என் சரித்திரம்/119 புறநானூற்றுப் பதிப்பு

அத்தியாயம்—119

புறநானூற்றுப் பதிப்பு

1894-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்பித்து நிறைவேறியது. நான் பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதலாவது. ஆதலால் முகவுரையில் எட்டுத் தொகைகளையும் பற்றிய வரலாற்றை எழுதினேன். அகம், புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கினேன்.

முகவுரை

புறநானூற்றால் தெரிய வந்த பலவகைச் செய்திகளையும் தொகுத்து ஓர் அகவலாக அமைத்தேன். உரையைப் பற்றிய செய்திகளையும் சுருக்கமாகத் தெரிவித்து விட்டு எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளின் நிலையை யாவரும் உணரும் பொருட்டுப் பின் வருமாறு புலப்படுத்தினேன்:

“உரையில்லாத மூலங்கள் எழுத்துஞ் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, இவற்றுள், சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் துறை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டு மெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும் சில பாடல்கள் இரண்டிடத் தெழுதப்பட்டு இரண்டெண்களை யேற்றும் வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை யேற்றும் சில முதற்பாகங் குறைந்தும் சில இடைப்பாகங் குறைந்தும் சில கடைப்பாகங் குறைந்தும் சில முற்றுமின்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடல்களின் அடிகளோடு கலந்தும் ஓரடியே ஒரு பாட்டுட் சிலவிடத்து வரப் பெற்றும் பொருளண்மை காணாத வண்ணம் இன்னும் பலவகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இவற்றைப் பரிசோதித்து வருகையில், இந்நூலிலிருந்து வேறு நூல்களினுடைய பழைய உரைகளின் இடையிடையே உரையாசிரியர்களால் பூர்த்தியாகவும் சிறிது சிறிதாகவும் எடுத்துக் காட்டப்பட் டிருந்த உதாரணங்கள், சிற்சில பாடல்களிலுள்ள வழுக்களை நீக்கிச் செவ்வை செய்து கொண்டு பொருளுண்மை காணுதற்கும், சிற்சில பாடல்களிற் குறைந்த பாகங்களை நிரப்பிக் கொள்வதற்கும் பிறழ்ந்து கிடக்கும் சில பாடல்களை ஒழுங்குபடுத்தி வரையறை செய்து கொள்ளுதற்கும் பெருந்துணையாக இருந்தன.”

புறநானூற்றிலுள்ள செய்திகளைக் கொண்டு தமிழ் நாட்டுச் சரித்திரத்தை அறிந்து கொள்ளலாமென்பதையும், பல வகை ஆராய்ச்சிகளுக்கு அவை உபகாரமாகுமென்பதையும் உணர்ந்த போது, அத்துறையில் புகுந்து ஆராயலாமென்று தொடங்கினேன். எட்டுத் தொகை நூல்களுள் பதிப்பிக்கப் பெறாத நூல்களும் பிற பழைய நூல்களும் என்பால் இருத்தன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும் பணியை மேற்கொண்ட நான் இடையே வேறு துறையுட் புகுவதற்கு இயலவில்லை. ‘ஆதார நூல்களை ஒரு வகையாக வெளிப்படுத்தி விட்டால் ஆராய்ச்சியாளர் அவற்றை ஆராய்ந்து சரித்திரங்களையும் பிற குறிப்புக்களையும் வெளியிடலாம்’ என்றெண்ணினேன். இக் கருத்தை முகவுரையில், “இத் தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலங்கழித்து உழைத்து வரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந் நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்து கொள்ளுதல் கூடும்” என்று குறிப்பித்தேன்.

அங்கங்கள்

அவ்வகை ஆராய்ச்சிகளைச் செய்பவர்களுக்குக் கருவிகளாக உதவுமென்ற ஞாபகத்தால் புறநானூற்றிற் கண்ட நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை அகராதி வரிசையில் தொகுத்து அமைத்தேன். பாடினோர் பாடப்பட்டோர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரிவித்து அவர் பெயர்களிற் காணப்படும் பேதங்களையும் தனியே பதிப்பித்தேன். விஷய சூசிகை, துறை விளக்கம், துறைக் குறிப்பு, அரும்பத அகராதி, பிரயோக விளக்கம் என்பவற்றைப் பதிப்புக்கு அங்கமாகச் சேர்த்தேன். அரும்பத அகராதியில் பதமும் அதன் பொருளும், பிரயோகமும் அமைத்தேன். வி. வெங்கையரவர்களும், வி. கனக சபைப்பிள்ளை அவர்களும் எழுதி அனுப்பிய குறிப்புக்களைப் புத்தகத்தின் இறுதியில் இணைத்தேன்.

புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’ என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன். புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர். சேலம் இராமசுவாமி முதலியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் பார்த்து இன்புறுவதற்கில்லையே என்ற வருத்தம் மாத்திரம் எனக்கு ஏற்பட்டது.

நண்பர் தூண்டுதல்

புத்தகம் வெளி வந்த பின்னர் எனக்குப் பல புதிய நண்பர்கள் பழக்கமாயினர். பலர் இன்ன இன்ன நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று அன்புடன் தூண்டலாயினர். தி. த. கனகசுந்தரம் பிள்ளை மணிமேகலையையும், உதயணன் கதையையும் பதிப்பிக்க வேண்டுமென்று எழுதினார். பொ. குமாரசுவாமி முதலியார் பதிற்றுப்பத்தையும் அகநானூற்றையும் வெளியிட வேண்டுமென்றும் தக்க பொருளுதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

நான் இந்நூல்களையும் வேறு சில நூல்களையும் ஆராய்ந்து கொண்டுதான் வந்தேன். ஒரு நூலைப்பார்த்து வருகையில் சலிப்பு ஏற்பட்டால் வேறு ஒன்றைப் பார்ப்பேன். ஒன்றற்குக் குறிப்பு எழுதும்போது தளர்ச்சி உண்டானால் மற்றொன்றைப் படித்து இன்புறுவேன். இப்படி மாறி மாறி நூல்களைப் பார்த்து வந்தமையால் பல நூல்கள் என் ஆராய்ச்சியில் இருந்து வந்தன.

சொந்த வீடு

புறநானூறு நிறைவேறியவுடன் மேற்கொண்டு ஆராய்ச்சி வேலையை நடத்தி வருவதற்குப் பின்னும் வசதியான வீடு இருந்தால் அனுகூலமாக இருக்குமென்று நினைத்தேன். என் தந்தையார் ஏதேனும் ஒரு வீடு சொந்தத்தில் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்தார். அவர் காலத்தில் அது கைகூடவில்லை. போதிய பொருளின்மைதான் காரணம். இடவசதி அவசியம் வேண்டியிருந்தமையின் இனிமேல் தாமதம் செய்யக்கூடாதென்றெண்ணிக் கையிலிருந்த தொகையோடு ஒரு பகுதி கடனாகப் பெற்று ரூ. 3000க்கு ஸஹாஜி நாயகர் தெருவில் ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டை எனக்கு விற்றவர் சாமிநாதையரென்பவர். அவரிடம் அதை வாங்கியபோது “இந்த வீடு உங்களிடம் இருந்தாலும் என்னிடம் இருந்தாலும் ஒன்றுதான். இரண்டு பேரும் ஒன்றே யல்லவா?” என்றேன்.

அந்த வீடு மூன்று கட்டும் மாடியும் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வசதியாக அமைந்திருந்தது. காவேரிக் கரையில் காலேஜு க்கு எதிரே இருந்தமையால் காலேஜில் முதல் மணி அடித்த பிறகு கூடப் புறப்பட்டுப் போய்ச் சேரும்படி இருந்தது. நல்ல நாளில் சொந்த வீட்டிற் குடி புகுந்து தமிழாராய்ச்சியை நடத்தி வந்தேன்.

பாண்டித்துரைத் தேவர்

புறநானூற்றைப் பெற்றுக் கடிதமெழுதியவர்களுள் பாலவநத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவரும் ஒருவர். அதில் அவர், “தங்களால் லோகோபகாரமாய் அரிய நூல்கள் அச்சிடுவதாக எடுத்துக் கொள்ளப்பட்ட நன்முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய எப்பொழுதும் ஆவலுற்றிருப்பவனாதலின் அதற்குரிய நற்சமயம் அறிவிக்கக் கேட்டுக் கொள்ளும் தங்கள் பாண்டித்துரை” (14-11-1894) என்று குறிப்பித்திருந்தார். இக்கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் திருவாவடுதுறையாதீனகர்த்தரைத் தரிசிக்கும் பொருட்டுத் திருவிடைமருதூருக்கு வந்தார். ஆதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் அவர் வரவை எனக்குத் தெரிவித்து என்னையும் வரும்படியாக எழுதினார். அவ்வாறே சென்று பாண்டித் துரையைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி விட்டு “இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்!” என்று கேட்டார்.

“பல நூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில் இப்போது வழக்கில் இல்லாத பல நூற் செய்யுட்கள் உள்ளன. புறநானூற்றைப் பதிப்பித்தபோது புறத் துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில் புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோகமாயிற்று. அதனை நன்கு ஆராய்ந்தேன். அதற்குக் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம் மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது உரையுடன் வெளியிடலாமென்று எண்ணுகிறேன்” என்றேன் நான்.

செய்யுட் கடிதம்

அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.

(கலி வெண்பா)

1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு
    பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க

2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்
   படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்

3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய
   வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய

4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்
   சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை

5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்
   நன்னிருப மீதாம்..............

6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்
   மாமாரி பெய்துலகை வாழ்விப்போய்.......





7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்
   நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ

8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்
   மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி

9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்
   பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி

10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்
    ஆறுகந்த சென்னியருள்.”

1. செல்வி - உதாதேவியார், பெம்மான் - சிவபெருமான். 2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும். 4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம். 6. காமாரி - சிவபெருமான். 7. காதலன் - முருகக்டவுள். 8. மெய்ந்நூறுஉரீஇ - மெய்யில் திருநீற்றைப் பூசி. மை நூறி - குற்றத்தை நீக்கி. 9-ஆம் ஆலையின் சுவை உண்டாக்கும் - ஆகின்ற கரும்பைப்போலச் சுவையை உண்டாக்கும். 10. ஊறு இகழ்ந்து - இடையூறு நீங்கி. ஆறு உகந்த சென்னி - கங்காதரனது அருள் ஒங்குக.

பாண்டித்துரைத் தேவர் இங்ஙனம் செய்த உதவியை நான் பாராட்டி எழுதியதோடு, அம்பலவாண தேசிகரிடமும் தெரிவித்தேன். அவர் உடனே முந்நூறு ரூபாய் வழங்கினார். இவ்விருவரும் உதவிய பொருளைக் கொண்டு வீட்டுக்காக நான் வாங்கின கடனை அடைத்து விட்டேன்.

புறப்பொருள் வெண்பாமாலை

பாண்டித்துரைத் தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது. அந்த நூலை அடுத்தபடி பதிப்பிக்க எடுத்து வைத்துக் கொண்டேன்.

புறப்பொருள் வெண்பாமாலை என்பது புறப்பொருளின் இலக்கணத்தைக் கூறும் சூத்திரங்களையும் அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாகிய வெண்பாக்களையும் கொண்டது. வெண்பாமாலை என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. சேரகுலத்திற் பிறந்த ஐயனாரிதனார் என்பவர் அந்நூலின் ஆசிரியர். என்னிடமிருந்த உரையின் ஆசிரியர் இன்னாரென்று அக்காலத்தில் எனக்குத் தெரியவில்லை. பிறகு, இராமநாதபுரம் மகாவித்துவான் ஸ்ரீ ரா. இராகவையங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்த ஒரு சுவடியிற் கண்ட குறிப்பினால் அவ்வுரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரென்று புலப்படுவதாகத் தெரிவித்தார்,

இளம்பூரணம்

புறப்பொருள் வெண்பா மாலைச் சுவடிகள் சில என்பால் இருந்தன. பின்னும் கிடைக்குமோ வென்று தேடலானேன். தி. த. கனகசுந்தரம் பிள்ளை என்னிடம் ஒரு பழைய ஏட்டுச் சுவடியைக் கொடுத்து, “இந்தச் சுவடி இன்னதென்றுவிளங்கவில்லை; புறப்பொருள் பற்றிய வெண்பாவை இடையிலே கண்டேன்; பாருங்கள்” என்று சொன்னார். நான் அதை எடுத்து வந்து பார்க்கையில் ஏடுகள் வரிசையாக இராமல் நிலைமாறிக் கோக்கப் பட்டிருந்தன. மிகவும் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்திப் பிரதி செய்வித்தேன். அப்பால் அதைப் படித்துப் பார்க்கையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் உரையென்று தெரிந்தது. புறத்திணையின் உரையில் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுட்கள் பல உதாரணமாகக் காட்டப் பெற்றிருந்தன. பதிப்பிக்கப் பட்டிருந்த பொருளதிகார உரையை வைத்து ஒப்பு நோக்கியபோது அவ்வுரை வேறாகக் காணப்பட்டது. ‘ஏதோ வேறு பழைய உரையாக இருக்க வேண்டும்’ என்று தோற்றியதே தவிர இன்னாருடைய தென்பது விளங்கவில்லை. மற்றும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.

புறப்பொருள் சம்பந்தமாக உள்ள எல்லா நூல்களையும் படித்து ஆராயத் தொடங்கி இலக்கண விளக்கத்தைப் படித்தேன். அதில் மாலைநிலை என்னும் துறையைப் பற்றிச் சொல்லுகையில் உரையில், உரையாசிரியர் இன்னவாறு எழுதினாரென்ற குறிப்பு இருந்தது. அக்குறிப்பிலிருந்து என்னிடமிருந்த தொல்காப்பிய உரை, உரையாசிரியரென்று வழங்கும் இளம்பூரணருடையதென்று தெரிய வந்தது. அப்போது நான் மிக்க ஆனந்தத்தை அடைந்தேன். புறப்பொருளிலக்கண ஆராய்ச்சியில் நான் எதிர்பாராமற் பெற்ற பெரிய லாபம் இது. மீண்டும் அவ்வுரையை நன்கு ஆராய்ந்து அதில் வரும் மேற்கோள்களைக் கவனித்து இன்ன நூலென்று குறித்து வந்தேன்.

புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் சித்தம் செய்துகொண்டு சென்னைக்குச் சென்று அதனை அச்சுக்குக் கொடுத்தேன்.