ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/சகுனியின் சகோதரர்கள்
துரியோதனன் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோதரன் சகுனி. சகுனியை அறியாதவர் ஒருவரும் இரார். பாண்டவர்களைச் சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அந்தக் கயவனை அறியாமல் இருக்க இயலுமா!
துரியோதனன் உடன் பிறந்தவர் நூறுபேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதின்பர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.
இதைப் போலவே சகுனியின் உடன்பிறந்தவரும் நூற்றுவரே.
துரியோதனனுக்குத் தாய் மாமன்மாராகிய நூற்றுவரும் ஏதோ காரணத்தினால், அத்தினபுரத்திலேயே தங்கியிருந்தனர்.
அரண்மனையில் எந்நேரமும் சகுளி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டே இருப்பர்.
தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.
ஆதலால் இளவரசர்களாகிய துரியோதனன், துச்சாதனன் முதலியோர் உட்காரவே முடிவதில்லை. அலுத்துப் போய் வந்து, துரியோதனன் சற்றுச் சோர்ந்து அமர்வான். அப்போது யாரோ ஒரு மாமன் அவ்வழியே வந்து விடுவான். மாமனாயிற்றே மரியாதை தராமல் இருக்கலாமா? உடனே இருக்கை விட்டு எழுந்து வணக்கம் செலுத்துவான். அந்த மாமன் சென்று விட்டானே என்று அமர்ந்தால், வேறு ஒரு மாமன் வந்து விடுவான். உடனே எழ வேண்டும்.
யாருக்கும் வணங்கி அறியாத துரியோதனனுக்கு மாமன்மாரால் பெருந்துன்பம் நேர்ந்தது.
ஒரு நாள் மிகவும் சலித்துப் போன துரியோதனன், ஏதோ காரணம் சொல்லிச் சகுனி சகோதரர் நூற்றுவரையும் பிடித்துச் சிறையில் அடைத்து விட்டான். இப்போது அடிக்கடி எழுந்து மரியாதை செலுத்த வேண்டிய தொந்தரவு இராதல்லவா?
சிறைப்பட்ட மாமன்மார், நூற்றுவரையும் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்தான் துரியோதனன்.
சிறையிலுள்ளார்க்கு உணவும் நீரும் தர வேண்டுமே! ஆளுக்கு ஒரு பருக்கை சோறும் ஒரு சின்ன நத்தைக் கூட்டில் நீரும் வேளைவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். யாரும் கேட்டால், சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்று விடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.
நூற்றுவரில் மூத்தவனாகிய சகுனி சாமர்த்தியவான். தம்: தம்பியர் அனைவரையும் அழைத்து. “துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழிவாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்யவேண்டும்” என்றான்.
“அண்ணா! சகுனி! நீயே அறிவாளி அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ? அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்” என்ற்னர் தம்பியர்.
“ஒரு பருக்கை சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சிலநாள் கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட, நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால், பழிக்குப் பழிவாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால், துரியோதனனை அடியோடு ஒழித்து விடலாம்” என்றான் சகுனி
“நூறு பேருக்குத் தரும் சோறும் தண்ணீரும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாள் சாவாமல் இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்” என்றான் சகுனி “அண்ணா! நீதான் புத்திசாலி நீ உயிரோடிருந்தால்தான், துரியோதனனைப் பழிவாங்க முடியும்? ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்” என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.
பட்டினியால் ஒவ்வொருவரர்கப் பட்டொழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதளவாவது உண்டமையால், உயிர் தப்பினான்.
அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான்.
துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். “அன்பு மருமகனே! நீ எனக்கு எவ்வளவு உபகாரம் செய்தாய்? இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு, இந்தக் கொடியவர்களை ஒழித்து எனக்குக் காந்தார நாடு முழுவதும் உரிமையாக்கி விட்டாய் இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது?” என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பிவிட்டான்.
சகுனிக்கு அன்று முதல் தடயுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டைத் தாண்டுவதில்லை.
எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.
துரியோதனனுக்கு நல்லவன் போல நடித்து அவனைப் படு குழியில் தள்ளச் சமயம் எதிர்பார்த்திருந்தான்.
சகுனியின் யோசனைப்படியே அத்தினபுரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்குப் பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி, தருமனைச் சூதாட அழைத்தான் வென்றான். துரௌபதையை மானபங்கப் படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.
சகுழி, மூட்டிய பகைத்தீ. பாரதப் போராக மூன்த்து. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவுகண்ட சகுனி பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு உயிர் துறந்தான்.
சகுனி பற்றிய இந்த நாடோடிக்கதை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கி வருகின்றது.
இதே கதை சந்திரகுப்த மௌரியனைப் பற்றியதாக, வடநாட்டில் வழங்கி வருகின்றது. முத்ரா ராக்ஷஸம் என்ற நாடக நூலிலும் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.