என் சரித்திரம்/120 மணிமேகலை ஆராய்ச்சி

அத்தியாயம்—120

மணிமேகலை ஆராய்ச்சி

திருவாவடுதுறை யாதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் தமிழ்ப் பயிற்சி மிகுதியாக உடையவர். ஸம்ஸ்கிருதத்தில் அன்பும் சங்கீதப் பழக்கமும் அவர்பால் இருந்தன. கல்லிடைக்குறிச்சி வித்துவான் முத்து சாஸ்திரிகளிடம் அவர் தனியே ஸம்ஸ்கிருதம் பயின்றார். வித்துவான்களுக்குச் சம்மானம் செய்வதில் அவரைப் போஜனென்றும் கர்ணனென்றும் பாராட்டுவார்கள்.

திருவாவடுதுறைப் புத்தகசாலை

ஆதீனத்தின் சார்பில் ஒரு நல்ல புத்தகசாலையை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று. அங்கே இயல்பாகவே ஒரு புத்தகசாலை இருந்தாலும் அதைப் பின்னும் விரிவுபடுத்தி, தமிழ், ஸம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் பாஷைகளில் உள்ள பலவகையான அச்சுப் புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டு மென்று எண்ணினார். புத்தகசாலைக்குரிய இடமாக ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுவித்தார். இப்போது ஸரஸ்வதி மஹால் என்று வழங்குவது அதுவே.

புத்தக சாலைக்கு வேண்டிய புத்தகங்களை வாங்குவதற்காகத் தேசிகர் என்னைச் சில காரியஸ்தர்களுடன் சென்னைக்கு அனுப்பினார்.

மற்றொரு வேலையையும் என்பால் அவர் ஒப்பித்தார். இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி சில முறை திருவாவடுதுறைக்கு வருவதாக இருந்தது எப்படியோ நின்று விட்டது.

அவரை ஒரு முறையேனும் மடத்துக்கு அழைத்து வரவேண்டுமென்ற ஆவல் மடத்தைச் சார்ந்தவர்களுக்கு இருந்தது. நான் புத்தகங்கள் வாங்கும் பொருட்டுச் சென்னைக்குச் செல்ல எண்ணிய காலத்தில் ஸேதுபதி சென்னையிலிருந்தார். “இந்தச் சமயத்தில் அவர்களைக் கண்டு எப்படியாவது இங்கே வரும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பு உங்களைச் சார்ந்தது” என்று அம்பலவாண தேசிகர் என்னிடம் சொன்னார்.

நான் சென்னைக்கு வந்து முதற்காரியமாகப் பாஸ்கர சேதுபதி மன்னரைப் பார்த்தேன். தமிழ் நயந்தேரும் அவர் மிகவும் பிரியமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிவிக்கவே அவர் ஒப்புக்கொண்டார். உடனே அந்தச் சந்தோஷச்செய்தியை அம்பலவாண தேசிகருக்குக் கடிதவாயிலாகத் தெரிவித்தேன். பிறகு புத்தக சாலைக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டன. பல பாஷைகளிருலுமுள்ள புத்தகங்களை வாங்கினோம். வை. மு. சடகோபராமானுஜாசாரியர் புத்தகம் வாங்கும் விஷயத்தில் உடனிருந்து உதவி செய்தார். புத்தகங்களையெல்லாம் ரெயில்வே கூட்ஸ் மூலம் திருவாவடுதுறைக்கு அனுப்பச் செய்தேன்.

மணி ஐயர் தரிசனம்

அப்போது மணி ஐயர் ஹைகோர்ட்டு ஜட்ஜாக நியமனம் பெற்றிருந்தார். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரைக் கண்டு ஊக்கமடைந்து வருவது வழக்கம்: அந்த முறை சந்தோஷம் விசாரிக்கச் சென்றேன். “புறநானூறு மிகவும் நன்றாயிருக்கிறது. இப்போது என்ன நடக்கிறது?” என்று என்னைக் கண்டவுடன் அவர் கேட்டார். புறநானூற்றுப் பிரதியை அவர் பெற்று எனக்குப் பணமும் முன்பு அனுப்பியிருந்தார்.

“ஜட்ஜ் உத்தியோகம் ஆகியிருக்கிற சந்தோஷ சமாசாரம் கேள்வியுற்றேன். ஜனங்களுடைய அதிருஷ்டந்தான் இது. இதற்குமுன் தங்களோடு பழகினமாதிரி இனிமேல் பழகுவதற்கு மனம் அஞ்சுகிறது” என்றேன்.

“என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? எனக்கு இப்போது கொம்பு முளைத்துவிட்டதா என்ன? நீங்கள் எப்போதும் போல் வரலாம்; பேசலாம்; சாப்பிடலாம்; என்னால் ஆகவேண்டிய காரியங்களை மனம் விட்டுச் சொல்லலாம்” என்று அவர் சொன்ன போது பரோபகாரத்தையே தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கருதியிருக்கும் அவர் இயல்பு என்றும் மாறாதென்பது அந்தத் தொனியிலேயே வெளிப்பட்டது.

அவரிடம் விடைபெற்று வேறு நண்பர்களைப் பார்த்துப் பேசியிருந்துவிட்டுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். பாஸ்கர சேதுபதி 1895-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அங்கே வருவதாகச் சொல்லியிருந்தார். அச்சமயம் திருவாவடுதுறையில் முக்கியமான குருபூஜை நடக்கும் சந்தர்ப்பமாக இருந்தது. அதற்கு முன்பே புத்தக சாலையைத் திறந்துவிட நிச்சயித்து நாள் பார்த்த போது ஜனவரி 30-ஆம் தேதி நல்ல நாளாக இருந்தது. புத்தக சாலைக்கு என்ன பெயர் வைக்கலாமென்று அம்பலவாண தேசிகர் கேட்டார். வித்தியா நிதி என்ற பெயர் வைக்கலாமென்று சொன்னேன். ஜனவரி மாதம் 30-ஆம் தேதியன்று வித்தியா நிதி திறக்கப் பெற்றது. கும்பகோணம், மாயூரம் முதலிய பல இடங்களிலிருந்து பல கனவான்களும் வித்துவான்களும் வந்திருந்தார்கள்.

அடுத்தநாள் பாஸ்கர சேதுபதி மடத்திற்கு வந்தார். உபசாரங்கள் எண்ணிப் பார்க்கவும் முடியாத சிறப்புடன் இருந்தன. பாஸ்கர விலாஸம் என்ற பெயருடன் மிகப்பெரிய கீற்றுக்கொட்டகை ஒன்று போடப்பட்டது. கீற்றுக் கொட்டகையாயினும் பெரிய மாளிகையைப் போன்ற அலங்காரங்கள் அதில் அமைக்கப்பெற்றன. நான் உடனிருந்து சேதுபதியோடும் ஆதீனத் தலைவரோடும் சம்பாஷித்து மகிழ்ச்சியுற்றேன். சேதுபதியவர்கள் விடைபெற்றுப் புறப்பட்டார்.

மணிமேகலை ஆராய்ச்சி ஆரம்பம்

சென்னையில் அச்சாகிக்கொண்டிருந்த புறப்பொருள் வெண்பாமாலை முற்றும் பதிப்பித்து நிறைவேறியது. அந்த நூற் பதிப்பில் எனக்கு அதிகமான சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் நான் அப்போது ஆராய்ச்சி செய்து வந்த மணிமேகலைதான் பலவகையான சிக்கல்களை உண்டாக்கியது. முதலில் அந்நூல் இன்ன சமயத்தைச் சார்ந்ததென்பதே எனக்குத் தெரியவில்லை. கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியரே அது பௌத்த சமயத்தைச் சார்ந்ததென்பதை எனக்குத் தெரிவித்தார். [1]

அதுகாறும் இன்னதென்று தெரியாமல், அல்லற் பட்டுக் கொண்டிருந்த எனக்கு, அதுமுதல் வேறுவகையான அச்சம் உண்டாயிற்று. ‘நாம் சைவமடத்திற் பயின்றமையால் சைவசமய நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே வரும் வைஷ்ணவ வித்துவான்களின் பழக்கத்தால் வைஷ்ணவ மதத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்க முயன்ற காலத்தில் ஜைன மதத்தைப் பற்றிய செய்திகள் தெரியாமல் உழன்றோம். நல்ல வேளையாக ஜைன நண்பர்கள் கிடைத்தார்கள். புதிதாக அச் சமயத்தைப்பற்றிய செய்திகளை அறிந்தோம். இப்போது புத்த சமய நூலையல்லவா எடுத்துக்கொண்டோம்! இதுவும் நமக்குத் தெரியாக மதமாயிற்றே. ஜைன சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜைன நண்பர்கள் இருந்தார்கள். புத்தமதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே தேடு வோம்! பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம்?’ என்று என் சிந்தனை சுழன்றது.

அப்போது ரங்காசாரியர் அபயமளித்தார். “நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக் கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

நான் அவரை மணிமேகலை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாகப் பற்றிக்கொண்டேன்.

பௌத்த மத ஆராய்ச்சி

அது முதல் பௌத்த மத ஆராய்ச்சியிலே புகுந்தேன். தமிழ் நூல்களில் எங்கெங்கே பௌத்த மத விஷயங்கள் வருகின்றனவென்று தேடித் தொகுக்கலானேன். நீலகேசியின் உரையில் பௌத்த மத கண்டனம் வருமிடங்களில் புத்தரைப் பற்றிய வரலாறுகளும் பௌத்த சமயக் கொள்கைகளும் காணப்பட்டன. புத்த மித்திரர் என்ற தமிழ்ப் புலவர் இயற்றிய வீரசோழியமென்னும் இலக்கண நூலின் உரையில் புத்த தேவனைப் பற்றிய பல செய்யுட்கள் உதாரணமாக வந்துள்ளன. அவற்றையும் தனியே எடுத்து எழுதிப் படிக்கலானேன். சிவஞான சித்தியார் பரபக்கம், ஞானப் பிரகாசர் உரையில் பௌத்த மத கண்டனமுள்ள இடத்திற் பல பௌத்த சமயக் கருத்துக்கள் வருகின்றன. அவற்றையும் கவனித்து வைத்துக் கொண்டேன். இவற்றையன்றித் தமிழிலோ ஸம்ஸ்கிருதத்திலோ பௌத்த மதநூல் ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. பாளிபாஷையிலே தான் பெரும்பான்மையான பௌத்த மத நூல்கள் உள்ளன வென்று ரங்காசாரியர் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியர் படித்துக் காட்டினார்.

சில புத்தகங்களை விலைக்கு வருவித்துக் கொடுத்தேன். புத்த பகவானது சரித்திரத்தை கேட்கக் கேட்க அவருடைய இயல்புகளில் என் உள்ளம் புதைந்து நின்றது.

அடுத்தடுத்து மணிமேகலையையும் படித்து வந்தேன். புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாகத் தெளியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் அதிற் காணப்பட்டன. அவற்றைப் படித்து நான் இன்புற்றேன். ரங்காசாரியர் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன!” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார் புத்தரைப் புகழும் இடங்களைப் பல முறை படித்துக் காட்டச்சொல்லி மகிழ்ச்சி யடைவார். “நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன்; ஆனால் இவ்வளவு இனிமையான பகுதிகளை எங்கும் கண்டதில்லை” என்று சொல்லுவார்.

இனிய பகுதிகள்

பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கையும்,

“பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன
தற்றோ ருறுவ தறிக”

என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும் பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.

‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன், தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

இடையிடையே பிற தமிழ் நூல்களிற் கண்ட தமிழ்ப்பாடல்களைச் சந்தர்ப்பம் வந்தபோது நான் எடுத்துச் சொல்லுவேன். புத்தர் பிரான் நிர்வாண மடைந்த காலத்தில் அவர் அருகில் இருந்தோர் புலம்புவதாகக் கொள்ளுதற்குரிய செய்யுள் ஒன்று வீரசோழிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருந்தது;

“மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால்
      என்செய் கேம்யாம்
அருளிருந்த திரு மொழியா லறவழக்கங் கேட்டிலமால்
      என்செய் கேம்யாம்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால்
      என்செய் கேம்யாம்”

என்னும் அச் செய்யுளை வாசித்தபோது படிக்க முடியாமல் நாத்தழுதழுத்தது. ரங்காசாரியரும் அதில் நிரம்பியுள்ள சோகரஸத்தில் தம்மை மறந்து உருகினார்.

இவ்வாறு புத்த சரித்திரத்திலே ஈடுபட்டு உருகியும் பௌத்த மத தத்துவங்களை அறிந்து மகிழ்ந்தும் பெற்ற உணர்ச்சியிலே மணிமேகலை ஆராய்ச்சி நடந்தது.

ஸுமங்களர் செய்த உதவி

மணிமேகலை இலங்கைக்குச் சென்றதாக அக்காப்பியம் தெரிவிக்கிறது. இலங்கையிலே உள்ள சில இடங்களின் பெயர்கள் அதில் வருகின்றன. கொழும்புவிலிருந்த பொ. குமாரசாமி முதலியாருக்கு அவ்விடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிவிக்க வேண்டுமென்று எழுதியதோடு பௌத்த மத விஷயங்களை அறிவதற்குத் துணை செய்வார் யாரேனும் இருப்பின் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அங்கே வித்யோதய கலாசாலையில் பிரின்ஸிபாலாக இருந்தவரும் பௌத்த மத ஆசிரியருமாகிய ஸுமங்களரென்னும் பௌத்தப் பெரியாரொருவர் உள்ளாரென்று முதலியார் தெரிவித்தார். பௌத்த மத நூல்களைப் பற்றியும், அச்சமயக் கொள்கைகளைப் பற்றியும் பல செய்திகளை அப்பெரியாரைக் கேட்டு எழுதச் செய்து எனக்கு அனுப்பினார்.

“இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பு.”

என்பதில் வரும் சமனொளி யென்பது சமந்த மென்றும் ஆடம்ஸ்பீக் என்றும் வழங்கப்படுமென்பது அவரால் தெரிந்தது. புத்த தேவருடைய பாதப் படிமைகள் அங்கு உள்ளன என்பதையும் அறிந்தேன்.

உள்ளங் கவர்ந்த பகுதிகள்

ரங்காசாரியரோடு இருந்து மணிமேகலையைப் படித்து இன்புறுவதையன்றி நானும் தனியே படித்துப் படித்து ஈடுபடலாயினேன். இந்த உடம்பை,

“வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா வுள்ளந் தன்பா லுடையது
மக்கள் யாக்கை”

என்று இழித்துக் கூறிய பகுதியிற் கருத்தூன்றினேன். அன்னதானத்தைச் சிறப்பிக்கும்,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே”

என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. தான தருமம் இல்லாமைபற்றிச் சுவர்க்கத்தை ஆபுத்திரனென்பவன் இழிவாகக் கூறுகிறான்:

“அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரு மில்லாத் தேவர்நன் னாட்டுக்
கிறைவ னாகிய வொருபெரு வேந்தே”

என்று இந்திரனை நோக்கி அவன் சொல்லும் வார்த்தைகளில் அமைந்த பொருளாழத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன்.

ரங்காசாரியர் ஒன்றரை வருஷ காலம் கும்பகோணத்தில் இருந்தார். நாள் தவறாமல் அவரிடம் சென்று அவர் சொல்லும் பௌத்த மதக் கருத்துக்களைக் குறித்துக் கொண்டு வந்தேன். அதன் பிறகு அவரைச் சென்னைக்கு மாற்றி விட்டார்கள். அவர் சென்னைக்குப் புறப்படும் பொழுது, “இந்தப் புத்தகத்தை நீங்கள் விரைவில் பதிப்பித்து வெளியிடுங்கள்; இது மாணிக்கத்தைப் போல அருமையானது” என்றார்.

“தாங்கள் சென்னைக்குப் போவதனால் மணிமேகலையின் சம்பந்தம் உங்களை விடாது. அங்கேயும் வந்து தங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விடப்போவதில்லை” என்றேன் நான்.

“அப்படியானால் நான் மிகவும் பாக்கியம் செய்தவனே” என்று அவர் தம் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டார். அவர் உள்ளத்தில் மணிமேகலையிற் கண்ட அரிய வரலாறுகளும் இனிய பகுதிகளும் குடி கொண்டன.


  1. இதன் விரிவை நினைவுமஞ்சரியிலுள்ள ‘மணிமேகலையும் மும்மணியும்’ என்ற கட்டுரையிற் காணலாம்.