என் பார்வையில் கலைஞர்/கலைஞர் - முத்தமிழ் அறிஞர் எப்பேர்பட்ட மனுசன்

கலைஞர்
முத்தமிழ் அறிஞர்
எப்பேர்பட்ட மனுசன்!


இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் முதல் வார வாக்கில்....

ஏவி. எம். மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மகளும், எனது குடும்ப நண்பருமான திருமதி. மீனா அருண் வீரப்பன் அவர்கள், என்னை அகில இந்திய குடும்பநலத் திட்டச் சங்கத்தில் கலைஞரோடு சேர்ந்து பேசவைத்தார்.

இன்று, இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் தருவித்துக் கொண்டு அவற்றிற்கு கணக்கு காட்டாமல் பொதுமக்களுக்கு சேவை செய்வது போல், பாவனை செய்து, முக்கால்வாசிப் பணததை ஓரங்கட்டும் போது, இந்த அகில இந்திய குடும்பநல திட்டச் சங்கம், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுகிற அமைப்பு. அந்தக் காலத்தில் இருந்தே குடும்பநலத் திட்டத்திற்காக அரும்பணி ஆற்றிய அமைப்பு.

விழா நாளில் ராஜேஸ்வரி மண்டபத்தில் மேடையில் கலைஞர் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் போடப்பட்ட சாதாரண நாற்காலியை வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். அவருக்கு வலது பக்கம் சங்கத்தின் தலைவர் என்று நினைக்கிறேன். இடது பக்கமும் இன்னொருவர்... நான் கலைஞரின் வலது பக்கத்திற்கு வலது பக்கம். என்னையடுத்து கலைஞரின் துணைவியார் திருமதி ராசாத்தி அம்மையார், இவரை அடுத்து ரஜேஸ்வரி அம்மையார்... இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் சரளமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும், ராசாத்தி அம்மாவும் வணக்கம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளாததற்கு என்னளவில் ஒரு காரணம் உண்டு. கலைஞர், முதல்வராக இருந்த போது, அவர்தான் என்னை வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கு செய்தி ஆசிரியராக மாற்றினார் என்பதை வாசகர்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், நான், ராசாத்தி அம்மாவின் சாதியை சேர்ந்தவன் என்பதால், அவரே கலைஞரிடம் என்னை தொலைக்காட்சியில் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்து வெற்றி பெற்றதாக எழுதியிருந்தார். இது மணியன் அவர்களின் தகுதிக்கே குறைவான செயல்.

ராசாத்தி அம்மாவுக்கு என்னை தெரிந்திருக்க முடியாது. ஒருவேளை, கனிமொழி சம்பந்தமாக கலைஞரிடம் நான் உரையாடியதை, அவர் தனது துணைவியாருடன் சொல்லி இருக்கலாம். ஆனாலும், ராசாத்தி அம்மாவுடன் எனக்கொரு மானசீகமான அன்பு உண்டு. இதயம் பேசுகிறதில் வந்த செய்தி, ஒருவேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட நம்பத் துவங்கினேன். ஒருவர் நமக்கு பிடித்தமானவராய் ஆகும்போது, அவர் நமக்கு நல்ல காரியம் செய்வதாக கூறப்படும் போது, அது செய்யப்பட்டதோ, செய்யப்படவில்லையோ, சம்பந்தப்பட்டவர், அப்படி செய்ததாகவே நம்புவார். நடப்பதை மட்டும் நம்ப வேண்டும் என்பது இல்லை. நடந்திருக்கும் என்றும் நம்பலாம். இதுதான் மனோதத்துவத்தில் ஒரு அடிப்படை விதி.

இந்தச் சூழலில், கலைஞர், இரண்டாவது தடவையாக முதல்வராய் பொறுப்பேற்றவுடன் சென்னை தொலைக் காட்சியில் ஒரு கவியரங்கத்திற்கு தலைமை தாங்கினார். கவியரங்கம் நிலைய அரங்கிற்குள்ளேயே நடந்தது. அங்கே வரும் ராசாத்தி அம்மாவை வரவேற்று அவருக்குரிய இருக்கைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. இந்தப் பொறுப்பைக் கொடுத்தவர்கள் கூட இதயம் பேசுகிறது செய்தியை நம்பித்தான் கொடுத்து இருக்கலாம் ராசாத்தி அம்மா வந்த போது நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயரைக் கேட்டதும், அவர் ஏறிட்டுப் பார்த்து புன்னகைச் செய்வார் என்று நினைத்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. ஒப்புக்கும் அவர் தலையாட்ட வில்லை. இது எனக்கு அவமானமாக தோன்றியது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, தோழர் ஆலடி அருணாவின் மகனின் திருமண நிகழ்ச்சி அடையாரில் நடைபெற்றது. கலைஞர் இதை நடத்தி வைத்தார். கூட்டம் கலைந்தபிறகு காரைத் தேடிக் கொண்டிருந்த ராசாத்தி அம்மாவிடம் மீண்டும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கண்டுக்க வில்லை. குறைந்தபட்சம் அப்படி எனக்குத் தோன்றியது. இனிமேல் அவரை எங்கே சந்தித்தாலும் நானும் கண்டுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அருணாவிடம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நான் மனத்தாங்கலாக குறிப்பிட்ட போது ‘யோவ்.. அந்த அம்மா ரொம்ப கஷ்டப்பட்டவங்க... அப்பாவி... நிறைய பேரு கூழை கும்பிடு போட்டே அவங்கள ஏமாத்தி இருக்காங்க. இதனால அவங்க எச்சரிக்கையா இருக்காங்க. உம்ம கும்பிடு கூழைக் கும்பிடா அல்லது நல்ல கும்பிடா என்பது அவங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று அவர் ஒரு எதிர் கேள்வி கேட்டார்.

என்றாலும், இனிமேல் ராசாத்தி அம்மாவை எங்கே பார்த்தாலும், அவரைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை என்று நான் தீர்மானித்து விட்டேன். ஆகையால் அந்த விழா மேடையில், அவரோடு நான் பேசவில்லை. அவரும் என்னை கண்டுக்கவில்லை. இதனை கலைஞர் எப்படியோ கவனித்து இருக்கிறார். உடனே வலது பக்கமாக திரும்பி ராசாத்தி அம்மையாரை நோக்கி ‘அவரு சமுத்திரம்’ என்று சிறிது வலுவாக பேசினார். உடனே, நாங்கள் இருவரும் தெரியுமே என்று ஒரே சமயத்தில் சொல்லிக் கொண்டு, ஒரே சமயத்தில் வணக்கம் போட்டு பிறகு பேசிக் கொண்டோம்.

ராசாத்தி அம்மையார் எவ்வளவு எளிமையானவர் என்பது அப்போது நன்றாகவே புரிந்தது. நானும் கனிமொழி மணமுடித்து சிங்கப்பூர் சென்றதை கருத்தில் கொண்டு, ராசாத்தி அம்மையார் ஆனந்த விகடனில் என் சிரிப்பு சிங்கப்பூர் போய்விட்டது’ என்று குறிப்பிட்டதைப் படித்து விட்டு ‘என் கண்கள் கலங்கின என்று அவரிடம் தெரிவித்தேன். உடனே அவர், ஆனந்த விகடன் அல்ல அவள் விகடன் என்று திருத்தம் கொடுத்தார். அவருடைய கண்கள் உள்முகமாய் போயிருக்க வேண்டும். மனோ அலைகள் சிங்கப்பூருக்கு அவரை இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். சிறிது நேரம் பேச்சற்று காட்சியளித்தார்.

இதற்குப் பிறகு தினகரன் பத்திரிகை விழாவில் ராசாத்தி அம்மையாரை சந்தித்தேன். என் மகனின் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை கொடுக்காது போனது ஏன் என்று என்னை கேட்டார். நான் அவர் அப்போது ஊரில் இல்லாததால் கூரியரில் அனுப்பியிருந்ததாக தெரிவித்தேன். கூரியரில் அனுப்பியிருந்தால் வந்திருக்குமே என்று என்னை நம்பாதது போல் கேட்டார். அதில் ஒரு உரிமை இருப்பதை கண்டு கொண்டேன்.

கலைஞர் என்னைப் பார்த்து ‘அதுதான் என் துணைவியார் ராசாத்தி அம்மா’ என்று சொல்லி ஏன் பேசாமல் இருக்கிறாய் என்று மறைமுகமாக கேட்காத கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கலாம். ஆனால் அவரோ தனது துணைவியாரைப் பார்த்துத்தான் அப்படி கேட்டார். இதனால் நானும் அன்றைக்கு என் துணைவியார் திருமதி. கோகிலா சமுத்திரத்தை பற்றி பேசுவது என்று தீர்மானித்து விட்டேன். இப்படிப் பேசினேன்.

‘பொதுவாக நமது முதல்வரின் முன்னிலையில் பேசுவதற்கு அனைவருமே அஞ்சுவார்கள். அந்த அளவிற்கு கலைஞர் அவர்களது பேச்சை மனதில் உள்வாங்கிக் கொண்டு குட்டுவதா, தட்டுவதா, தட்டிக் கொடுப்பதா என்று தீர்மானிப்பார். ஆனால், கலைஞரின் முன்னிலையில் பேச நான் தயங்குவது இல்லை’

‘இப்போது நான் பயப்படுவது பார்வையாளர் இருக்கையில் இருக்கும் என் துணைவியாருக்குத்தான். வள்ளலார் மக்கள் நேயப் பேரவை துவக்க விழாவிற்கு தலைமை தாங்கிய நான் கலைஞரின் வருகையை பொருட்படுத்தாது போல் அங்கும் இங்கும் சுற்றியதாக என் துணைவியார் என்னைக் கண்டித்தார். ‘எப்ப பேர் பட்ட மனுசன்! அவர். அவர் முன்னால அப்படி நடந்துகிறீங்களே’ என்று சாடினார். கலைஞருக்கு, தென்மாவட்ட மண்வாசனை பாணியில் எப்பேர்ப்பட்ட மனுசன் என்று என் துணைவியார் கொடுத்திருக்கும் பட்டம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் டாக்டர், முத்தமிழ் அறிஞர், தமிழனத்தலைவர் போன்ற பட்டங்களுக்கு இணையானது’

கலைஞர் என் பேச்சை பெரிதும் ரசித்தார். நான் பேசி உட்கார்ந்ததும் ராசாத்தி அம்மையர், நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், முன்பின் பார்த்தறியாத என் மனைவியை கண்டு பிடித்து ‘எப்படி வெட்கப்படுகிறாங்க பாருங்க’ என்றார்.