ஒரு கோட்டுக்கு வெளியே/அய்யாவை மீட்டு…

11. அய்யாவை மீட்டு…

லகம்மை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய், அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். ஓங்கி உயர்ந்த பனையில் அனாவசியமாக ஏறிய மனிதர், இப்போது சாய்ந்துபோன பனைபோல், மனிதர்களைப் பார்க்க விரும்பாதவர் போல், கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.

சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, வெளியே வந்தாள். இரவுப் பொழுதை 'எப்படிக் கழிப்பது?' என்று யோசித்தாள். கோனச்சத்திரத்தில் இரவு முழுவதும் இயங்கும் * மக்கடைகள் உண்டு, வருவோர் - போவோர்க்கு. குறிப்பாக லாரிக்காரர்களுக்குச் 'சரக்கு'க் கொடுக்கும் 'பலசரக்கு'க் கடைகளும் அங்கே உண்டு. அங்கே போய்ப் படுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. போலீஸ் நிலையக் காம்பவுண்டுக்குள் இருந்த பெண்களும், இப்போது போய்விட்டார்கள். மணி பத்துக்கு மேலாகிவிட்டது.

எவரிடமும் பேசாமல், தனித்திருக்க விரும்பிய உலகம்மை, அந்தப் பயங்கரத் தனிமையின் அசுரத்தனத்தில் அகப்பட்டவள்போல் துடித்தாள். மயானத்தில் ஏதாவது பிணம் எரிந்தால்கூடத் தேவலை. அது தனிமையை அகற்றும் என்பதுபோல், அருகே இருந்த அந்தப் பிண பூமியைப் பார்த்தாள். மாண்டு முடிந்தோரின் மரணக்கதையைப் பறைசாற்றும் பணக்காரச் சமாதிகளும், தொட்டால் விழுந்து விடுவதுபோல் இருந்த கல்லைக் கிரீடமாக வைத்துக் கொண்டிருந்த ஏழைச் சமாதிகளும், ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல், பயங்கரமான மௌனத்தை வெளியிட்டுக் கொண்டு இருந்தன.

'எங்கே போவது? காம்பவுண்டில் தூங்கலாமென்றால் ரைட்டர் ரைட்டாய்' நடக்க மாட்டான் போல் தோணுது. டீக்கடைப் பக்கம் போனால், அவளையும் பலசரக்கில் ஒரு 'சரக்காக'க் கருதலாம். உலகத்தை எட்டும் உலகம்மை இரண்டு வயதுச் சிறுமியாகி 'அம்மா அம்மா' என்று அரற்றினாள். தாயின் மடியில் தலை வைத்துப் படுக்க விரும்பியவள் போல், போலீஸ் காம்பவுண்ட் சுவரில், தலையைத் தேய்த்துத் தேய்த்து அழுதாள். அழுகை திடீரென்று சினமாகியது. ஓட்டமும் நடையுமாக ஊருக்குப்போய், தூங்கிக்கொண்டிருக்கும் மாரிமுத்துவையோ, ராமசாமியையோ, இடுப்பில் செருகியிருக்கும் சின்னக் கத்தியால் கீறலாமா என்று நினைத்தாள். இடுப்புக் கத்தியை நினைத்ததும், அதன் அருகில் செருகியிருந்த லோகன் கொடுத்த காகிதம் நினைவுக்கு வந்தது. அந்தக் காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டபோது "இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ஸ்டேஷன்ல ரயில பிடிக்கலாம்" என்று அவன் சொன்ன இறுதி வார்த்தைகள், அப்போதுதான் பேசியதுபோல், அவள் காதில் ஒலித்தன. "ரயில்வே டேஷனில் இந்நேரம் ரயில் ஏறியிருப்பாரோ?"

"ரயில்வே டேஷன், ரயில்வே டேஷன்."

'ஆமாம். கோனச்சத்திரத்துலயும் ஒரு ரயில்வேடேஷன் இருக்கிறதே அங்கே போய் ஏன் ஆட்களோடு ஆளாகப் படுத்திருக்கக் கூடாது? கடவுளா பாத்துதான் அவர் அனுப்பி இந்த மாதிரி பேசவச்சிருக்கான்!

லோகனை நினைத்தவுடனேயே, தன் இரவுப் பிரச்சினைக்கு வழி கிடைத்திருப்பதை நினைத்து. அவள் அந்த நிலையிலும் மகிழ்ந்து போனாள். அவன் நினைவே. இப்படி ஒரு நல்லதைச் செய்தால், அவன் எப்படிப்பட்டவனாய் . இருக்க வேண்டும்! எவளுக்குக் குடுத்து வச்சிருக்கோ? இந்நேரம் யாராவது ஒருத்தி எதிரில் உட்கார்ந்து. அவரை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருப்பாள்!

உலகம்மை சிந்தித்துக்கொண்டே நிற்கவில்லை. ஆட்களை அடைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அவர்களை அப்புறப்படுத்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தாள். அவளைச் சந்தேகத்துடன் பார்த்து. "நீ யார்" என்று கேட்ட ரயில்வே போலிஸ்காரரிடம் "கடயத்துக்குப் போறேன்" என்று கூசாமல் சொன்னாள். அப்படிச் சொன்னதற்காக அவளே ஆச்சரியப்பட்டாள், 'நாலு இடம் பழகினால், பொய் தானா வரும் போலிருக்கே. இதனாலதான் விவசாயிங்களவிட, வியாபாரிங்களும், வியாபாரிகளவிட படிச்சவங்களும் அதிகமாப் பொய்' சொல்றாங்க. கஷ்டம் தானாக வந்தா பொய்யும் தானா வரும் போலிருக்கு. அப்படின்னா கஷ்டப்படாம ஜேஜேன்னு வாழ்றவங்களும் எதுக்காவ பொய் சொல்றாங்க?"

லோகுவின் இன்ப நினைவும், அய்யாவின் துன்ப நினைவும் மாறிமாறித் துரத்த. அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தூக்கதேவனிடம் அடைக்கலமானாள். காலையில் கண்விழித்த உலகம்மை, ஓட்டமும் நடையுமாக அய்யாவைப் பார்க்க ஓடினாள். அவர் 'குத்துக்கால்' போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்படி இருந்தால், அவர் பசியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவளுக்கும் பசி. நல்லவேளை முந்தானியில் ரூபாய் முடிச்சி இருந்தது.

ஹோட்டலில் போய், இரண்டு இட்லி தின்னலாமா என்று நினைத்தாள். இதுவரை ஹோட்டல் பக்கம் போகாதவள், இப்பவும் போக விரும்பாதவள் போல், ஒரு பக்கடையில், இரண்டு 'பன்கள்' வாங்கிக்கொண்டாள். ஒரு மயையும் கண்ணாடி கிளாசில் வாங்கிக்கொண்டு, கிளாவிற்கு பிரதியாக ஐம்பது பைசாவை. 'டிபாசிட்டாக'க் கொடுத்துவிட்டு, அய்யாவிடம் வந்தாள், கண்ணாடி டம்ளரைக் கொடுக்கப் போகும்போது, மூன்று பழங்களை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அங்கே சாப்பிட, அவளுக்குக் கூற்று. எவரும் பார்க்காத இடத்திற்குப் போய்ச் சாப்பிடலாம் என்று நினைத்து. பின்னர் பசியையும் மறந்தவளாய், அலுவலகத்திற்கு வருவதுபோல், 'கரெக்டாக' வந்து, போலீஸ் ஸ்டேஷனில், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெண்களுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.

அப்படியும் இப்படியுமாக ஒருநாள் உருண்டோடி விட்டது. சப் இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. மறுநாள், அவர் எப்போது வருவார் என்று, வருகிற மோட்டார் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டிருந்த உலகம்மை, அவர் ஜீப்பில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், எதிர்பாராத மகிழ்ச்சியில் எழுந்தாள். கொஞ்சம் பொறு. வந்தவரு இருக்கவங்கள திட்டி முடிச்சி அலுத்துப் போவட்டும். அப்ப போனாத்தான் காரியம் குதிரும்" என்று சொன்ன ஒரு பெண்ணின் அறிவுரையை ஏற்காமல், ஒரு துள்ளலில் படிக்கட்டுகளைத் தாவி, விசாலமான அந்த அறைக்குள் போய் "கும்பிடுறேனுங்க" என்றாள். ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்து கொண்டும், ரைட்டர் வயிற்றைச் சொரிந்து கொண்டும் அங்கே நின்றார்கள்.

சப் இன்ஸ்பெக்டர் பையன், புருவத்தை உயர்த்திக் கொண்டு "நீ நீ" என்றார். சட்டென்று பதில் சொன்னாள்:

"லோகுவுக்கு. லோகுவுக்கு வேண்டியவங்க. அய்யாவப் பாக்க வந்தேன்."

"என்னம்மா விஷயம்?"

"அதோ அவருதாங்க என்னோட அய்யா. ஏட்டய்யா இழுத்துக்கிட்டு வந்து வச்சிருக்காரு. ரெண்டு நாளா அவரு துள்ளத் துடிக்கக் கிடக்காரு."

சப் இன்ஸ்பெக்டர், கேள்விப் புருவத்தோடு பார்த்தார்.

"குட்டாம்பட்டில சாராயம் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனான். என்னால இழுக்காம வரமுடியல. ஒரே கலாட்டா. உருள்றான், ஒம்மாங்றான், ஒக்காங்றான். என்னயே போடா வாடான்னுட்டான். அப்டி இருந்தும் அடிக்காம கூட்டியாந்தேன்."

உலகம்மை எரிச்சலோடு சொன்னாள்.

"அவரு சொல்றதுல குடிச்சாங்றது மட்டும் வாஸ்தவம். மத்ததெல்லாம் அண்டப்புளுவு, ஆகாசப் புளுவுங்க!"

"ஆமா நீ லோகுவோட என்னைப் பாத்தியே. அப்போ சொல்லியிருக்கலாமே? அவரும் எங்கிட்ட சொல்லல!"

"நான் அவருகிட்ட இதச் சொல்லவே இல்ல. மெட்ராஸுக்குப் புறப்பட்டு நிக்கவர்கிட்ட அபசகுனமா எங் கதையைச் சொல்ல விரும்பல. அவரு, அவரோட சொமையையே சுமக்க முடியாம இருக்கயில், நான் என் சுமைய எப்படிய்யா தூக்கிக் குடுக்க முடியும்?"

சப் இன்ஸ்பெக்டர், அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். அவள் வார்த்தை, சத்திய ஒலியாய் முழங்குவது கண்டு, புன்னகை செய்தார். அந்தப் புன்னகை தந்த தைரியத்தில், உலகம்மை மடமடவென்று பேசினாள்: "எங்கய்யாவ மாரிமுத்து நாடார் குடுத்த கடன சாக்கா வச்சி கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு. நானும், போலீஸ் ஏழ மக்களோட தொணைவன்னு சொல்றாகளேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்டச் சொன்னேன். கோட்டுக்குள்ள அய்யா துடியாய்த் துடிச்சி கதறிக்கிட்டுக் கிடந்தாரு. என்ன வேற கெட்ட வார்த்தையில பேசுனாங்க, அதனால் இந்த அய்யா கிட்ட வந்து சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு. கோட்டுக்குள்ள நிறுத்தினவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, பட்ட போட்டார்ன்னு அய்யாவ இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. நானும் கேக்குறேன். எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும் இவரு மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்யாசம்? சொல்லுங்க எசமான்."

ஹெட்கான்ஸ்டபிள் முகத்தில் 'கலர்' மாறியது. பல்லைக் கடித்துக்கொண்டு, ஏதோ சொல்லப் போனார். சப்-இன்ஸ்பெக்டர், தனக்கு வந்த சிரிப்பையும், பேசப்போன ஹெட்கான்ஸ்டபிளையும் ஒரே சமயத்தில் அடக்கினார். உலகம்மையால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"கோட்டுக்குள்ள வச்சாரா இல்லியான்னு பக்கத்துல இருக்கவங்கள ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். இவரு ரகசியமா உண்ம தெரிஞ்சாலும் அத மாத்திச் சொல்லுவார்னு தெரிஞ்சும் சொன்னேன். கேட்டாரான்னு கேளுங்க. ஏழன்னா இளக்காரம். பணக்காரன்னா முப்பத்திரண்டு பல்லும் தார ஜாயுது."

சப் இன்ஸ்பெக்டருக்கும் லேசாகக் கோபம் வந்தது. அவள், தன் 'டிபார்ட்மெண்ட் சபார்டினேட்டை' ஓவராய் பேசுவதுபோல் தோன்றியது. கொஞ்சம் அதட்டிப் பார்த்தார்.

"நீ பேசுறது நல்லாயில்ல. அதிகாரிங்கள அனாவசியமா பேசுற. மரியாத குடுக்காம பேசுற."

"நான் சொல்றது தப்புன்னா ஒங்க காலுல கிடக்கிற பூட்ஸக் கழத்தி அடியுங்க. பட்டுக்கிறேன். ஆனால் நியாயத்துல அடிக்காதிய. சாராயம் குடிச்சதா அய்யாவ கூட்டியாந்தாரே. அவருக்கு யாரு குடுத்திருப்பான்னு விசாரிச்சாரா? காய்ச்சுனவங்களையும் பிடிச்சாரான்னு கேளுங்க."

ஹெட்கான்ஸ்டபிள் சங்கடப்பட்டார். சப்இன்ஸ்பெக்டர் உள்ளூரச் சந்தோஷப்பட்டாலும்,. அவளைக் கோபமாகப் பார்ப்பதுபோல் பார்த்தார். அவர் வேலையில் சேர்ந்து ஒரு மாதந்தான் ஆகிறது. ஆகையால் இன்னும் கெட்டுப் போகவில்லை. உலகம்மைக்கு இன்னும் ஆவேசம் நின்றபாடில்லை. லாக்கப்பிற்குள் இருந்த மாயாண்டிகூட "போதுமுழா, போதுமுழா என்றார். அவளுக்குப் போதாது போல் தோன்றியது.

"ஒங்களப் பாத்தா நல்லவங்க மாதிரி தோணுது. அதனாலதான் சொல்லுறேன். தைரியமிருந்தா மாரிமுத்து நாடார இங்கக் கூட்டியாந்து விசாரிங்க பாக்கலாம், ஏழங்கதானா ஒங்க காக்கிச்சட்டைக்குப் பயப்படணும்?"

உலகம்மை நிறுத்திக் கொண்டாள், சப்-இன்ஸ்பெக்டர், மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிவிட்டுக் கொண்டு, சிறிது யோசித்தார். பிறகு உத்தரவிட்டார்:

"ஹெட்கான்ஸ்டபின், உடனே மாரிமுத்து நாடாரக் கூட்டியாங்க."

ஹெட்கான்ஸ்டபிள் தயங்கினார். பிறகு, "நேத்து மந்திரிக்கு மாலை போட்டாருங்க" என்று அவர் காதோடு காதாகச் சொன்னார்.

சப் இன்ஸ்பெக்டர் இப்போது கத்தினார்.

"இலய எடுக்கச் சொன்னா எத்தன பேரு சாப்பிட்டான்னு எண்ணுறீர். குயிக்கா போயி கொண்டு வாரும். எனக்கு எல்லாந்தெரியும். லாக்கப்புல இருக்கவன் மேடைக்குப் போறதும் மேடையிலே இருக்கவன் லாக்கப்புக்கு வரதும் சகஜம். நமக்கு சம்பந்தமில்லாதது. 'குயிக்'."

ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக 'சல்யூட்' அடித்துக் கொண்டே புறப்பட்டார். போனவரை திரும்பக் கூப்பிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

"ஒம்மத்தாய்யா, சைக்கிள்ல போகாண்டாம். ஜீப்ப எடுத்துக்கிட்டுப் போம். ஆசாமி இல்லன்னு சொல்லிட்டு வரப்படாது. அந்த ஆளு எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் தூக்கிக்கிட்டு வாரும். பணக்காரன ஏழைங்க முற்றுகையிடுற 'கெரோவையே' சட்டவிரோதமுன்னு சொல்லும்போது. ஏழையை முற்றுகையிடுற பணக்காரனும் சட்ட விரோதிதான். விஷயம் சீரியஸ், நீரே அவனுக்குச் சொல்லிக் கொடுக்காம, மாமூலா வர்ரது மாதுரி வராமல் ஆளோடு வரணும். அண்டர்ஸ்டாண்ட்? புரிகிறதா? போங்க, குயிக். டபுலப்."

சப் இன்ஸ்பெக்டர் மாமூலான அதிகாரியல்ல. ஆகையால் 'மாமூலா' என்கிற வார்த்தைக்கு மாமூலுக்கு மேலான அழுத்தத்தைக் கொடுத்தார். உலகம்மை, அவர் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு அது , தவறு என்று நினைத்தவள் போல், கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அய்யாவிடம் போனாள். அவர். அந்த நிலையிலும் அவளைப் பெருமையோடு பார்த்து. கம்பிகளுக்கிடையே கன்னத்தைப் பதித்து, அவள் தலையைக் கோதிவிட்டார்.


ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போலீஸ் ஜீப், மாரிமுத்து நாடாரோடு வந்திறங்கியது. வழி நெடுக. நாடாரிடம், சப் இன்ஸ்பெக்டரிடம் எப்படி எப்படிப் பேச வேண்டும், அவரைப் பற்றி எப்படி எப்படி எஸ்.பிக்கு (கவர்னருக்கு நகலோடு) கம்ளெயின்ட் எழுத வேண்டும் என்று பாடஞ் சொல்லிக் கொடுத்த ஹெட்கான்ஸ்டபிள், இப்போது இறங்கும் வே” என்று லேசாக அதட்டினார்.

ஜீப்பை விட்டு இறங்கி, படிமீது ஏறிய மாரிமுத்து நாடார் உள்ளே போய்க்கொண்டிருந்தபோதே, “சப்-இன்ஸ்பெக்டர் லார், பிரமாதம். போலீஸ் ஏற்பாடு ஏ கிளாசு. மந்திரியே என்கிட்டே சொன்னார்” என்று சொல்லிக்கொண்டு, விசாலமான அறைக்குள் நுழைந்தார். உலகம்மை, தன் கைகளை நெறித்துக் கொண்டாள்.

சப்-இன்ஸ்பெக்டர். அவர் பேசியதை இக்நோர் செய்துவிட்டு. “மாயாண்டி நாடார எதுக்காவ கோட்டுக்குள்ள அடச்சிங்க?” என்று நிதானமாகவும், அழுத்தமாகவும் கேட்டார். மாரிமுத்து நாடார் எடுத்த எடுப்பிலேயே, இதை எதிர்பார்க்கவில்லை. “மந்திரி வேற ஏதும் சொன்னாருங்களா” என்பார். நாம் உடனே, “ஆமா, உங்க பெயரக் கூடக் கேட்டார், நான் தங்கமான பையன்னு சொன்னேன்” என்று பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கற்பனை செய்து கொண்ட மாரிமுத்து அடிபட்டவர்போல் மிரண்டு போனார். சப்-இன்ஸ்பெக்டர் இப்போது கடுமையாகக் கேட்டார்:

“சொல்றது காதுல விழுந்துதாங்க? எதுக்காக மாயாண்டிய மாடுகள அடச்சி வச்சதுமாதிரி அடச்சி வச்சீரு சொல்லும்!”

“நான் அப்டி ஒண்ணும் பண்ணலிங்க.”

உலகம்மை, சப் இன்ஸ்பெக்டருக்கு ஒத்தாசை செய்தாள். \"எசமான் கர்ப்பூரத்த ஏத்துறேன். அவரு மவள் சத்தியமா அப்படிப் பண்ணலன்னு அணைக்கட்டும் பாக்கலாம்.”

சப்-இன்ஸ்பெக்டர், அவளைத் தட்டிக் கேட்பார் என்று எதிர்பார்த்த நாடார் எதிர்பார்த்த்து நடக்காததால் கோபமாகப் பேசினார். "என்ன ஸார். அவள் சின்னப்பிள்ள மாதிரி பேசுறா. நீங்களும் சின்னப் பிள்ள மாதிரி சும்மா கேட்டுக்கிட்டு இருக்கீங்க?"

சப் இன்ஸ்பெக்டர் கோபத்தோடு எழுந்தார்.

"எதுய்யா சின்னப் பிள்ளத்தனம்? வயசான மனுஷன கோட்டுக்குள்ள அடைக்கது பெரிய மனுஷத்தனமோ? இந்தாய்யா, லாக்கப்பத் திற. இவர இதுக்குள்ள அடச்சி வைக்கலாம். அப்பதான் இவருக்கு பிறத்தியாரோட கஷ்டந் தெரியும். போய்யா உள்ள, நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவல இல்லை. இப்ப நான் போலீஸ்காரன். நீ ஒரு கிரிமினல் குற்றவாளி. போய்யா உள்ள இல்ல. கழுத்தப் பிடிச்சித் தள்ளணுமா?"

ஆடு கோழிகளைக் கொடுத்தே அதிகாரிகளைச் 'சரிக்கட்டிப்' பழகிப்போன மாரிமுத்து நாடார், அறுக்கப்படப் போகும் ஆடு மாதிரி, விழித்தார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் திட்டியதைவிட, அவர் திட்டுவது உலகம்மைக்கும் தெரிகிறதே என்றுதான் அதிக வருத்தம்.

சப் இன்ஸ்பெக்டர், கோபந்தணிந்தவர் போல், நாற்காலியில் உட்கார்ந்தார். மாரிமுத்து, லாக்கப் அறைக்குப் போகாமலும், வெளியே நிற்காமலும் நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசலில் நின்றார். இதுவரை இந்த வயது வரைக்கும், இப்படி நடத்தப்படாத தன்னை, 'ஒரு சின்னப்பய மவன் சின்னத்தனமா நடத்துறதில அவருக்கு ஏகப்பட்ட கஷ்டந்தான்.

சப் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்த்துக் கூப்பிட்டார்.

"நாடாரே, இங்க வாருமய்யா."

நாடார் வந்தார்.

"அந்த ஆளப்பாத்தா ஓமக்குப் பாவமா இல்ல? வயசான மனுஷன இப்படிப் பண்ணலாமா? பேசாதேயும். நான் ரகசியமா விசாரிச்சேன். நீரு பண்ணினது தப்பு. நீரு அவர அவமானப் படுத்துனது மாதிரி நான் ஒம்ம அவமானப்படுத்த விரும்பல. ரெண்டு பேரையும் விட்டுடுறேன். சமாதானமாகப் போங்க. இனிமேல் அந்தக் கிழவன் வழிக்கு நீரு போகக் கூடாது. இல்லன்னா அவருக்கு ஆறு வாரமும், ஓமக்கு ஆறு மாசமும் வாங்கித் தர முடியும். என்ன சொல்றீரு?"

மாரிமுத்து நாடார், அப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று நினைத்தார். "நீங்க என்ன சொன்னாலும் சரிதாங்க."

"ஆல்ரைட். ஒலகம்மா, நீயும் வாங்குன கடன குடுத்திடணும். மொத்தமா முடியாட்டாலும் கொஞ்சங்கொஞ்சமாக் குடுத்திடலாம்."

"சரிங்க எசமான்."

"ஆல் ரைட். மாயாண்டிய விடுய்யா. யோவ் இனிமே குடிப்பியா?"

"சத்தியமா மாட்டேன்."

"சரி போங்க."

இதற்குள், மாரிமுத்து நாடார் 'அரெஸ்ட்' செய்யப்பட்டார் என்ற செய்தி ஊரெங்கும் பரவ, வெள்ளைச்சாமி ராமசாமியோடு ஒரு பெரிய பட்டாளமே அங்கு வந்து விட்டது. பலவேச நாடாரும், 'மச்சினனைப் பார்க்க வந்து விட்டார். சப் இன்ஸ்பெக்டர் கூட, என்னமோ ஏதோ என்று கொஞ்சம் பயந்து போனார். மாரிமுத்து நாடாருக்கு அருகே, அய்யாவுடன் போய்க் கொண்டிருந்த உலகம்மையை, சைகை செய்து வரும்படி சொன்னார். அவள் அய்யாவையும் கூட்டிக்கொண்டு வந்தாள்.

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன மாரிமுத்து நாடார், கூட்டத்தைப் பார்த்ததும், தலை நிமிர்ந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் கொஞ்சம் எகிறியிருக்கலாம் என்று கூட நினைத்தார். மச்சான் பலவேசத்தைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தார். அவர் "ஒம்ம சப் இன்ஸ்பெக்டர் லத்திக் கம்ப வச்சி அடிச்சானாமே. இத விடக்கூடாது. ஹைகோர்ட் வரைக்காவது போயி ரெண்டுல ஒண்ண பாத்துடணும்" என்றார். 'அடிபடல' என்று சொன்னால்கூட, யாரும் நம்பத் தயாராக இல்லை. மாரிமுத்து நாடாரைச் சூழ்ந்து கொண்டு, போலீஸ் ஸ்டேஷனையே எரித்து விடுவதுபோல், பார்த்த கூட்டம், ஒரு கான்ஸ்டபிள் துடைப்பதற்காக எடுத்த துப்பாக்கிக்குத் தப்பர்த்தம் கொடுத்துக் கொண்டு, வேகமாக ஊரைப்பார்த்து நடந்தது.

கால் மணி நேரம் ஆனதும், உலகம்மையைப் பார்த்து "சரி நீயும் போவலாம்" என்றார் சப் இன்ஸ்பெக்டர்.

"ஒங்க உதவிய இந்தக் கட்டையில் உயிரு இருக்கது வரைக்கும் மறக்க மாட்டேன் எசமான். அஞ்சு பத்து தரக்கூடப் பணமில்ல. தெய்வம் மாதிரி நீங்க ஒங்கள மாதிரி லட்சத்துல ஒரு அதிகாரி இருக்கதனால்தான் ஜனங்களும் கட்டுப்பாடா இருக்காங்க.!" சப் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.

உலகம்மை, அய்யாவை ஆதரவோடு பிடித்துக்கொண்டு நடந்தாள், அதேசமயம், பலவேச நாடார் வந்திருப்பதைப் பார்த்தாள். அவரைப்பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். 'மகனுக்குப் பெண் கிடைப்பதற்காக மச்சினனிடம் நெருங்குகிறார். நிச்சயம் அந்த ஆளு அவரு நிலத்துல வீடு இருக்கக் கூடாதுன்னு சொல்லத்தான் போறாரு. அப்ப என்ன செய்யலாம். எங்க போறது' என்று நினைத்துக்கொண்டே, எண்ணம் இயலாமையாக, இயலாமை பெருமூச்சாக, அவள் 'ஒரே மூச்சில்' அய்யாவை ஆதரவாகப் பிடிக்கிறாளா அல்லது ஆதரவிற்காகப் பிடித்திருக்கிறாளா என்பது புரியாமல் ஊரைப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள்.