என் சரித்திரம்/10 இளமைக் கல்வி

அத்தியாயம்—10

இளமைக் கல்வி


முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விஷயத்தில் அவர் யாரிடமும் பக்ஷபாதம் காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன் இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிது கர்வமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பி அடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வது கஷ்டமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு அவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளும் தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும்போது பிச்சு மாத்திரம் எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையான தண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப் பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கிவிட்டார். “அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா?” என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.

பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?

நாராயணையர் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான் கற்பிப்பார். அவரிடம் நான் கற்ற பின்பு சாமிநாதையரது பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். அங்கேதான் ஏட்டில் எழுதக் கற்றுக்கொண்டேன். அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரைக்கும் வரவில்லை. சிலேட்டும் இல்லை. முதலில் மாணாக்கன் மணலில் எழுதிப் பழக வேண்டும். பிறகு அவனே எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சாமிநாதையர் சங்கீதமும் ஸம்ஸ்கிருதமும் தெரிந்தவர். முன்பே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு அவர் சம்க்ஷேப ராமாயணம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள் என்பவற்றைப் போதித்தார். அவ்வளவும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. தமிழும் கணக்கும் கற்பித்தார். அவர் நாராயணையரைப்போல் கடுமையானவர் அல்லர். ஆனாலும் அந்தக் காலத்துக் கிராம உபாத்தியாயர்களுக்குப் பிரம்பு ஆடாவிட்டால் மாணாக்கர்கள் படிக்க மாட்டார்களென்ற எண்ணம் பரம்பரையாக இருந்து வந்தது; அவருக்கும் அந்தக் கொள்கை உண்டு.

கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக்கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது.

பிள்ளைகள் யாவரும் விடியற்காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டிவிட்டுப் பிள்ளைகள் முறைப்படி இருந்து முதல் நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்பிக்க வேண்டும். அதற்கு முறை சொல்லுதல் என்று பெயர். அப்போது உபாத்தியாயர் வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருப்பார்; அல்லது வேறு ஏதேனும் செய்து வருவார். அவரை எதிர்பாராமல் பிள்ளைகள் பாடங்களை முறை சொல்ல வேண்டும். அதை அவர் உள்ளே இருந்தபடியே கவனிப்பார். பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயரது வீட்டுத் திண்ணையிலேயே இருக்கும்.

ஆறு மணிக்குமேல் பிள்ளைகளெல்லாம் வாய்க்கால் அல்லது குளம் முதலிய இடங்களுக்குப் போய்த் தந்த சுத்தி செய்து தங்கள் தங்கள் குலத்திற்கேற்ற சின்னங்களைத் தரித்துக்கொண்டு ஸந்தியா வந்தனமோ வேறு அனுஷ்டானமோ செய்வார்கள். பிறகு தங்கள் வஸ்திரங்களில் மணலை எடுத்துக்கொண்டு மூஷிகவாகனம், ஸரஸ்வதி ஸ்தோத்திரம் முதலியவற்றைச் சொல்லிக்கொண்டே பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். முன்பிருந்த பழைய மணலை அகற்றிவிட்டுப் புதிய மணலைப் பரப்புவார்கள். எழுதுவதற்குரியவர்கள் அதில் எழுதுவார்கள்; மற்றவர்கள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள்.

ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது) சாப்பிடவிடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒரு பக்கத்தில் வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக் கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!

பிள்ளைகளுக்குள்ளே கெட்டிக்காரனாகவும் பலசாலியாகவும் இருப்பவனை உபாத்தியாயர் சட்டாம் பிள்ளையாக நியமிப்பார். அவன் புத்திசாலியாக இராவிட்டாலும் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்குப் பிரதிநிதியாகப் பிள்ளைகளை அடக்கி யாள்வதும் பாடம் ஒப்பிக்கக் கேட்பதும் அவன் வேலைகள். அவனிடம் எல்லோரும் அடங்கி நடக்க வேண்டும். சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்.

மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று.

பன்னிரண்டு மணிக்குமேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப் பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.

ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபக சக்தியை விருத்தி செய்விப்பதற்காக அவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். ‘மறந்து போய்விடுவோமோ’ என்ற பயத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் தமக்கு உபாத்தியாயர் சொன்ன பொருள்களின் பெயர்களைத் தம் தாய் தகப்பனாரிடம் சொல்லி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் அவர்களிடம் அவற்றைத் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சொல்வார்கள்.

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் துணைக்கு யாரையேனும் பிள்ளைகள் அழைத்து வருவார்கள்; பெரும்பாலும் முதிய ஸ்திரீகளை அழைத்து வருவதே வழக்கம். நேரம் கழித்து வந்தால் பிரம்படி பலமாகக் கிடைக்குமே என்ற பயத்தால் ஒவ்வொருவனும் எல்லோருக்கும் முன்பே வந்துவிட முயல்வான். இவ்வாறு வருவதன் பிரயோசனம் பழையதுக்கு உபாத்தியாயர் வீட்டுக்கு விடும்போது தெரியும். வழக்கப்படி பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து அனுப்பும்போது, முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார்; இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். இதனால், முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லோருக்கும் முன்பே வந்து விடுவான். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். வேற்றான் என்னும் சொல்லே அவ்வாறு வந்தது. மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவனென்பது அதன் பொருள். உபாத்தியாயரது கைக்கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப்பெருமை யல்லவா?

சில சமயங்களில், ‘நாமே இன்று முதலில் வந்து விட்டோம்’ என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோஷப்படக் கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும்.

பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் ஸ்தானத்தில் இருந்தது. பனையேடுதான் புஸ்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண்சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்துகொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார். பிள்ளைகள் அதே மாதிரி எழுதிப் பழகுவார்கள். அந்த மூல ஓலைக்குச் சட்டம் என்று பெயர்.

ஏட்டுச் சுவடிகளில் மஞ்சள், ஊமத்தையிலைச்சாறு, வசம்புக்கரி முதலியவற்றைத் தடவிப் படிப்பது வழக்கம், எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதற்கும் பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் அவ்வாறு செய்வார்கள். ஏட்டுச் சுவடிகளுக்குக் குறிப்பிட்ட அளவு ஒன்றும் இல்லை. வெவ்வேறு அளவில் அவை இருக்கும். சுவடிகளில் ஒற்றைத் துவாரம் இருக்கும். ஒரு நூற்கயிற்றைக் கிளிமூக்கு என்ற ஒன்றில் முடிந்து சுவடியின் துவாரத்தின் வழியே செலுத்தி அதைக் கட்டுவார்கள். பனையோலையை நரம்போடு சேர்த்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கிளிமூக்குகளாக உபயோகப்படுத்துவார்கள். கிளிமூக்கிற்குப் பதிலாகப் பொத்தானையோ, துவாரம் பண்ணின செம்புக் காசையோ, சோழியையோ முடிவதும் உண்டு.

ஏடுகளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வெற்றேடுகள் சில சேர்த்திருப்பார்கள்.

எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என வெவ்வேறு வகை உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறைசெய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும்; மடக்கிக் கொள்ளலாம், அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும்.

ஒரு பையன் புதியதாக ஒரு நூலைப் படிக்கத் தொடங்குவதைச் சுவடி துவக்கல் என்பார்கள். பனையோலையில் அந்த நூலை எழுதி மஞ்சள் தடவி விநாயக பூஜை முதலியவற்றைச் செய்து பையனிடம் கொடுத்து உபாத்தியாயர் படிப்பிப்பார். அவன் வீட்டிலிருந்து வந்த காப்பரிசி நிவேதனம் செய்யப்படும். அது தேங்காய்த் துண்டு, எள்ளு, வெல்லம் இவைகள் சேர்க்கப் பெற்று மிகச்சுவையாக இருக்கும். அதைப் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் விநியோகம் செய்வார்கள். அன்றைத் தினம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை நாளாகும்.

சுவடி துவக்கலென்றால் பிள்ளைகளுக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாகும். புதிய நூலைக் கற்பதனால் உண்டாவதன்று அது; “காப்பரிசி கிடைக்கும்; பள்ளிக்கூடம் இராது” என்ற ஞாபகமே அதற்குக் காரணம்.

பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமியாகிய தினங்களில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அந்த விடுமுறை நாட்களை ‘வாவு’ என்று சொல்வார்கள். உவா என்பதே அவ்வாறு மருவியது. உவா என்பது பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் பெயர்.

ஒவ்வொரு பிள்ளையும் தினந்தோறும் உபாத்தியாயருக்கு ஏதேனும் ஒரு பொருள் கொண்டுவந்து கொடுப்பான்; ஒரு விறகோ, வறட்டியோ, காயோ, பழமோ தருவது வழக்கம். விசேஷ தினங்களில் அந்த விசேஷத்திற்கு உபயோகப்படும் பொருள்களைத் தருவார்கள். விடுமுறை நாட்களில் பணமும் கொடுப்பதுண்டு. அதை ‘வாவுக் காசு’ என்று சொல்லுவர்.

உபாத்தியாயருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளம் ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருஷாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேஷ காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும்படி உண்டு. அந்த உத்ஸவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்து பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயர் எடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்.

உபாத்தியாயருக்கு அக்காலத்தே கணக்காயரென்ற ஒரு பெயருண்டு. கிராமத்து ஜனங்கள் உபாத்தியாயரிடம் மரியாதையோடு பழகுவார்கள். பிள்ளைகளை அவர் என்ன செய்தாலும் அது குறித்து வருத்தமடைய மாட்டார்கள். அவரைக் கேட்கவும் மாட்டார்கள். வீட்டில் விஷமம் செய்யும் பிள்ளைகளை உபாத்தியாயரிடம் சொல்லி அடக்குவார்கள். இளமைப் பருவம் முழுவதும் பிள்ளைகள் உபாத்தியாயருடைய ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்.

அவரையே தெய்வமாக மதிப்பதும் இன்றியமையாத வேளைகளில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாணாக்கர்களுக்கு இயல்பு.

பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச்செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.

இவ்வாறு மாணாக்கர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கல்வி புகட்டும் இந்த வழக்கம் இக்காலத்தில் யாவராலும் கண்டிக்கப்படுகிறது. அக்காலத்தில் பெரும்பாலான திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிதழ்ந்து வந்தன. அடிக்குப் பயந்தாவது பையன் படித்து வந்தான். அவனுக்குப் பல விஷயங்கள் மனனம் ஆகும்.

காகிதம், புஸ்தகம் என்பவை வழக்கத்தில் வராத அக்காலத்தில் மாணாக்கனுக்கு ஞாபகசக்தியை அபிவிருத்தி செய்வதற்கு உபாத்தியாயர்கள் சிரமப்படுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்களை இளமையில் பள்ளிக்கூட வாழ்வில் மனப்பாடமாகத் தெரிந்து கொள்வான். எண்சுவடியிலுள்ள கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம் குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகள் பெரிய வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கும், ஜனங்கள் பெரிய உத்தியோகங்களை வகிப்பதற்கும் உரிய வழியைப் புலப்படுத்தின. எல்லாம் பெரும்பாலும் மனக் கணக்காகவே இருக்கும். அக்காலத்தில் பள்ளிக்கூடத்தில் பிரபவாச் சுவடி (பிரபவாதிச் சுவடி) என்ற ஒரு புஸ்தகம் பாடமாக இருந்தது. அதில் வருஷங்கள், மாதங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராகு காலம், குளிகை காலம், யமகண்டம் முதலிய சோதிட விஷயங்களும், லோகங்கள், சக்கரவர்த்திகள், மன்வந்தரம், தீவுகள் முதலிய பல விஷயங்களும் இருக்கும். அவற்றை நன்றாக மனப்பாடம் பண்ணிக்கொண்ட மாணாக்கன் பிறகு பல சந்தேகங்களை ஆசிரியரின்றியே தெரிந்து கொள்ளும் சக்தியைப் பெறுவான்.

பண்டிகை நாட்களில் பிள்ளைகள் யாவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். ஆடி மாதம் பதினெட்டாந் தேதியில் பழஞ்சுவடிகளை எல்லாம் சேர்த்து அழகான ஒரு சப்பரத்தில் வைத்து மேளதாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள். பிள்ளையார் சதுர்த்தியன்று ஏழு பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயம். ஸ்ரீ ஜயந்தியிலும் சிவராத்திரியிலும் பிள்ளைகள் சேர்ந்து பாடிச் சென்று வீடுதோறும் எண்ணெய் தண்டி இரவில் கண்விழித்துப் பாடிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் வேடிக்கையாகப் பொழுது போக்குவார்கள்.