ஒப்பியன் மொழிநூல்/மொழிநூல்

தமிழ் வாழ்த்து

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

தரவு 1

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே”

2

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”.

(வதனம் - முகம், தரித்த - அணிந்த, திலகம் - பொட்டு, வாசனை - மணம், உதரம் - வயிறு).

நூல்

1. மொழி நூல்

1. மொழி

மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடுதற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி.

2. மொழிவகை

உலக மொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத் (Atlas) தில் குறிக்கின்றார். மாக்ஸ் முல்லர் (Max Muller) அவை தொள்ளாயிரத்திற்குக் குறையா என்கிறார்.[1] ஏறத்தாழ ஆயிரம் எனினும் தவறாகாது.

மொழிகளையெல்லாம், பலப்பல முறையில், பலப்பல வகையாக வகுக்கலாம். அவ் வகைகளாவன:—

(1) அசைநிலை (Monosyllabic or Isolating), புணர்நிலை (Compounding), பகுசொன்னிலை (Inflectional or Polysyllabic), தொகுநிலை (Synthetic), பல்தொகுநிலை (Polysynthetic) அல்லது கொளுவுநிலை (Agglutinative), பிரிநிலை (Analytical) என்று அறு வகையாக வகுப்பது ஒரு முறை. அவற்றுள்,

அசைநிலையாவது, சொற்களெல்லாம் ஓரசையாக நிற்பது.

காட்டு : வள், செல், வா, போ, தமிழ், மொழி.

சீனமொழி அசைநிலைக்குச் சிறந்ததாகும்.

புணர்நிலையாவது, இரு தனிச்சொற்கள் புணர்ந்து நிற்பது.

கா : தமிழ்மொழி, மருமகன்

துரேனிய மொழிகளிற் சீனமொழிந்தவை[2] புணர் நிலைக்குச் சிறந்தவையாய்ச் சொல்லப்படும்.

பகுசொன்னிலையாவது, புணர்நிலைச் சொற்களில் ஒன்று குறுகித் தனித்தன்மையிழந்து, சொல்லுறுப்பாய் நிற்பது.

கா : மருமான், வில்லவன் (வில் + அவன்), வில்லான். பகுசொன்னிலைக்கு ஆரியமொழிகள் சிறந்தனவாகக் கூறப்படும்.

தொகுநிலையாவது, புணர்நிலைச்சொற்களின் இடையில், எழுத்துகளும் அசைகளும் தொக்குநிற்பது.

கா : ஆதன் + தந்தை = ஆந்தை; பெரு + மகன் (பெருமான்) - பிரான், அல்லது பெம்மான்.

பல்தொகுநிலையாவது, பன்மொழித் தொடரினிடையே பல அசைகள் அல்லது சொற்கள் தொக்கு நிற்பது.

கா : நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்). சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தனவாகக் கூறப்படும்.

மெக்சிக (Mexican) மொழியில், 'achichillacachocan' என்னும் பல்தொகுநிலைத்தொடர், 'நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம்' என்று பொருள்படுவதாம். (alt-நீர், chichiltic-சிவந்த, tlacatl-மாந்தன், chorea-அழு)[3]

பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது.

கா : வந்தேன்-வந்து (மலையாளம்); brekan (O.E.) — break (Infinitive).

(2) மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.

திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளைமொழியும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியு மாகும். நீலமலையிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத் தின் கிளைமொழி.

(3) இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க.

(4) இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின்ஸ் கண்காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி ('A Real Character and a Philosophical Language) செயற்கை மொழிக்குக் காட்டாகும்[4] காங்கிரஸ் தலைவர்கள் உருதுவிற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துஸ்தானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும்.

(5) தனிமொழி (Independent Language), சார்மொழி (Dependent Language), கலவைமொழி (Composite or Mixed Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.

இவை மூன்றுக்கும், முறையே, தமிழையும் பிற திராவிட மொழிகளையும், ஆங்கிலத்தையும் காட்டாகக் கூறலாம்.

(6) முதுமொழி (Ancient Language), புதுமொழி (New Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்குத் தமிழும் இந்தியும் காட்டாகும்.

(7) இலக்கியமொழி (Classical Language), வறுமொழி (Poor Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்குத் தமிழையும் குடகையும் காட்டாகக் கூறலாம்.

(8) செம்மொழி அல்லது திருந்தியமொழி (Cultivated Language), புன்மொழி அல்லது திருந்தாமொழி (Uncultivated Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

திராவிடக் குடும்பத்தில், தமிழ், தெலுங்கு முதலியவை செம்மொழிகள்; துடா, கோட்டா முதலியவை புன்மொழிகள்.

(9) அலைமொழி (Nomad Language), நிலைமொழி (State Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை.

அலைந்து திரியும் மக்கள் பேசுவது அலைமொழி; ஓரிடத்தில் நிலைத்த மக்கள் பேசுவது நிலைமொழி.

(10) தாய்மொழி (Mother Tongue), அயன்மொழி (Foreign Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

(11) வழங்குமொழி (Living Language), வழங்காமொழி (Dead Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்கு, முறையே, தமிழையும் வடமொழியையும் காட்டாகக் கொள்க.

ஒரு பெருமொழியில் பல வழக்கு(Dialect) கள் உண்டு. அவற்றை மொழிவழக்கெனலாம். அவை, இடவழக்கு (Local Dialect), திசைவழக்கு (Provincial Dialect), குலவழக்கு (Class Dialect), திணைவழக்கு (Regional Dialect) என நால் வகைப்படும்.

ஒரு மொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, இடை (Middle) க்கால வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந்நிலைகளை யடைந்திருக்கும்.

ஒரு மொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்கு களையுடையதாயிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள்பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப்படும் (கா: உயர்ஜெர்மன் — High German, தாழ் ஜெர்மன் — Low German). தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும்.

ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Colloquial Dialect) என்றும் கூறப்படும்.

3. மொழிக் குலம்

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும்பற்றி, துரேனியம் (Turanian), ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு குலமும் பல குடும்பங் (family) களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது.

தமிழ் துரேனியக் குலத்தில்[5] திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத்திற்கு இந்தோ-ஐரோப்பியம் (Indo-European), அல்லது இந்தே-ஜெர்மானியம் (Indo-Germanic) என்றும் பிற பெயர்களுமுண்டு.

மொழிப் பகுப்புமுறை - Classification of Languages

மொழிப் பகுப்புமுறை, (1) வடிவுமாறியல் (Morphological), (2) மரபுவரிசையியல் (Historical or Geneological) என்ற இரு முறை பற்றியது. இவற்றுள், முன்னையது மொழிகளை அசை நிறை முதலிய அறுவகை நிலையாகப் பகுப்பது; பின்னையது, வேர்ச்சொற்(root)களின் உறவும், இலக்கண வொற்றுமையும் பற்றிப் பகுப்பது. இவ்விரண்டும் முன்னர்க் கூறப்பட்டன.

மாக்ஸ் முல்லர், அசைநிலையை வேர்நிலை (Radical Stage) என்றும், பகுசொன்னிலையை ஈற்றுநிலை (Terminational Stage), இருதலைச் சிதைநிலை (Inflectional Stage) என்றும் இரண்டாகப் பகுத்தும் கூறுவர்.

பகுசொன்னிலையும் ஈற்றுநிலையும் ஒன்றே. இரு தலைச் சிதை நிலையாவது, வருமொழிபோன்றே நிலை மொழியும் சிதைதல்.

கா : (பெருமகன்) — பெம்மான்.

மொழிநூல்

மொழிநூலாவது சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலியனபற்றிப் பல மொழிகட்கிடையிலுள்ள தொடர்பை ஆராயுங் கலை.

மொழி நூல் முதலாவது கிரேக்கு, இலத்தீன் என்னும் மொழிகளைக் கற்குங் கல்வியாக, 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் தோன்றிற்று. பின்பு, ஆங்கிலேயரும் விடை யூழியரும் (Missionaries) இந்தியாவிற்கு வந்து, சமஸ்கிருதத் திற்கும் கிரேக்க லத்தீன் மொழிகட்குமுள்ள நெருக்கத்தைக் கண்டு பிடித்தபின், ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப் பற்றிச் சிறப்பாராய்ச்சி எழுந்தது. ஆரிய மொழிகளை யாராய்ந்தவர்களுள் கிரிம் (Grimm), வெர்ணெர் (Verner) என்ற இருவர் தலை சிறந்தவர். உலகத்தின் பல இடங்களுக்குச் சென்ற விடையூழியரும் வழிப்போக்கரும் அவ்வவ்விடத்து மொழிகளைக் கற்று, மேலை மொழிகளில் அவற்றின் இலக்கணங்களை வரைந்து வெளியிட்டதுமன்றி, இனமொழிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பல குடும்பங்களாகவும் வகுத்துக் காட்டினர். ஒப்பியன் மொழி நூற்கலையே விடையூழியராலும் வழிப்போக்கராலும்தான் உருவாயிற்று என்று கூறினும் மிகையாகாது. பிறகலையாராய்ச்சியாளரும் மொழிநூலுக்கு உதவியிருக்கின்றனர்.

பல நாட்டு மொழிகள் மேனாட்டு மொழிகளில் வரையப்பட்ட பின், மாக்கசு முல்லர் என்ற மாபெரும்புலவர், சென்ற நூற்றாண்டில், தம் வாழ்நாளையெல்லாம் மொழி நூற் கல்விக்கே ஒப்புக்கொடுத்து, உலக மொழிகளிற் பெரும்பாலன

வற்றை ஆராய்ந்து, தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஒப்பியன் மொழி நூலை உருவாக்கினார்.

மாக்ஸ் முல்லர் திராவிட மொழிகளைச் சரியாய் ஆராயாததாலும், அவற்றை வடமொழியின் கிளைகள் என்று தவறாக எண்ணியதாலும், திராவிடத்தின் உண்மையான இயல்புகளைக் கூறமுடியவில்லை. திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கிய தென்றும், வடசொல்லென மயங்கும் பல சொற்கள் தென் சொற்களேயென்றும், வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் (Caldwell) கண்காணியரே. திராவிட மொழிகள் மொத்தம் பன்னிரண் டென்பதும். அவற்றுள் ஆறு திருந்தினவும், ஆறு திருந்தா தனவுமாகும் என்பதும், பெலுச்சித்தானத்திலுள்ள பிராஹு யீ திராவிட மொழியே யென்பதும், இவருடைய கண்டுபிடிப்புகளே. திராவிடம் வடமொழிச் சார்பற்றது, வடமொழியில் பல திராவிடச் சொற்களுள்ளன என்னுங் கொள்கைகளில், இவருடன் ஒன்றுபட்டவர், இவர் தமிழைச் சிறப்பாயாராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதேயெனினும் பொருந்தும்.

கால்டுவெல், மாக்கசு முல்லர் என்ற இருவர் ஆராய்ச்சிகளே இந் நூலுக்கு முதற்காரணமாகும்.

மொழிநூற்கலைக்கு ஆங்கிலத்தில் முதலிலிருந்து வழங்கி வரும் பெயர்கள் 'Philology' (Gr.-I. philos, desire; logos, discourse), 'Glottology' (Gr. Glotta, tongue; logos, discourse) என்பன. இவற்றுள் முன்னையதே பெருவழக்கு. ஆனால், மாக்ஸ் முல்லர் 'Science of Language' என்று தாம் இட்ட பெயரையே சிறப்பாகக் கொண்டனர்.

'Philology' என்னும் பெயர் விரும்பிக் கற்கப்படுவது என்னும் பொருளது. கிரேக்கும் லத்தீனும், மேனாட்டாரால் இலக்கிய மொழிகளென விரும்பிக் கற்கப்பட்டதினால், இப் பெயர் தோன்றிற்று.

தமிழில், முதன்முதல் தோன்றிய மொழிநூற் பனுவல், மாகறல் கார்த்திகேய முதலியார் 1913ஆம் ஆண்டு வெளியிட்ட 'மொழிநூல்' ஆகும். 'மொழிநூல்' என்னும் குறியீடும் அவரதே. அதன் பின்னது டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதி 1936-ல் வெளியிட்ட 'தமிழ் மொழிநூல்' ஆகும்.

அதன்பின்னது, கலைத்திறவோரும் (M.A.) சட்டத்திற வோரு (M.L.)மான கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1939ஆம் ஆண்டில் வெளிவந்த 'மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்', என்பதாகும்.

மொழிநூல் நிலை

உலகில் ஒவ்வொரு கலையும்,

(1) ஆய்வுநிலை (Empirical Stage),

(2) பாகுபாட்டுநிலை (Classificatory Stage),

(3) கொண்முடிபுநிலை (Theoretical Stage)

என முந்நிலைப்படும். அங்ஙனமே மொழிநூற்கலையும். மொழி நூற்கலையில் ஆய்வுநிலையாவது, மொழிகளைத் தனித்தனி ஆராய்தல்; பாகுபாட்டுநிலையாவது, தனித்தனி ஆராய்ந்த மொழிகளைச் சொற்களிலும் இலக்கணத்திலும் உள்ள ஒப்புமை பற்றி, பல குடும்பங்களாகவும் அக் குடும்பங்களைப் பல குலங்களாகவும் வகுத்தல்; கொண்முடிபு நிலையாவது, ஒரு குடும்ப மொழிகட்குள்ளும், பல குடும்பங்கட்குள்ளும், பல குலங்கட்குள்ளும் உள்ள தொடர்பையும், அவற்றின் நிலைகளையும், ஒலிநூல் (Phonology), உளநூல் (Psychology) முதலிய கலைகளையும் துணைக் கொண்டு, எல்லா மொழிகட்கும் பொதுவும் அடிப்படையுமான ஒரு மூலமொழியைக் கண்டுபிடித்தற்கான விதிகளையறிந்து, அதைக் கண்டுபிடித்தல். இக் கொண்முடிபு நிலையும் (1) ஆராய்ச்சி, (2) முடிவு என இருநிலைப்படும்.

உலகில், மொழிநூற்கலை முதலிரு நிலைகளையுங்கடந்து, இதுபோது மூன்றாம் நிலையில் ஆராய்ச்சிநிலைமையிலுள்ளது.

4. மொழிநூல் நெறிமுறைகள் — Principles of

Comparative Philology

மொழிநூலானது, ஒரு சிறந்த தனிக் கலையானாலும், அதன் நெறிமுறையறியாத சிலருடைய வழூஉக் கூற்றுகளால், பொதுவாய் மிகவும் பழிக்கப்படுகின்றது.

மொழி நூல் நெறிமுறைகளாவன :—

1. மொழிநூல் ஒரு தனிக்கலை

பலர் மொழிநூல் ஒரு தனிக்கலையென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரேனும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லாதிருப்பின் இழிவென்றெண்ணி, 'பொருந்தப் புளுகல்' என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லி விடுகின்றனர். பாண்டித்தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர்.

காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சியில் ஒருமுறை 'வடை' என்னும் தின்பண்டப் பெயர், 'வடு' என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத்தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும் கூறியுள்ளனர். வடை என்பது 'வள்' என்னும் வேரினின்று பிறந்ததென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென்பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும்படி துளையிடுவதென்பதையும், துளையினால் சுவை யாவது மணமாவது கெடாதென்பதையும் அவர் அறிந்திலர்.

ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை — பெடை; வள்+தை = வட்டை — வடை. பெள் = விரும்பு, வள் = வளை.

2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது

'அட்டையாடல்' என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங்கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. அட்ட அல்லது அட்டெ = முண்டம் (தெ., க.)[6]

அம்பு (வளையல்), அம்பி (படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன.

amphi = round; (amphitheatre என்னும் தொகைச் சொல்லை நோக்குக.)

3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது

மொழிநூல், கணிதத்தைப்போலப் பிறகலை சாராத கலையன்று. மொழிநூலின் ஒவ்வொரு கூற்றும், அவ்வக் கலைக்குப் பொருந்தியதாயிருத்தல் வேண்டும்.

ஆங்கிலத்திலுள்ள Teak என்னுஞ் சொல், தேக்கு என்னும் தமிழ்ச்சொல்லே யென்பதற்குத் திணைநூல் (Geography) சான்றாகும். இந்தியாவில், விந்திய மலைக்கு வடக்கே தேக்கு வளர்வதில்லை என்று, ராகொஸின் (Ragozin) தமது 'வேதகால இந்தியா' (Vedic India) என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார்.

எழுத்தொலிகளை ஒலிப்பதில் வயிறு, நுரையீரல், மூச்சுக் குழாய், தொண்டை, நா, அண்ணம், பல், உதடு, மூக்கு ஆகிய பலவுறுப்புகள் தொடர்புறுவதால், உடல் நூலும்(Physiology);

உள்ளக்கருத்துகளின் வெளிப்பாடே மொழியாதலின், உளநூலும் (Psychology);

மொழிகளைப் பேசும் மக்களின் இடமாற்றத்தையும் நாகரிக வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியதால், சரித்திரமும் (History);

தட்பவெப்ப நிலைக்கும் அவ்வந்நாட்டுப் பொருள்கட்கும் தக்கபடி, ஒலியும் சொல்லும் மாறுபடுவதால், திணைநூலும் (Geography);

நாகரிக மக்களின் மொழிகள், மதவியலைப் பெரிதுந் தழுவியிருப்பதால், மதநூல் (Theology), பழமை நூல் (Mythology), பட்டாங்கு நூல் (Philosophy) முதலிய கலைகளும்; இன்னும், சுருங்கக் கூறின் பல கலைகளும் மொழி நூற் பயிற்சிக்குத் தெரிந்திருத்தல் வேண்டும்.

4. மொழிகளெல்லாம் ஓரளவில் தொடர்புடையன:

சில சொற்களும், அவற்றையாளும் நெறிமுறைகளும், பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றன.

கா : தமிழ் — மன், Eng — man, A.S. — mann, Sans. — மநு. தமிழ் — தா, L. — do, Sans — da. தமிழ் — நாவாய், L — Navis, Sans. — நௌ.

தனிக்குறிலையடுத்த மெய் உயிர்வரின் இரட்டுவது பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றது.

கா : தமிழ் - மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு.

ஆங்கிலம் - thin + er = thinner, sit + ing = sitting.

5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமை யிருக்கும்.

6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன் வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராய வேண்டும்.

சிலர், தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளனவும், ஆரியக் கலப்பு மிக்குள்ளனவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழி களுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதியுள்ள 'கேரளபாணினீயம்', 'கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம்'போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக்கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழிநூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய மனவிரிவையடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரிஸ் (Morris), ஆங்கஸ் (Angus), ஸ்கீற்று (Skeat), ஸ்வீற்று (Sweet), உஹ்விட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங்களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிவும் பெரும் புலவருமான வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத்திலக்கணங்களையும் பின்பற்றியதால் தாம் எழுதியுள்ள 'இலக்கணக் கட்டுரைகள்', 'திராவிட மொழியின் மூவிடப் பெயர்' என்னும் இலக்கணங்களுள், சில சோர்வு பட்டுள்ளார். அவையாவன:

(1) தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றே யென்பது.

தொல்காப்பியத்தில், மொழிமரபில்,

“உச்சகாரம் இருமொழிக் குரித்தே”

“உப்பகாரம் ஒன்றென மொழிப”

என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றியலுகர வீற்றையன்று.

குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பன போன்ற சொற்களினிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற் களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்காலவியல்பு நோக்கி)க் குற்றியலுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ, து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றியலுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. 'உகரம்', 'குற்றுகரம்', 'குற்றியலுகரம்' என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்னவற்றில் குறு, 'குற்றியல்' என்னும் அடை மொழிகளால், குறுகிய உகரம்பொருளளவில் குறிக்கப்படுகின்றதேயன்றி ஒலியளவிலன்று. ஆகவே 'உச்சகாரம்' 'உப்பகாரம்' என்பவை முற்றியலுகரத்தைக் குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம்.

மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகரவீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன.

சுக்கு, குச்சு, பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றியலுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர்.

பு, து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற்பெயர்களும், து, சு என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த பிறவினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே,

“உயிர் ஒள எஞ்சிய இறுதி யாகும்”


என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு “உச்சகாரம்.... உரித்தே” என்றும், “உப்பகாரம்.... மொழிப...” என்றும் முற்றுகரத்தை விதந்தோதினார் தொல்காப்பியர்.

(2) தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது.

தொல்காப்பியப் புணரியலில்,

“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்” (2)

“குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (3)

என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறியதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல்காப்பியர் என்றார் ரெட்டியார்.

குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக்காலத்திலிருந்ததென்பது பெறப்படுமேயன்றி, ஆசிரியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது பெறப் படாது.

பண்டைத் தமிழர் நுண்ணிய செவிப்புலன் வாய்ந்திருந் தமையின், குற்றுகரம் முற்றுகரத்தினும் குறுகினதென்பதைக் காட்டும்பொருட்டுப் புள்ளியிட்டெழுதினர்.

குற்றுகரத்தின்மேல் அரைமதி (அல்லது குறும்பிறை) வைத்தெழுதுவது இன்றும் தென்மலையாள நாட்டில் உள் ளது என்று ரெட்டியாரே கூறுகின்றார். மலையாள நாட்டில், இற்றைத் தமிழ்நாட்டிலில்லாத பல பண்டைத் தமிழ் வழக்கங்கள் உள்ளன என்பது பின்னர்க் காட்டப்படும்.

தொல்காப்பியர் காலத்தில், குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டெழுதினாராயின், அவ்வழக்கம் ஏன் பிற் காலத்திலில்லை என்று கேட்கலாம். அதற்கு விடை கூறுகின்றேன்.

தொல்காப்பியர் காலத்தில், எகர ஒகர உயிர்களையும் அவையேறின மெய்களையும், மேற்புள்ளியிட்டுக் காட்டுவது வழக்கமாயிருந்ததென்பது,

நூன்மரபிலுள்ள,“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15)

“எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (16)

என்னும் நூற்பாக்களான் அறியலாம். ஏகார ஓகாரங்களும், அவையேறின மெய்களும், புள்ளி பெறாமையாலேயே, தத்தம் குறில்களினின்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இவ் வழக்கம் அற்றுப்போய் விட்ட தென்பது, தமிழில் எகர ஒகர உயிரேறின மெய்களும், ஏகார ஓகார உயிரேறின மெய்களும், வேறுபாடின்றி யெழுதப்பட்டமையால், பின்னவற்றை வேறுபடுத்திக் காட்டற்கு வீரமாமுனிவர் கொம்புகளை மேற்சுழித்தெழுதினதாகக் 'கொடுந்தமிழ்' இலக்கணத்திற் கூறியிருப்பதால் அறியப்படும். இங்ஙனமே குற்றுகரப்புள்ளியும் வழக்கு வீழ்ந்ததெனக் கொள்க.

"தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி” (எழுத்து. 43)

என்னும் நன்னூல் நூற்பாவின் உரையில், 'ஆண்டு' என்ற மிகையானே.... குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளர் எனக்கொள்க” என்று கூறியிருத்தலின், அவ் வழக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்தான் வீழ்ந்ததென அறியலாம்.

தமிழ்நாட்டிற் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கல்விக் களம் பார்ப்பனர் கைப்பட்டுவிட்டதினாலும், தமிழ் வறள வடமொழியை வளம்படுத்துவதே அவர் கடைப்பிடியாதலாலும், தமிழர் உயர்நிலைக் கல்வியை இழந்துவிட்டதினாலும் தமிழ் எழுத்துமுறை கவனிப்பாரின்றிச் சீர்கேடடைந்தது.

புள்ளிபெறும் என்பதினாலேயே, குற்றுகரத்தை மெய்யீறாகக் கொள்ளின், மொழிமரபில்,

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15)

“எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (16)

என்று தொல்காப்பியர் கூறியிருப்பதால், எகர ஒகர வீறுகளை யும் மெய்யீறாகக் கொள்ளவேண்டும். அங்ஙனம் கொள்ள லாகாமை வெளிப்படை.

இனி, கண்+யாது=கண்ணியாது என்பதுபோன்றே, சுக்கு+யாது=சுக்கியாது என்று புணர்வதால், குற்றியலுகரம் மெய்யீறாகக் கொள்ளப்படுமென்றார் ரெட்டியார். அங்ஙன மாயின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் புணர்வதால், அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு, உகரவுயிரே தமிழுக்கில்லையென்றாகும். ஆகையால், அவர் கூற்று உண்மையன்மை யறிக.

வடமொழியில், புரிக், விராட், சத் என்று வல்லின மெய்யீறு வந்திருப்பதுபற்றித் தமிழிலும் அவ்வாறே வருமென்றும், குற்றியலுகரமெல்லாம் மெய்யீறேயென்றும் கொள்வது தமிழ் முறைக்கு நேர்மாறாகும். குற்றியலுகரமெல்லாம் மெய்யீறாயின், எனக்கு, பாய்ச்சு, கட்டு (கண் + து), தாட்டு (தாள் + து), வாழ்த்து,பிடிப்பு, கொட்பு, திரும்பு, பாற்று (பால் + து), அற்று (அன் + து) என்பவற்றின் உண்மையான வடிவங்கள், முறையே, எனக்க், பாய்ச்ச், கட்ட், தாட்ட், வாழ்த்த், பிடிப்ப், கொட்ப், திரும்ப், பாற்ற், அற்ற் என்பன வாதல்வேண்டும். அங்ஙன மாகாமை அறிக;

தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிருப்பின், “.....குற்றியலுகரம்... எழுத்தோ ரன்ன” என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார்.

குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்கமுடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில்முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றியொலிக்கின்றதெனக் கொள்க.

(3) பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது.

“ஞ-ண-ந-ம-ன-ய-ர-ல-வ-ழ-ள என்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (45)

என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ளளவும் இடமில்லை.

உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற்களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம்பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள்கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார்.

உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகர வீறாயிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முதலில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறு பெற்று வழங்கினவல்ல.

தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழியொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப்பெற்றபோது, மெல்லின இடையின மெய்களினின்றுமட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ் வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும், சில மெல்லின இடையின மெய்யீற்றுச் சொற்கள், பகாச்சொன்னிலையில் அங்ஙனம் மெய்யீறாக நிற்குமேயன்றிப் பகுசொன்னிலையில் நில்லா.

கா : பண்—பண்ணுகிறான், அள்—அள்ளுகிறான்.

இவை பண்கிறான், அள்கிறான் என்று வழங்காமை காண்க. இதனால், உயிரீற்றுநிலை முந்தியதேயன்றி, மெய்யீற்று நிலை முந்தியதன்று என்பது அறியப்படும்.

ஆரிய மொழிகள் தமிழுக்குப் பிந்தினவையாதலானும், திரிபு வளர்ச்சி மிக்கவையாதலானும், அவற்றில் வல்லின மெய்யும் ஈறாகக்கொள்ளப்பட்டது.

பின்னியத்திலும் (Finnish), வடதுரேனிய மொழிகளுள் யூரலிய (Uralic) வகுப்பு முழுவதிலும், சொன்முதலில் இணை மெய்களையும், சொல்லீற்றில் ஒரு மெய்யையும் சேர்ப்ப தில்லை. கிளாஸ் (glas) என்னும் ஜெர்மனியச்சொல் பின்னி யத்தில் லாசி என்றெழுதப்படுகிறது. ஸ்மக் (smak), ஸ்ற்றார் (stor), ஸ்ற்றிரான்று (Stand) என்னும் சுவீடியச் (Swedish) சொற்கள் முறையே, மக்கு, சூரி, ரந்த என்றெழுதப்படுகின்றன என்று[7] மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.

திராவிடம் துரேனியக் கிளையாகக் கொள்ளப்படுவதையும், ஹாஸ்பிற்றல், பாங்க், ப்வீஸ் முதலிய ஆங்கிலச் சொற்கள், முறையே, ஆஸ்பத்திரி, பாங்கி, பீசு என்று உயிரீறாகத் தமிழில் வழங்குவதையும் நோக்குக.

(4) வல்லினமெய் இரட்டித்தல் இல்லை என்பது.

வல்லினமெய் இரட்டித்தல் என்பதேயில்லையென்றும், ஆட்டு, போக்கு முதலிய பிறவினைகள் எல்லாம்,

ஆடு + து = ஆட் + து = ஆட்டு, போகு + து = போக் + து = போக்கு, என்ற முறையிலேயே அமைவனவென்றும் கூறியுள்ளார் ரெட்டியார்.

தன்வினைப் பகுதியின் ஈற்றெழுத்தில் அழுத்தம் (stress) விழுவதால் அது பிறவினையாகக் கூடுமென்பது,

“உப்ப கார மொன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்பே”

என்னும் நூற்பாவாற் குறிக்கப்பட்டது. ஆடு, போகு முதலிய தன்வினைகளின் ஈற்றெழுத்துகள்மேல், அழுத்தம் விழுவதாலேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடுவது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழியில் இந்நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது.

அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததேயன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலியிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதினர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதினால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவதாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல்களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை 'ஒன்றென மொழிப' என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம்.

காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்தமுற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித்தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள்களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும்.

கா : காட்டுவிலங்கு, ஆற்றுநீர்.

நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றி யனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டாகும் இறுக்கத்திற் கொப்பிடலாம்.

புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட்டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினாலேயே. புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றாகவும் எச்சமாகவும் வழங்கப்பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனிவடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது.

போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத்தத்தால் ஈறு இரட்டித்தவையே.

சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும், சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார்.

பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இருவகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க.

(5) 'அரவு' என்றொரு தொழிற்பெயரீறு இல்லை யென்பது, அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே,

கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு

என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார்.

'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும்' என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக்கின்றன.

அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம் என்னும் தொழிற்பெயராலறியப்படும்.

அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும்.

அரம் — (அரமு) — அரவு.

ஒ.நோ. உரம் — உரவு, தடம் — தடவு, புறம் — புறவு.

(6) மூவிடப்பெயர் வினாப்பெயர்களின் அமைப்பு, உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது.

அ, இ, உ, எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச்சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப்பெயர் முன்னிலைப் பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்துகளின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். இதன் தவறு பின்னர் விளக்கப்படும். ஆயினும் இங்கொரு செய்தியைமட்டும் கூற விரும்புகின்றேன். அதாவது, மேற்கூறிய நாற்பாற்பெயர்களும் அரிவரித் தோற்றத்திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்றுதற்கு) முந்தினவென்பதே.

ரெட்டியார் இலக்கணக் கூற்றுகளுள் பிற பிழைகளுமுள. அவற்றைப் பின்னர் இந் நூலிற் கூறுபவற்றினின்றும் அறிந்துகொள்க.

7. மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம்.

ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக்கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழு முடிபிற் கிடமாகும்.

கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, Parliament என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லியலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும்.

Condemn — L. condemno, from con intensive, damno to damn.

Parliament - Lit. 'a parleying or speaking,' Fr. parlement — parler, to speak, ment, a Lat. suffix.

பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல் லாயுமிருத்தல் காண்க.

சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடுகின்றமையின், அவற்றின் மூலவடிவையறிந்தே பொருள் காண வேண்டும்.

மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர்.[8] தண்டை அடியென்றுங் கூறலாம்.

மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியுமாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும்.

மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப்பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ணுப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா, போ என்பன போன்ற முக்கிய வினைகள் என்பனவே போதுமாயினும், பல சொற்களும் தெரிந்திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறுதலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்ததாகும்.

8. ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழி நூல் பயிலலாம்.

ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத்திற்குச் செல்வது இன்றியமையாததன்று; தம் இடத்திலிருந்து கொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதிகளையுந் துணைக்கொண்டு அயன் மொழிகளைக் கற்கலாம்.

9. ஒரு மொழியறிவு பிறமொழியறிவுக்குத் துணையாகும்.

ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழியிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டுபிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக்கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதனாலும், உலகத் தாய்மொழியின் இயல்பையும் வளர்ச்சியையும் அறியத்தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலாலும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவுபெருகுவதாலும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழியறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும்.[9]

10. தாய்மொழி முன்னும் அயன்மொழிபின்னும் கற்கப்பட வேண்டும்.

ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடுமாயினும், அதன் மரபையும் இலக்கணத்தையும் கற்றேயறிய வேண்டியதிருக்கின்றது. தாய்மொழியியல்பையறியுமுன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர்.

தமிழைக் கல்லாது ஆங்கிலத்தையே பயின்ற சில தமிழர், பெரும்பாலுங் கிறிஸ்தவர், நன்றாய் விளையாடினார்கள் என்பதை விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் என்று கூறுதல் காண்க.

11. முக்குல மொழிகளும் ஒரே மூலத்தின.[10]

ஒரு மரத்தில், ஒரே அடியினின்று பல கவைகளும், அக் கவைகளினின்று பல கிளைகளும், அக் கிளைகளினின்று பல கொம்புகளும், அக் கொம்புகளினின்று பல கப்புகளும், அக் கப்புகளினின்று பல வளார்களும் தோன்றுகின்றன. இங்ஙனமே, உலக மூல மொழியினின்று, பல குலநிலைகளும், அக் குல நிலைகளினின்று, பல குடும்ப நிலைகளும், அக் குடும்ப நிலைகளினின்று பல மொழிகளும், அம் மொழிகளினின்று பல கிளைமொழிகள் அல்லது மொழி வழக்குகளும் தோன்றியுள்ளன.

உலக மொழிகளின் முக்குலத் தாய்களும் ஒரே மூலத்தின என்று, சென்ற நூற்றாண்டிலேயே, மாக்கசு முல்லர் தேற்றமாய்க் கூறிவிட்டார்.

பண்டைக் காலத்தில், ஆரியர் வருமுன், இந்தியா முழுதும், பல மொழிவழக்குகளாக வேறுபட்ட ஒரே மொழி(தமிழ்) வழங்கினதாகச் சில தொல்காப்பியக் குறிப்புகளாலும் மொழி நூலாராய்ச்சியாலும் அறியக் கிடக்கின்றது. ஆரியர் வந்த பிறகுங்கூட, உண்மையான மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டவை, வடக்கில் சமஸ்கிருதமும் தெற்கில் தமிழுமாக இரண்டேயென்பது, வடமொழி தென்மொழியென்னும் அவற்றின் பெயர்களாலேயே அறியப்படும். இன்றும், தென் னாட்டு மொழிகளையெல்லாம் தமிழுக்குள்ளும் வடநாட்டு மொழிகளையெல்லாம் சமஸ்கிருதத்திற்குள்ளும் அடக்கி விடலாம். திராவிடக் குடும்பம் முழுதும் தமிழுக்குள் அடங்குவது போலப் பிற குடும்பங்களும் ஒவ்வொரு மொழிக்குள் அடங்கிவிடும். இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றினால், இறுதியில், துரேனியம் ஆரியம் சேமியம் என்னும் முக்குல நிலைகளே எஞ்சி நிற்கும். அவற்றையும் ஒன்றாய டக்குவதற்குரிய நெறிமுறைகள் இல்லாமற் போகவில்லை.

(நோவாவுக்கு முந்திய காலத்தில், கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்) “உலக முழுவதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாய் இருந்தது” என்று, கிறிஸ்தவ மறையில் ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது.

இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற்கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன:—

(1) மக்கள் தொகை வரவர மிகுதல்.

(2) எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல்.

(3) அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப் பெயர் வினாப்பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழிகட்கும் பொதுவாயிருத்தல்.

(4) எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப் படல்.

(5) நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை.

(6) நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு.

கா :ஆங்கிலம் தமிழ்
tonic (from tone) ஒலித்தல் (தழைத்தல்)
to catch fire தீப்பற்று
to fall in love வீழ் (“தாம்வீழ்வார்....உலகு”)
blacksmith கருமான்

முதலாவது கணவனும் மனைவியுமாக இல்லறந் தொடங்கும் இருவர், பின்பு பெரிய குடும்பமாகப் பெருகுவதையும், நாளடைவில் சிற்றூர் நகரும் நகர் மாநகருமாவதையும், குடி மதிப்பறிக்கைகளில் வரவர மக்கட்டொகை மிகுந்து வருவதையும் காண்பார்க்கு, மக்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றினர் என்பது புலனாகாமாற் போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தினவாதல் வேண்டும்.

மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன்.

ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும் போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர்.”

முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும்.

மக்கள் பெரும்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும், நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையராகவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும்.

12. ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய.

உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Onomatopoeic theory)யும், சிலர் உணர்ச்சியொலிக் கொள்கை (Interjectional theory)யும், சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory)யும் எடுத்துக்கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும்.

மொழி இயற்கையாய்த் தோன்றியதென்னும் இயற்கைக் கொள்கை(Natural theory)யும், இடுகுறிகளாய்த் தோன்றிற் றென்னும் இடுகுறிக்கொள்கை(Arbitrary theory)யும், பலர் கூடிஇன்னபொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு முடிவுக்கொள்கை(Conventional theory)யும், கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் கொள்கை(Divine theory)யும் இக்காலத்திற் கேலா.

13. இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது.

சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற்றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப் பெயர்களையிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா

“ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டுமென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ்விலக்கணத்தை அம் மொழி யிழந்துவிடுகிறது” என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.[11]

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

என்றார் தொல்காப்பியர்.[12]

14. உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும்.

திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமஸ்கிருதத்தை, இன்றும் சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன் மொழியாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத்திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாகமுடியும்?

உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளையுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலை களைக் கொண்டதாய், இடுகுறியில்லதாய், தனிமொழியாயி ருத்தல் வேண்டும்.

15. சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும்.

மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப்படுகின்றது.

16. மொழி மாந்தன் அமைப்பே.[13]

மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே. எப்பிக்கூரஸ் (Epicurus), அரிஸ்ற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தேயிருந்தது.

ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிஸ்தவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர்.

தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை.

17. மொழி மக்கள் கூட்டுறவா லாயது.

மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானாயின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது.

ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப் பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும்.

இக்காலத்தில் உவில்க்கின்ஸ் போன்ற ஒருவர், இடுகுறி களைக்கொண்டு ஒரு புதுமொழியமைக்க முடியுமாயினும், இயற்கையாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன் மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது.

18. மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று.

மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும்.

தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற்களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியிலுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும்.

மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர்.

கா :கூ(என்று கத்தினான்)—இடைச்சொல்

கூவி — வினைச்சொல்
கூவல்—பெயர்ச்சொல்

தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம்மூவகைச் சொற்களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன.

மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய்ஸ் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது.

19. மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று.

மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும்.

மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண்டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்கவேண்டுமாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சியிலிருந்து தான் பின்னர் மொழி உருவாகியிருக்கும்.

20. மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும்.

கலைகள் இயற்கலை (Physical Science), ஆக்கக்கலை (Historical Science) என இருவகைப்படும். பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக் கலையும் ஓர் ஆக்கக்கலையே.

21. மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ஆக்கப்பெற்றவை.

22. ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம்.

ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன:

(1) மன்பதைப்பெருக்கம்

ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும்.

பொதுவாய், 100 மைல் சேய்மையில் இரண்டொரு சொற்களும், 200 மைல் சேய்மையில் சில சொற்களும், 400 மைல் சேய்மையில் மொழிவழக்கும், அதற்கப்பால் மொழியும் வேறுபடுவதியல்பு. இப் பொதுவிதிக்குச் சில தவிர்ச்சி (exception) களுமுண்டு.

(2) ஒலித்திரிபு (Phonetic Decay and Phonetic Variation)

i. சோம்பலால்.

கா : பளம் (பழம்)

ii. உறுப்பு வேறுபாட்டால்.

தட்பவெப்பநிலை, நிலச்சிறப்பு, ஊண், தொழில், பழக்க வழக்கம், இயற்கை முதலிய காரணங்களால், எழுத் தொலிக்குக் கருவியாகும் உறுப்புகள், ஒவ்வொரு நாட்டாரி டத்தும் நுட்பமாய்வேறுபடுகின்றன. அதனால், ஒலிப்புமுறையும் வேறு படுகின்றது. மலையாளத்தில் வலி மெலியாதலும் (Nasalization) கன்னடத்தில் பகரம் ஹகரமாதலும், தெலுங்கில் ழகரம் டகரமாதலும் காண்க.

(3) சொற்றிரிபு (Verbal Changes)

i. ஈறுகெடல் (Discardance of Inflection)

ii. ஈறு திரிதல் (Inflectional Changes)

iii. போலி (Mutation)

iv. இலக்கணப்போலி (Metathesis)

v. மரூஉ (Disguise)

vi. சிதைவு (Corruption)

vii. முக்குறை (Apherosis Syncope and Apocope)

viii. முச்சேர்ப்பு (Prosthesis, Epenthesis and Epithesis)

ix. அறுதிரிபு

x. எதுகை (Rhyming)

xi. வழூஉப்பகுப்பு (Metanalysis)

xii. ஒப்பு (Analogy)

xiii. மேற்படையமைப்பு (Superstructure)[14]

(4) பொருட்டிரிபு (Semantic Changes).

i. வேறுபடுத்தல் (Differentiation)

ii. விதப்பித்தல் (Specialisation of general terms)

iii. பொதுப்பித்தல் (Generalisation of special terms)

iv. இழிபு (Degradation)

v. உயர்பு (Elevation)

vi. விரிபு (Extension)

vii. அணி (Metaphor)

viii. சுருக்கல் (Contraction)

ix. வரையறை (Restriction)

x. வழக்கு (Usage)

(1) இலக்கணமுடையது;
(2) வழுவுள்ளது.

(5) சொற்றெரிந்து கோடல் (Natural Selection)

தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மனை என்னுஞ் சொல்லையும் தமிழினின்றும் தெரிந்து கொண்டது சொற்றெரிந்துகோடல்.

(6) வழக்கற்ற சொல் வழங்கல் (Colonial Preservation).[15]

நோலை என்னும் தமிழ்ச்சொல்லின் மூலம் தெலுங்கில் நூன (எள்நெய்) என்று வழங்குவது வழக்கற்ற சொல் வழங்கல்.

(7) புதுச்சொல்லாக்கம்.

தாய்வழக்கி லில்லாத சொல், தொகைச்சொல், ஈறு, ஒட்டுச் சொற்கள் முதலியவற்றைப் புதிதாய் ஆக்கிக் கொள்ளல்.

(8) தாய்வழக்கொடு தொடர்பின்மை.

சேரநாட்டுத் தமிழ்,சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பின், தமிழொடு தொடர்பின்மை யாலேயே வேறு மொழியாய்ப் பிரிய நேர்ந்தது.

(9) பிறமொழிக் கலப்பு (Admixture of foreign elements)

மேற்கூறிய திரிபு முறைகளெல்லாம், சோம்பலாலும் அறியாமையாலும் நேர்ந்து ஒரு பயனும் பயவாதிருப்பின், மொழிச்சிதைவு (Linguistic Corruption) என்னும் கேட்டிற்குக் காரணமாகும்; அங்ஙனமன்றி, அதற்கு மறுதலையாயிருப்பின், மொழி வழக்கு வளர்ச்சி (Dialectic Regeneration) என்னும் ஆக்கத்திற்குக் காரணமாகும்.

தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகள் தமிழினின்றும் பிரிந்துபோனது, திராவிடர் தவறுமன்று, ஆரியர் தவறுமன்று, மொழிவழக்கு வளர்ச்சியேயாகும். ஆனால், அம் மொழிகளில் வடசொற்களைக் கலந்ததும், அம் மொழிகளைத் தமிழினின்றும் வேறுபடுத்தினதும் திராவிட மொழிகளுக்கு வட மொழியைத் தாயாகக் காட்டியதும், தமிழைத் தாழ்த்திவிட்டு வட மொழியைத் தலைமையாக்கியதும், ஆரியத்தால் திராவிடர்க்கு நேர்ந்த தீமைகளாகும். மிகப் பெரிய திராவிட மன்பதையை ஆரியர் முதலாவது பல பிரிவாகப் பிரித்தது மொழியினால் என்பது, இதனால் விளங்கும். மொழியினால் திராவிடரைப் பல பிரிவாகப் பிரித்தபின், மதத்தாலும் வரண வொழுக்கத்தாலும் தமிழரைப் பல பிரிவாகப் பிரித்தனர்.[16]

தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள், செந்தமிழ் நாட்டிற்குச் சேயவாதலாலும், சேர சோழ பாண்டிய ஆட்சி கட்கப்பாற்பட்டவாதலாலும், சில நல்ல சொல்வடிவுகளை யுடையவாதலாலும், தமிழினின்றும் பிரிந்து கிளைமொழி களாய், வேறாக வெண்ணப்படுவதற்குத் தகுதியுடையனவே. ஆனால், 12ஆம் நூற்றாண்டுவரை சேரநாட்டுத் தமிழாயிருந்த மலையாள மொழி, தமிழினின்றும் வேறாக எண்ணப்படுவதற்குச் சற்றும் தகுதியுடையதன்று. மலையாள மொழியைக் கெடுத்த ஆரியருள் தலைமையானவர், தமிழெழுத்தின் வகைகளான வட்டெழுத்திலும் கோலெழுத்திலுமே தங்கள் மொழியை எழுதிவந்த மலையாளிகட்கு, ஆரியவெழுத்தையமைத்துக் கொடுத்த துஞ்சத்து எழுத்தச்சன் என்பதற்கு எள்ளளவும் ஐயமேயில்லை.

23. ஒரு மொழி சில காரணத்தால் திரியலாம் :

ஒரு மொழி திரிதற்குக் காரணங்களாவன

(1) பேசுவோர் நாடோடிகளாயிருத்தல்

(2) பேசுவோர் சிறு குழுவினராயிருத்தல்

(3) வரிவடிவின்மை

(4) அரசியலின்மை

(5) தாங்குநரின்மை

(6) சிதைவுகாப்பின்மை

(7) சொன்மாற்றம் i.பணிவுடைமையால்
                        ii. தனிமக்கள் விருப்பத்தால்

(8) பிறமொழிக்கலப்பு

ஒலி, சொல், பொருள் என்னும் மூவகையிலும் ஒரு மொழிதிரியும் முறைகள் முன்னர்க் கூறப்பட்டவையே.

இத்திரிபுகளெல்லாம், இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாய் விளக்கப்படும். இவற்றுள், சிலவற்றை இப் புத்தகத்தின் இறுதியிற் காணலாம்.

24. ஒரு மொழி சில காரணங்களால் வழக் கழியலாம்.

ஒரு மொழி வழக்கழிதற்குக் காரணங்களாவன :

(1) செயற்கை வளர்ச்சி முதிர்வு. கா : சமஸ்கிருதம்.

(2) பேசுவோர் அநாகரிகராயிருந்து பிறநாகரிக மொழியை மேற்கொள்ளல்.

ஆப்பிரிக்காவினின்றும் அமெரிக்கா சென்ற நீகரோவர், தம் மொழிகளை விட்டுவிட்டு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டமை காண்க.

(3) பேசுவோர் சிறு குழுவாய்ப் பிறமொழி பேசும் பெரும்பான்மையோர் நடுவிலிருத்தல்.

(4) போர், கொள்ளைநோய், எரிமலைக் கொதிப்பு முதலியவற்றால் ஒரு மொழியாரெல்லாரும் அழிக்கப் படல்.

25. ஒரு மொழி புதிதாய்த் தோன்றலாம்.

புதுமொழி தோன்றும் வகைகள்

i. செயற்கை கா:எஸ்பெரான்ற்றோ (Esperanto)
ii. கலவை கா:இந்தி
iii. மொழிவழக்கு வளர்ச்சி கா:தெலுங்கு

26. அடுத்தடுத்து வழங்கும் மொழிகள் தம்முள் ஒன்றி னொன்று கடன்கொள்ளும்.

இவ்விதி தமிழுக்குப் பெரும்பாலுஞ் செல்லாதென்பது பின்னர் விளக்கப்படும்.

27. ஒரு தனிமொழி பேசுவோர் தொன்றுதொட்டுத் தனிக் குலத்தினராயிருந்திருத்தல் வேண்டும்.

பிற மொழியோடு சிறிதும் தொடர்பில்லாத ஒரு தான்றோன்றி மொழியிருப்பின்,அதைப் பேசுவோர் தொன்றுதொட்டுப் பிறகுலத்தாரொடு தொடர் பில்லாத ஒரு தனிக் குலத்தினராயிருத்தல் வேண்டும்.

28. மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும்.

29. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசு வோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது.

30. மொழிநூலாளர் பல மொழிகளைப் பேச வேண்டும் என்னும் யாப்புறவில்லை.

முக்கியமான இரண்டொரு மொழிகளிற் பேசுந்திறனும், பிற மொழிகளின் இலக்கண வறிவும் சொல்லறிவும், மொழி நூலார்க் கிருந்தாற் போதும்.

31. ஒரே மொழி பேசுவோரெல்லாம் ஓரினத்தா ரல்லர்.

பார்ப்பனரும் தமிழரும் ஒரே மொழி பேசுவதால் ஓரினமாகார்.

32. மக்கள் நாகரிகத்தைக் காட்டுவதற்கு மொழியே சிறந்த அடையாளம்.

விலங்கினின்றும் மாந்தனை வேறுபடுத்துவது மொழி யொன்றே. அம் மொழியும் பலதிறப்பட்டு, அவற்றைப் பேசும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகும்.

33. மொழிநூற் கலைக்கு நடுவுநிலையும் பொறு மையும் வேண்டும்.

இவ்விதி எல்லாக் கலைக்கும் பொதுவாயினும், மொழி நூற் கலைக்குச் சிறப்பாய் வேண்டுமென்பதற்கு இங்குக் கூறப்பட்டது. ஒருவர் பெருமை பாராட்டிக்கொள் ளும் பொருள்களுள், தாய்மொழியும் ஒன்று. ஆகையால், அதன் மீதுள்ள பற்றினால் நடுவுநிலையை நெகிழவிடக் கூடாது.

தமிழ்நாட்டில், நடுவுநிலை யாராய்ச்சிக்குத் தடையாக ஈருணர்ச்சிகளிருந்துவருகின்றன. அவற்றுள் ஒன்று, ஆரியத் திற்கு மாறாக இருப்பது உண்மையாயினும் கூறக்கூடாதென்பது. இன்னொன்று மதப்பற்று. சுவாமிநாத தேசிகர் திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலியவற்றைப் படிக்கக்கூடாதென்றும் கூறியது மதப்பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினாலொழிய, அதன் உண்மை காணமுடியாதென்பது தேற்றம்.

“காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே — காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.”

இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறையிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந்தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சியியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர் ஒப்பியலறிவின்மையாற் பல செய்திகளை உண்மைக்கு மாறாகக் கூறிவிட்டனர்.

ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தனவென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தையும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென்றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழிகளைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படுமெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்பதென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக்காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடிவத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா.வே. மாணிக்கநாயகர்.

இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என்பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறுகின்றேன்.

ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன்படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி.

கா : he + is = ஹீயிஸ், my + object = மையாப்ஜெக்ற்ற் — ய், fuel = ப்வியூவெல், go + and (see) = கோவன்று — வ்.

Drawer, sower முதலிய ஆங்கிலச்சொற்களில், வகரவுடம்படு மெய்க்குப் பதிலாக யகரவுடம்படுமெய் வருகிறதேயெனின், வகரத்தினும் யகரம் ஒலித்தற்கெளிதாதல்பற்றி, பிற்காலத்தில் யகரவுடம்படுமெய் பெருவழக்காயிற்றெனக் கொள்க. தமிழிலும் இங்ஙனமே. ஆயிடை, கோயில், சும்மாயிரு முதலிய வழக்குகளைக் காண்க.

மாணிக்க நாயகரைப் பின்பற்றுஞ் சிலர், அவரைப் போன்றே குறுகிய நோக்குடையராய், பல சொற்கட்குத் தவறான பொருளும், தமது கருத்திற்கிசையாத நூற்பாக்களையும் சொல்வடிவங்களையும் இடைச்செருகலும் பாடவேறுபாடு மென்றும் கூறி வருகின்றனர். அவர் இனிமேலாயினும் விரி நோக்கடைவாராக.

மேனாட்டார் நடுநிலையும் ஒப்பியலறிவும் உடையராயினும், தமிழின் உண்மைத்தன்மையைக் காணமுடியாமைக்குப் பின்வருபவை காரணங்களாகும் :

(1) தமிழ் தற்போது இந்தியாவின் தென்கோடியில் ஒரு சிறு நிலப்பரப்பில் வழங்கல்.

(2) (தமிழுட்பட) இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வடசொற்கள் கலந்திருத்தல்.

(3) (கடல்கோளாலும், ஆரியத்தாலும், தமிழர் தவற்றாலும் பண்டைத் தமிழ்நூல்கள் அழிந்து போனபின்) இந்தியக் கலை நூல்களெல்லாம் இப்போது வடமொழியிலிருத்தல்.

(4) இதுபோது பல துறைகளிலும் பார்ப்பனர் உயர்வாயும் தமிழர் தாழ்வாயுமிருத்தல்.

(5) பார்ப்பனர் தமிழரின் மதத்தலைவராயிருத்தல்.

(6) தமிழைப்பற்றித் தமிழரே அறியாதிருத்தல்.

(7) ஐரோப்பியர் தமிழைச் சரியாய்க் கல்லாமை.

கால்டுவெல் கண்காணியார், தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழியென்றறிந்தும், தமிழர் உயர்நிலைக் கலைகளை ஆரியரிடத்தினின்றும் கற்றதாகத் தவற்றெண்ணங் கொண்டமையால், தமிழில் மனம், ஆன்மா என்பவற்றைக் குறிக்கச் சொல்லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வட சொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர்.

உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வடமொழியிலேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிக மெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர்.

மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வருகின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழிநூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப்பனர், ஆரியத்தை உயர்த்திக்கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக் கொண்டு, அவற்றை மாற்றுகின்ற புத்தாராய்ச்சி தோன்றாத படி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காணவேண்டுமென்று பெருமுயற்சி நடந்துவருகின்றது; ஆனால், கீழ்நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டுமென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக்கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரிகத்தையிழித்துக்கூறும்) சில மேற்கோள்கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் மொழிநூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக்கையே குறிக்கும்.


  1. 1.Lectures on the Science of Language, Vol.I.p.27
  2. 2.பின்னியம்,(Finnish) ஹங்கேரியம்(Huagarian, துருக்கியம் (Turkish), தமிழ் முதலியன.
  3. 1.Historical Outlines of English Accidence. p.2.
  4. 2.L.S.L.Vol.II.p. 50—63
  5. 1. திராவிடக் குடும்பம், ஒரு சிறு குழுவாயிருந்தாலும் முக்குலத்தினின்றும் வேறாகத் தனித்துக் கூறப்படற்குரியதென்பது பின்னர்க் காட்டப்படும்.
  6. 1. வேங்கடராஜு லு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்).
  7. 1.L.S.L. Vol>II. p.207.
  8. 1.வேரும் முதல் வேர்(Primitive root),வழி வேர் (Secondary root, சார்பு வேர்(Teritiary root) என மூவகைப்படும்.அவற்றுள்,முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும்.
  9. 1.இங்குக் கூறியது மொழியறிஞருக்கேயன்றி, இந்திக் கட்டாயக் கல்விபோல எல்லார்க்குமன்று.
  10. 1.L.S>L. Vol.pp.35,375,387.
  11. 1.L.S.L. Vol.1.p.47.
  12. 2.தொல். 639
  13. 3.L.S.L. Vol.1.p.31
  14. உண்டு என்னும் தமிழ் வினைமுற்றைப் பகுதியாகக்கொண்டு உண்டாடு உண்டாதி முதலிய தெலுங்கு வினைமுற்றுகளையமைப்பது மேற்படையமைப்பாகும்.
  15. *English past & present. by French p.55
  16. இதுபோது நாட்டியலியக்கத்தாலும் தமிழர் பிரிக்கப்படுகின்றனர்.