என் சரித்திரம்/9 குழந்தைப் பருவம்

அத்தியாயம்—9

குழந்தைப் பருவம்

ரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 ரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது.

இல்லற தர்மத்தை மேற்கொண்ட பிறகு அவருக்குக் குடும்ப பாரம் அதிகமாயிற்று. ‘குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கையில் பழங்கடனைத் தீர்ப்பதற்கு மார்க்கம் ஏது? என்று அவர் எண்ணி எண்ணிக் கலக்க முற்றார். ஸமஸ்தான சங்கீத வித்துவானாக இருந்ததில் அவருக்குப் பெருமையும் பல அன்பர்களுடைய பழக்கமும் உண்டாயின. ஸமஸ்தான நிலத்திலிருந்து கிடைத்த வருஷ வருவாய் ரூபாய் ஐம்பது; ஊரிலுள்ள மூன்று மா நிலத்திலிருந்து வந்த வரும்படி அதிகமன்று. இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து காரணமின்றிப் பொருளுதவி பெறுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் இராமாயண கீர்த்தனங்களை இசையுடன் முறையாகச் சில நாட்கள் படித்துப் பொருள் சொல்லிப் பட்டாபிஷேகம் செய்து முடிக்கும் ஒரு முயற்சியைத் தொடங்கினார். அம்முயற்சியினால் நல்ல பயன் உண்டாயிற்று. சில இடங்களில் உள்ளவர்கள் அவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு வருவித்து இராமாயண கீர்த்தனம் கேட்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு முறையும் இராமாயணம் நிறைவேறியவுடன் அன்பர்கள் ஒரு தொகை தொகுத்து அளிப்பார்கள். அந்தத் தொகை குடும்பத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், இவ்வாறு தொடங்கிய இராமாயண முயற்சியே என்னுடைய தந்தையாரின் உள்ளக் கவலையைத் தீர்ப்பதற்கு உதவியாயிற்று.

அரியிலூருக்கு கிழக்கே மணலேரி என்னும் ஊரொன்று உண்டு. அங்கே மணிகட்டி உடையார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவர் என் தந்தையாரிடம் அன்புடையவர்; அடிக்கடி தம் ஊருக்கு வருவித்து அவர் பாட்டைக் கேட்டு இராமாயணப் பிரசங்கமும் நடைபெறச் செய்து பொருளுதவி செய்து வந்தார். ஒரு சமயம் குடும்பக் கடனைத் தாமே தீர்த்து விடுவதாகவும் சொன்னார். அது கேட்ட என் தகப்பனாரது கவலை குறைந்தது. எவ்வாறேனும் கடன் சுமையைப் போக்கிவிடலாமென்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மணிகட்டி உடையாரைப் போன்ற பல வேளாளச் செல்வர்களுடைய ஆதரவு அக்காலத்தில் என் பிதாவுக்குக் கிடைத்தது. என் ஆண்டு நிறைவு அரியிலூரிலே மிகவும் சிறப்பாக நடந்தது. முற்கூறிய செல்வர்கள் செய்த உதவிகளே அச்சிறப்புக்குக் காரணம்.

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்தவர்கள் அல்லிநகரம் சோமசுந்தரம் பிள்ளை, சுந்தர சபாபதி பிள்ளை, கொத்தவாசல் குமர பிள்ளை, [1]சிவசிதம்பரம் பிள்ளை, இராமகிருஷ்ண பிள்ளை, இராமசாமி பிள்ளை, முத்துவேலாயுதம் பிள்ளை, பாலகிருஷ்ண பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை முதலியோர். அரண்மனையில் ராயஸமாக இருந்த ராம பத்திரைய ரென்பவரும், ஜமீன்தாரின் குருவாகிய தாத்தாசாரியா ரென்பவரும், கிராம முன்சீபாக இருந்த வேங்கட சுப்பைய ரென்பவரும் வக்கீல் ரங்காசாரியா ரென்பவரும் அவ்வப்போது தங்கள் தங்களால் இயன்ற உபகாரத்தைச் செய்து வந்தார்கள்.

நான் பிறந்தபோது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமிமலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக் கடவுளுக்குச் சாமிநாத னென்பது திருநாமம். எங்கள் ஊரினரும் பிறரும் அந்த ஸ்தலத்துக்குச் சென்று வருவார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதில் ஈடுபாடு அதிகம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை, ‘சாமா’ என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று.

என் தந்தையார் இராமாயணப் பிரசங்கம் செய்யுங் காலங்களில் என் சிறிய தந்தையாரான சின்னசாமி ஐயர் உதவி புரிவார். அரியிலூர்ச் சடகோபையங்கார் வீணை வாசிப்பதிற் பழக்கமுள்ளவராதலின் அவரிடம் என் சிறிய தகப்பனார் வீணை பயின்றார்.

நாங்கள் அரியிலூரில் இருந்த காலத்தில் என் சிறிய தந்தையாருக்குக் கலியாணம் நடைபெற்றது. மாயூரத்தில் மகாதானத் தெருவில் இருந்த சேஷையரென்பவர் குமாரியாகிய லக்ஷ்மியை அவர் மணந்து கொண்டார். இராமாயணப் பிரசங்கத்தினாற் கிடைத்த பணமும் சில செல்வர்களுடைய உதவியாற் கிடைத்த பொருளும் அந்தக் கலியாணத்திற்கு உபயோகமாயின.

அந்த மணத்தின் முன்பும் பின்பும் என் தந்தையார் சில முறை மாயூரம் செல்ல நேர்ந்தது. அக்காலத்தில் அங்கே கோபால கிருஷ்ண பாரதியார் இருந்து வந்தார். அவருடைய பழக்கம் என் தந்தையாருக்கு உண்டாயிற்று. கோபால கிருஷ்ண பாரதியார் சில காலம் கனம் கிருஷ்ணையரிடம் பயின்றவராதலின் அந்த வித்துவானுடைய பந்துவும் மாணாக்கருமாகிய என் பிதாவிடம் அவருக்கு மிக்க அன்பு உண்டாயிற்று. என் தந்தையாரை அவர் காணும் போதெல்லாம் கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களைச் சொல்லச் செய்து கேட்டு இன்புறுவார். அவருடன் பழகும்போது என் பிதாவுக்குத் தம் குருகுல வாசம் நினைவுக்கு வந்தது. இருவரும் சங்கீத சம்பந்தமான சம்பாஷணையிற் பொழுது போக்குவார்கள். இரண்டு பேரும் சிவபக்தர்கள்; அத்துவைத சாஸ்திரப் பயிற்சியுடையவர்கள்.

அக்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தை இயற்றிப் புகழ் படைத்திருந்தார். பல இடங்களில் அந்தச் சரித்திரத்தைப் பிரசங்கம் செய்து வந்தார். தமிழ்நாடு முழுவதும் நந்தன் சரித்திரத்திற்கு ஒரு பிரசித்தி உண்டாகி இருந்தது. தாம் நந்தனார் சரித்திரத்தை இயற்றுவதற்குக் காரணமாக இருந்த [2]நிகழ்ச்சிகளையும் தம் அநுபவங்களையும் என் தந்தையாரிடம் அவர் சொல்லி மகிழ்வார்; தம்முடைய கீர்த்தனங்களையும் பாடிக் காட்டுவார். என் தத்தையார் அவரிடமிருந்து பல கீர்த்தனங்களைத் தெரிந்துகொண்டார்; மாயூரத்திற்கு எந்தையார் எப்பொழுது சென்றாலும் பாரதியாரைப் பாராமல் வருவதில்லை.

பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன.

என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பிஸ்கோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில் இல்லை. என் தாயார் எனக்காக ஒரு கரண்டியப்பம் ஊற்றி ஓர் இலையில் என் படுக்கையின் பக்கத்தில் வைத்து ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருப்பாராம். நான் எழுந்தவுடன் அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு உள்ளே இருக்கும் கரண்டியப்பத்தை எடுத்துத் தின்பேனாம். காலையில் எந்தக் காரியத்தைச் செய்ய மறந்தாலும் எனக்காகக் கரண்டியப்பம் பண்ணி வைப்பதை மாத்திரம் என் தாயார் மறக்க மாட்டாராம். கரண்டியப்பம் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு பழையமுதும் சாப்பிடுவதுண்டு.

நாங்கள் அரியிலூரில் இருந்து வருகையில் என் பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் முதுமைப் பருவத் தளர்ச்சி மிகுதியாயிற்று. எந்தச் சமயத்தில் தமக்கு மரணம் சம்பவிக்குமோ என்று என் பாட்டனார் கலக்கமடைந்திருந்தார். பரம்பரையாக இருந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து இருப்பதில் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வேறுவழி இல்லாமையால் அரியிலூரில் வந்து இருந்தார். ஆயினும், வந்த ஊரிலே இறப்பதை அவர் விரும்பவில்லை. “நம்முடைய ஊரில் நம் வீட்டில் பந்துக்கள் சூழ்ந்த இடத்தில் மரணமடைய வேண்டும்” என்றே அவர் விரும்பினார். நதி தீரத்தைச் சார்ந்துள்ள உத்தமதானபுரத்தை விட்டுக் காட்டு நாட்டில் உயிர் நீப்பதைப்பற்றி நினைக்கும் போதே அவருக்குத் துக்கம் பொங்கும்.

ஒரு நாள் என் தகப்பனாரிடம் தம்முடைய கருத்தை என் பாட்டனார் தெரிவித்தார். குடும்ப பாரத்தினால் நைந்த மனமுடைய அவருக்கு மீண்டும் கவலை உண்டாயிற்று. “ஏதோ ஒருவிதமாக இங்கே வந்து நிலையாக வாழத் தொடங்கினோம். கடவுள் கிருபையால், கடன் வாங்காமல் தம்பிக்குக் கலியாணம் நடத்தினோம். ஊருக்குப் போனால் நாம் எவ்வாறு காலக்ஷேபம் செய்ய முடியும்?” என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

என் பாட்டனாரோ அடிக்கடி தம் கருத்தை வற்புறுத்தி வந்தார். முதுமைப் பருவத்தில் அவருக்கு இருக்கும் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது பாவமென்ற நினைவும் என் பிதாவுக்கு உண்டாயிற்று. இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கலங்கினார். தம் பெற்றோரை உத்தமதானபுரத்திற்கு அனுப்பிவிடலாமா என்றும் எண்ணினார். இறுதிக் காலத்தில் தம் குமாரர் அருகில் இருக்கவேண்டுமென்று கருதியே என்பாட்டனார் உடையார்பாளையத்திற்கும் பின்பு அரியிலூருக்கும் வந்தார். ஆதலின் தம்மைப் பிரிந்து அவர் இருத்தல் அரிது என்பதை நினைத்துப் பார்த்த எந்தையார், “எவ்வாறானாலும் சரி; அவருடைய இஷ்டத்தைப் பூர்த்தி செய்வதுதான் நம் கடமை” என்ற உறுதிபூண்டு அரியிலூர் ஜமீன்தாரிடமும் மற்ற அன்பர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு தம் குடும்பத்துடன் உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.

உத்தமதானபுரம் வந்த பின்பும் சில வருஷங்கள் என் பாட்டனாரும் பாட்டியாரும் ஜீவித்திருந்தனர். இடையிடையே என் தந்தையார் வெளியூர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசாங்கம் செய்து பொருள் ஈட்டி வருவார். அப்படிச் சென்றிருக்கும் சில நாட்களில் என் பாட்டனாருக்கு மனக்கலக்கம் அதிகமாகிவிடும். எந்தையார் அரியிலூருக்கும் சென்று ஜமீன்தாரையும் தம் அன்பர்களையும் பார்த்து அவர்களால் கிடைக்கும் பொருளையும் தம் ஸர்வ மானியத்திலிருந்து கிடைப்பதையும் பெற்று வருவார். பாபநாசத்தில் இருந்த வக்கீல்களாகிய கபிஸ்தலம் கிருஷ்ணசாமி ஐயங்கார், வேங்கடராவ் என்பவர்களும், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தியாலு நாயக்க ரென்பவரும் அக்காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்து ஆதரித்து வந்தனர்.

எனது மூன்றாம் பிராயத்தில் எனக்கு ஒரு சகோதரி பிறந்தாள். அப்பெண்ணுக்குத் தையல்நாயகி என்ற பெயர் வைத்தார்கள். ஸ்திரீகளுக்குப் பெண் குழந்தைகளிடம் அதிக அன்பு இருப்பது உலக இயல்பு. என் அன்னையார் அக்குழந்தையிடம் மிக்க வாத்ஸல்யம் உடையவராக இருந்தார். அந்தக் குழந்தை சில வருஷம் வாழ்ந்திருந்து இறந்து போயிற்று. அப்போது என் தாயார் துடிதுடித்துப் போனார். அந்தக் குழந்தை இறந்த துக்கம் அவருடைய நெஞ்சில் பல வருஷங்கள் ஆறாமல் இருந்தது நான் இளம்பருவத்தில் விஷமம் செய்தபோது சில சமயங்களில் என் தாயார் என்னை அடித்து வைவார். அவ்வாறு வையும் சில சமயங்களில் அவர் கூறும் வார்த்தைகள் இறந்துபோன அக்குழந்தையின்பால் அவருக்கு எவ்வளவு பற்று இருந்ததென்பதைப் புலப்படுத்தும். பெண் குழந்தையை இழந்த குறை என் தாயாருக்குத் தீரவே இல்லை; அந்தக் குழந்தைக்குப் பிறகு எனக்குத் தங்கையே பிறக்கவில்லை.

எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்ற போது வித்தியாப் பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐய ரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதைய ரென்பவரிடம் சில வருஷங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம். நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்.


  1. இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என் அன்பருமாகிய ராவ்பகதூர் ஸ்ரீ கே. எஸ். ஸ்ரீநிவாச பிள்ளையின் தந்தையார்.
  2. இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.