என் சரித்திரம்/84 எனக்கு உண்டான ஊக்கம்
அத்தியாயம்—84
எனக்கு உண்டான ஊக்கம்
இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி காலேஜு க்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், ஸ்ரீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று ராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். ஜாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் சென்னதன்றி “ராயரைக் கண்டு பயந்து ஏதாவது உளறி விடாமல் ஜாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார்.
கோபால ராவ் வரவு
பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன். பெயரியலில், “ஒன்றே யிருதியிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து வந்து என் பக்கத்தில் போட்டான். அடுத்த நிமிஷம் கோபால ராவ் வந்தார். உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் கேட்டேன். ராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புஸ்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார்.
அவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமை தொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு இயைத்து விஷயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த ராயர் அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன்.
மற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். ராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு வெறுப்புக்குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார்.
ஆனால், கோபால ராவ் முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர் காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர் அல்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும் அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார்.
செட்டியாரின் ஆவல்
மணி ஐந்து அடித்தது. கோபால ராவ், தம் கையில் உள்ள புஸ்தகத்தை உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும் எழுந்து நின்றோம். கோபால ராவ் உள்ளத்தில் எவ்வகையான கருத்து உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
அவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணையரென்னும் மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து ராயரை நோக்கி, “ஒரு விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள் வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்?’ என்ற கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த ஸ்தானத்துக்குத் தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி விட்டார்கள்” என்று சொன்னார்.
அவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப் பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. ராயரோ அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும் புறப்பட்டோம்.
ராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விஷயத்தில் என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் காலேஜ் ஆசிரியர்கள் எல்லோரிடமும் செட்டியார் கேட்டார்.
“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர் சொன்னார். ராயரோடு நெருங்கிப் பழகும் சேஷையர் முதலியோர். “பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம் என்று தெரிகிறது” என்றார்கள்.
செட்டியார் என்னைப் பார்த்து, “ராயர் இப்படியே அடிக்கடி வந்து கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்.
மடத்து நிகழ்ச்சிகள்
அந்த வாரம் முழுவதும் உத்ஸாகத்தோடு என் கடமையைச் செய்து வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன்.
திருவாவடுதுறையிலிருந்து ஒவ்வொரு நாளும் யாரேனும் வந்து என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோஷத்தோடு பேசி வருவதாக அறிந்தேன்.
கும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி விசாரிப்பார். காலேஜில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் காலேஜில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச் சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கேட்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார். தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் காலேஜில் பாடம் நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான் வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும் சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி நிர்வகிக்கப் போகிறோம்!’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி செய்து விட்டன.
திருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோஷமாகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம் காலேஜில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப் பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விஷயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டியவராக இருந்தார். காலேஜிலோ கல்வியையன்றி வேறு விஷயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது. விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே?
திருவாவடுதுறைக்குச் சென்றது
இந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலேஜ் விட்டவுடனே போயிருப்பேன். அந்த வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் சென்றேன். என்னுடைய வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” என்று அன்புடன் அழைத்தார்.
என் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே ஸ்நானத்தையும் போஜனத்தையும் முடித்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது.
தேசிகரது திருப்தி
“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோஷப்படுவார்களென்றும் நாம் எதிர்பார்த்ததுண்டு. அந்தப்படியே ஜயமடைந்து நல்ல பெயர் வாங்கி வந்ததைப்பற்றி மிக்க சந்தோஷம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழிகளைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தியடைந்தன. அந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில நிமிஷங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் சொன்னேன்:-
“அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய
அமலன் றன்பால்
கற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக்
கண்ணிற் காணப்
பெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன்
பெயரை வாயால்
சொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள்
சொல்லுவீரே”
[சொற்றார்க்கு-சொல்லுபவர்களுக்கு.]
இச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விஷயமாக விசாரித்து வந்தார். நான் சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார்.
அன்பர்களது வியப்பு
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார ஸந்நிதியாகிய நமசிவாய தேசிகரிடமும் விஷயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் காலேஜ் விஷயங்களை விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புக்களின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ ஒரு புதிய தேசத்துக்குப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து கொள்ளுவதில் ஜனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே இருந்தார்கள் அவர்கள்.
இரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன்.