஒப்பந்தம்

திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்தத் தொடக்கத்திலேயே அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. சின்னண்ணா துணைவியாரின் கழுத்திலிருந்த சில நகைகளைப் பாங்கில் அடகு வைத்துப்பணம் வாங்கினோம். காரியங்கள் நடந்தன. குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென்று சின்னண்ணா திட்டமிட்டார். அதற்காக எங்கள் குழுவிலிருந்த பழைய நடிக நண்பர் கே.வி. சீனிவாசனைக் கம்பெனிக்கு வரவரைத்தார்.  நாடகத்தைத் திரைப்படத்திற் கேற்றவாறு எழுதும்பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தார். கே. வி. சீனிவாசன், சதிலீலாவதி பட டைரக்டர் ஏல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவியாளராக இருந்து அனுபவம் பெற்றவர். அவர் கம்பெனியில் இருந்து கொண்டே சின்னண்ணாவுக்கு ஆதரவாகப் பெரியண்ணா உட்பட எங்கள் எல்லேருடைய அபிப்ராயங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கோவையிருந்து பூலோக ரம்பை படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. 20.1-40இல் ஷண்முகா பிலிம்ஸ் எம். சோமசுந்தரம் சேலம் கந்தசாமி செட்டியார் நடிகை கே. எல் வி. வசந்தா ஆகியோர் திண்டுக்கல் வந்து பூலோகரம்பையில் நடிக்க எனக்கு மூன்றுமாத காலத்திற்கு ரூ.3750 சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்துச் சென்றார்கள் நெருக்கடியான நேரத்தில், கிடைத்த இந்தப்பணம் தெய்வம்தந்த வரப்பிரசாதமாக இருந்தது.

‘நாஷ்’ கார் வாங்கினோம்

பூலோக ரம்பை படப்பிடிப்புக்காக அடிக்கடி கோவைக்குப் போய் வர ஒரு கார் தேவைப்பட்டது. அதைக் கம்பெனிக்குச் சொந்தமாகவே வாங்குவதென முடிவுசெய்தார் அண்ணா. காரைக்குடியிலிருந்த எங்கள் நண்பர் மெக்கானிக் சங்கர் நாயுடு இதற்கு உதவினார், 30-1- 40 இல் ஒரு பழைய ‘நாஷ்’ கார் 1225 ரூபாய்களுக்கு வாங்கப்பட்டது. அப்போது நான் முக்கிய பாத்திர மேற்று நடிக்காத நாடகம் ஸ்ரீகிருஷ்ணலீலா ஒன்று தான். எனவே அந்த நாடகத்தைத் தொடங்கிவிட்டு, என்னைக் கோவைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் அண்ணா.

6 . 2. 40 இல் பூர் கிருஷ்ணலீலா தொடங்கியது. பூலோக ரம்பைபடத்தில் நடிப்பதற்காக அன்றிரவு 7மணிக்கு நான் காரில் கோவைக்குப் புறப்பட்டேன். இரவு 10 மணியளவில் ஈரோடு வந்து, எனது இனிய நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் தங்கினேன். மறுநாள் பகல் பெரியார் ஈ. வே. ரா அவர்களின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் நான்படத்தில் நடிக்க இருப்பதைப் பாராட்டும் முறையில் எனக்கு விருந்தளித்தார். இந்த விருந்தில் அறிஞர் அண்ணா, தோழர்கள் எம். ஏ. ஈஸ்வரன்,

ஏ.சங்கரய்யா முதலிய நண்பர்கள் கலந்து கொண்டு என்னை வாழ்த்தினார். 8 ஆம் தேதி காலை புறப்பட்டுக் கோவை சேர்ந்தேன்.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி. சகஸ்ரநாமம் முதலியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். சகோதரர் சகஸ்நாமம் அப்போது என். எஸ்.கே. படக்கம்பெனியின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். நீண்ட காலம் பழகிய நண்பர்களோடு இருந்ததால் சகோதரர்களைப் பிரிந்த தனிமை உணர்வு எனக்கு ஏற்படவில்லை.

பி. எஸ். இராமையா

கோவைராயல் இந்து ரெஸ்டாரண்டில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கதாசிரியர் பி.எஸ். இராமையாவும் அங்கேயே தங்கியிருந்தார். நான் என் அறைக்குச் சென்றதும், “வாங்கோ மிஸ்டர் ஷண்முகம்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “நான்தான் பி.எஸ்.இராமையா, பூலோகரம்பை கதையை நான்தான் எழுதுகிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர். பி.எஸ்.இராமையாஅவர்களோடு அதுதான் எனக்கு முதல் சந்திப்பு. அவருடைய அற்புதமான சிறுகதைகளை மணிக்கொடியில் நிறையப் படித்திருக்கிறேன். பூலோகரம்பைக்கு அவர் வசனம் எழுதுகிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ந்தேன். இருந்தாலும் அவர் இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. பிரபலமான ஒர் எழுத்தாளர் என் அறைக்கே வந்து, என்னை வரவேற்றது, அவருடைய எழுத்தில் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. நானும் பி.எஸ்.இராமையாவும் நெடுநாளைய நண்பர்களைப் போல் மனம் விட்டுப் பேசினோம். நெருங்கி உறவாடினோம்.

பாடலாசிரியர் ஆனை வைத்தியநாதய்யரும் எங்களோடு தங்கியிருந்தார், நான் போன மறுநாள்பாட்டு ஒத்திகைநடந்தது. டி.ஆர்.மகாலிங்கமும் நானும் பாடினோம். படத்தில் எங்க ளோடு என். எஸ். கே. டி. ஏ. மதுரம், கே, எல். வி. வசந்தா,

டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்பிரமணியம், டி. எஸ். பாலையா, பேபி ருக்மணி, பி.ஜி. வெங்கடேசன் முதலியோரும் நடித்தார்கள். பி, என்.ராவ், படத்தை டைரக்ட் செய்தார்.

தம்பியின் முதன்மை

திண்டுக்கல்லில் நான் இல்லாமலை நாடகங்கள்தொடர்ந்து நடைபெறுவதற்கு நடிகர்கள் வழிவகை செய்தார்கள். சிவலீலாவில் நான் புனேந்த விறகுவெட்டி, புலவர், சிவனடியார், எல்லாம் வல்ல சித்தர், வலைஞன் ஆகிய வேடங்களை நடிப்பதற்குத் தம்பி பகவதியே துணிவோடு முன்வந்தார். அதேபோல் குமாஸ்தாவின் பெண்ணிலும் நான் நடித்த ராமு வேடத்தைப் பகவதியே நெட்டுருப் போட்டார். ராமதாசில் இரண்டாவது ராமதாசாக நடிக்க கே. ஆர். ராமசாமி இசைவளித்தார். ஆக, ஷண்முகம் இல்லாமலே நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைமையை உருவாக்க நடிகர்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள். சம்பூர்ண இரமாயணம், மனோகரா முதலிய சில நாடகங்களுக்குத்தான் நான் தேவைப்பட்டது. திண்டுக்கல்லுக்கும் கோவைக்குமாக இரண்டு மூன்றுமுறை இவ்வாறு காரில் பயணம் செய்ய நேர்ந்தது. பெரியண்ணா என் உடல் நலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். கோவைக்கு அருகிலேயே இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்குமென்று எண்ணினார். பொள்ளாச்சி, திருப்பூர் இரு ஊர்களுக்கும் சென்றார். திருப்பூர் கொட்டகை உறுதிப்பட்டது. நான் எவ்விதக் கவலையுமின்றித் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். குதிரையேற்றம் பழகினேன். சிறுவாணி, பேரூர் முதலிய இடங்களில் நானும் மகாலிங்கமும் குதிரை சவாரி செய்தோம். பாலையாவுக்கும் எனக்கும் சிறுவாணிக் காட்டில் பலத்த சண்டை நடந்தது. படப் பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். திடீரென்று திருப்பூரிலிருந்து உடனே புறப்பட்டு வரும்படியாகப் பெரியண்ணா தொலைபேசி மூலம் அறிவித்தார். 15-3-40-ஆம் நாள் அதிகாலை காரில் புறப் பட்டுத் திருப்பூர் வந்தேன். தங்கை சுப்பம்மாளின் கணவருக்கு உடல் நலமில்லையென்றும் உடனே நாகர்கோவில்செல்ல வேண்டு மென்றும் கூறினார். சிறிதும் தாமதிக்காமல் திண்டுக்கல்வந்தோம். அன்றிரவு நடைபெற இருந்த நாடகம் நிறுத்தப்பட்டது. மாலை யிலேயே நாகர்கோவில் போய்ச் சேரும் எண்ணத்துடன் தம்பி பகவதியையும் அழைத்துக் கொண்டு காரில் பயணமானோம். சின்னண்ணா தம் மனைவியுடன் முன்பே நாகர்கோவில் சென்றிருந்தார்.

தங்கையின் கோலம்

நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லையே! பயணத்தில் பல்வேறு இடையூறுகள்; தடங்கல்கள். விருதுநகரைத் தாண்டியதும் டயர் பஞ்சர். ஸ்டெப்னியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். சாத்துரைக் கடந்ததும் ‘டியூப் பஞ்சர்.’ மீண்டும் எப்படியோ சமாளித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். கயத்தாற்றின் அருகே வரும்போது மற்றொரு டியூப்பும் பஸ்டு ஆகி விட்டது. மேலே பயணத்தைத் தொடர வழியில்லை. நான் பஸ்ஸில் திருநெல்வேலிக்குச் சென்றேன். இரவு நேரம். மிகுந்த சிரமபட்டு அலைந்து, புது டியூப் வாங்கினேன். வாடகைக் காரில் வந்து சேர்ந்தேன். டியூப்பைப்போட்டுக் கொண்டு புறப்பட இரவு மணி 10க்கு மேலாகிவிட்டது. எங்கும் நிற்காமல் இரவு 2 மணி யளவில் நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். கீழத் தெருவிலுள்ள எங்கள் இல்லத்தை அடைந்தோம். எங்கோ ஒரு நாய் ஊளை யிட்டது. கதவைத் தட்டினோம். அண்ணியர் கதவைத் திறந்தார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தோம். அண்ணியார் வாயிலிருந்து வந்த சொற்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தன. தங்கையின் கணவர் சுப்பையாபிள்ளை 15.3.40 அதி காலை 5 மணிக்கே காலமாகிவிட்டார். எங்கள் வருகைக்காகக் காத்திருந்து இரவு 7 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நாங்கள் வந்துவிட்டதை அறிந்த தங்கை சுப்புவின் அழுகுரல் என் செவிகளில் கேட்டது. 20 வயதே நிரம்பிய இளமைப் பருவம் இரு பெண் குழந்தைகள் ஏதுமறியாத நிலையில் அந்தப் பச்சிளங் குழந்தைகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. வெள்ளைச் சேலையைப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தில் கிடந்த என் அருமைத் தங்கையின் திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் என்னல் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? 

முன்பணம் பெற முயற்சி!

நாகர்கோவிலில் நான்கு நாட்கள் இருந்தோம். 18ஆம் தேதி திண்டுக்கல் திரும்பி நாடகத்தில் பங்கு கொண்டோம். நாலைந்து நாடகங்களில் நடித்துவிட்டு மீண்டும் கோவை சென்றுபடப்பிடிப்பில் ஈடுபட்டேன். முன்னரே திட்டமிட்டபடி என்னுடைய படப் பிடிப்பின் வசதியை முன்னிட்டுக் கம்பெனி திருப்பூரில் முகாம் இட்டது. கோவை பிரிமியர் சினிடோன் கூட்டுறவோடு குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுப்பதற்குரிய ஆயத்தங்களைச் சின்னண்ணா செய்து வந்தார். பொருளாதார நிலை சரியில்லாததால் பெரியண்ணாவுக்குப் படப்பிடிப்பில் விருப்பமில்லை, என்றாலும் இளையவரின் முயற்சியை அவர் தடை செய்யவில்லை. சின்னண்ணா சென்னை சென்று திரு எஸ். எஸ். வாசனைக் கண்டு பேசினார். குமாஸ்தாவின் பெண் படத்தின் விநியோக உரிமையை அவருக்கு அளிக்கவும், முன்கூட்டியே பணம் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

அரங்க நாடகம் அச்சேறியது

கம்பெனி திருப்பூருக்கு வந்தது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. திரைப்படத்தில் நடிப்பது என்னதான் வருவாய்க்குரியதாக இருந்தாலும் என்னுடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்தது. கம்பெனி தளர் நடைவிட்டுக் குதித்தோடும் பருவத்தில் இருந்ததால் எனக்கும் சொந்தப் படப்பிடிப்பில் அவ்வளவு சிரத்தை ஏற்படவில்லை. ஆயினும் சின்னண்ணா முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேவையில் இரவு படப்பிடிப்பு இல்லையென்றால் நான் உடனே திருப்பூருக்குக் காரில் வந்துவிடுவேன். அரங்கில் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண்நாடகத்தை அச்சில் கொண்டு வரவும் முயன்றேன். திருப்பூரில் குமாஸ்தாவின் பெண் நாடகம் நடைபெற்றபோது, அந்நாடகம் திருப்பூர் யூனியன் அச்சகத்தில் அச்சாகி நூல் வடிவிலும் வெளிவந்தது.

படாதிபதிகள் திட்டமிட்டபடி பூலோகரம்பை படம் மூன்று மாதங்களில் முடியவில்லை. எனவே அதனை அனுசரித்து நாங்களும் உடனே கோவையில் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைத் தொடங்க முடிவு செய்தோம்.