என் சரித்திரம்/105 பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்

அத்தியாயம்—105

பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்
வேறு வீடுகள்

ல வீடுகளில் தேடியும் வந்த காரியம் கைகூடாமற்போகவே நான் உள்ளம் தளர்ந்து, “இன்னும் தேடக்கூடிய இடம் இருக்கிறதா?” என்று கவிராச நெல்லையப்பப் பிள்ளையைக் கேட்டேன்.

“உங்களுக்கு வேண்டிய சுவடி கிடைக்கவில்லையென்ற குறையைப் போக்க ஸ்ரீ நெல்லையப்பரே அருள் புரிய வேண்டும். ஒன்றும் தோற்றவில்லை. இன்னும் ஒரு வீடு இருக்கிறது. அங்கே கிடைக்கா விட்டால் பிறகு இந்த ஊரில் வேறு எங்கும் இல்லையென்றே நிச்சயம் செய்து விடலாம்.”

திருப்பாற்கடனாதன் கவிராயர்

“அது யார் வீடு?” என்று ஆவலோடு கேட்டேன். “எங்கள் முன்னோராகிய அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுட் சிறந்தவராகத் திருப்பாற்கடனாதன் கவிராயரென்று ஒருவர் இங்கே வண்ணார் பேட்டையில் இருந்தார். அவர் மகா வித்துவான். அவர் வீட்டில் பல ஏட்டுச் சுவடிகள் உண்டு. போய்ப் பார்க்கலாம். இப்போது அவருடைய பேரர் அதே பெயரோடு இருக்கிறார்” என்றார்.

“இப்போதே புறப்படலாமே” என்று நான் துரிதப் படுத்தினேன்.

“வாருங்கள், போகலாம்” என்று சொல்லி அவ்வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் அவ்வீட்டிலிருந்த திருப்பாற்கடனாதன் கவிராயர் மிகவும் பிரியமாக வரவேற்றார். அவர் சிறந்த குணசாலியாகத் தோற்றினார். கவிராஜ நெல்லையப்ப பிள்ளை முதலில் அவரை மிகவும் பாராட்டி விட்டு என்னை அறிமுகப்படுத்தி, பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் தேடிப் பார்க்கும் பொருட்டு நான் வந்திருப்பதைத் தெரிவித்தார். உடனே அவர், ”அப்படியா, முன்னமே தெரியாமற் போயிற்றே. நேற்றுத்தான் இவ்விடம் ஸப் ஜட்ஜ் கனகசபை முதலியாரவர்கள் தம் நண்பர் ஒருவருக்காக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு இம்மூன்றையும் வாங்கி யனுப்பினார். இவை மிகவும் திருத்தமான பிரதிகள். இவர்கள் முன்னமே வந்திருந்தால் கொடுத்திருப்பேன்” என்று சொன்னார். சில தினங்களுக்கு முன்பு வராமற் போனோமே என்ற வருத்தம் அப்போது எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் இந்த மூன்றுமுள்ள வீட்டில் வேறு நல்ல நூல்களும் இருக்கலாமென்று எண்ணி அந்த வீட்டிலுள்ள மற்ற ஏடுகளைப் பார்க்கலாமாவென்று கேட்டேன். அப்போது இரவு 8-மணியானமையால் மறுநாட் காலையில் வந்து பார்க்கலாமென்று திருப்பாற்கடனாதன் கவிராயர் சொன்னார். அப்படியே மறுநாள் நெல்லையப்பக் கவிராயரும் நானும் அங்கே போனோம். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் அப்போது தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயரென்பவரும் எங்களுடன் வந்தார். தம் வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் நாங்கள் பார்க்கும்படி திருப்பாற்கடனாதன் கவிராயர் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால் வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை. அவற்றை நாங்கள் மூவரும் பகுத்துக் கொண்டு தனித்தனியே பார்க்க ஆரம்பித்தோம் பெரிய சுவடி யொன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்துப் பார்த்தார். நான் ஒன்றை எடுத்தேன்.

அந்தச் சுவடியின் தலைப்பு என்னவென்று அனந்த கிருஷ்ண கவிராயரை நான் கேட்டபோது அவர், ‘திருமுருகாற்றுப்படை’ என்றார். எனக்குச் சிறிது ஆறுதலுண்டாயிற்று. மறுபடி சில ஏடுகளைத் தள்ளிப் பார்த்து, ‘பொருநராற்றுப்படை’ என்று சொன்னார். இதுவே பத்துப் பாட்டாக இருக்கலாமென்று பரமேசுவரனுடைய கருணையை நினைந்து நினைந்து உருகினேன் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. கவிராயரையே அந்த ஏட்டை ஒவ்வொன்றாகப் பார்க்கச் சொன்னேன். பத்துப் பாட்டு முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக உரையுடன் வரிசையாக இருந்தது. மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும்[1] கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு.... வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.

இராமன் கதை முதலியன

திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டு ஏட்டுப் பிரதியிலும் பத்துப் பாட்டின் மூலம் தனியே இல்லாதது கண்டு, திருநெல்வேலியில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருந்தால் பார்க்கலாமென்று என் நண்பர்களிடம் சொன்னேன். பழைய காலத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்த சம்பிரதி திருப்பாற்கடனாத பிள்ளை யென்பவர் வீட்டில் பல ஏடுகள் உள்ளனவென்று அவர்கள் சொல்ல அங்கே போய்ப் பார்த்தேன். அவையெல்லாம் பிற்காலத்து நூல்களாகவே இருந்தன. புலவர்கள் பழங் காலத்துத் தமிழ்ச் செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தார்கள். பிரபுக்கள் தாங்கள் படித்து இன்புறுவதற்கு ஏற்ற நூல்களை மாத்திரம் சேமித்து வைத்துக் கொண்டார்கள் போலும். அங்கே கண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணத்தின் தலைப்பில் இராமன் கதை யென்றும் அரிச்சந்திர புராணத்தின் தலைப்பில் அரிச்சந்திரன் கதையென்றும், நைடதத்தின் மேல் நளன் கதை யென்றும் எழுதியிருந்தன. இப்படியே வேறு நூற்பெயர்களிலும் இருக்கக்கண்டேன். அப்போது இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, நளன் கதை யென்று நூற்பெயர்களைக் குறிப்பிடுதல் என் ஞாபகத்துக்கு வரவே, தென்பாண்டி நாட்டில் அவ்வாறு வழங்கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்துகொண்டேன்.

மயிலேறும் பெருமாள் பிள்ளை

அத்தேசிகர் மிகச் சிறப்பித்துப் பாராட்டியிருக்கும் அவர் ஆசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்னும் வித்துவானுடைய ஞாபகம் அப்போது எழுந்தது. துறவியாகிய சாமிநாத தேசிகரே,

“திருநெல்வேலி யெனுஞ்சிவ புரத்தின் தாண்டவ
மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல், வாழ்மயி
லேறும் பெருமாள் மகிபதி”

என்று புகழ்கிறார். அந்த வித்துவான் கல்லாடத்துக்கு உரை எழுதியவர். சங்க நூல்களும் நச்சினார்க்கினியர் உரை முதலியனவும் தமிழ்நாட்டில் வழங்காத காலத்தில் கல்லாடமும் மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும் மிகவும் மதிப்புப் பெற்றிருந்தன. அப்புலவர் பெருமான் திருநெல்வேலியில் வசித்தவராதலால், அவர் வீட்டில் ஏடுகள் இருந்தால் கவனிக்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று.

“மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சந்ததியார் யாரேனும் இங்கே இருக்கிறார்களோ?” என்று நெல்லையப்பக் கவிராயரைக் கேட்டேன்.

“அவர் பரம்பரையில் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்றே ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய லௌகிகர். தமிழ் சம்பந்தமான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆனாலும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி, உடனே அவருக்குச் சொல்லியனுப்பினார்.

அவர் வந்தார். நெல்லையப்பக் கவிராயர் அவருக்கு என்னைப் பழக்கம் செய்வித்தது “இவர்கள் ஏடு பார்க்க வந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய வித்துவான்கள் பரம்பரையானமையால் உங்கள் வீட்டிலும் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார். அவர் “நான் பெரிய வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என் தகப்பனார் வரையில் அந்தப் படிப்பு இருந்து வந்தது. எனக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியை அவர் செய்விக்காமையால் இங்கிலீஷ் படித்தேன். இப்போது நான் நல்ல வக்கீல் குமாஸ்தாவாக இருக்கிறேன். சட்டத்தில் பழக்கம் உண்டு. என் வீட்டில் சட்ட புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. பழைய ஏடுகள் எங்கள் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதேன் என்றெண்ணிக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன். இப்போது ஒன்றுகூட இல்லை. இதோ கையிலிருக்கிற கட்டு நம்பர்க் கட்டு” என்று சொன்னார்.

“அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன்.

“நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.

“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான் வருந்தினேன்.நெல்லையப்பக் கவிராயர் உதவி

நெல்லையப்பக் கவிராயர் உதவி

பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் இருந்து சில வீடுகளைப் பார்த்து விட்டு நெல்லையப்பக் கவிராயர் அவர் தம்பி முதலியவர்களிடம் விடை பெற்றுக் கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன். அப்போது எனக்குப் பல வகையில் உதவி செய்த நெல்லையப்பக் கவிராயருடைய அன்பு என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! புறப்படுகையில்,

“சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே
அங்கங் குடன்வந் தளித்திட்டோன்-பொங்குபுகழ்
இன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்
அன்போ டுதவி செய்வா ரார்”

என்ற வெண்பாவை அவரிடம் சொன்னேன்.

மீட்டும் அதிருப்தி

கும்பகோணம் வந்த பின் என் பிரயாண விவரத்தை அம்பலவாண தேசிகருக்குத் தெரிவித்தேன். பிறகு வண்ணார் பேட்டைப் பிரதியோடு வேறு பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினேன். அப்பிரதியிலும் உரையில் சில பகுதிகள் குறைந்திருந்தன. திருநெல்வேலிக்குப் போயிருந்தபோது, ஆழ்வார் திருநகரியில் பல வித்துவான்கள் வீடுகள் உண்டென்று சொன்னார்களே. அங்கே போய்ப் பார்க்கலாமென்ற சபலம் அப்போது உண்டாயிற்று. ஆவணியவிட்டத்தைச் சார்ந்து சில நாட்கள் காலேஜில் விடுமுறை இருந்தது. அச்சமயம் போகலாமென்று நிச்சயித்து என் வரவை அந்தப் பிரதேசத்திலிருந்த சில நண்பர்களுக்கும், ஜவந்திபுரத்தில் திருவாவடுதுறை மடம் பெரிய காறுபாறாக இருந்த பன்னிருகைத் தம்பிரானுக்கும், அந்தப் பக்கத்தில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த சிவராம ஐயருக்கும் கடிதங்கள் எழுதினேன்.

கனகசபை முதலியார்

திருநெல்வேலியில் அக்காலத்தில் சப் ஜட்ஜாக இருந்த கனகசபை முதலியாரென்பவர் நான் சீவகசிந்தாமணியை வெளிப்படுத்திய காலத்தில் எனக்குப் பழக்கமானார்; உதவியும் செய்தார்; அப்போது தஞ்சாவூரில் இருந்தார். நல்ல குணமும் தமிழில் அன்பும் உடையவர்.

அவர் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகு எனக்கு, “நான் இவ்வூருக்கு வந்திருக்கிறேன். இந்தப் பக்கங்களில் தமிழ் வித்துவான்கள் இடங்கள் பல இருக்கின்றன. அங்கே ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சிக்கு அவை வேண்டுமானால் என்னாலான உபகாரம் செய்வேன்” என்று எழுதியதோடு அங்கிருந்து வந்த கனவானிடமும் சொல்லியனுப்பினார். நான் முதலில் திருநெல்வேலிக்குச் சென்றபோது அவர் வெளியூருக்குப் போயிருந்தமையால் அவரைப் பார்க்கவில்லை. ஆதலால் இரண்டாமுறை புறப்பட எண்ணிய போது என் வரவைப் பற்றி அவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன்.

என் கடிதங்களைப் பெற்ற நண்பர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு விடை எழுதினர். கனகசபை முதலியார் மாத்திரம் எழுதவில்லை. அவர் வெளியூருக்குப் போயிருப்பாரென்றும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்றும் எண்ணினேன்.

ஆவணியவிட்ட விடுமுறை தொடங்கியவுடன் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு மறுநாட் காலையில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். முதலில் கனகசபை முதலியாரைப் பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இராமல் அவர், “நான் வேறொருவருக்கு ஏடு தேடிக் கொடுக்கும் விஷயத்தில் சகாயம் செய்வதாகச் சொல்லி விட்டேன். அதனால் தங்களுக்கு இவ்விஷயத்தில் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே யென்று வருத்தமடைகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

ஆழ்வார் திருநகரி

அப்பால் கைலாசபுரத்தில் வக்கீலாக இருந்த என் நண்பர் ஸ்ரீமான் ஏ. கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து நான் வந்த காரியத்தைத் தெரிவித்தேன். அவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று அபயமளித்தார். பிறகு ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் ஈ. சுப்பையா முதலியாரவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றேன். முதலியாரவர்கள் மிக்க அன்புடன் ஆழ்வார் திருநகரிக்கு அழைத்துச் சென்றார்கள். போகும்போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளைப் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. ஆழ்வார் திருநகரியில் என் நண்பர்களையும் பார்த்தேன். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீடுகளிலுள்ள ஏடுகளையெல்லாம் நான் பார்க்கும்படியான நிலையில் செய்வித்திருந்தார்கள். முதலில் லக்ஷூமண கவிராயர் என்பவர் வீட்டிற்குப் போனேன். அவர் சிறந்த வித்துவானாகிய தீராதவினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. மூன்று நாட்கள் இருந்து தேடியும் நான் தேடிவந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு பல கவிராயர்கள் வீடுகளில் தேடினேன். ஒரு வீட்டிலும் அது கிடைக்கவில்லை. அதனால் என் மனம் மிக்க சோர்வையடைந்தது. அப்போது லட்சுமண கவிராயர் என் நிலைமையைக் கண்டு, “ஒரு விஷயம் மறந்துவிட்டேன். இங்கே என் மாமனார் இருக்கிறார். என் வேலைக்காரன் என் வீட்டிலிருந்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புத்தகம் இருக்கிறதா? என்று பார்க்கலாம்” என்றார். எங்ஙனமாவது முயன்று கிடைக்கும்படிசெய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் ஒருநாள் இரவு ஆலயத்தில் விசேஷமாதலால் நான் இருந்த வீதிவழியே பெருமாளும் சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள். அப்போது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்து நான் வந்த காரியத்தை நிறைவேற்றுவிக்க வேண்டுமென்று மிகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு என் நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்துகொண்ட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லக்ஷூமண கவிராயர் மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து, “இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்று தான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பிவிடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்” என்று ஒரு சுவடியை என்னிடம் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தன். சட்டென்று [2]”முல்லைப் பாட்டு” என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. அப்போது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை. மிக விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்பித் பார்த்தேன். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக இருந்தன. ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லையென்று பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அன்றிரவு முழுவதும் சந்தோஷத்தால் தூக்கம் வரவில்லை. மறுநாள் அந்த ஏட்டுப் பிரதியையும், ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை இவற்றின் பிரதிகளையும் லக்ஷு மண கவிராயரிடம் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடைபெற்றுத் திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.


  1. பெயரும் வருஷமும் ஞாபகமில்லை.
  2. இந்த முறை ஏடுதேடும் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும் கவலையையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்புடன் கலைமகள் பத்திரிகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் வெளியிட்டிருக்கும் நல்லுரைக் கோவை இரண்டாம் பாகத்திலும் பதிப்பித்திருக்கிறேன். அந்த விவரங்களை விரிவஞ்சி இங்கே சுருக்கமாக எழுதியுள்ளேன்.