என் சரித்திரம்/62 இரட்டைத் தீபாவளி
அத்தியாயம்—62
இரட்டைத் தீபாவளி
எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள் பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை அறியாத ஜனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தர்மம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “ரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர்.
வேதநாயகம் பிள்ளை விண்ணப்பம்
அரசாங்கத்தார் அந்நோய் பரவாதபடி மருந்துகளை ஊர்தோறும் வாங்கிக் கொடுத்தனர். மாயூரத்தில் இருந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையும் தம்மாலான உதவியைச் செய்தார். அன்றியும் அந்நோய்க்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்தை அமைத்துச் சில பாடல்களை இயற்றிச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அப் பாடல்களில் ஒன்று வருமாறு:
(கட்டளைக் கலித்துறை)
“இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி
மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்
விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா
நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.”
[மும்மல நோய் கெடும்படி ஞானாசிரியனாக உலகத்தில் தங்குகின்ற சுப்பிரமணிய தேசிக, இலக்கணத்திற் சொல்லப்படும் எழுத்தாகிய மெய்க்கு அரை மாத்திரை கால அளவு. இப்போது அந்த அளவு கூடத் தம் மெய்களுக்கு இல்லாமல் விஷபேதியாகிய மலநோயால் பலர் இறந்தனர். இந்நோயை விலக்கத் திருவருள் புரிய வேண்டும்.]
அவ்விண்ணப்பத்தைப் பெற்ற தேசிகர் பணம் கொடுத்து மருந்தை ஏராளமாக வாங்கச் செய்து கிராமந்தோறும் அனுப்பிக் கிராம முன்சீபுகளைக்கொண்டு விநியோகிக்கும்படி செய்தனர்.
என் தாய், தந்தையர் என்னைப்பற்றிக் கவலையடைவார்களென்ற எண்ணத்தால் நான் சௌக்கியமாக இருப்பதைக் கடித மூலம் அவர்களுக்கு அடிக்கடி தெரிவித்துவந்தேன்.
சிறிய தகப்பனார்
சீகாழி தாலூகாவில் இடமணலென்னும் கிராமத்தில் என் சிறியதாயாராகிய மீனாட்சி அம்மாளின் கணவர் கர்ணமாக வேலை பார்த்து வந்தார். அவர் பெயர் சுந்தரமையர் என்பது. சாந்தமான இயல்பும் சுறுசுறுப்பும் உடையவர் அவர்; சங்கீத ஞானம் உள்ளவர்; சிவபக்திச் செல்வர். திருவாவடுதுறையில் அக்காலத்தில் கர்ணமாக இருந்தவர் வேறு கிராமத்துக்குப் போகவேண்டு மென்ற நோக்கத்தோடு இருந்தார். என் சிறிய தந்தையார் திருவாவடுதுறைக்கு வர விரும்பினார். இவ்விருவரும் கலந்து பேசித் தம் இடங்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டார்கள். இந்த ஏற்பாட்டால் என் சிறியதந்தையார் திருவாவடுதுறைக்குத் தம் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். அதற்கு என் முயற்சியும் காரணமாக இருந்தது.
அவர் திருவாவடுதுறைக்கு வந்தபோது, “இனி யாதொரு கவலையுமின்றிச் சரியான வேளையில் ஆகாரம் செய்துவிட்டு இவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வரலாம்” என்று எண்ணினேன். அவர்கள் வீட்டிலே போஜனம் செய்துவரலானேன்.
மடத்திலிருந்து அவ்வப்போது வேண்டிய பொருள்கள் அவ்வீட்டிற்கு வரும். அவற்றைக் கண்டு என் சிறியதாயார் என்னைப் பாராட்டுவார். என் தாயாருக்கு என்பாலுள்ள அன்பு அவருக்கும் இருந்தது. ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. என் அன்னையார் என்னைச் சில சமயங்களில் கடிந்துகொள்வார். சிறியதாயாரிடம் நான் வெறுப்புக்குறிப்பை என்றும் கண்டதில்லை. குளிர்ந்த நேரத்தில் நினைத்துப் போற்றுவதற்குரிய உத்தமர்களில் அவர் ஒருவர். பொறுமை என்பது அவருக்கு ஓர் ஆபரணம்.
என் சிறிய தந்தையாரும் என்பால் அன்பாகவே இருந்தார். அவருண்டு; அவர் வேலையுண்டு; புற விஷயங்களில் அவர் தலையிடார். மடத்தின் நிலங்களே உள்ள அந்தக் கிராமத்தில் அவர் உத்தியோகம் பார்த்தாலும் வலிந்து மடத்திற்குச் சென்று ஆதீனகர்த்தரோடு பழகிப் பிரியம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இப்படி இருந்ததனால் மடத்தைச் சார்ந்தவர்கள் அவரிடம் மதிப்போடு பழகினார்கள்.
கம்பராமாயணப் பாடம்
எங்கள் ஆசிரியர் கம்பராமாயணப் பாடம் சொல்லி வந்தார். இராமாயணத்தின் இணையற்ற சுவையும் அவருக்குத் தமிழில் இருந்த அன்புமே அப்பாடம் நடைபெறுவதற்குக் காரணம். இல்லையெனில் அந்நிலையில் ஆசிரியர் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லவே இயலாது. அவர் தேகம் அவ்வளவு தளர்ச்சியை அடைந்திருந்தது. பித்தப்பாண்டு என்னும் நோய் அவரைப் பற்றிக்கொண்டது. அவர் பாதத்தைப் பிடித்து வயிற்றையும் வீங்கச்செய்தது. அடிக்கடி சோர்வும் இளைப்பும் உண்டாயின.
இயல்பாகப் பாடஞ் சொல்லும் ஊக்கம் அவருக்கு அப்போது இல்லை. தினந்தோறும் நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்லவில்லை. நாங்கள் படித்துக்கொண்டே போவோம். இடையிடையே நயமான பகுதிகளுக்கே குறிப்பாகப் பொருள் சொல்லுவார். எங்களுக்குப் பாடஞ் சொல்லுவதென்பது பெயரளவில் இருந்தது; ஆனால் அவர் அவற்றைப் பூரணமாக அனுபவித்தார். இராமாயணப் பாடல்கள் அவர் தளர்ந்த நிலையில் மருந்தாக உதவின.
இடையிடையே கம்பரது வாக்கைப் பாராட்டி உருகுவார். சில பாடல்களை மீண்டும் மீண்டும் பலமுறை படிக்கச் சொல்வார். அவற்றை விளக்கிச் சொல்லி இன்ன இன்ன நயங்கள் உள்ளனவென்று எடுத்துக்காட்டுவதைவிடப் பல முறை படிக்கச்செய்து கேட்டு அனுபவிப்பதில் அதிக இன்பம் அவருக்கு இருந்தது. சில பாடல்களுக்கு அவர் வார்த்தைகளால் பொருள் சொல்லவில்லை; கண்ணீர்விட்டு உருகி நின்ற அவர் மெய்ப்பாடுகள் உரை கூறின. “இனிமேல் இப்படி யார் பிறக்கப் போகிறார்கள்? என்ன அழகு! என்ன அழகு! யோசித்துப்பாடிய பாட்டுக்களா இவை? இயற்கையாக வருகிற வாக்கின் நயந்தான் எப்படி இருக்கிறது!” என்பார். கம்பர் பாடலை நாமும் உணர்ந்து இன்புறுகிறோம்; அவரும் உணர்ந்து அனுபவித்தார். ஆனால் கவிஞராகிய அவர் பெற்ற அனுபவம் நமக்கு இருக்குமோ என்பது சந்தேகந்தான். கவிஞன் உள்ளத்தைக் கவிஞன் உணரும்முறையே வேறுபோலும்!
கம்பரை ஆசிரியர் பாராட்டும்போதெல்லாம் நான் கம்பரைக் காட்டிலும் ஆசிரியரைப் பற்றியே அதிகமாக நினைப்பேன். “இப்பெரிய நூலை முன்பே கேளாமற் போனோமே!” என்ற வருத்தம் உண்டாகும். “இவர்களுக்கு இவ்வியாதி வந்திருக்கிறதே; எப்படி முடியுமோ!” என்ற பயமும் என் மனத்தை அலைத்து வந்தது.
ஆசிரியர் இயற்றிய நூல்கள்
இவ்வாறு நோயினால் ஆசிரியர் வருந்தினாலும் அவருடைய கவியாற்றல் மெலிவுறவில்லை. திருவிடைமருதூர் ஸ்தல விஷயமாக ஒரு திரிபந்தாதியை அவர் இயற்றத் தொடங்கினார். ஆதீனத்தார் விரும்பியபடி ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரத்தை விரிவாகச் செய்யத் தொடங்கினார். இவ்விரண்டு நூல்களில் திரிபந்தாதி மாத்திரம் பூர்த்தியாயிற்று. சிவஞான யோகிகளிடத்தில் அவருக்கு அளவற்ற அன்பு இருந்தது. அதனால் அவர் சரித்திரத்தை ஒரு காவியம்போல அமைக்க எண்ணி நாடு, நகரச் சிறப்புக்களைப் பாடத்தொடங்கினார், திருவாவடுதுறையின் பெருமைகளையும் ஆதீன குரு பரம்பரையின் சிறப்பையும் நன்றாகப் பாடவேண்டுமென்பது அவர் அவா. இவ்வளவு பெரிய அஸ்திவாரத்தோடு ஆரம்பித்த அது நிறைவேறாமற்போயிற்று.
ஆசிரியர் நோயால் துன்புறுவதை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் அவரைத் திருவிடைமருதூருக்குத் தக்க சௌகரியங்களுடன் அனுப்பி அங்கே உள்ள கட்டளைமடத்தில் இருந்துவரச் செய்தனர். திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியராக இருந்த சேஷாசல நாயுடு என்பவர் அவருக்கு மருந்து கொடுத்துவந்தார். ஆலயத்திற் பீடா பரிகாரமாக அருச்சனை முதலியன நடந்தன.
நானும் வேறு மாணாக்கர்களும் திருவாவடுதுறையிலே இருந்தோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நாங்கள் திருவிடைமருதூருக்குப் போய் ஆசிரியரைப் பார்த்துவந்து சுப்பிரமணிய தேசிகரிடம் அவரது நிலைமையைத் தெரிவிப்போம்.
சங்கீத ஒளஷதம்
நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது.
மணிமந்திர ஒளஷதங்களால் எவ்வளவோ முயன்றும் ஆசிரியரது நோய் குறையவில்லை. அப்பால் திருவாவடுதுறைக்கே வந்துவிடும்படி சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்ப அவர் அங்ஙனமே வந்து சேர்ந்தார். அங்கும் உசிதமான அளவில் சிகித்ஸை நடைபெற்றுவந்தது. மடத்திற்கு வருபவர்கள், பிள்ளையவர்களைத் தவறாமல் வந்து பார்த்து அவரது அசௌக்கியத்தை அறிந்து வருந்தினார்கள்.
ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குத் தம்முடைய குமாரர் வேண்டுகோளுக்கு இசைந்து ஆசிரியர் மாயூரம் சென்றார். செல்லும்போது அவருடன் சில மாணாக்கர்கள் போனார்கள். ஆசிரியருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் தீபாவளியில் அணிந்துகொள்ளும்படி புதிய வஸ்திரங்களைச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பினார்.
தீபாவளிக் குறை
நான் திருவாவடுதுறையிலே தங்கியிருந்தேன். என் சிறியதந்தையாரோடு தீபாவளி ஸ்நானம் செய்தேன். மடத்தில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆதீனகர்த்தர் தீபாவளி ஆடைகள் வழங்கினார். என்ன காரணத்தாலோ எனக்குக் கிடைக்கவில்லை. துலாமாதம் ஆனவுடன் ஆசிரியரை அழைத்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் என்னை மாயூரத்திற்கு அனுப்பினார். நான் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டதும், அவர் முதலில் என்னை, “தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேஷ்டி கிடைக்கவில்லையாமே?” என்று கேட்டார். அந்த விஷயத்தை அவர் எப்படியோ தெரிந்துகொண்டிருந்தார். அதனால் எனக்கு விசேஷ வருத்தம் ஒன்றும் இராவிட்டாலும் அவருக்கு மாத்திரம் அது பற்றிய உறுத்தல் மனத்தில் இருந்தே வந்தது. “மடத்தில் படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் வஸ்திரம் வழங்கும்போது உம்மை மட்டும் மறப்பதற்கு நியாயம் இல்லையே! உம்மிடம் ஸந்நிதானத்திற்கு எவ்வளவோ பிரியம் இருக்கிறதே. கவனிக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னார்.
“பெருங்கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; அல்லது கொடுத்ததாக எண்ணி இருக்கலாம். இதற்கு வேறுவிதமான காரணம் இராது” என்று நான் சமாதானம் சொன்னேன்.
“சமாதானம் வேண்டாம். உண்மையான அன்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி நேருவதில்லை. அப்படி நேரிடும்போது அதை வெளியிடாவிட்டால் அன்பு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளுவதில் பயன் ஒன்றும் இல்லை. பணக்காரர்களுக்கு அலக்ஷியமாகப்படும் ஒரு சிறுவிஷயம் உண்மை அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு மிக்கமனக்குறையை உண்டாக்கிவிடும்” என்றார்.
ஆசிரியருக்கு அவ்விஷயத்தில் எவ்வளவு வருத்தம் இருந்ததென்பதை அவர் வார்த்தைகள் புலப்படுத்தின. அதற்கு மூலகாரணம் என்பால் அவருக்கு இயல்பாக உள்ள பேரன்பே. அச்சமயத்தில் நான் சொல்லும் சமாதானமெல்லாம் அவருடைய சினத்தை அதிகமாக்குமென்று உணர்ந்து பேசாமல் இருந்துவிட்டேன்.
மற்றொரு தீபாவளி
ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. அருகில் இருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் பணத்தை அளித்துக் கடைக்குச் சென்று ஒரு புதிய பத்தாறு வஸ்திரம் வாங்கிவரச் செய்து தாமே அதற்கு மஞ்சள் தடவி என் கையிலே கொடுத்து, “இதைக் கட்டிக்கொள்ளும்” என்று அன்புடன் கூறினார். நான் அவ்வாறே அதைத் தரித்துக்கொண்டேன். தீபாவளி எனக்கு இரண்டு தடவை ஏற்பட்டது. திருவாவடுதுறையில் எல்லாரோடும் ஸ்நானம்செய்து யாவருக்கும் பொதுவான தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று மாயூரத்தில் ஆசிரியர் முன்னிலையில் அவர் அன்புப்பார்வையில் மூழ்கி அவர்தம் அருமைக் கையால் அளித்த வஸ்திரத்தைத் தரித்து ஒரு தீபாவளியைக் கொண்டாடினேன். அன்று எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று சொல்லி ஒரு பெருமூச்சுவிட்டார். அப்போது நெடுநாளாக இருந்த குறை ஒன்று நீங்கப் பெற்றவரைப் போலவே அவர் தோன்றினார்.
நான் வந்த காரியத்தை மெல்ல அவரிடம் சொன்னேன். “இன்னும் சில தினங்கள் இங்கே இருந்துவிட்டுப் போகலாம் நீரும் இரும்” என்று அவர் சொல்லவே, அங்ஙனமே சில தினங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தேன்.
இராமாயணப் புஸ்தகங்கள்
ஒருநாள் மாயூரம் கடைவீதியில் ஓரிடத்தில் இராமாயணம் ஏழுகாண்டங்களும் ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். இராமாயண பாடம் நடைபெற்று வந்த சமயமாதலாலும் நெடுநாட்களாக இரவல் புஸ்தகத்தைப் படித்து வந்தமையாலும் அவற்றைக் கண்டவுடனே வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அந்த ஆவலைப் பூர்த்தி செய்துகொள்ள என்னிடம் பணம் இல்லை. விலையை விசாரித்தேன். “ஏழு ரூபாயில் ஒரு பைசா கூடக் குறையாது” என்று கடைக்காரன் சொன்னான். எப்படியாவது அப்புஸ்தகங்களை வாங்கிவிட வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. ஒரு வழியும் தோற்றவில்லை.
பிறகு அங்கிருந்து நேரே திருவாவடுதுறைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று என் சிறியதகப்பனாரிடம் விஷயத்தைச் சொல்லிப் பணம் கேட்டேன். அப்பொழுதுதான் சம்பளம் அவருக்கு வந்திருந்தது. சம்பளமே ஏழு ரூபாய்தான்: அவர் சிறிதும் தடை சொல்லாமல் என் கையில் அதைக் கொடுக்கவே மீண்டும் மாயூரத்திற்கு வந்து கடைக்காரனிடம் போய்க் கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் உத்தர காண்டத்தையும் பெற்றுக்கொண்டேன். திருவாவடுதுறைக்குப் போய் வந்ததனால் உண்டான இளைப்பு அப்புஸ்தகங்களைப் பெற்ற சந்தோஷத்தில் மறைந்துவிட்டது.புஸ்தகங்களைக் கைக்கொண்டு முகமலர்ச்சியோடு ஆசிரியரை அணுகி அவற்றை அவரிடம் அளித்தேன்.
“என்ன புஸ்தகங்கள்?”
“கம்பராமாயணம். அவ்விடத்துக் கையால் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விலைக்கு வாங்கினேன்.”
“விலை என்ன?”
“ஏழு ரூபாய்.”
“பணம் ஏது?”
நான் திருவாவடுதுறைக்கு நடந்து சென்று பணம் வாங்கிவந்ததைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன், “அடடா! இதற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்னிடந்தான் புஸ்தகங்கள் இருக்கின்றனவே! அவற்றை எடுத்துக்கொள்ளலாமே? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? சரி, வாங்கியாய்விட்டது. நன்றாகப் படித்துப் புகழடைய வேண்டும்” என்று சொல்லி அவற்றை என் கையில் அளித்தார்.
அவற்றைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். சில பாடல்களைப் பாடமும் கேட்டேன். எப்பொழுதும் போன்ற நிலையில் ஆசிரியர் இருந்திருப்பின் அப்போது இரண்டு காண்டங்களை நான் பாடம் கேட்டிருப்பேன். அவர் தளர்ச்சியை அறிந்து நான் வருந்தினேன். என் உள்ளத்துள்ளே ஒருவகையான பயம் குமுறிக்கொண்டே இருந்தது.
சில தினங்களுக்குப் பின் மேனாப்பல்லக்கில் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்தார். அவருடன் இருந்த மற்ற மாணாக்கர்களும் நானும் அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்தோம்.