என் சரித்திரம்/61 பிரசங்க சம்மானம்

அத்தியாயம்—61

பிரசங்க சம்மானம்

காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்திசெய்யும் விஷயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத்தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருஷ்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன்.

பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விஷயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப் பெறாதபேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகாகவியினுடைய திருவாக்கால் பாடப்பெற்ற பாக்கியத்தை அடைந்தேன். நான் எங்கே! அவர்கள் எங்கே! முன்பு தெரியாதவர்களாக இருந்தும் என்னை ஒரு பொருளாக எண்ணி இதை எழுதியிருக்கிறார்களே! அம்மகானை நேரில் தரிசித்து மகிழ்வுறும் சமயமும் கிடைக்குமா?” என்று கூறிப் பாராட்டினார்.

கிருஷ்ணசாமி ரெட்டியார் அன்பு

அதுதான் சமயமென்று எண்ணிய நான், “அவர்கள் என்னை விரைவில் வந்துவிடும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எழுதிய கடிதத்திலும் அதைத்தான் வற்புறுத்தியிருக்கிறார்கள்” என்றேன். பிள்ளையவர்கள் தம்மேல் ஒரு பாடல் எழுதியிருப்பதையும் தமக்குக் கடிதம் எழுதியிருப்பதையும் எண்ணி எண்ணி விம்மிதம் அடைவதிலேயே அவர் கவனம் சென்றது; அக்கடிதம் எதன் பொருட்டு எழுதப்பெற்றதென்பதை அவர் யோசிக்கவில்லை. நான் எடுத்துச் சொன்னபோது ரெட்டியார் தர்மசங்கடத்தில் அகப்பட்டார்.

“நீங்கள் அவசியம் அங்கே போகவேண்டுமா? இங்கேயே இருந்து இராமாயணம், பாகவதம் முதலியவைகளையும் பிரசங்கம் செய்துவந்தால் எங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்வோமே. ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் பிள்ளையவர்களிடம் அடிக்கடி போய்ச் சில நாட்கள் இருந்து வரலாம். நாங்களும் வந்து அவர்களைக் கண்டு கேட்டுக்கொள்கிறோம். அவர்களையே இங்கே அழைத்து வந்து சில காலம் இருக்கச் சொல்லி உபசாரங்கள் செய்து அனுப்ப எண்ணியிருக்கிறோம். நீங்களோ இனிமேற் கிரமமாக இல்லறத்தை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் எல்லாவிதமான சௌகரியங்களையும் அடையலாம். உங்கள் தகப்பனாருக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும். இது நான் மாத்திரம் சொல்லுவதன்று. பிரசங்கம் கேட்க வருபவர்கள் எல்லோருக்கும் உங்களை இங்கே இருக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்து இருக்கிறது. அடுத்தபடி என்ன படிக்கப் போகிறாரென்று எல்லோரும் என்னை ஆவலாகக் கேட்கிறார்கள்” என்று அவர் ஒரு சிறு பிரசங்கம் செய்தார்.

“நம்முடைய தந்தையார் எதை விரும்புகிறாரோ அதற்கு அனுகுணமாக அல்லவோ இருக்கிறது இந்தப் பேச்சு? இவர்களுடைய அன்பு நமக்கு ஒரு தடையாக நிற்கிறதே!” என்று எண்ணிச் சிறிது தடுமாறினேன். பிறகு, “உங்களுடைய அன்பை நான் மறக்க மாட்டேன். இன்னும் சில காலம் பிள்ளையவர்களிடம் போய் இருந்து பாடம் கேட்டுப் பின்பு இங்கேயே வந்துவிடுகிறேன். நான் இன்னும் பால்யன்தானே? நான் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை இப்போது கற்றுக்கொள்ளாவிட்டால் பிறகு வருந்தும்படி நேரும். பிள்ளையவர்களுடைய பெருமை உங்களுக்குத் தெரியாததன்று. அவர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்போது அதை இடையே நழுவவிடுவது தருமமா? என்னுடைய நன்மையை விரும்புபவர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். உங்களுடைய விருப்பத்தை நான் புறக்கணிப்பதாக எண்ணக் கூடாது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் எப்படியும் கிடைக்கும், ஆனால் என் விருப்பம் நிறைவேறுவதற்கு இதுதான் சமயம்” என்று அவரிடம் சொன்னேன்.

ரெட்டியாருக்கு விடை சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. “அப்பால் உங்கள் இஷ்டம். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டார்.

புராணப் பூர்த்தி

திருவிளையாடற் புராணம் பூர்த்திசெய்யும் பொருட்டு ஒரு நல்லநாள் குறிப்பிடப்பட்டது. அப்புராணத்தில் இறுதிப் படலமாகிய அருச்சனைப் படலத்தில் ஒரு பகுதி முன்பே நடைபெற்றது. பிற்பகுதியைச் சொல்லிப் பிரசங்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பிட்ட தினத்தில் ஊர் முழுவதும் பெருங்கூட்டமாக இருந்தது. பிரசங்கம் செய்து வந்த பிள்ளையார்கோவிலுக்கு முன் இருந்த பந்தலைப் பிரித்து ஒரு பெரிய பந்தல் போட்டார்கள். வாழை, கமுகு, கூந்தற் பனை, இளநீர்க்குலை, மாவிலைத் தோரணங்கள், தேர்ச் சீலைகள் முதலியவற்றைக்கட்டிப் பந்தலை அலங்கரித்தார்கள். ஒரு பெரிய திருவிழாநாளைப் போல எல்லோரும் உத்ஸாகத்தோடு இருந்தார்கள். மாலையில் முன்நேரத்திலே பிரசங்கம் தொடங்கப் பெற்றது. இப்புராணத்தைக் கேட்டுவந்த வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பலர் பல சிவஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு மதுரையை அடைந்து ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளை வழிபட்டுப் பூசித்தனரென்ற செய்தி அருச்சனைப் படலத்தில் உள்ளது. அம்முனிவர்கள் பூஜை செய்த பிறகு சொக்கநாதப் பெருமானைத் துதிப்பதாக அப்படலத்தின் இறுதியில் ஒருபகுதி இருக்கிறது. அப்பகுதியில் அக்கடவுளின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் முக்கியமானவை ஓசைச் சிறப்புடைய செய்யுட்களில் தொகுத்துச் சொல்லப் பெற்றிருக்கின்றன.

“பழியொடு பாச மாறுகெட வாச வன்செய்பணி
     கொண்ட வண்டசரணம்
வழிபடு தொண்டர் கொண்டநிலை கண்டு வெள்ளிமணி
     மன்று ளாடிசரணம்
செழியன்பி ளிந்தி டாதபடி மாறி யாடல்தெளி
     வித்த சோதிசரணம்
எழுகடல் கூவி மாமியுடன் மாம னாடவிசை
     வித்ச வாதிசரணம்”

என்பது அப் பகுதியில் முதற் பாட்டு. இவ்வாறு ஆறுபாடல்கள் வருகின்றன. அச்செய்யுட்களை வெவ்வேறு ராகத்திற் பாடிப் பொருள் சொல்லும்போது முன்பு விரிவாகச் சொன்ன திருவிளையாடல்களின் ஞாபகத்தினாலும் பாடல்களின் இன்னோசையாலும் யாவரும் மனங்கசிந்து உருகினர்.

பிரத்தியட்ச அகத்தியர்

இவ்வாறு முனிவர் துதிசெய்யச் சோமசுந்தரக் கடவுள் பிரசன்னமாகி அவர்களை நோக்கி, “உங்களுடைய தோத்திரம் நமக்கு ஆனந்தத்தை அளித்தது” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த விஷயத்தைக் கூறும் பாடல் வருமாறு:

“எனத்துதித்த வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை
     எறிதே னீப
வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய்
     வந்து நோக்கிச்
சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர் செய்த பூசைதுதி
     தெய்வத் தானம்
அனைத்தினுக்கு மனைத்துயர்க்கு நிறைந்துநமக் கானந்தம்
     ஆயிற் றன்றே.”

[குறுமுனி—அகத்திய முனிவர். நீபவனம்—கடம்ப வனம்; மதுரைக்கு ஒரு பெயர். மூர்த்தியாய்—திருவுருவமுடையவராகி. தெய்வத்தானம்—க்ஷேத்திரங்கள்.]

நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேஷ உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு அகத்தியருக்கும் உண்டு. அகத்தியர் பரம சிவபக்தர். சிவபெருமானுக்குச் சமமானவர். இவ்வளவு பெருமையையும்விடத் தமிழை வடமொழியோடு ஒத்த சிறப்புடையதாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது. தமிழ் நூல் செய்த பரஞ்சோதி முனிவர் அவரைத் தனியே சொல்லாவிட்டால் அபசாரமென்று நினைத்து அவ்வாறு சொன்னார். தமிழ் ஆசிரியராகிய அகத்தியரைத் தமிழ்க் கவிஞர் இவ்வாறே பாராட்டுவார்கள். தமிழாசிரியர்களுக்கு உள்ள பெருமை அளவு கடந்தது. இப்போது பிரத்தியட்ச அகத்தியராக விளங்குபவரும் என்னுடைய ஆசிரியருமாகிய பிள்ளையவர்களை எல்லோரும் தெய்வம்போலக் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கே இவ்வளவு பெருமை இருக்கும்போது அகத்தியருக்கு எவ்வளவு பெருமை இருக்க வேண்டும்! பரஞ்சோதி முனிவரைப் போல நாமும் தமிழாசிரியர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அகத்தியரைப் போன்ற சிவபக்தியும் தமிழ்த் தலைமையும் உடைய பிள்ளையவர்களிடத்தில் நான் மீண்டும் செல்வதாக எண்ணியிருக்கிறேன். எல்லோரும் விடைதர வேண்டும்” என்று சொல்லி முடித்தேன்.

பிரிவில் வருத்தம்

முனிவர்கள் கூறிய தோத்திர இன்பத்தில் ஆழ்ந்திருந்த யாவரும் திடீரென்று வருத்தத்தை அடைந்தனர். நான் காரையைவிட்டுப் புறப்பட்டுப் போவேனென்பது பல பேருக்குத் தெரியும். ஆனாலும் நானே அச்செய்தியை நேரே சொன்னபோது அவர்களுக்கு அடக்க முடியாத துயரம் பொங்கியது. சிலர் கண்ணீர் விட்டார்கள் அந்த அன்பை இன்று நினைத்தாலும் என் உள்ளம் உருகுகிறது.

பிரசங்கம் வாழ்த்தோடு நிறைவேறியது. பிறகு சம்மானங்கள் பலவாறாக வந்தன. ஆடைகள், பணம் எல்லாம் கிடைத்தன. இருநூறுரூபாய் வரையில் பணம் கிடைத்தது. செலவுக்காக வாங்கியிருந்த சிறு கடன்களுக்குக் கொடுத்ததுபோக நூற்றைம்பது ரூபாய் மிஞ்சியது. அதைக்கொண்டு கல்யாணத்துக்கு வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததைத் தீர்த்துவிட்டோம்.

எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டேன். முக்கியமானவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து, “ஐயா எங்களை மறக்க வேண்டாம். உங்கள் குறையைத் தீர்த்துக்கொண்டு இங்கேயே வந்திருந்து எங்கள் குறையையும் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்கள் பேச்சிலேதான் எத்தனை அன்பு! எத்தனை மென்மை! எத்தனை உருக்கம்! கடவுள், அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கிறார். அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமானமாகிவிடும்.

செங்கணத்தில் நிகழ்ந்தவை

கிருஷ்ணசாமி ரெட்டியார் தாமாக விடை அளிக்கவில்லை. நாங்கள் வலிந்து அவரிடம் விடைபெற்றோம். விடைபெறும்போது அவர், “நீங்கள் பாகவதத்தைப் பரிசோதித்து அச்சிட்டால் சகாயம் செய்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். “பார்க்கலாம்” என்று சொல்லி என் தாய் தந்தையருடன் புறப்பட்டுச் செங்கணத்துக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கே விருத்தாசல ரெட்டியாரும் அவர் குமாரராகிய நல்லப்ப ரெட்டியாரும் காரையில் நிகழ்ந்தவற்றைக் கேட்டு மகிழ்ந்தார்கள். நான் பிள்ளையவர்களிடம் செல்வதில் வேகமுள்ளவனாக இருத்தலை உணர்ந்த நல்லப்ப ரெட்டியார், “நீங்கள் மட்டும் போய் வாருங்கள். தங்கள் ஐயாவும் அம்மாவும் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறவே நான் அங்ஙனமே செய்ய உடன்பட்டேன். என் தாயாருக்கு என்னைப் பிரிவதில் சிறிதும் விருப்பமில்லை. அன்றியும் அக்காலத்தில் கும்பகோணத்திலும் அதைச் சார்ந்த இடங்களிலும் விஷபேதி நோய் பரவியிருந்தது. அச்செய்தி எங்கள் காதுக்கு எட்டியது. இயல்பாகவே என்னை அனுப்புவதற்கு மனம் இல்லாத என் பெற்றோர்களுக்கு இச் சமாசாரம் துணைசெய்தது. “நீ இப்போது போக வேண்டாம். இங்கேயே தங்கி அந்த நோய் அடங்கியவுடன் போகலாம்” என்று தடுத்தார்கள். எனக்கு மாத்திரம் எவ்வாறு இருந்தாலும் அப்பால் ஒருநாளாவது அங்கே தாமதிக்கக் கூடாது என்ற உறுதி ஏற்பட்டது.

என்ன சொல்லியும் கேளாமல், “இவ்வளவு காலம் திருவிளையாடல் படித்தேன். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்னைக் காப்பாற்றும் என்ற தைரியம் இருக்கிறது” என்று சொல்லிப் புறப்பட்டேன். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்று வெளிப்படச் சொன்னாலும், அந்த அருளோடு அம்மூர்த்தியின் திருநாமத்தைக்கொண்ட என் ஆசிரியரது உண்மையன்பு என்னைப் பாதுகாக்குமென்ற தைரியமும் என் அந்தரங்கத்தில் இருந்தது.

திருவாவடுதுறையை அடைதல்

செங்கணத்திலிருந்து புறப்பட்டபோது என் அன்னையார் ஒரு மைல் தூரம் உடன்வந்து பிரிவதற்கு மனம் இல்லாமல் கண்ணீர் வழிய, “தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விடையளித்தார். நான் நேரே திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தேன். ஆசிரியர் அம்பரில் புராணம் அரங்கேற்றிய பின் திருவாவடுதுறைக்கு வந்து விட்டார். நான் அவரைக் கண்டவுடன், “மறுபடியும் போவதாக உத்தேசம் இல்லையே? இங்கேயே இருக்கலாமல்லவா?” என்று கேட்டார்.

நான், “இங்கிருந்து பாடம் கேட்பதையன்றி எனக்கு வேறு வேலை இல்லை” என்று சொன்னேன். தாய்தந்தையர் க்ஷேமம் முதலியவற்றை அவர் விசாரித்தார்.

சுப்பிரமணிய தேசிகருடைய மொழிகள்

அப்பால், “ஸந்நிதானத்தைப் போய்ப் பார்த்து வாரும். பல மாதங்களாக நீர் பார்க்கவில்லையே” என்று ஆசிரியர் கூறவே நான் மடத்திற்குச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்தேன்.

“பல மாதங்களாக உம்மைக் காணவில்லையே! பிள்ளையவர்கள் அடிக்கடி உம்மைப் பற்றிப் பிரஸ்தாபிப்பார்கள். சௌக்கியந்தானே?” என்று தேசிகர் கேட்டார்.

நான் உசிதமாக விடை கூறினேன். பிறகு, “பிள்ளையவர்களுக்கு உம்மைப்போல ஒருவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்புபோலத் தேகசௌக்கியம் இல்லை. பாடஞ் சொல்லும் விஷயத்தில் அவர்களுக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் கேட்க வேண்டிய பாடங்களை நீரும் பிறரும் கேட்டு வாருங்கள். நூதனமாக வந்தவர்களுக்கு உம்மைப் போன்ற பழைய மாணாக்கர்கள் பாடம் சொல்லலாம். பிள்ளையவர்களுக்கும் சிரமபரிகாரமாக இருக்கும். மடத்தில் மாணாக்கர்களுடைய கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண்பது நமக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கிறது” என்று தேசிகர் அன்போடு மொழிந்தார்.

கம்ப ராமாயணப் பாடம்

நான் பணிவாக விடைபெற்றுப் பிள்ளையவர்களைச் சார்ந்தேன். கம்பராமாயணம் பாடம் கேட்க வேண்டுமென்று எனக்கிருந்த விருப்பத்தை ஆசிரியரிடம் புலப்படுத்தினேன். குமாரசாமித் தம்பிரானும் சவேரிநாத பிள்ளையும் வேறு சிலரும் என்னோடு சேர்ந்து கேட்டுக்கொண்டனர். ஆசிரியர் எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அப்பெரிய காவியத்தை முதலிலிருந்தே பாடம் சொல்லத் தொடங்கினார்.