என் சரித்திரம்/83 காலேஜில் முதல் நாள் அனுபவம்

அத்தியாயம்—83

காலேஜில் முதல் நாள் அனுபவம்

கோபாலராவ் என்னை ஏற்றுக் கொண்டு கூறிய வார்த்தைகள் தியாகராச செட்டியாரைப் பேருவகையில் ஆழ்த்தின. பல காலமாக யோசித்து வைத்து மிக முயன்று பக்குவமாக என்னைத் திருவாவடுதுறை மடத்திலிருந்து அழைத்து வந்தவராதலின் தம் முயற்சி பலிக்க வேண்டுமே என்பதில் அவருக்கு மிக்க கவலை இருந்து வந்தது, எப்படியாவது தாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற மனத்திண்மையுடன் அவர் முயன்று எண்ணியபடியே நிறைவேற்றினார்.

என் வேண்டுகோள்

கோபாலராவ் எனக்கு உத்தரவு செய்ததை ஏற்றுக்கொண்ட நான் மிகவும் பணிவாக அவரை நோக்கி, “நான் இந்த வேலைக்குப் புதியவன். காலேஜ் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைச் சில நாட்கள் என்னுடனிருந்து கற்பிக்க வேண்டுமென்று செட்டியாரவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்ற கேட்டுக்கொண்டேன்.

செட்டியார், “இவர் சும்மா சொல்கிறார். மடத்திலிருந்து பெரிய நூல்களைப் பாடம் சொன்ன இவருக்கு இங்கே பாடம் சொல்லுவது லட்சியமன்று. என்னைக் காட்டிலும் பல விஷயங்களில் இவர் சமர்த்தர். ‘லக்ஷம் பாடல்கள் வரையில் படித்திருக்கிறார்” என்று புன்முறுவலுடன் கூறினார்.

அப்பால் எல்லோரும் பிரின்ஸிபாலிடம் விடை பெற்றுச் சென்றோம். நான் குடும்பத்தை அழைத்து வரும் வரையில் தம்முடைய இல்லத்திலேயே போஜனம் வைத்துக் கொள்ளலாம் என்று சாது சேஷையர் கூறியபடி அங்கேயே தங்கி வந்தேன். அதுவரையில் அன்று நிகழ்ந்தவற்றையெல்லாம் என் பெற்றோர்களிடமும் பண்டாரசந்நிதிகளிடமும் உசிதமாகத் தெரிவிக்கும்படி என்னுடன் இருந்த கணபதி ஐயரைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன்.

பிள்ளையவர்கள் நினைவு

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15-2-1880) காலையில் செட்டியாருடைய வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு வேலை கிடைத்ததைப் பற்றிய சந்தோஷத்தை அவர் பலவாறாகத் தெரிவித்ததோடு அவ்வேலைக்கு வேறு பலர் முயற்சி செய்ததையும் சொன்னார். “என்னிடம் படிக்கிறவர்களில் தக்கவர்கள் சிலர் இருக்கிறார்கள். முத்திச் சிதம்பரம் பிள்ளை எனக்கு மிக்க பிரியமானவர். அவருக்கு இந்த வேலையைச் செய்விக்கலாம் என்று கூட ஒரு சமயம் நான் நினைத்ததுண்டு. என்னருகில் இருக்கும் சதாசிவ செட்டியாரென்னும் என் மாணாக்கர் தமக்குத் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று சொன்னார். அன்றியும் நேரே பிரின்ஸிபாலுக்குச் சிலர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் தெரிகிறது. இவ்வளவு பேர்களுக்கிடையே உங்களை இங்கே அழைத்து வந்துவிட வேண்டுமென்ற ஞாபகமே எனக்குப் பலமாக இருந்தது. அதை எல்லோரிடமும் நான் வெளிப்படுத்தவில்லை. ராயரவர்களிடமும் வேறு சில ஆசிரியர்களிடமுமே தெரிவித்திருந்தேன். ஐயா அவர்கள் காலத்திலேயே உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது என் விருப்பம். அதற்கு நீங்கள் சம்மதிக்கவில்லை. ஐயாவுக்கும் உங்களைப் பிரிவதில் திருப்தியில்லை. அப்பொழுது வேலைக்குப் போகாமல் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதாயிற்று. இப்போது ஐயா அவர்கள் இருந்தால் எல்லோரைக் காட்டிலும் மிக்க சந்தோஷத்தை அடைவார்கள். அவர்கள் இல்லாவிட்டாலும் ஸந்நிதானமாவது கண்டு திருப்தி அடையும்படி இருக்கிறதேயென்று ஆறுதலடைகிறேன். இந்த ஸ்தானம் மிகவும் மதிப்புள்ளது. வர வர இதன் மதிப்பு அதிகமாகுமே யொழிய ஒரு நாளும் குறையாது. ஐயாவிடம் படித்து ஐயாவுடைய அன்புக்குப் பாத்திரமாக இருந்த நீங்கள் யாதொரு தடையும் இன்றி இந்த நிலைக்கு வருவதற்கு அவர்களுடைய உள்ளன்பே காரணமாகுமென்று நான் உறுதியாகச் சொல்லுவேன்” என்று செட்டியார் சொல்லி வந்தார்.

எனக்கு உடனே பிள்ளையவர்கள் ஞாபகம் வந்துவிட்டது. தியாகராச செட்டியார் கூறியவையெல்லாம் உண்மை என்பதை என் உள்ளம் உணர்ந்தது. “ஆம்; பிள்ளையவர்கள் இருந்தால் அவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு எல்லை காண முடியாதுதான்” என்று எண்ணினேன். என் அகக் கண்ணில் தாயனைய அப்புலவர் பெருமானுடைய சாந்தம் ததும்பிய முகத்தைக் கண்டேன்.

அந்த நினைவிலே லயித்திருந்த என்னைச் செட்டியார் தொடர்ந்து பேசிய பேச்சு சுய நினைவுக்குக் கொணர்ந்தது. “உலகம் மிகப் பொல்லாதது; ஜாக்கிரதையாக இருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும். நமக்குக் கௌரவம் உண்டாவது படிப்பினாலேதான். அந்தப் படிப்பைக் கைவிடாமல் மேன் மேலும் ஆராய்ந்து விருத்தி செய்து கெள்ள வேண்டும். காலேஜ் பிள்ளைகளிடம் நாம் நாம் நடந்து கொள்ளும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய அன்பைப் பெறலாம். பாடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டும், அடிக்கடி நடந்த பாடங்களில் கேள்வி கேட்க வேண்டும்; மற்ற ஆசிரியர்களிடமும் ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்” என்று அவர் பின்னும் பல போதனைகளை எனக்குச் செய்தார்.

பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் காலேஜுக்குப் போக வேண்டுமென்று எண்ணி ஜோஸியரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் நல்லவேளை யென்று தெரிந்தது.

“நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு ஸித்தமாக இருந்தால் நான் காலேஜுக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார்.

அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வந்தேன்.

காலேஜ் பிரவேசம்

திங்கட்கிழமை பகற்போஜனம் செய்து விட்டுச் சேஷையர் வீட்டில் காத்திருந்தேன். பதினொன்றரை மணிக்குச் செட்டியார் உத்தரவுப்படி காலேஜிலிருந்து இரண்டு மாணாக்கர்கள் என்னை அழைக்க வந்தார்கள். நான் சுப்பிரமணிய தேசிகர் அளித்த உடைகளில் சட்டையை அணிந்து அதன் மேல் துப்பட்டாவைப் போர்த்துத் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு சென்றேன். அந்தக் கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே சிரிப்பு வருகிறது.

காலேஜின் தாழ்வாரத்தில் மேலைக் கோடியிலுள்ள ஒரு தூணருகில் தியாகராச செட்டியாரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் என்னை எதிர்பார்த்து நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நல்ல வேளையென்று குறிப்பிட்டிருந்தகாலம் தமிழ்ப்பாடம் இல்லாதவேளை. அவ்விருவரும் எப். ஏ. இரண்டாம் வகுப்புக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பாடம் நடத்திய ஹனுமந்தராவிடம் முன்பே, “இவர் நல்ல வேளையில் பாடம் சொல்ல வேண்டியிருப்பதால் உங்கள் மணியை இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததனால் நாங்கள் வகுப்புக்குள் புகுந்தவுடன் ஹனுமந்தராவ் தம் ஆசனத்தை விட்டு எழுந்து எங்களை வரவேற்றார்.

“இப்படி உட்காருங்கள்” என்று மேடையின் மீதிருந்த நாற்காலியை எனக்குச் சுட்டிக்காட்டினார் ஹனுமந்தராவ். எனக்கு அவ்வளவு பேர்களுக்கு முன்னால் அங்கே இருப்பதற்குத் துணிவு உண்டாகவில்லை.

என் கருத்தை அறிந்த செட்டியார், “இது திருவாவடுதுறை மடமன்று; இந்த இடத்தில் உட்கார வேண்டியது உங்கள் கடமை” என்று சொல்லவே நான் போய் நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருந்த பெஞ்சில் ஹனுமந்தராவ், ஸ்ரீநிவாசையர், தியாகராச செட்டியாரென்பவர்களும் ஓய்வுள்ள வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். அந்த வகுப்பில் எழுபது பிள்ளைகளுக்கு மேல் இருந்தனர். முன் வரிசையில் கவர்ன்மெண்டு ஸ்காலர்ஷிப் பெற்ற இருபது பிள்ளைகள் உட்கார்ந்திருந்தனர். வகுப்பிலிருந்த பிள்ளைகளிற் பலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்களாகத் தோற்றினர்.

பாடம் ஆரம்பம்

விநாயகக் கடவுளையும் வேறு தெய்வங்களையும் மனத்தில் தியானித்துக் கொண்டு பாடம் சொல்லத் தொடங்கினேன். நாலடியாரில், “இரவச்சம்” என்னும் அதிகாரத்தை முதலிலிருந்து சொன்னேன்.

மடத்தில் பாடம் சொன்ன பழக்கத்தால் எனக்கு அங்கே சொல்வதில் அச்சமோ சோர்வோ உண்டாகவில்லை. முதற் செய்யுளை சங்கராபரண ராகத்தில் நிறுத்திப் படித்தேன். பள்ளிகூடப் பிள்ளைகளை ஓரளவு சங்கீதத்தால் வசப்படுத்தலாமென்பதை அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். நான் பாடம் சொல்லத் தொடங்கிய செய்யுள் வருமாறு:

“நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவி னவர்.”

[இதன் பொருள்: ‘இந்த ஏழைகள் நம்மாலே முன்னுக்கு வருபவர்கள்: இவரால் தமக்கோ, நமக்கோ உண்டாகும் லாபம் ஒன்றுமில்லை’ என்று தம் செல்வத்தைப் பெரிதாக எண்ணி மயங்கிய மனத்தையுடையவர்களைப் பின் தொடர்ந்து தெளிந்த அறிவுடையவர்கள் செல்வார்களோ? நல்கூர்ந்தார்- றியவர். ஆக்கம்-விருத்தி. மருண்ட- மயங்கிய, செல்பவோ-செல்வார்களோ? தெருண்ட-தெளிந்த.]

பொருள் சொல்லும் போது, உலகத்திலே பணக்காரர்கள் இறுமாப்பினால் ஏழைகளை அவமதிப்பதையும் ஓர் உதவி செய்துவிட்டால் அதைத் தாங்களே பெரிதாகச் சொல்லி அவ்வுதவி பெற்றவர்களை இழிவாகப் பேசி, ‘இந்த உதவியை இவரிடம் பெறும்படி நம்மைத் தெய்வம் ஏன் வைத்தது!’ என்று அவ்வேழைகள் தம்மைத் தாமே நொந்து கொள்ளும்படி செய்வது முதலியவற்றையும் எடுத்துரைத்தேன். ஒரு பாடலைப் பாடம் சொல்லும்போது, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால் கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால், உபமானங்களையும், உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களுடைய மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன்.

ஐந்து பாடல்கள் அந்த மணியில் முடிந்தன. இடையே, யாசகம் செய்வதனால் உண்டாகும் இழிவைப் பற்றி நான் மேற்கோள்கள் சொன்னபோது செட்டியார் குசேலோபாக்கியானத்திலிருந்து, “பல்லெலாந் தெரியக் காட்டி” என்னும் செய்யுளை எடுத்துச் சொல்லி அவ்விஷயத்தைப் பின்னும் விளக்கினார்.

இரண்டாவது பாடம்

மணி அடித்தவுடன் நான் முன்னே வேறு வகுப்பிற்குச் சென்றேன். செட்டியார் பிள்ளைகளைத் தனியே அழைத்து, நான் பாடம் சொன்னதைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். பிள்ளைகள் தங்களுக்கு மிக்க திருப்தியாக உள்ளது என்று தெரிவித்தார்கள்.

“நான் மிகவும் கஷ்டப்பட்டு இவரை அழைத்து வந்திருக்கிறேன். இவரிடத்தில் மரியாதையாக இருங்கள். என்னிடம் இருப்பது போலவே இவரிடமும் இருக்க வேண்டும்” என்று செட்டியார் அவர்களை நோக்கிச் சொல்லி விட்டுச் சிலரை இன்னார் இன்னாரென்று எனக்குப் பின்பு தெரிவித்தார்.

அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப் போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள். சேஷையர் விருப்பத்தின்படி ஸம்ஸ்கிருத பண்டிதராகிய பெருகவாழ்ந்தான் ரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம் சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா ராகத்தில் படித்துவிட்டுப் பொருள் சொல்லலானேன்.

நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர் உணர்ந்து தாமும் திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று அஞ்சலி செய்து, “ஸ்வாமிகள் இந்த ஸமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது. இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். ஸம்ஸ்கிருத பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய இஷ்டம் பூர்த்தியாகாது. க்ஷமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப்பிறரை அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது காலேஜிலும் அப்படிச் செய்வதில் அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன்.

மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது.

“அன்ன மாலையை யாழிடைப் பிணித்து”

என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் அர்த்தம் சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். யாவரும் கொல்லென்று சிரித்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். எனக்குப் பல விஷயங்கள் அப்போது தெரிந்தன.

பிறகு, பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருஷங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த வருஷம் பரீக்ஷைக்குப் போக வேண்டியவர்கள். புதுக்கோட்டையில் பிரின்ஸிபாலாக இருந்த எஸ். ராதா கிருஷ்ணையர். கோயம்புத்தூரில் சிறந்த வக்கீலாக விளங்கிய பால கிருஷ்ணையர், திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள் அவ்வகுப்பில் இருந்தார்கள்.

கம்ப ராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப் பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன்.

ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம் என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார். பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே, அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன சொல்லிக் கொடுத் தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருஷம் என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?” என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன். நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.

மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள் காலேஜை விட்டுப் புறப்பட்டோம்.

முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச் செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும், எல்லோருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும் நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று.