ஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள்
(ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒட்டக்கூத்தரும், புகழேந்திப் புலவரும்
அவ் அவ் அமையங்களில் பாடிய
தனிப்பாடல் திரட்டு
புகழேந்தி
சோழராசன்
ஔவையார்
வேளாளன்
கருமான்
அம்பட்டன்
குயவன்
தச்சன்
தட்டான்
ஆகியோர் பாடிய பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன.
நூலில் பக்கம் 55 முதல் 60
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- பாடலில் உள்ள செய்தி செங்கைப் பொதுவன் சேர்க்கை
பாடல் 1,2,3
தொகு- கலைவாணி நீயுலகில் இருப்பதுவும் கல்வியுணர் கவிவல்லோரைத்
- தலையாகக் காப்பதுவும் அவர் நாவில் வாழ்வதுவும் சத்யம் அன்றோ
- சிலைவாண னா(க) இருந்து ஆயிரம் புயங்கள் துணிந்தும் உயர் சீவன் உற்றான்
- தலை ஆவி கொடுத்திடும் செங்குந்தர் உயிர் பெற்றிட நீ தயை செய்வாயே. (1)
- செங்குந்தர் என்போர் போர்-வீரர்கள். கலைவாணியே! போரில் மடிந்த அவர்களை எழுப்பித் தரவேண்டும். - ஒட்டக்கூத்தர் கலைவாணியை வேண்டியது.
- நிலைதந்தார் உலகினுக்கு (மி)யாவருக்கும் மானமதை நிலைக்கத் தந்தார்
- கலைதந்தார் வணிகருக்குச் சீவனஞ் செய்திடவென்றே கையிற் தந்தார்
- விலைதந்தார் தமிழுனுக்குச் செங்குந்தர் என்கவிக்கே விலையாகத்தான்
- கலைதந்தார் எனக்கும் 'ஒட்டக்கூத்தன்' எனப் பெயரையும் தந்தாரே. (2)
- செங்குந்தர் என்னும் குடியினர் போரில் தோன்றி மான உணர்வு எல்லாருக்கும் நிலைக்கும்படி அளித்தனர். ஆடை நெய்து தந்து வாணிகர்கள் பிழைக்க வகை செய்து தந்திருக்கின்றனர். தமிழ் வாழ்வுக்காகப் பல பரிசுகள் தந்து உதவி வருகின்றனர். ஒட்டக்கூத்தருக்கும் வாழ்வு தந்து பேணி வந்தனர். ஒட்டக்கூத்தன் என்னும் பெயரை அவனுக்குச் சூட்டியவர்களும் செங்குந்தரே.
- பத்துக்கொண்டன திக்கும் பதறிப் போயுலையப் பைம்பொற் றாரகை சிந்தப் பகிரண்டத் திடைநீள்
- மத்துக்கொண்டு மதிக்குந் திரையாழி நெடுமால் வடிவாகிப் புவிகைக் கொண்டருண் மானாபரணா
- முத்துப்பந்தரி னிற்குங் குருளைக்குஞ் சினவேன் முருகற்கும் பொதியைக்கோ முனிவர்க்குஞ் சடிலக்
- கொத்தற்கும் பதுமக் கொந்தயனுக்கு மலதிக் கூழைத்தண் டமிழுக்கேன் கொடியுங் கானமுமே. (3)
- மாணாபரனா! (சோழனே!) பாற்கடலைக் கடையும்போது திருமால் மத்தாக இருந்தான். கடையும்போது பத்துத் திசைகளும் பதறிப் போய் அலைபுண்டன. பொன்னிற விண்மீன்கள் சிந்தி விழுந்தன. அப்போது நெடிய திருமால் உலகத்தை ஏந்திக்கொண்டான். அந்த உலகை நீ கைப்பறிக் காத்துக்கொண்டிருக்கிறாய். உனக்கும் சிறு குழந்தையாகிய ஞானசம்பந்தருக்கும் முத்துப்பந்தர் வேண்டும். முருகனுக்கும், பொதிகை முனிவன் அகத்தியனுக்கும் சடைமுடி தரித்த சிவபெருமானுக்கும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும் கொடி வேண்டும். கொட்டு முழக்காகிய பாட்டு வேண்டும். நான் தமிழ் என்னும் கூழைத் தண்டை (காவடியை) ஏந்திக்கொண்டிருப்பவன். எனக்குக் கொடியும், கொட்டுமுழக்குப் பாட்டும் வேண்டுவதில்லை.
பாடல் 4,5,6
தொகு- இன்றல்லோ கம்பனிறந்த நாளென் கவிதை
- இன்றல்லோ ராசசபைக் கேற்குநாள்- இன்றல்லோ
- பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
- நாமடந்தை நூல்வாங்கு நாள். (4)
- இன்று கம்பன் இறந்த நினைவு-நாள். என் கவிதை அரசவை ஏறும் நாள். திருமகளும், நிலமகளும் அரியணையில் வீற்றிருக்கும்போது நாமகள் மட்டும் (கம்பன் இறப்பால்) தன் மங்கல நாணாகிய தாலியைக் கழற்றும் துக்க-நாள்.
- இன்றல்லோ கம்பனெழுந்த நாளென் கவிதை
- இன்றல்லோ ராசசபைக் கேறாநாள் – இன்றல்லோ
- பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
- நாமடந்தை நூல்பூட்டு நாள். (5)
- இன்றுதான் கம்பன் தோன்றிய நாள். இன்றுதான் என் கவிதை அரசவை ஏறாமல் (கம்பன் கவிதையால்) தோற்றுப்போன நாள். இன்றுதான் திருமகளும், நிலமகளும் வீற்றிருந்து கலைமகள் கழுத்தில் தாலி ஏறும் நாள்.
- கம்பன் பாடலுக்கு முன் தன் பாடல் வெறும்பாடல் என ஒட்டக்கூத்தன் குறிப்பிடுகிறார்.
- இன்றுதான் கம்பன் தோன்றிய நாள். இன்றுதான் என் கவிதை அரசவை ஏறாமல் (கம்பன் கவிதையால்) தோற்றுப்போன நாள். இன்றுதான் திருமகளும், நிலமகளும் வீற்றிருந்து கலைமகள் கழுத்தில் தாலி ஏறும் நாள்.
கட்டளைக்கலித்துறை
- மாங்குயிலால் வில்லிதன் னம்பினாற் கம்ப வாரிதியால்
- ஓங்கியபூ மெல்லணை யொன்றினா னும்பரூர் மதியாற்
- றீங்குறுமே நல்லெழில் குன்றுமே கொம்புசீர் கெடுமே
- காங்கேயனே சொல்ல களங்கனே கம்பைக் காவலனே. (6)
- கம்பை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆளும் காங்கேயன்-தான் சொல் வல்ல அகளங்கன். அவனது ஊரில் மாங்குயில் பாடுவதாலும், வில்லோர் அம்பு-வெற்றி தருவதாலும், கம்பன்-பாடல் என்னும் வெள்ளம் பாய்வதாலும், அவனது ஓங்கிய பாடலாகிய பூ மெத்தையில் அனைவரும் உறங்குவதாலும், உம்பர் என்னும் தேவர் வாழும் உலகத்து நிலா கறை பட்டுத் தேய்ந்துபோகிறது. பிறை நிலாவின் கொம்பு சிறப்பு கெட்டுப்போய்விட்டது.
- கம்பனைப் போற்றியவர்களில் ஒருவன் 'காங்கேயன்' என்னும் வரலாற்றுச் செய்தி இதில் கூறப்பட்டுள்ளது.
- கம்பை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆளும் காங்கேயன்-தான் சொல் வல்ல அகளங்கன். அவனது ஊரில் மாங்குயில் பாடுவதாலும், வில்லோர் அம்பு-வெற்றி தருவதாலும், கம்பன்-பாடல் என்னும் வெள்ளம் பாய்வதாலும், அவனது ஓங்கிய பாடலாகிய பூ மெத்தையில் அனைவரும் உறங்குவதாலும், உம்பர் என்னும் தேவர் வாழும் உலகத்து நிலா கறை பட்டுத் தேய்ந்துபோகிறது. பிறை நிலாவின் கொம்பு சிறப்பு கெட்டுப்போய்விட்டது.
பாடல் 7,8,9
தொகு- கரண்ட கண்டத்தொனிக் கஞ்சியமான் கருங்கங்குலிலே
- திரண்ட வெள்ளத்திற் பிணமீது சென்றனள் சேர்ந்தவனை
- அரண்ட வின்பங்கொடு மீளக்கராம் பற்றவங் கொலுசால்
- குரண்ட கன்னத்தி லுதைத்தனள் காணாங் குலோத்துங்கனே. (7
- காஞ்சிப் பெருமகன் (காங்கேயன்) சோலையில் வாழும் கருகருத்த குயிலே, ஒருத்தி குலோத்துங்கன் போர்க்களத்தில் பிண-வெள்ளத்தின்மீது சென்றாள். அங்கே கிடந்த பிணங்களில் தன் கணவனைக் காண்பதற்காக ஒவ்வொரு பிணத்தின் கன்னத்தையும் தன் கொலுசுக்காலால் உதைத்துப் புரட்டிப் பார்த்தாள்.
- இது குலோத்துங்கன் போரைப் பற்றிப் பாடிய பாடல்.
- காஞ்சிப் பெருமகன் (காங்கேயன்) சோலையில் வாழும் கருகருத்த குயிலே, ஒருத்தி குலோத்துங்கன் போர்க்களத்தில் பிண-வெள்ளத்தின்மீது சென்றாள். அங்கே கிடந்த பிணங்களில் தன் கணவனைக் காண்பதற்காக ஒவ்வொரு பிணத்தின் கன்னத்தையும் தன் கொலுசுக்காலால் உதைத்துப் புரட்டிப் பார்த்தாள்.
- கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
- கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
- ஆருக்கு வேம்பு நிகராகுமோ வம்மானை
- ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ வம்மானை
- வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
- வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
- ஊருக்கு உறந்தைநிகர் கொறகையோ வம்மானை
- ஒக்குமோ சோணாட்டுக்குப் பாண்டிநா டம்மானை.(8)
- ஒட்டக்கூத்தர் சோழனின் அவைக்களப் புலவர்.
- புகழேந்திப் புலவர் சோழன் மனைவிக்குச் சீர்வரிசையாகத் தரப்பட்ட பாண்டி-நாட்டுப் புலவர்.
- இருவருக்கும் நேர்ந்த வாக்கு-வாதத்தின்போது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட பாடல் இது.
- சோழனுக்குப் பாண்டியன் நிகராமாட்டான் என்று பாடிய பாடல் இது.
- கோரம் என்னும் சோழனுடைய குதிரைக்குக் கனவட்டம் என்னும் பாண்டியன் குதிரை ஒப்பு ஆகாது. சோழனின் ஆத்தி-மாலைக்குப் பாண்டியனின் வேப்ப-மாலை நிகர் ஆகாது. சோழநாட்டுக் காவிரி ஆற்றுக்குப் பாண்டிய நாட்டு வையை ஆறு ஒப்பு ஆகாது. சோழனின் குலமான சூரியனுக்குப் பாண்டியன் குலமான நிலா ஒப்பு ஆகாது. சோழன் கொடியிலுள்ள புலிக்குப் பாண்டியன் கொடியிலுள்ள மீன் ஒப்பு ஆகாது. சோழன் நகர் உறையூருக்குப் பாண்டியனின் கொற்கை ஒப்பாகாது. இவற்றால் சோழநாட்டுக்கு நிராகப் பாண்டிய நாட்டைக் கொள்ளமிமுடியாது.
- அடுத்த பாடலில் புகழேந்திப் புலவர் மறுத்துப் பாடுகிறார்.
- திருநெடு மாலவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
- சிவன்முடி யிலேறுவதுஞ் செங்கதிரோ வம்மானை
- ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை
- ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை
- கரையெதிரே டேறியது காவிரியோ வம்மானை
- கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மானை
- பரவை படிந்த்துஞ் சோழன் பதந்தனிலோ வம்மானை
- பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோவம்மானை. (9)
- புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தர் கூற்றை மறுத்துப் பாடிய பாடல்
- திருமால் புலியாகவா உருவெடுத்தார்? மீனாகத்தானே. சிவன் தலைமேல் இருப்பது சூரியனா? நிலா தானே. தமிழ்-முனிவன் அகத்தியன் உறையூரிலிருந்த நேரிவாயில் மீது இருந்துகொண்டா தமிழ் உரைத்தான்? பாண்டி நாட்டிலுள்ள பொதிய மலையில் இருந்துகொண்டுதானே. சிவன் திருவிளையாடல் உறையூரிலா நிகழ்ந்தது? மதுரையில்தானே. சம்பந்தர் எழுதிய தமிழ்-ஏடு நீந்தியது காவிரு வெள்ளத்திலா? வைகை வெள்ளத்தில்தனே. பிணியை ஓட்டப் பயன்படுவது ஆத்தித் தழையா? வேப்பந்தழைதானே. கடல் சோழன் காலடியிலா பணிந்தது? வடிம்பலம்ப நின்ற பாண்டியன் காலடியில்தானே. எனவே பாண்டியன் வீரமே மேலானது.
பாடல் 10,11,12
தொகுஒட்டக்கூத்தரும் சோழராசனும் பாடியது
தொகு- ஆடுங்கடை மணிநா வசையாமல் அகிலமெங்கும்
- நீடுங்குடையைத் தரித்த பிரானிந்த நீணிலத்தில்
- பாடும்புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம் புயத்தைச்
- சூடுங் குலோத்துங்க சோழனென்றே யெனைச் சொல்லுவரே. (10)
- புகழேந்திப் புலவரின் பாடலைக் கேட்ட அரசன் குலோத்துங்கன் புகழேந்திப் புலவரின் திறமையை அறிந்து அவரை வணங்கினான். இந்த நிகழ்வைப் போற்றி ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது.
- மனுநீதிச் சோழன் ஆட்சிக் காலத்தில் ஆராய்ச்சி-மணி அடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இழுக்கு ஓசை கேட்காமல் அரசாட்சி நடத்திய பாண்டிய நாட்டுப் புலவர் புகழேந்தியைக் குலோத்துங்கச் சோழன் வணங்கினான்.
- இன்னங் கலிங்கத் திகல்வேந்த ருண்டென்றோ
- தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ- சென்னி
- அகளங் காவுன்றன் அயிராவதத்தின்
- நிகளங் கால்விட்ட நிலைவு. (11)
- குலோத்துங்கன் இப்பாடலில் 'அகளங்கன்' எனக் குறிப்பிடப்படுகிறான். அவனது யானை அயிராவதம். இன்னும் அது போர்க்கோலம் களையாமல் உள்ளது. காரணம் என்ன? கலிங்கத்தில் இன்னும் யாராவது எதிரிகள் உள்ளனரா? அல்லது பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க விருப்பமா? - என்று புலவர் வினவுகிறார்.
புகழேந்தி
- தென்னவன் றென்னர் பெருமான் றிறன்மதுரை
- மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும்- பொன்னிநா
- டாலிக்கும் வேந்தா மபயகுலன் மகளிர்
- தாலிக்கு மொன்றே தளை. (12)
- பாண்டி நாட்டின்மீது போர் தொடுக்க விருப்பமா என்று ஒட்டக்கூத்தர் கேட்டதும், போர் மூண்டால் சோழநாட்டு மகளிர் தாலி அறுக்க நேரும் என்று புகழேந்திப் புலவர் பாடுகிறார். தென்னவன் தென்னாட்டு மன்னர் பலருக்குத் தலைவன். அவனது மதுரை திறம் மிக்க கோட்டையைக் கொண்டது. அவன் யானை 'வல்லி' வலிமை மிக்கது. பொன்னி நாட்டு வேந்தனே! உன் நாட்டு மகளிரின் தாலிக்குத் தளையிட்டுக் காப்பாற்றிக்கொள் - என்கிறார் புகழேந்தி.
பாடல் 13,14,15
தொகுபுகழேந்தி
- சத்தம் பயிலும் புலவோர் கதலித்தண் டோட்டம்பகும்
- பித்தனிவ னென்பரென்னைக் கண்டாற் பெருத்துப் பணைத்துத்
- தத்தம் பிறகிடும் பார்வேந்தர் தங்கள் தடமகுட
- சத்தமப சத்தங்காண் கங்குல்யானை சயதுங்கனே. (13)
- உடலில் பருத்திருக்கும் பார்வேந்தர் உன்னைக் கண்டு புறமுதுகிட்டு சத்தம், அபசத்தம் செய்யாமல் புறமுதிட்டு ஓடும்படி இரவு போல் கருநிறம் கொண்ட யானைமீதேறி வரும் சயதுங்கனே! சந்தக்கவி பாடும் புலவர்கள் என்னைக் கண்டால் வாழைத்தண்டு நார் போலக் கவிதைகளைப் பகுத்தளிக்கும் பித்தன் என்று கூறுவார்கள்.
ஒட்டக்கூத்தன்
- மானிற்குமோ விந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
- கானிற்குமோ விவ்வெரியுந் தணன்முன் கனைகடலின்
- மீனிற்குமோ விந்தவெங்கண் சுறாமுனம் வீசுபனி
- தானிற்குமோ விக்கதிரவன் றோற்றத்திற் றார்மன்னனே. (14)
- சோழ மன்னனே! வேங்கை முன்னர் மான் நிற்குமோ? எரியும் தீ முன்னர் காய்ந்து போயிருக்கும் காடு நிற்குமோ? கொடிய சுறா-மீனின் முன்னர் கடல் வாழ் மீன் நிற்குமோ? கதிரவன் முன் வீசும் பனி நிற்குமோ? - அப்படித்தான் என் முன் புகழேந்தி.
புகழேந்தி
- மானவனா னந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
- கானவனா னவ்வெரியுந் தணன்முன் கணைகடலின்
- மீனவனா னந்தவெங்கண் சறாமுனம் வீசுபனி
- தானவனா னக்கதிரவன் றோற்ற நற்றார் மன்னனே. (15)
- மன்னா! அந்த வேங்கைமுன் மானவன் (மான்) நான். அந்த எரி முன் கானவன் (வேடன்) நான். அந்தச் சுறா முன் மீனவன் (மீனக்கொடி பறக்கும் நாட்டிலிருந்து வந்தவன்) நான். அந்தப் பனி முன் தானவன் (தானைத் தலைவன்) நான். தோன்றி எதிர்த்து நிற்பேன்.
பாடல் 16,17,18
தொகு- தன்னோடு சீரீக வந்த புகழேந்தியைப் போற்றவில்லை என்பதற்காக ஊடிச் சோழன் மனைவி தாளிட்டுக்கொண்டாள். திறக்கவில்லை. புலவர் இருவரும் கதவைத் திறக்கும்படி பாடினர். ஒட்டக்கூத்தன் பாடியபோது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டாள். புகழேந்தி பாடலைக் கேட்டுக் கமவைத் திறந்தாள். இந்த நிகழ்வை ஒட்டக்கூத்தன் ஒரு பாடலால் அறிவித்தான்.
ஒட்டக்கூத்தன்
- நானே யினியுனை வேண்டுவ தில்லை நளினமலர்த்
- தேனே கபாடந் திறந்திடுவாய் திறவாவிடிலோ
- வானேறனைய விரவி குலாதிபன் வாயில் வந்தாற்
- றானேதிறக்கு நின்கை யிதழாகிய தாமரையே. (16)
- நான் இனி உன்னை வேண்டமாட்டேன். நீயே திறந்திடு. திறக்காவிட்டால் சூரிய குல வேந்தன் வாயிலுக்கு வந்தால் உன் கைத்தாமரை தானே திறக்கும். (சூரியன் வந்தால் தாமரை மலருமல்லவா)
புகழேந்தி
- இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்துவள்ளைக்
- குழையொன் றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
- மழையொன் றிரண்டுகை மானாபரண னின்வாயில் வந்தாற்
- பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே. (17)
- ஒன்றிரண்டு அணிகலன்களாலும், ஒன்றிரண்டு வள்ளைப் பூ சூடியதாலும் இடை ஆட, அதனோடு ஆடும் விழிகளை உடையவளே! மழை போல் வழங்ககும் ஒன்றிரண்டு கைகளை உடைய சோழன் மானத்தை அணிகலனாகப் பூண்டிருப்பவன். அவன் ஒன்றிரண்டு பிழை செய்தால் நல்ல குடியில் பிறந்தவர் (சோழன் தேவி) புறுத்துக்கொள்ள மாட்டாரா?
ஒட்டக்கூத்தன்
- வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக்கமுகின் மீதேறித்
- துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோடிறங்குஞ் சோணாடா
- கள்ளக் குறும்பர் குலமறுத் தகண்டா வண்டர் கோபாலா
- பிள்ளை மதிகண்டெம் பேதைபெரிய மதியு மிழந்தாளே. (18)
- வாளை-மீன் பாக்கு-மரத்தையும் தாண்டி வானத்து மேகங்களைக் கிழித்து மழை பொழியவைக்கும் சோழநாட்டு மன்னா! திருட்டுத்தனம் செய்யும் குறும்பர் குலத்தை அறுத்தவனே! ஆயர் குலத்துக் கோபாலனாகப் பிறந்தவனே! உன் பிள்ளை மதி கண்டு பேதை மதி இழந்தாள். பொறுத்தருள்க.
பாடல் 19,20,21
தொகுஒட்டா வொருமதி கெட்டாய்
புகழேந்தி
- பங்கப்பழனத் துழுமுழவர் பலவின்கனியைப் பறித்ததென்று
- சங்கிட்டெறியக் குரங்கிளநீர் தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா
- கொங்கைக் கமராபதி யளித்த கோவே ராசகுல திலகா
- வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே. (19)
- ஔவையார் ஒட்டக்கூத்தனை 'ஒட்டா மதி கெட்டாய்' என்றார் போலும்.
- அதன் பிறகு புகழேந்திப் புலவர் இந்தப் பாடலைப் பாடினார் போலும்
- பாடலுக்கு மேலுள்ள குறிப்பால் உணரப்படும் செய்தி இது.
- இந்த ஔவையார் யார் என விளங்கவில்லை.
- சோழநாட்டு நீர்வளம் இந்தப் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
- குரங்கு பலாகுகனியைப் பறித்தது என்று வயலை உழும் உழவர் வயலில் கிடக்கும் சங்கினை எடுத்துக் குரங்கின்மீது வீசுவர்.
- ஒட்டக்கூத்தனைப் போற்றிய சோழனான இராசகுல திலகன் கொங்குநாட்டு அமராபதி நகரில் பிறந்தவன். அதாவது அவனது தாய் கொங்குநாட்டு அரசனின் மகள்.
- இது அகப்பொருள் பாடல். தலைவனின் விழியாகிய வேல் தலைவியின் வெய்ய கண் பிறைபோல் வளைந்தபோதும், கரும்பு போன்ற 'இறை' என்னும் தோளைக் கண்டபோதும் மெலிந்து போயிற்று.
ஒட்டக்கூத்தன்
- புள்ளிருக்குந் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்
- சுள்ளிருக்குங் கள்ளையுண்டுஞ் சோர்விலேம் – உள்ளபடி
- சொல்லவா வாலி துரோபதையை மூக்கரிந்த
- தல்லவா மாபாரதம். (20)
- வண்டு மொய்க்கும் தார்மாலை கொண்ட மார்பினை உடைய சோழன் பூம்புகாரின் களிப்புடன் வாழ்கின்றோம். சுள் என்று ஏறும் கள்ளை உண்டு சோர்வு இல்லாமல் இருக்கின்றோம். உள்ளபடி சொல்லப்போனால் வாலி (வாலுத்தனம் செய்த துச்சாதனன் துரோபதை மூக்கை அரிந்ததால் அல்லவா பாரதப்போர் மூண்டது?
- என்று பெறுவேன் யானீசன் றிருமுடிமேல்
- சென்றுவிளை யாடுகின்ற தீபமே- என்றும்
- செருப்புக்குத் தோல்வாங்குஞ் சென்னி யகளங்கன்
- பொருப்புக்குத் தோலாப் புயம். (21)
- இது ஒரு அகப்பொரிள் பாடல். தலைவி சோழன் தழுவலைப் பெறத் துடிக்கிறாள். சிவபெருமான் தலைமுடிக்கு மேல் காட்ட எரிந்துகொண்டிருக்கும் விளக்கைத் தனக்கு உதவும்படி வேண்டுகிறாள். போரில் புகுந்து எதிரியின் தோல் படையைப் பின்வாங்கும்படி செய்பவன் சென்னி அகளங்கன் என்னும் சோழன். பொருப்பு என்னும் மலை போன்ற அவன் தோளில் நான் விளையாடப்போவது என்றோ? - என்கிறாள்.
பாடல் 22,23,24
தொகுவேளாளன்
தொகு- கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர் கோகநகப்
- பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலமேழ்
- காக்கின்ற மன்னகவி யொட்டக்கூத்த நின்கட்டுரையாம்
- பாக்கண் டொளிப்பர்களோ தமிழ்ப்பாடிய பாவலரே. (22)
- பேரரசனைக் கண்டு சிற்றரரசர்கள் கடலுக்குள் ஒளிந்துகொள்ளவதில்லை. தங்கம் போன்ற தாமரை பூத்திருக்குறது என்று (அக் குளத்தில்) கொட்டிப்பூ பூக்காமல் இருப்பதில்லை. நாட்டைக் காக்கும் மன்னனின் அரசவைக் கவிஞனாகிய ஒட்டக்கூத்த! உன்னைக் கண்டு முன்பே தமிழ் பாடிவந்த நாங்கள் இனி பாடமல் இருந்துவிடுவோமா?
கருமான்
தொகு- செல்லன் புதல்வன் றிருவேங்கடவன் செகத்குருவாங்
- கொல்லன் கவியைக் குறை சொல்லுவோரைக் குறடுகொண்டு
- பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டிப் பகைவர் முன்னே
- அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே. (23)
- நான் கொல்லன். என் குரு திருவேங்கடவன். என் கவியைக் குறை சொல்லுவோரைக் குறட்டால் பல்லைப் பிடுங்கிப் பருந்து போல் மாட்டித் தூக்கிச்சென்று என் பாட்டாகிய இரும்பு ஆணியால் பகைவர் முன்னிலையில் இரவும் பகலும் அடிப்பேன்.
அம்பட்டன்
தொகு- விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்துப்
- புண்பட்ட நெஞ்சொடு மிங்குநின்றாய் பொட்டையாய் புகலாய்
- கண்பொட்டை யாயினு மம்பட்டனான் கவிவாணர் முன்னே
- பண்பட்ட செந்தமிழ் நீயுந் திடுக்கிடப் பாடுவனே. (24)
- முன்னிரண்டு அடி ஒட்டக்கூத்தன் பாடல்
- வல்லூறு கண்ட கொக்கு போல விலவிலத்துப் பண்பட்ட நெஞ்சோடு நிற்கும் பொட்டையாய் பாடு.
- பின்னிரண்டு அடி அம்பட்டன் பாடல்
- "நான் அம்பட்டன். என் கண் பொட்டையாக்கப்பட்டாலும் கவிவாணர் முன்னே நீ திடுக்கிடும்படி பண்போடு கூடிய செந்தமிழ்ப் பாடல் பாடுவேன்"
பாடல் 25,26,27
தொகுகுயவன்
தொகு- மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
- யானை முன்வந் தெதிர்த்தவ னாரடா
- கூனையுங் குடமுங் குண்டு சட்டியும்
- பானையும் வனை யங்குசப் பையல்யான். (25)
- ஒட்டக்கூத்தன் முன் இரண்டு அடி பாடுகிறான்.
- முத்தமிழாகிய மும்மதம் பொழியும் யானையாகிய என்முன் வந்து எதிர்த்தவன் ஆரடா?
- குயவன் பின் இரண்டு அடி பாடுகிறான்.
- கூன், குடம், குண்டுசட்டி, பானை வனையும் அங்குசப் பயல்.
தச்சன்
தொகு- சொன்ன சந்தக்கவி யாவருஞ் சொல்லுவர் சொற்சுவைசேர்
- இன்ன சந்தக்கவி யேதென்ற போதில் எதிர்த்தவரை
- வன்ன சந்தங்கெட வாயைக் கிழித்திந்த வாய்ச்சினாற்
- கன்ன சந்தங்களி நிற்கவி யாப்பைக் கடாவுவனே. (26)
- ஒட்டக்கூத்தன் வினா
- பிறர் சொன்ன சந்தக்கவியை எல்லாரும் சொல்லுவர். நீ பாடிக் கொண்டுவந்த கவி ஏது?
- தச்சன் விடை
- என்னை எதிர்த்தவரை, அவர் பாடிய வண்ணச் சந்தம் கெட அவர் வாயைக் கிழித்து என் பாட்டு என்னும் இந்த வாய்ச்சியினால் 'கன்ன-சந்தம்' களித்தாடி நிற்க, யாப்புக்கவி எதிர்பாட்டாகப் பாடுவேன்.
தட்டான்
தொகு- திகிரி வட்டக்குடைச் செங்கோ லபயன் செழுஞ்சிலம்பிற்
- பகுதி யொட்டக்கூத்த பட்டனை நானப்பணைக் கவியின்
- மிகுத வொட்டத்தட்டி விட்டகை யோட்டி லிருக்கிக்குத்திப்
- புகுத வொட்டித்தட்டி மேலணுகா வண்ணம் போர்செய்வனே. (27)
- சொங்கோல் அபயன் (சோழன்) மலைநாடு இது. ஒட்டக்கூத்தன் பணைக்கவி. அவன் தலைதூக்க முடியாமல் அவனை ஒட்டத் தட்டிவிட்டு என் கையைச் சேர்த்து அவன் தலையில் குட்டி, மீண்டும் அவையில் புகாவண்ணம் போரிடுவேன்.
பாடல் 28,29,30
தொகுஒட்டக்கூத்தனும் புகழேந்தியும்
- வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
- என்று முதுகுக்கிடான் கவசம்- துன்றும்
- வெறியார் தொடைகமழு மீனவர்கோன் கைவேல்
- எறியான் புறங்கொடுக்கி னென்று. (28)
- பழியும்புகழு மெவர்க்குமுண்டா மிந்தப்பாரி லுனக்
- கழியுஞ்சிலையுங் கயலுமென்றா லகளங்க துங்கா
- மொழியும்பொழு தெங்கள்பெண் சக்ரவர்த்தி முகத்திரண்டு
- விழியும்புருவமு மாகியந்தோவுனை வெல்கின்றதே. (29)
- திக்கு ளெட்டுக்கயந் துக்கமுற்றுத் திடுக்கிட்டலற
- மைக்கடற்குட் சரந்தைக்க விட்டோர்க் கிடமாமதுர
- இக்குமுற்றிக் கணுச்சற்று விட்டுத் தெறித்திட்ட முத்தைக்
- கொக்குமொக்கி விக்கிக்கக்குமச் சோலைக்குறுங் குடியே .(30)
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 155-ல் உள்ளது
தொகுஒட்டக்கூத்தர்
- தற்கோலிப் பாசப்பூசற்கே தட்டாமற் சாகைக்கே நிற்பீர்
- முற்கோலிக் கோலிப்பூசித்தே முட்டாமற் சேவித்தே நிற்பீர்
- வற்றா நெட்டோடைப் பாரச்சேன்மைப் பூகத்தேறி தாவிப்போய்
- நெற்றா ளுற்றாலைப் பாகிற்சேர் நெய்த்தானத் தானை த்யானித்தே.
புகழேந்தி
- விக்காவுக் காவித்தாவிப் போய் விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
- இக்காயத் தாசைப் பாடுற்றே யிற்றோடிப் போய் வைப்பீர் நிற்பீர்
- அக்காடப் பேய் தொக்காடச் சூழப்பாடத் தீவெப்பாடப் பூண்
- கெக்காடக் கானத்தாடப் போநெய்த் தானத்தானை த்யானித்தே.