என் சரித்திரம்/106 நல்ல சகுனம்

அத்தியாயம்—106

நல்ல சகுனம்
வெள்ளூர்க் கவிராயர் வீடு

ழ்வார் திருநகரிப் பிரயாணத்தில் வெள்ளூரென்னும் ஊரில் புகழ்பெற்ற கவிராயர் வீடொன்றில் ஏடு தேடியபோது ஒரு கம்பராமாயணப் பிரதியில் ‘இராமாவதாரம்’ என்ற பெயர் எழுதப் பெற்றிருந்ததைக் கண்டேன்.

“நடையி னின்றுயர் நாயகன் றோற்றத்தின்
இடைநி கழ்ந்த இராமாவ தாரப் பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை”

என்னும் கம்ப ராமாயணச் செய்யுளில் அந்நூற் பெயர் இராமாவதாரமென்றே கூறப்பட்டுள்ளது. ஆதலின் அதன் இயல்பான பெயர் இராமாவதாரமென்பதாக இருக்கலாமென்று தோற்றியது. பிற்காலத்திற் புறத்திரட்டு என்னும் நூலை ஆராய்ந்தபோது அதில் கம்பராமாயணச் செய்யுட்களின்கீழ் இராமாவதாரமென்ற பெயரே எழுதப் பெற்றிருத்தலைக் கண்ட பிறகு அந்தக் கருத்து உறுதியாயிற்று.

திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையாசிரியர் இன்னாரென்று அக்காலத்தில் தெரியவில்லை. நச்சினார்க்கினியருரையென்றே பலர் அதனைக் கருதி வந்தனர். நானும் அப்படியே எண்ணினேன். சீவக சிந்தாமணியின் முதற் பதிப்பில் நச்சினார்க்கினியர் வரலாறு எழுதிய போது அவர் உரை இயற்றிய நூல்களில் திருக்கோவையாரையும் சேர்த்திருந்தேன். வெள்ளூர்க் கவிராயர் வீட்டிற் கண்ட அந்நூற் சுவடி ஒன்றின்மேல், அவ்வுரை பேராசிரியருடையதென்ற குறிப்பு இருந்தது. நச்சினார்க்கினியர் கோவையாருக்கு உரை எழுதினாரென்ற கருத்தை உடனே மாற்றிக் கொண்டேன். பிரயோக விவேக உரையினாலும் இக்கருத்து வலியுற்றது. நான் சென்றிருந்த காலத்தில் அவ்வீட்டுத் தலைவராகிய கவிராயர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நான் ஒரு புத்தகமும் எடுத்துக்கொள்ளாமல் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

கிடைத்த பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு பத்துப் பாட்டை ஆராயத் தொடங்கினேன். சிலவற்றில் பத்துப் பாட்டுக்களும் இல்லை. சிலவற்றில் இடையிடையே சில பகுதிகள் இல்லை. சிலவற்றில் பிழைகள் மலிந்திருந்தன. ஒன்றிலேனும் தனியே மூலம் இல்லை. திருத்தமான பிரதி எங்கே கிடைக்குமென்ற கவலையில் மூழ்கியிருந்தேன்.

வீரபாண்டியக் கவிராயர் பிரதி

எப்பொழுதும்போல் ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்றிருந்த போது ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் பத்துப் பாட்டுக்காக நான் செய்த யாத்திரைகளைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டு, “இவ்வளவு சிரமப்பட்டும் முற்றும் உள்ள திருத்தமான பிரதி கிடைக்கவில்லை. ஆதீனத்தைச் சார்ந்த இடங்களில் எங்கேனும் கிடைத்தால் வாங்கி அனுப்பும்படி காரியஸ்தர்களுக்கு ஸந்நிதானம் உத்தரவிட்டால் அனுகூலமாக இருக்கும்” என்று தெரிவித்துக் கொண்டேன். என்னுடைய மன நலிவைக் கண்ட தேசிகர், “சிறிதும் கவலைப்பட வேண்டாம். ஆதீனத்தைச் சார்ந்த இடங்கள் பல இருக்கின்றன. எல்லோருக்கும் எழுதச் சொல்லி எப்படியாவது பத்துப் பாட்டுப் பிரதியை வருவித்துக் கொடுப் போம்” என்று தைரியம் கூறினார்,

“கிடைத்தால் நல்லது” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திருவாவடுதுறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. “தென்னாட்டுக் காரியஸ்தர்களுக்கெல்லாம் ஸந்நிதானத்தில் எழுதியிருக்கிறது. அனுகூலமான செய்தி கிடைக்கும்; கவலைப்படவேண்டாம்” என்று மடத்து ராயஸம் பொன்னுசாமி செட்டியார் அதில் எழுதியிருந்தார். அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப் பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப் பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி. பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத் திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது.

“இந்தப் பிரதி எங்கிருந்து கிடைத்தது?” என்ற வியப்போடு ஆதீனத் தலைவரை வினவினேன்.

“திருச்செந்தூர் மடத்தில் வீரபாகு பிள்ளையென்பவர் காரியஸ்தராக இருக்கிறார்; நல்ல திறமையுள்ளவர். அவர் வாங்கி அனுப்பினார்” என்று அவர் சொன்னார். அந்தப் பிரதியைப் பெற்றுக்கொண்டு கும்பகோணம் வந்து என் கைப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல பிழைகள் திருந்தின. மூலமில்லையே என்ற குறை ஒருபால் இருப்பினும் பத்துப் பாட்டுக்களுமுள்ள திருத்தமான பிரதி கிடைத்ததே போதுமென்ற திருப்தியோடு மேற்கொண்டு பதிப்புக்குப் பிரதியைச் சித்தம் செய்யலானேன்.

குறிஞ்சியில் குறை

இடையில் வேறொரு தடை நேர்ந்தது. குறிஞ்சிப் பாட்டில் ஓரிடத்தில் ஒரு பகுதி விட்டுப் போயிருந்தது. எல்லாப் பிரதிகளிலும் அதே குறை காணப்பட்டது. எவ்வளவு அடிகள் அங்கே இருக்க வேண்டுமென்பதை நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை பொருளின் தொடர்ச்சியைப் பார்க்கையில் சிறுபகுதியாக இருக்கலாமென்றே தோற்றியது பல மலர்களின் பெயர்கள் வரிசையாகச் சொல்லப் பெறும் இடம் இது. முன்னும் பின்னும் மலர்களுடைய பெயர்கள் வருகின்றன. இடையில் சில மலர்களின் பெயர்கள் அமைந்த பகுதியே காணப்படவில்லை. வீரபாண்டியக் கவிராயர் ஏடு கிடைத்ததனால் உண்டான மகிழ்ச்சி இந்தக் குறையால் ஓரளவு குறைந்தது.

தொடங்கியது முதல் இடைஞ்சல்களையே அனுபவித்துத் துயருற்றதனால் நான் ஓய்ந்து ஒன்றும் தோன்றாமல் இருந்தேன். அப்போது சைவ ஆதீனங்களில் திருவாவடுதுறையைப் போன்ற பழமையும் பெருமையும் உடைய தருமபுர ஆதீனத்தின் ஞாபகம் வந்தது. அதுகாறும் தருமபுர மடத்திலுள்ள ஏடுகளைத் தேடிப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு நேரவில்லை. அப்போது இரண்டு இடங்களுக்கும் இடையே இருந்த சிறிது மனஸ்தாபத்தால் திருவாவடுதுறை மடத்தின் சார்புடைய நான் தருமபுர மடத்திற்குச் செல்வதைச் சிலர் தவறாக நினைத்தல் கூடுமென்று முதலில் எண்ணினேன்.

பல வித்துவான்கள் இருந்து விளங்கிய தருமபுர ஆதீனத்து ஏடுகளை ஆராய்ந்தால் பத்துப் பாட்டுப் பிரதி கிடைக்கலாமென்ற ஆசை எனக்குத் தோற்றியது. தமிழாராய்ச்சி விஷயத்தில் இந்தச் சம்பிராதயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எடுத்த காரியம் நிறைவேறாமற் போகுமென்ற கருத்தால், திருவாவடுதுறைக்குச் சென்று ஆதீனத் தலைவரிடம் தருமபுர மடத்திற்குப் போய் ஏடு தேடவேண்டுமென்ற என் விருப்பத்தை வெளியிட்டேன். அம்பலவாண தேசிகர் அப்படியே செய்யலாமென்று அனுமதி அளித்ததோடு வண்டியையும், உடன் செல்லும்படி பொன்னுசாமி செட்டியாரையும் அனுப்பினார்.

[1]குறை நிரம்பியது

அதிருஷ்டம் என் பங்கில் இருந்தது. நான் தருமபுர மடாலயத்திற்குச் சென்று ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகரைக் கண்டு அவர் அனுமதி பெற்று அங்கிருந்த ஏடுகளைத் தேடினேன். நான் தேடிய பொருள் கிடைத்தது. அங்கே மிகப்பழையதாகிய பத்துப்பாட்டின் ஒற்றை ஏடுகள் சில அகப்பட்டன. அவற்றால் குறிஞ்சிப் பாட்டிற் குறையாக இருந்த பகுதி பூர்த்தியாயிற்று. நான்கு மலர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயினவென்று தெரியவந்தது. குறை நிரம்பப் பெற்ற சந்தோஷத்தோடு என் நன்றியறிவைத் தெரிவித்து அவ்வேடுகளைப் பெற்றுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். தருமபுரத்தில் பல நூல்களைக் கண்டேன். ஒட்டக்கூட்டர் இயற்றிய தக்கயாகப்பரணி மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்று இருந்தது. அப்போது அதில் என் கவனம் செல்லாமையால் அதனை எடுத்துக் கொள்ளவில்லை.

பத்துப்பாட்டு மூலம் இல்லாத குறை மாத்திரம் நிரம்பாமலே இருந்தது. சென்னையில் உள்ள அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலையில் ஒரு பத்துப் பாட்டுப் பிரதி இருந்தது அதனைப் பிரதி பண்ணச் செய்து வருவித்தேன். அதில் இரண்டு மூலம் இருந்தன. ‘இனிமேல் பத்துப் பாட்டுப் பிரதிகள் வேண்டுமென்று கவலைப்படுவதில் பிரயோசனமில்லை’ என்ற தீர்மானத்தோடு அந்நூலை அச்சுக்குச் சித்தம் செய்யத் தொடங்கினேன்.

திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து மிக்க உதவி புரிந்தார் என்னிடம் பாடங் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும், ஸ்ரீ ம.வீ. இராமனுஜாசாரியரும் வேறு சில அன்பர்களும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியில் உடனிருந்து ஒப்பு நோக்குதல் முதலிய பல வகை உதவிகளைச் செய்து வந்தார்கள்.

மற்றொரு பதிப்பு

நான் திருநெல்வேலிப் பக்கத்தில் ஏடு தேடியபோது அங்கங்கே சென்று சுவடிகள் பார்த்த செய்திகளைச் சுதேசமித்திரன் பத்திரிகை வாயிலாக அறிவித்து வந்தேன். சென்னைக் கல்வி இலாகாத் தலைவர் காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தவரும் தமிழறிஞருமான தி. த. கனகசுந்தரம் பிள்ளை என்பவர் அவற்றைக் கண்ணுற்று 18-9-88 ஆம் தேதியில் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “......... யான் சில காலமாகப் பத்துப் பாட்டுப் பிரதி தேடி இயன்ற வரையும் பிழைதிருத்தி எழுதிக்கொண்டு வருகிறேன். எட்டுத் தொகை நும் போலியரே அச்சிட வேண்டும். எம்மாலியன்ற பத்துப் பட்டையாதல் யாமச்சிடுவோம்” என்று எழுதினார். அது கண்டவுடன். நான் பாத்துப்பாட்டை அச்சிட ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு மறுமொழியாக அவரிடமிருந்து 30-9-88ஆம் தேதி வந்த கடிதத்தில், “தாங்கள் கையிட்ட வேலையிலேயே யானும் கையிட்டிருக்க வேண்டுமா வென்று விசனமடைகிறேன். இதுகாறும் தாங்கள் சிலப்பதிகாரம் அச்சிடுவதாகக் கேள்வியுற்றேன். யான் பத்துப் பாட்டை யச்சிட்டால் மாறு கொண்டேனென்று கொள்ளற்க. யானுமச்சிட்டே முடிப்பேன்!” என்று எழுதியிருந்தார்.

“நீங்கள் உங்கள் முறையிலே அச்சிடுங்கள். நான் என் முறையில் அச்சிடுகிறேன். இருவர் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத் தமிழ்நாட்டில் இடம் உண்டு” என்று அவருக்கு எழுதி விட்டுப் பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் முனைந்து நின்றேன்.

பாற்காவடி

ஒரு முறை நன்றாக முற்றும் பார்த்துவிட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டிய பிரதியைப் பார்த்து ஒழுங்கு படுத்தலானேன். திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து எழுதி வந்தார். மற்றப் பாட்டுக்களை முதலில் முடித்து விட்டுக் கடைசியில் திருமுருகாற்றுப் படையைப் பார்த்து வந்தேன். மூலத்தையும் உரையையும் பிரித்து எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதச் செய்தேன். ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்குத் திருமுருகாற்றுப்படை பூர்த்தியாயிற்று. ஒரு விதமான திருப்தி எனக்கு உண்டாயிற்று. அப்போது வீதியில் நாகசுர சத்தம் கேட்டது. கவனித்தோம். சுப்பிரமணிய பக்தராகிய நாயுடு ஒருவர் காவிரியில் ஸ்நானம் செய்து விபூதியை உடம்பெல்லாம் பூசிப் பாற்காவடி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். உடம்பெல்லாம் அலகுடன் முருகன் துதியான சில பாடல்களைச் சொல்லிக் கொண்டும் ஆடியபடியே வந்தார். நாகசுரக்காரன் அவருடைய பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் ஏற்ப வாசித்து வந்தான்.

திருமுருகாற்றுப்படை எழுதி முடிவதற்கும் அந்த முருகனடியார் காலடி எடுத்து வாயிலில் வந்து நின்றதற்கும் சரியாக இருந்தது. பலவகைத் தடைகளால் புண்பட்ட எனக்கு அக்காட்சி மிக்க ஆறுதலளித்தது. “திருமுருகாற்றுப் படையை முடித்தோம். ஆண்டவன் திருவருள் இந்த வேலையை முற்றுவிக்குமென்பதற்கும் அடையாளமாக இக்காட்சியைக் காண்கிறோம்” என்று நான் உள்ளுணர்ச்சி பொங்கிவரக் கிருஷ்ணையரைப் பார்த்துச் சொன்னேன்.

“நல்ல சகுனந்தான்” என்று அவரும் ஆமோதித்தார்.


  1. கலைமகளில் வெளிவந்த ‘உதிர்ந்த மலர்கள்’ என்ற கட்டுரையில் இவ்வரலாற்றின் விரிவைக் காணலாம். (நல்லுரைக் கோவை-IV)