ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/கண்ணனும் குதிரையும்
பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும்
பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன்.
அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஒய்வெடுத்துக் கொள்வர்.
பகல் எல்லாம் போரிட்ட களைப்பால் அர்ச்சுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான்.
ஆனால் பகல் எல்லாம் தேர் ஒட்டிக் களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஒய்வு கொள்வதில்லை.
தேரை இழுத்து ஓடிக்களைத்த குதிரைகள் மேல் கவனம் செலுத்துவான் கண்ணன்.
வெந்நீர் வைத்துக் குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். குதிரைகளுக்கு இதமாயிருக்கும் பொருட்டு உடல் முழுவதும் பிடித்துவிடுவான். பச்சை அறுகு வெட்டி வந்து கட்டுக்கட்டாகக் குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். அடுப்பு மூட்டிக் கொள்ளை வேக வைத்து, வெந்த கொள்ளைத் தன் பட்டு உத்தரீயத்தில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் முன் நின்று அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் கொள்ளை வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அவை ஒய்வு கொள்ளும் போது, கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டித் தேரினைப் போருக்குச் செல்லத் தயாராக்கி விடுவான்.
ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடக்கும். ஒருநாள் அர்ச்சுனனுக்கு நள்ளிரவில் விழிப்பு வந்துவிட்டது. எழுந்து கண்ணன் தங்கிய பாசறைக்குச் சென்றான். அங்குக் கண்ணன் இல்லை. இந்நேரம் களைத்துத் தூங்காமல் கண்ணன் எங்கே போயிருப்பான் தேடினான்.
இறுதியில் கண்ணன் குதிரைக் கொட்டிலில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
உடனே ஒடிச் சென்று கண்ணன் கைகளைப் பற்றிக் கொண்டான். “கண்ணா குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரையாவது விட்டால் செய்யமாட்டார்களா?”
“உன் அடிமையாகிய நான் ஒய்வாக உறங்குகையில் நீ உறங்காமல் பணி செய்து கொண்டிருப்பதா என்ன அபசாரம் இன்று, முதல் இப்பணி நீ செய்யாதே!” என்று அர்ச்சுனன் வேண்டிக் கொண்டான்.
“அர்ச்சுனா குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரையாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா?”
“அது மட்டுமல்ல! இப்போது நடக்கும் போர் முடியும் வரை நாம் மைத்துனன்மார் அல்ல. நீ எஜமானன். நான் நின் ஏவல் கேட்கும் சாரதி. ஆதலால், உன் கடமை போர் செய்வது. என்கடமை தேர் ஒட்டுவது”.
“குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில். மறுநாள் போருக்காக நன்கு ஒய்வு எடுத்துக்கொள்வது எஜமானன் தொழில்”.
“நம் இருவரின் தொழில் வேறுவேறாக இருந்தாலும், நம் தொழில் போர்த்தொழில் தான். ஆதலால் நாம் செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு ஏது உனக்கு உரிய தொழில் மறுநாள் போரிடுவதற்கு ஒய்வெடுப்பது. எனக்கு உரிய தொழில் மறுநாள் தேரில் பூட்டக் குதிரைகளைப் பராமரிப்பது. இருவகைத் தொழிலும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றிகிட்டும்! ஆதலால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள் நான் என் கடமையைச் செய்ய இயலாமல் குறுக்கீடு செய்யாதே” என்றான் கண்ணன். கீதை உபதேசம் கேட்ட அன்றினும் இன்று. கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ச்சுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.
மறுநாள் முதல் தன் போர்க் கடமையைச் சோர்வின்றிச் செம்மையாகச் செய்து வெற்றியைக் குவித்தான்.