எனது நாடக வாழ்க்கை/அண்ணாவின் விமரிசனம்

அண்ணாவின் விமரிசனம்

கம்பெனி ஈரோடு சென்றது. அங்கும் குமாஸ்தாவின் பெண் வெற்றிகரமாக நடைபெற்றது. ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்கள் அனைவரும் நல்ல முறையில் பாராட்டி நாடகம் திரைப்படமாக வந்து அமோக வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் “விடுதலை”யில் இந்நாடகத்திற்கு ஓர் அருமையான இலக்கிய விமர்சனம் எழுதினார். அதன் தொடக் கத்தில் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“வனிதைகளை மணந்து வாழ்வதென்றாலே வெறுப்புக் கொள்ளும் வேதாந்தி! கண்டவர் கனியோ, மணியோ எனக் கூறி கட்டி யணைக்க விரும்பும் கட்டழகு படைத்த இருமங்கைகள்! கூனோ குருடோ-எவனோ ஒருவன் வரமாட்டான, வயதுக்கு வந்துவிட்ட பெண்னைக் கட்டிக் கொண்டு சாதியாசாரம் கெடாதபடி, பழி வராதபடி, தடுத்து ஆட்கொள்ள மாட்டான என்று சதா கவலைப் படும் தந்தை; சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவரது மனைவி; அவர்களின் இணை பிரியாத் தோழன் வறுமை; உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சியம் என எண்ணி வாழும் செல்வச் சீமான்; அவனது உதவி இருக்கும் போது வீட்டைப்பற்றிக் கவலை எதற்கு என்று எண்ணாம் இளங்காளை; காளையைக் சுற்றிலும் கண் சிமிட்டிக் கையசைத்துக் காலம் தள்ளும் காரிகைகள்; அத்தகை யோரைக் கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெற முடியும் என எண்ணாம் சினிமா டைரக்டர்; இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச் சுருட்டி வாழும் சில அந்தணர்கள்!

“குமாஸ்தாவின் மகள்” என்னும் நாடகத்தில் வரும் பாத்திரங்கள் இவைகளே. குடும்பபாரம்; வறுமையின் கொடுமை வரதக்ஷிணையின் குரூரம்: மண அறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளை விட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்’ தருகிறாள்-அதாவது அந்த நாடகத்தில் உண்டு.”[1]

இவ்வாறு விமர்சனத்தைத் தொடங்கி ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் விரிவாகப் எழுதிவிட்டு இறுதியில் “பல நாட்களில் நான் கண்டறியாதன இதில் கண்டேன். நான் கண்டதைச் சுருக்கித் தான் எழுதினேன். முழுவதையும் நீங்கள் காணவேண்டுமே; ஈரோடு வாசிகள் இன்றே செல்லுங்கள். மற்ற ஊரார் அழைப்பு அனுப்புங்கள் கம்பெனிக்கு. குமாஸ்தாவின் மகள் சினிமாவாகவும் வரப் போகிறது. கவனம் இருக்கட்டும்!!” என்று முடித்திருந்தார். இந்த விமர்சனம் எங்கள் நடிகர் அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் ஊட்டியது. பலமுறை படித்துப்படித்துச் சுவைத்தோம்.

ஈரோடு நண்பர்களுக்கெல்லாம் ஒரு இனிய விருந்து நடத்தி னார் பெரியண்ணா. இதில் பெரியார் ஈ. வே. ரா,அறிஞர் அண்ணா, டாக்டர் கிருஷ்ணசாமி, எம். ஏ. ஈஸ்வரன் முதலிய அனைவரும் கலந்து கொண்டனார்.

வியக்கத் தக்க நடிப்பு

குமாஸ்தாவின் பெண்ணில் கதாநாயகி சீதாவாக நடிக்க திருமதி எம். வி. ராஜம்மா ஏற்பாடு செய்யப்பட்டார். இவர் நாடகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார். திரைப்பட விநியோக உரிமையைப் பெறுவதற்காக முன் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். 30-6.40 இல் நடைபெற்ற குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு எஸ்.எஸ்.வாசன், நாராயண ஐயங்கார், சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு, மூர்த்தி பிலிம்ஸ் மருதாசலம் செட்டியார், எம். வி. ராஜம்மா, பெரியார் ஈ. வெ. ரா. அறிஞர் அண்ணா முதலியோர் வந்திருந்தனார். அன்று நாடகம் மிகச் சிறப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்தோடு நாடகம் முழுவதையும் பார்த்த எம். வி. ராஜம்மா, வாசன் ஆகியோர் நாடகம் முடிந்ததும் உள்ளே வந்தனார். பெண் வேடத்தோடிருந்த கலைஞர் ஏ. பி. நாகராஜனை ஏற இறங்கப் பார்த்தார்கள். உற்று நோக்கினார்கள். “சீதாவாக நடித்த இந்தப் பையனப்போல் ராஜம்மா நடித்துவிட்டால் போதும். படம் முதல் தரமாக அமைந்து விடும்” என்றார் எஸ். எஸ். வாசன். உடனே ராஜம்மா, ஐயோ! இந்தப் பையனைப்போல் எப்படி நான் சீதாவாக நடிக்கப் போகிறேன்? எனக்கு பயமாக இருக்கிறது!” என்று நாகராஜனின் நடிப்பை வியந்து போற்றினார். ஆம்; அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை! கலைஞர் நாகராஜனின் அந்தப் பெண் வேட நடிப்பு, அன்று நடிகர்களாகிய எங்களை யெல்லாம் கூட பிரமிக்க வைத்தது.

ஸ்பெஷல் ரயில்

சமுதாயச் சீர்திருத்த நாடகமாகிய குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுக்க முன் வந்த எங்களைப் பாராட்டும் முறையில் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் கம்பெனி முழுவதுக்கும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். 18-7.40இல் நடைபெற்ற இவ் விருந்தில் நகரப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனார். எல்லோர் உள்ளத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.

குமாஸ்தாவின் பெண் படபிடிப்புக்குரிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் அதற்கு வசதியாகக் கம்பெனி கோவைக்குச் சென்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் ஈரோட்டிலிருந்து கோவைக்கு, ஸ்பெஷல் ரயில் ஒன்று எங்களுக்காகவே விடப்பட்டது. அறிஞர் அண்ணா உட்பட ஈரோடு நகரப் பிரமுகர்கள் அனைவரும் வந்து எங்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பினார்கள்.

  1. இவ்விமர்சனம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வெளியிட்டுள்ள நாடக உலகில் அண்ணா என்னும் நூலில் உள்ளது.