என் தமிழ்ப்பணி/சொல்லின் எவனோ?

16. சொல்லின் எவனோ?

கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர்சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மனப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு பட்டு அவள் அன்பைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்து பழகிய பின்னரே அவன் அவளை மணந்து கொண்டான்.

அன்று அவள் காதலுக்காக அவ்வாறு ஏங்கிக் கிடந்த அவனே, இன்று அவள் மனையில் கிடந்து மாளாத்துயரில் ஆழ்ந்து மடியுமாறு அவளை மறந்து பரத்தையர் சேரி சென்று வாழ்கிறான்.

கணவன் தகாவொழுக்கம் கண்டு அப்பெண் கடுந்துயர் உற்றாள்; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன; இரவு பகல் எப்போதும் அவன் நினைவேயாய்க் கிடந்து வருந்தினாள்: அவள் கண்கள் இடைவிடாது நீரைச் சொரிந்த வண்ணம் இருந்தன; அப்பெண்ணின் துயர் நிலையை அவள் தோழி பார்த்தாள்; அவள் நிலையை எண்ணி வருந்தினாள்.

ஒருநாள், அப்பெண்ணின் கண்களில் நீர் கசியக் கண்டு நெடிது வருந்தினாள்; அழுது துயர் உறுவது அழகன்று என அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். தான் படும் துயர்க்குத் தோழியும் துயர் உறுவதை, அப்பெண்ணின் அன்புள்ளம் தாங்கிக் கொள்ள மாட்டாது தளர்ந்தது; அவள் பொருட்டாவது தான் தன் துயரை மறைத்துக் கொள்ளுதல் வேண்டும் என எண்ணிற்று அவள் தூய உள்ளம்; உடனே, "தோழி! என் துயர்க்கு, நீ நினைப்பதுபோல் நம் காதலர்ப் பிரிவு காரணமன்று; அது குறித்து நான் சிறிதும் கவலையுற்றலேன், என் கண்ணீர்க்குக் காரணம் வேறொன்று உளது; தோழி! நம் மனையைச் சுற்றி வேலிபோல் வளர்ந்திருக்கும் பனைமரத்தின் மடல்களுக்கிடையே கூடுகட்டி வாழும் அன்றில்களில் ஒன்று ஓயாது ஒலிக்கிற்கே, அது உன் காதுகளுள் சென்று ஒலிக்கவில்லையோ? இணைபிரியாது வாழும் இயல்பினவாய அவற்றுள் ஒன்று எங்கோ சென்றுவிட்டது போலும்.

பிரிந்துபோன தன் துணை, மாலை கழிய இரவு வந்துற்ற பின்னரும் வாராமையால் வருந்தி, கூவிக் கூவி அழைக்கும் அதன் குரல், அதன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் துன்பத்தை வெளிப்படுத்துவது காண்.

அப்பறவை படும் துன்பம் என் உள்ளத்தையும் ஆறாத துயரில் ஆழ்த்தி விட்டது; அத்துன்பச் சுமையை தாங்க மாட்டாதே என் கண்கள் நீர் கசியத் தொடங்கிவிட்டன இதுவல்லது, நான் காதலர் குறித்துக் கலங்கவில்லை. ஆகவே அவர் போய்விட்டார் என்றோ, அதுவே என்னைத் துயர் கடலில் ஆழ்த்தி விட்டது என்றோ எண்ணி நீ துயர் வரவேண்டாம் எனக் கூறிக் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.

அப்பெண் கண்ணீர் சொரியக் கலங்கி நிற்கும் நிலை கண்டே வருந்திய தோழி அவள் கூறியன கேட்டு மேலும் வருந்தினாள். கணவன் மேற்கொண்டிருக்கும் பரத்தையர் தொடர்பே தன் துயர்க்குக் காரணமாகவும் அது காரணமாகத்தான் அழுவதைப் பிறர் அறிந்து கொண்டால் அது தனக்கும் தன் கணவனுக்கும் புகழ்க்கேடாம் எனக் கருதும் உயர்வுள்ளம் உடைமையால், அதை மறுத்து விட்டு, பிறிதொரு காரணத்தைக் கற்பித்துரைக்கும் இவள் பெருந்தன்மையை என்னென்பேன்; அன்றிற் பறவையின் ஆறாத் துயர் கண்டு இவள் உள்ளம் கலங்கும்; இவள் உள்ளம் அத்துணை அருள் நிரம்பியதே என்பதை நான் அறிவேன்; அவ்வருள் உள்ளம் உடைமையால் அன்றோ, அன்று அவனை ஏற்றுக் கொண்டாள்; தன் பொருட்டு இவன் இத்துணைப் பாடுபடுகின்றனனே என்ற இரக்கவுணர்வு அன்றோ அவளை ஆட்கொள்ளப் பண்ணிற்று.

ஆனால் இன்று இவள் கண்ணீர்க்கு அன்றி பறவைகள் பால் கொண்ட அருள் காரணமாகிவிடாது; கணவன் பிரிவுத் துயரால், அதிலும் அவன் பரத்தையர் தொடர்புற்றுப் பழிமிகு வாழ்வு மேற்கொண்டு விட்டான் என அறிந்தமையால் உற்ற பெருந்துயரால் நிறைந்திருக்கும் இந்நிலையில், அவ்வுள்ளத்தில் அருளுணர்வு அரும்பியிருக்காது; ஆனால், அன்றிலின் துயர்நிலை கண்டே தன் கண்கள் அழுகின்றன என இவள் கூறுவது, காதலன் பிரிவால் துயர் உறுகிறேன் எனக் கூறல் பெருமைத் கேடாம்: புதழ்க்கேடாம் என அறிந்தமையால், அதை எனக்குக் காட்டாது அடக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற பெருமிதவுணர்வு கொண்டமையாலேயாம்; துயர் கொண்டு துடிக்கும் இவள் அதைப் பிறர் அறியவாறு அடக்கி வாழ இன்னும் எத்துணை துயர்க்கு உள்ளாக வேண்டுமோ? அந்தோ! இவள் நிலை நனிமிக இரங்கற்குரித்து என எண்ணித் துயர் உற்றாள்.

அப்பெண்ணின் துயர்நிலை கண்டு வருந்திய தோழி. இனி வாய்மூடி வாளாய்க் கிடத்தல் கூடாது; இவள் துயர் தீர்க்கும் வழி வகைகளை இன்றே செய்தல் வேண்டும்; இவளை மறந்து வாழும் இவள் கணவனை இன்றே இவள் பால் சேர்த்தல் வேண்டும் எனத் துணிந்தாள்: அப்பெண்ணின் துயர் காணப் பொறாமையால் அவள் அத்துணிவு கொண்டாளாயினும், பரத்தையர் சேரிக்குச் சென்று, இளைஞனுக்கு இவள் நிலையை எடுத்துக்கூறி அழைத்து வருவது எவ்வாறு? அதைச் செய்ய வல்லவர் யார்? பண்புடையார் எவரும் பரத்தையர் சேரிபுக மனம் இசையாரே என்ற கவலை எழச் செய்வதறியாது செயலற்றுக் கிடந்தாள்.

அப்போது அத்தெரு வழியே பாணன் செல்வதைக் கண்டாள்; இளைஞன் விரும்பும் பரத்தையரைத் தேர்ந்து அவளுக்கும் அவனுக்கும் உறவுண்டாக்கப் பெருந்துணை புரிந்தவன் அப்பாணன்: இளைஞனுக்குப் பரத்தையர் ஒழுக்கத்தைக் கற்பித்தவனும் அவனே: அதனால் அவனைக் கண்ணுற்றதும் அவன் பால் பெருஞ்சினம் கொண்டாள்; ஆனால் அந்நிலையில் தாக்குத் துணைபுரிவன் அவன் ஒருவனே; பரத்தைய சேரிக்குச் செல்லப் பக்குவப் பட்டவன் அவன் ஒருவனே என உணர்ந்து, உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கிய சினத்தைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள். தெருவழியே சென்று கொண்டிருந்த அவனை அழைத்தாள்.

“பாண! பாராட்டத்தக்க பெருமை மிக்க, நம் தலைவன் பரத்தையர் சேரி புகுந்து வாழ்கிறான்; பரத்தையர் பால் கொண்டுள்ள ஆசை மிகுதியால் அவன் மனைவியாம் மாண்புடைய இவளை அறவே மறந்து விட்டான்: இன்று இவளை மறந்து வாழும் அவன், அன்று இவள்பால் எத்துணைப் பேரன்பு கொண்டிருந்தான் தெரியுமா? இவள் காதலைப் பெற அவன் எத்துணை அடும்பாடு பட்டான்; எத்தனை நாள் காத்துக் கிடந்தான்; எத்தனை இடையூறுகளைத் தாங்கிக் கொண்டான்; பிறரால் பணிந்து நிற்க வேண்டாப் பெருநிதி படைத்த அவன் இவள் பொருட்டு எவ்வளவு பணிவு காட்டினான்: இவளை அடையும் ஆர்வ மிகுதியால் அச்சத்தையும் கைவிட்டு வாழ்ந்தான். பாண! இவளோடு களவுக்காதல் கொண்டு வாழ்ந்த காலத்தில் அவன் இவளைத் தேடி நாள் தோறும் வருவன்; அவன் வருங்காலம், கடல் அலை ஓய்ந்து ஒலி அடங்கும் இரவுக் காலமாதலின் தொழில் ஒழிந்து தோணிகளைக் கரைக்கண் விடுத்து, இவள் தந்தையும் தமையன்மாரும் வீட்டிலேயே இருப்பர்; அவர்கள் இருக்கும்போது அங்குச் செல்லுதல் கூடாதே; அவர்கள் நனிமிகக் கொடியவராயிற்றே அவர்கள் கண்ணில்பட்டு விட்டால் பெருங்கேடு நேருமே என எண்ணி அஞ்சான்; அவர்கள் இருக்கும்போதே இவளைக் காண வருவன்; அம்மட்டோ! இடைவழியில் ஆழம்மிக்க உப்பங்கழிகள் பல குறுக்கிட்டுக் கிடக்கும்.

அவற்றில் ஆளைக் கொல்லும் சுறா போலும் கொடிய மீன்கள் இரைதேடி அலைந்து கொண்டிருக்கும். அத்தகைய கழிகளைக் கண்டும் அவன் கலங்கி நின்று விடான்; அது மட்டுமன்று இவர்கள் 'கனவுக் காதலை அறிந்து கொண்ட இவ்வூர்ப் பெண்டிர் சிலர் ஊரில் அலர் எழுப்பியிருந்தனர். அவ்வலர் கேட்ட அன்னை முதலாயினர் இவள் பால் சினங்கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஆங்கு வருதல் கூடாது. அதனால் இருவர் நலத்திற்கும் கேடுண்டாம் என எண்ணி வாராது இருந்து விடான்: அப்போதும் வருவான்: மாண்பு மிக்க அணிகளால் அழகு பெற்று விளங்கும் நெடிய பெரிய தேரில் வருவான்.

ஊர்ப்புறத்தே நெடிது பொழுது காத்துக் கிடக்க, இவள் வருகையை நோக்கி இரவு பகல் எப்பொழுதும் இருந்து வருந்துவான். அவ்வாறு வந்து காத்துக் கிடந்தது ஒருநாள் இரு நாள் அல்ல: பலநாள்: அத்தகையவன் இன்று இவளை மறந்துவிட்டான்: அன்று அடைவதற்கு அரிதாகத் தோன்றிய இவள் காதல், இன்று கசந்து விட்டது போலும்: அதை மறந்துவிட்டான். இங்கு வருவதை அறவே கைவிட்டான்.

“பாண! அவன் இவளை மறந்து விட்டான்; வேறு யாரேனுமாயின் நம்மை மறந்துவிட்ட அவன் உறவு தமக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று எண்ணி, அவனைத் தாமும் மறந்து கைவிடுவர். ஆனால் இவள் அது செய்திலள்; மாறாக, அவனையே நினைந்து நைந்து உருகிறாள். அவள் கண்கள், இரவு பகல் எப்பொழுதும் நீர் சொரிந்த வண்ணம் உள்ளன; அதைக் கண்டு இவளைக் கடிந்து கொண்டாள். இவள் 'நான் என் காதற்கேடு குறித்துக் கண்ணிர் சொரிந்திலேன். தன் காதல் துணை பிரிந்து விட்டதே என்ற கலக்கத்தால் ஓயாது கூவி அழும் அன்றிலின் துயர்கண்டே என் கண்கள் அழுகின்றன. எனக்கூறி தன் துயரை மறைக்கிறாள். இத்தகையாளை நான் எவ்வாறு காப்பனோ? அறியேன்.'

“பாண! நீ ஒன்று செய்யின் நன்றாம். அவன் பரத்தையர் உறவு கொள்ள உறுதுணைபுரிந்தவன் நீ அன்றோ? அப்பழி நீங்க இன்று ஒன்று செய்: அவன் வாழும் பரத்தையர் சேரிக்குச் செல்; பண்புடைப் பெருமக்கள் எவரும். ஆங்குச் செல்லார்: ஆதலின், எம்பொருட்டு நீ செல்வதையும் நாணுகிறது எம் நெஞ்சம்: பிறர் காணின் எமக்குப் பெரும் பழியாம் என அஞ்சுகிறோம், ஆகவே பிறர் கண்ணில் படாவாறு செல்; சென்று, கடல் நாட்டு வாழ்ந்தமையால் நன்கு நீந்தக் கற்றிருந்தும் பரத்தையர் பெருவெள்ளத்தை நீந்திக் கரையேற மாட்டாது, அதனிடையே கிடந்து உழலும் அவனைக் கண்டு, இவள் நிலையினை அறிவித்துவா: பாண! அவனை அப்பரத்தையர் சேரிக்குக் கொண்டு சேர்த்த செயலினும் இது கேடுடைத்தாமோ? ஆகாது பாண! அஞ்சாது சென்று வருக” எனக் கூறி அனுப்பினாள்.

தனக்குப் பரிசு பல அளித்துத் தன்னைப் புரக்கும் பேரருள் உள்ளத்தினளாய மனைக் கிழத்தியின் மன நிலை அறியாக் காரணத்தால், அன்று அவனுக்குப் பரத்தையர் உறவு கொள்ளத் துணைபுரிந்த பாணன், அவள் துயர் அறிந்த பின்னர், அது தீர்க்க உதவாது. வாளாக் கிடப்பனோ: விரைந்து ஓடினான் பரத்தையர் சேரிக்கு.

“கடல்பாடு அவிந்து தோணி நீங்கி,
நெடுநீர்இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாணிழை நெடுந்தேர் பாணிநிற்பப்

5.:பகலுநம்வயின் அகலானாகிப்
பயின்று வரும்மன்னே, பனி நீர்ச்சேர்ப்பன்;
இனியே மணப்பரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்குயாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று

10.:சொல்வின் எவனோ? பாண! எல்லி
‘மணைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணையொன்று பிரியினும் துஞ்சா காண்’ எனக்
கண் நிறை நீர் கொடு சுரக்கும்
ஒண்ணுதல் அரிவை; யான்என் செய்கோ எனவே.”

திணை : நெய்தல்

துறை : தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக வருந்திய
தலைவியின் துயர் நிலை கண்டு தோழி பாணனுக்குச் சொல்லியது.

புலவர் : கருவூர்ப்பூதம் சாத்தனார்

1.பாடு = ஒலி; அலிந்து; அடங்கி; நீங்கினும் என
இன்னும் உம்மும் கூட்டிப் பொருள் கொள்க.

2. கடுமீன் = கொடிய சுறா மீன்; கலிப்பினும்;
செருக்கித் திரியினும்;

3. வெவ்வாய் = கொடிய வாய்; கௌவை - அலர்:

4. பாணி; தாழ்த்து;

6. பயின்று = பலமுறை; மன்:கழிவுப்பொருள் நின்றது;
அந்நிலை இப்போது இல்லை என்பது பொருள்;
சேர்ப்பன் = கடல் நாட்டுக் காவலன்;

7. மணப்படும்: கூடுதற்கு அரிய; தணப்ப: பொங்கு
தலால், நீந்தி-கடந்து;

8. யார் = என்ன உறவுடையார்; என்னாது : என்று
கருதி வெறுத்துவிடாது;

9. மல்லல்முதார்; களியாட்டம் மிக்க பரத்தையர் சேரி
மறையினை-மறைந்து;

10. எல்லி = இரவு;

11. கரக்கும் = மறைக்கும்.

பாண்! அரிவை, அன்றில் துஞ்சாகான் எனக் காக்கும் சேர்ப்பன், நீங்கினும், கலிப்பினும், தூற்றினும் தேர்பாணி நிற்ப, பயின்று வரும்மன், இனி, காமம்தணப்ப நீந்தி வாராதோர் யார் என்னாது, சென்று யான்என் செய்கோ எனச் சொல்லின் எவனோ எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.