ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/ஐவரை மணந்தவள்

1. ஐவரை மணந்தவள்


அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி. ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையள், பிஞ்சாய்ப் பழுத்தாள் என்று வைணவ உலகம் வாய்வெருவிப் பாராட்டும் பெருமை பெற்றவள் ஆண்டாள் நாச்சியார். பரமனுக்குப் பாமாலையும் பூமாலையும் பாடியும் சூடியும் கொடுத்த பைந்தமிழ்ச்செல்வி.

தமிழ்மொழியில் "கோதை தமிழ்" என்ற ஒரு தனிப்பிரிவைத் தந்த தாய்.

தாய் வயிற்றில் பிறக்காமல் தண்டுழாய் அடியில் தோன்றிய சகலகாவல்லி.

வடபெருங்கோயிலுடையான் குடி கொண்ட ஸ்ரீவில்லிபுத்துருக்குக் "கோதை பிறந்த ஊர்" என்ற தனிப் பெயரைத் தந்த தமிழ்ப் பெருமாட்டி ஒருமுறை பஞ்சவர் தேவி பாஞ்சாலியைச் சத்திக்க நேர்ந்தது. துவாபர யுகத்து ஆயர்பாடிக் கண்ணனது திருவிளையாடல்களைப் பாஞ்சாலி பேசினாள்.

கலியுகத்துத் தமர் உகந்த உருவமாய் ஊர்தோறும் குடிகொண்டுள்ள இறைவன் சிறப்பை ஆண்டாள் பேசினாள்.

நெடுநேரம் இருவரும் இறைவன் கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் பேசி மகிழ்ந்திருக்கையில், பாஞ்சாலியை நோக்கி ஆண்டாள் "நீ ஐவருக்குத் தேவியாய் எப்படி வாழ்ந்தாய்?" என்று கேட்டாள்.

ஆண்டாளின் கேள்வியால் பாஞ்சாலி மனம் சற்றே புண்பட்டது.

"கோதாதேவியே! ஐவருக்குத்தேவி என்று என்னை அலட்சியப்படுத்தினாய் அல்லவா? என்னைப் போல் நீயும் ஐவருக்குத் தேவியாவாய்!" என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள் பாஞ்சாலி.

கோதாதேவி, இறைவனை நாயகனாகப் பெறுவதற்குப் பாவை நோன்பு நோற்பவள். பாஞ்சாலி அந்த இறைவன் பால் பக்தி பூண்டவள். அவள் வாக்கைப் பொய்யாக்கி விடக்கூடாதே!

"கண்ணன், வீடுமர் செய்த குளுரையைக் காக்கத் தன் சூளுரையை விடுத்துப் போரில் ஆயுதம் எடுத்தவன் ஆயிற்றே! அவனைப் போல், பக்தர் சொல்லைப் பொய்யாக்காமல் மெய்யாக்குவதே. நாம் அவனுக்குத் தகுதியானவள் என்பதை காட்டும்" என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.

பாஞ்சாலி சொல் பழுதாகலாகாது என்பதற்காகவே அரங்கன், வடபத்ரசாயி, வடமலைவாளன் (வேங்கடநாதன்), சோலைமலை அழகன், செண்டலங்காரன் ஆகிய ஐவர் அர்ச்சாமூர்த்திகளை நோன்பு நோற்று மணவாளராக அடைந்தாள் ஆண்டாள்.

பக்தர்க்காக எதையும் சாதிக்க வேண்டும் என்ற கோதையின் பெருங்குணம் இதனால் தெரிகின்றது அன்றோ?

"சீவல மாறன் கதை" என்ற காவியம் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றது.

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் என்ற நூலும் இச் செய்தியை நான்கு பாடல்களில் குறிக்கின்றது.


"அரங்கன் முதல் பாரில் ஐவரை எய்துவான்.
ஐந்துவயதில் பிஞ்சாய்ப் பழுத்த பெண் அமுதம்"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்
சிற்றிலை இழைத்தருள்கவே!"

"தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்து உண்ணச்
சிறுசோறு இழைத்தருள்கவே!"

அரங்கேசன்முதலாம் முதல் ஐவரும் மகிழவே
பாமாலைஅருளும் புத்தூர் மடந்தை"


என்பன பிள்ளைத்தமிழில் வரும் இடங்கள்.

ஆண்டாள் வரலாற்றில் இடம் பெறாத இச்செய்தி, நாட்டில் வழங்கி வரும் செவிவழிச் செய்தியே யாகும்.