என் தமிழ்ப்பணி/அனைய கொல்!


9. அனைய கொல்!

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயய்பினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள்.

அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே வாழ்வுத் துணையாகும், அது ஒன்றைப் பெறுவதினாலேயே தன் வாழ்வு நிறைவாகி விடும் எனக் கருதும் குறுகிய உள்ளம் உடையவனல்லன். பொருளிட்ட வேண்டும் என்றாலும், அதை அறவழியிலேயே ஈட்ட வேண்டும் என்றாலும், ஈட்டிய பின்னர் அப்பொருட் பயனாம் இன்பத்தைக் குறைவற நுகர்தல் வேண்டும் என்ற விரிந்த உள்ளமும் அவனுக்கு உண்டு. அவன் பால் அப்பண்பு குறைவறக் குடி கொண்டிருப்பதைக் கண்டே அவள் அவனை மணம் செய்து கொண்டாள். இருவரும் இணை பிரியாதிருந்து இன்புற்று வாழ்ந்தனர்,

ஒருநாள் எப்போதும் இன்ப நாட்டத்திலேயே இருந்து விடுதல் கூடாது. அவ்வின்பம் இடையற்றுப் போகா வண்ணம் துணை புரிவதாய பொருளையும் ஈட்ட வேண்டும்' என்ற உணர்வு அவனுக்கு உண்டாயிற்று. உடனே அப்பணி மேற்கொண்டு புறப்படத் தொடங்கினான். அதை அவள் அறிந்து கொண்டாள். பொருளீட்ட வேண்டுவது அவன் கடமையென்பதை அவளும் அறிந்திருந்தமையால் அவன் விருப்பத்திற்கு மறுப்பளிக்கவில்லை.

ஆனால் பொருள் தேடிப் போகும் இவர், ஆங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டி வருமோ; அவ்வளவு காலம் இவரைக் காணாது நான் எவ்வாறு தனித்து வாழ்வேன் என எண்ணி வருந்தினாள். அவ்வருத்தம் நிறை மனத்தோடு தன் மனைப்புறத்தே உள்ள நொச்சிவேலி அருகே நின்றிருந்தாள். அவளைத் தேடி ஆங்கு வந்த அவன் அவள் முகக்குறிப்பில் அவள் மணக் கலக்கத்தைக் கண்டு கொண்டாள். உடனே அவள் அருகில் சென்று நின்றான். வேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியை அவளுக்குக் காட்டி

‘பெண்ணே! இம்முல்லை இப்போதுதான் தளிரீன்றுளது இது அரும்பீன்று மலரும் அத்துணை விரைவில் நான் வந்து விடுவேன். கார்காலம் தொடங்கியதும், இதுவும் மரைத் தொடங்கி விடும். நானும் அக்கார்காலத்தில் திரும்பி விடுவேன். இது உறுதி. அச்சிறு காலம் வரை; கடமையை எண்ணி கலங்காது காத்திருப்பாயாக” எனக் கூறித்தேற்றினாள். அவன் உரைத்த உறுதிமொழியை நம்பி, அவள் ஒரு வாறு உளம் தேறி, அவனுக்கு விடையளித்தாள்

அவன் போய் விட்டான். கடமையை எண்ணி அவள் காத்துக் கிடந்தாள். நாட்கள் கழிந்து கொண்டேயிருந்தன. கார்காலமும் தொடங்கிவிட்டது. ஆயினும் அவன் வந்திலன். ஒவ்வொரு நாளிலும் அவனை எதிர் நோக்குவாள் அவன் வருகையைக் காண வாயிற்கண் வந்து, ஊரெல்லாம் உறங்கும் வரை காத்துக் கிடப்பாள்.

இறுதியில் அன்றும் அவன் வாராமை கண்டு வருந்தி வாயில் அடைத்து விழி நீர் சோரச் சென்று பள்ளியில் வீழ்ந்து கிடப்பாள். அத்தகைய நாட்களுள் ஒன்று அந்நாள்.

கணவன் தேரைக் காணும் ஆர்வத்தோடு கண்ணில் நீர் மல்கக் காத்திருக்கும் போது அவள் தோழி ஆங்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவள் துயர் அளவிறந்து பெருகிற்று. உடனே, தோழி! கணவர் கார்காலத் தொடக்கத்தில் வந்து விடுவேன் என் வாக்களித்துச் சென்றார். தோழி! அதோ பார், கார் கால மழை பெய்ந்து ஓய்ந்து விட்டது. தன் வருகைக்காகத் தவம் கிடந்த இம் மாநிலத்து மண் தண் பெயலால் நெகிழ்ந்து குளிறுமாறு பெருமழை பெய்த மேகம், தன் இடியொலி அடங்கி ஓய்ந்து விட்டது. மேகத்தை எதிர் நோக்கிற்று மண். அது ஏமாந்து போகாவாறு மழையும் உரிய காலத்தில் வந்து பெய்தது. அதனால் மண் குளிர்ந்தது. கணவர் வருகையை எதிர்நோக்கி நாள்தோறும் காத்துக் கிடக்கிறேன் நான். ஆனால் அவர் வந்திலர். வந்து தண்ணனி செய்திலர் அதனால் நான், மகிழ்ச்சியும் மன எழுச்சியும் இழந்து வருந்துகிறேன். காலம் பொய்யாது வந்து பெய்த மழை, இன்ன காலத்தில் வருகிறேன் என முன்கூட்டி வாக்களிக்கவில்லை. வாக்களிக்காமலே வந்து உதவிற்று. நம் கணவர் கார்காலத்தில் வந்து விடுவேன் என வாக்களித்துள்ளார். வாக்களித்தும் அக்காலத்தில் வந்திலர்.

“தோழி! சிற்சில ஆண்டுகளில் மழை கார்காலத்திற்கு முன்பாகவே வந்து நம்மை ஏமாற்றுவதும் உண்டு. ஆதலின் கார்காலம் தொடங்கி விட்டது என்பதை இம்மழையைக் கொண்டு மட்டும் நான் கூறவில்லை.”

இதோ பார் காட்டில் எழுந்த நறுமணம் நாட்டிலும் வந்து நாறுகிறது. காட்டில் முல்லையும் பிடவும் மலர்ந்த தால் எழுந்த மணம் கம்மென வீசத் தொடங்கிவிட்டது. அது போதாதோ, கார்காலம் தொடங்கி விட்டது என்பதைக் காட்ட. தோழி! மலர்வதற்கு முன் சிவல் பறவையின் முள் போல் கூர்மையுற்றுக் காண்பதற்குக் கொடியவாய்க் காட்சி அளித்த முல்லை அரும்புகள், மலர்ந்த பின்னர் எத்துணை இனிமையாக மணக்கிறது கண்டாயா?

நம்பால் மனம் நெகிழ்ந்து, காலம் தாழ்க்காது வந்திருந்தால் நம் மனம் விரும்பு இனியவராக விளங்க வேண்டிய நம் கணவர் மனவிரக்கமற்று வராதிருப்பதால் நனிமிகக் கொடியவர் போல் தோன்றுகின்றனரே.

என்னே கொடுமை! தோழி! முல்லை தனித்து மலர்ந்திருந்தால் மணம் காடு நிறையப் பரவியிராது பிடவும் உடன் மலர்ந்ததினாலேயே இவ்வளவு மணம் எழுந்துளது: பொருளீட்டும் தன் பணியில் வெற்றி காண்பதால் அவர் மனம் மட்டும் நிறைந்து விடுவதால் வாழ்க்கையில் உண்மை இன்பம் உண்டாகிவிடாது. வாக்களித்துச் சென்றவாறே கணவர் வந்து சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு என் மனமும் நிறைவு பெறுதல் வேண்டும். எங்கள் இருவர் நெஞ்சும் நிறைந்த வழியே எங்கள் வாழ்க்கையில் உண்மைப் பேரின்ம் நிலவும். இதை அவர் உணர்ந்திலர்: இப்போதும் அவர் வந்திலர். இதற்கு யான் என் செய்வேன்?

“தோழி! கார்காலம் தொடங்கியது மட்டுமன்று இப்போது கார்கழி காலமும் ஆகிவிட்டது. பள்ளங்களில் வெண் சங்குகள் உடைந்து கிடப்பனபோல் மலர்ந்துள்ள வெண்காந்தட் செடிகளுக்கு இடையிடையே தலைகாட்டும் அறுகம்புல்லை அதோ பார். கார்காலம் தொடக்கத்தில் முளைக்கத் தொடங்கிய அவ்வறுகு, இப்போது கிழங்கு விடுமளவு வளர்ந்துவிட்டது. அது கார்காலக் கழிவை யில்லவோ உணர்த்தும்.

இன்னமும் அவர் வந்திலர். காதற்பிணையை அடையப் பெற்றேம் என்று களிப்பு மிகுதியால் செருக்கித் திரியும் அக் கலைமான் வெண்காந்தளும் அறுகங்கிழங்குமாகிய அரிய உணவையும் வெறுத்து, தன் காதற்பிணையின் பின் திரியும் அப்பேரின்பக் காட்சியை, தோழி! நீயும் காண். இக்காதற் காட்சியைக் கண்டும் என் கண்கள் கலங்காதிருக்குமோ? இக் கலைக்கு உள்ள உணர்வுதானும் நம் காதலர்க்கு இல்லையே: பயிரையும் பாவையும் வெறுத்துவிட்டு இரலை, பிணையின் திரிகிறது ஈண்டு.

ஆனால், நம் காதலர், பொருள்மீது சென்ற வேட்கையை வெறுத்து, நம்மோடு கூடிக் களிக்கக் கருதாது. நம்மை மறந்து, பொருளை விரும்பி ஆண்டே கிடக்கிறார்: இதற்கு என் செய்வேன்?

“தோழி மழை பெய்தது. அதைக் கண்ணுற்ற நான் மழைதான் பெய்தது. ஆனால் முல்லை இன்னமும் அரும்பீன் வில்லை. அது அரும்பீனும் கர்வத்தில் அவர் வந்துவிடுவார்; அவர் அளித்த வாக்கு பொய்யாகாது என நம்பி அமைதி கண்டேன். அது கழிந்தது. முல்லையும் மலர்ந்து விட்டது. அப்போதும் அவர் வந்திலர். அவர் வாக்குப் பொய்த்து விடுமோ? அதனால் அறம் பிறழ்ந்த தவறு அவரைச் சார்ந்து விடுமோ என்ற ஐயம் எழுத்தது. அதனால் வருந்தினேன்.

அக்காலமும் கடந்துவிட்டது. கார்கழிகாலம் வந்து விட்டதை அறுகங்கிழங்கு உணர்த்தக் கண்டேன். இந்நிலையிலும் அவர் வந்திலர். அவர் உரைத்துச் சென்ற வாக்கு உறுதியாகப் பொய்த்துவிட்டது. அதனால் அவர்க்கு என்ன கேடு நேருமோ என எண்ணி நடுங்குகிறது என் உள்ளம் தோழி! பொருள், அறத்திற்கும் இன்பத்திற்கும் துணையாய். விளங்கவேண்டும்.

இன்பத்தை அளிக்க வேண்டும்; அறவழி வரவேண்டும் என்றெல்லாம் அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் இவரோ தன் பொருள் வேட்கையால் என் இன்பத்தை அழித்துவிட்டார். அளித்த வாக்குப் பிழைத்துப் போக அறநெறி யினின்றும் பிறழ்ந்து விட்டார். அறம் கெடினும் கெடுக இன்பம் கெடினும் கெடுக என்ற கருத்துடையவராய் நின்று அவர் பொருளிட்டத் துணிந்து விட்டார். தோழி! அப் பொருள் அத்துணைச் சிறப்புடையதோ?” எனக் கூறி வருந்தினாள்.

“மண்கண் குளிர்ப்பவீசி, தண்பெயல்
பாடு உலந்தன்றே பறைக்குரல் எழிலி:
புதன் மிசைத் தளவின் இதமுள் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்

5. காடே கம்மென்றன்றே; அவல
கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர்ப்
பதவின பாவை முனை இ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழிஇத்
தண்அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே:

10. அனைய கொல்? வாழி தோழி! மனைய
தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே.”

திணை : பாலை

துறை : தலைமகன் பொருள்வயின் பிரிந்தானாகத்
தலைவி தோழிக்குச் சொல்லியது.

புலவர்: ஒரோடோகத்துக் சுந்தரத்தனார்.

1. மண்கண்-மண்ணிடம்



2. பாடு-ஒலி; உலந்தன்று-அடங்கிற்று; பறைககுரல்-
முரசுபோல் முழங்கும், எழிலி- மேகம்.

3. தளவு-முல்லை; செந்நனை-பேரரும்பு

4. பிணி அவிழ-மலர

5. அவல-பள்ளத்தில்

6. கோடு-சங்கு கோடல்-வெண்காந்தள்;

7. பதவு-அறுகு: பாவை- கிழங்கு முனைஇ
வெறுத்து மதவு-செருக்கு மிகுந்த

8. இரலை-ஆண்மான், அமர்: உள்ளம் விரும்பும்:

9. அறல்: நீர்; பள்டன; தங்கின

10. மனைய: மனைக் கணஉள்ள;

11. தாழ்வில்-உயர்ந்த, சூழ்வன-சூழ்ந்து.