ஒரு கோட்டுக்கு வெளியே/கூண்டுக்குள் சென்று…

10. கூண்டுக்குள் சென்று…

லாக்கப்” அறைக்குள், மாயாண்டியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வெளியே பூட்டுப் போட்டுக் கொண்டே, பின்னால் வந்து நின்ற உலகம்மையைப் பார்த்து, "ஊர்ல எதித்துப் பேசினது மாதிரி இப்பப் பேசு பாக்கலாம்? ஒன்ன மொட்ட அடிக்காட்டாக் கேளு” என்று கொக்கரித்தார் ஹெட்கான்ஸ்டபிள். புகார் செய்தவளையே மடக்கிப் போட்ட ஹெட்கான்ஸ்டபிளின் சிருஷ்டி விநோதத்தைக் கண்களால் மெச்சிக்கொண்டே, ரைட்டர், அவரைப் பார்த்தார். ஹெட்கான்ஸ்டபிள் விளக்கினார்:

  • இவன் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்கான். அப்பன அடக்க வக்குல்லாம இவா ஆடுறா. ஒருவேள இவளும் குடிச்சிருக்காளோ என்னவோ? ஏய் ஊது பாக்கலாம்."

உலகம்மை சற்று விலகிப் போய் நின்று கொண்டாள். ரைட்டர், 'புரபஷனலாய்'ப் பேசினார்:

"டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டிங்களா?"

"வாங்காம வருவனா? ஏய் ஒன்பேரு என்ன? உலவா? இங்க நிக்கப்படாது. வெளில போ மொதல்ல."

"அய்யாவ எப்ப விடுவிங்க?"

"ஆறுமாசம் வாங்கிக் குடுக்காம விடப்போறதுல்ல. அப்பதான் ஒன் வாயி அடங்கும். சரி சரி போ."

ரைட்டர் இழுத்து இழுத்துப் பேசினார்:

"இங்கயே இருக்கட்டுமே."

ரைட்டர் தன்னைப் பார்த்துச் சிரித்த தோரணை, உலகம்மைக்குப் பிடிக்கவில்லை . போலீஸ் நிலைய 'ரகசியங்களைப் பற்றித் தப்பாகவோ, சரியாகவோ ஒருமாதிரி கேள்விப்பட்டிருந்தாள். என்ன தான் ஹெட்கான்ஸ்டபிள் மோசமானவராக இருந்தாலும் 'ரைட்டருக்கு’ப் பயந்துதான், தன்னை விரட்டுவதாக அவளுக்குத் தெரிந்தது.

உலகம்மை. அய்யாவைப் பார்த்தாள். அவர், ஏற்கனவே செத்துப்போனவர் போல், தலையில் கையை வைத்துக்கொண்டு கம்பிக்கிராதியில் , சாய்ந்து கொண்டு பரிதாபமாக நின்றார். உலகம்மைக்கு நெஞ்சை அடைத்தது.

  • எதுவும் வேணுமாய்யா?"

"ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னதை நீ கேட்டுருந்தா இப்டி ஆவாது."

"எல்லாத்துக்கும் கடவுள் இருக்கான். கோட்டுக்குள்ள இருக்கையில தண்ணி தண்ணின்னு தவிச்சீர. நான் பாவி மறந்துபோயி இங்க வந்துட்டேன். தண்ணி குடிச்சீரா? யாரு குடுத்தா?"

"ராமசுப்பு தந்தான். இன்னும் தாகம் தீரல."

ஹெட்கான்ஸ்டபிள் குறுக்கே புகுந்தார்.

"பட்ட போட்டா தாகமாகத்தான் இருக்கும். ஹி ஹி."

"ஒமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கப்போன உலகம்மை, வீரியத்தைவிட காரியம் முக்கியமானது என்பதை உணர்ந்து, பேசாமல் நின்றாள். இதர நான்கு பேரோடு நின்ற மாயாண்டியை, அந்த நால்வரில் ஒருவன், "தாத்தா, இந்தப் பக்கமா வந்து உட்காரும்" என்று ஆதரவோடு சொன்னான், அப்படிச் சொன்னதால் திருப்திப்பட்டாள் உலகம்மை. அதேசமயம் அய்யாவைப் பார்த்துக்கொண்டு நின்றால், முதல்பாடை தனக்குத்தான் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள். போலீஸ் காம்பவுண்டுக்குள் ஒரு வேப்ப மரத்தடியில் ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். உலகம்மை, அவர்களில் ஒருத்தியானாள்.

"நீ யாரும்மா ?"

"ஊரு குட்டாம்பட்டி. பேரு உலகம்மா. பெரிய பேருதான். அய்யாவ பட்ட போட்டார்னு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. சாராயங்குடிச்சா ஜெயிலுல போடுவாங்களோ?"

"மொதல் தடவயா?"

"பிடிபடுறது மொதல் தடவதான்."

"சப் இன்ஸ்பெக்டர் வருவாரு. காலுல கைல விழ். விட்டுடுவாரு."

"அவரு எப்ப வருவாரு?"

"இன்னிக்கும் நாளைக்கும் மந்திரிகூட இருப்பாரு. நாளக் கழிச்சிதான் கெடைப்பாரு." "அது வரக்கிம் எங்கய்யா அதுலதான் இருக்கணுமா?"

"நீ யோகக்காரி. எங்க வீட்டுக்காரரு நாலுநாளா இருக்காரு. இங்க வாரது லேசி. போறதுதான் கஷ்டம்."

"ஆமா இங்க எப்பவாவது பணக்காரங்க வாரதுண்டா ?"

"வருவாங்க, சிபாரிசுக்கு வருவாங்க.."

"குடிச்சவனுக்கு ஆறு மாசமுன்னா குடிக்க வச்சவனுக்கு எத்தன மாசம்?"

"ஒனக்கு வயசு எவ்வளவு?"

"இந்த புரட்டாசியோட பத்தொம்பது முடியுதுன்னு அய்யா சொன் னாரு."

சகஜமாகவும். சரசமாகவும் பேசிக்கொண்டிருந்த பெண்கள். தங்களுக்குள் 'தொழில் விவரங்களை' பேசத்துவங்கினார்கள். உலகம்மைக்கு முதலில் புரியவில்லை , அது புரியத் துவங்கியதும், அந்த இடத்தைவிட்டு புறப்படத் துவங்கினாள். அய்யாவுக்கு டீ ரொட்டி வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்தவள் போல், லாக்கப் அறைப்பக்கம் போனாள், மாயாண்டியோ, முதன்முறையாக, கரடு முரடில்லாத தரையில் படுத்த 'சுகத்தில்' குறட்டை விட்டுத் தூங்கினார். 'ஒன்றும் ஓடாதபோது, எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது. கடவுளே வந்தாலன்றிக் கதியில்லை என்ற சந்தர்ப்பம் வரும்போது, ஏற்படுமே பெருந்தூக்கம்' அது இப்போது மாயாண்டியை அரவணைத்துக் கொண்டது.

உலகம்மை, சிறிது நேரம் அங்கேயே நின்றாள். ரைட்டர் பார்வை, பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பார்வை மாதிரி இருந்தது. வெளியே வந்த உலகம்ழை அந்தப் பெண்கள் பக்கம் போனாள். அவளை அந்த சந்தர்ப்பத்தில் விரும்பாதவர்கள் போல், பேசிக் கொண்டிருந்த அவர்கள், பேச்சை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தார்கள்.

உலகம்மை போலீஸ் காம்பவுண்டிற்கு வெளியே வந்தாள். லேசாகப் பசியெடுப்பதுபோல் தோன்றியது. நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த சோதனை, இப்போது சாதாரணமாகத் தெரிவதைப் பார்த்து, அவள் ஆச்சரியப்பட்டாள். மெள்ள நடந்தாள். பஸ் நிலையத்திற்கு அருகே வந்தாள். இரவு ஒன்பது மணி இருக்கும். நல்லவேளை, அவளிடம் மூன்று ரூபாய் இருந்தது. முந்தானிச் சேலையில் முடிச்சி'ப் போட்டு வைத்திருந்தாள். டீக்கடைப் பக்கமாகப் போனாள். பிறகு 'நம்ம நிலம இப்டி ஆயிட்டே. அம்மா மட்டும் இருந்திருந்தா' என்று கொஞ்சம் சத்தமாகவே புலம்பிவிட்டு, அங்கே இருந்து, தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக பஸ் நிலையத்திற்குள் வந்தாள்.

அவளால், தன் பார்வையை நம்ப முடியவில்லை. கண்களை அழுந்தத் தேய்த்து விட்டுக்கொண்டு, மீண்டும் பார்த்தாள்.

லோகு, கையில் ஒரு ‘சூட்கேஸுடன்' நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் திரும்பிப் போய்விடலாமா என்றுகூட உலகம்மை நினைத்தாள். 'ஏற்கனவே அவரிடம் பேசியதால் படும் பாடு போதும்'. ஆனால் அவளால் திரும்பி நடக்க முடியவில்லை . 'பராக்குப் பார்ப்பவள் மாதிரி, அங்கேயும் இங்கேயுமாய் நடந்து, கடைசியில் பஸ்ஸுக்குள் இருப்பவர் தங்கத்துரை சின்னய்யாதானா என்று பார்ப்பதற்குப் போகிறவள் போல், தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு தன்னைமீறி அவன் முன்னால் வந்து நின்றாள். அவன் பார்வை எங்கேயோ இருந்தது. அவள் லேசாக இருமிக்கொண்டாள்.

ஏறிட்டுப் பார்த்த லோகு, அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான். நழுவி விழப்போவதுபோல் இருந்த சூட்கேயை லேசாகத் தூக்கியபடி ஆட்டி, அதைப் பிடித்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மௌனம் மொழியாயிற்று. விழிகள் வாயாயின. உலகம்மைக்கு, அவன் மார்பில் தலைசாய்த்து அழவேண்டும் போலிருந்தது. அவள், அவன் மனைவியாக அங்கே வந்து நிற்பது போலவும், இருவரும் சென்னைக்குப் புறப்படுவது போலவும் கற்பனை செய்து கொண்டாள். பின்னர், வேறு பக்கமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டாள். நேரத்தை வீணாக்க விரும்பாதவன் போல், லோகுதான் பேசப் போனான். பேச்சு வரவில்லை. இறுதியில் எப்படியோ வந்தது.

"சரோஜாவா?"

"என் பேரு உலகம்ம."

"நீ ஊருக்கு உலகம்மையா இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதும் சரோஜாதான்."

"எங்க போறீங்க?" "மெட்ராஸுக்கு. இங்க பஸ் ஏறி தென்காசி போகணும். தென்காசில இருந்து ரயிலு."

"கடைசியிலே எங்க சரோசாக்காவ கைவுட்டுட்டிய."

"ஒன்ன மனைவியாய் நினச்ச பிறகு இனிமே எந்தப் பொண்ணோடேயும் நல்லபடியாக் குடும்பம் நடத்த முடியுமாங்றது சந்தேகந்தான்!"

"சும்மாச் சொல்றீங்க. பட்டணத்துக்காரர் வார்த்த கிராமத்தோட சரி. நினைக்கமாட்டீய!"

"அதுவுஞ்சரிதான். மறந்தால்லா நினைக்கதுக்கு? நீதான் மறந்துடுவ."

"நெனச்சால்லா மறக்கதுக்கு?"

அவன் முகத்தைச் சுழித்தான். அவள் வேண்டும் என்றுதான் பொங்கி எழுந்த இதயப் பிரவாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள். அவனை, அவன் பொருட்டு, அதிகமாகத் தன்னிடம் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதனால்தான் 'லாக்கப்பில்' இருக்கும் அய்யாவைப் பற்றிக்கூட அவள் சொல்ல விரும்பவில்லை. அவளுக்காக, அவன போராட வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் ஏழெட்டுத் தங்கைகள் அவனை நம்பியிருக்கும்போது, அவள் ஒன்பதாவது தங்கை மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும். அது முடியாததுதான். அதனால், அவனிடம் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் அவளைச் சுற்றி, அவன் கட்டிவிட்ட பிணைப்புக் கயிற்றின் முனையை, அவள் காட்டிக் கொள்ளலாகாது. இருவருக்குமே தர்மசங்கடமான நிலைமை. அதைப் போக்குவதுபோல், சப்-இன்ஸ்பெக்டர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். லோகுவைப் பார்த்துவிட்டு 'ஹலோ' என்றார். ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

"என்ன மெட்ராஸுக்கா?"

"ஆமாம். ரொம்ப பிஸியா?"

"அத ஏன் கேக்றீங்க. மினிஸ்டர் டி.பி.யில் இருக்கார்." உலகம்மைக்கு ஒரு சந்தேகம்.

"மந்திரிக்கு டி.பி.யா? அட கடவுளே, அப்போ நாளக்கி எங்க ஊருக்கு வர மாட்டாரா?" மற்ற இருவரும் சிரித்தார்கள். உலகம்மை, தன் பட்டிக்காட்டுத் தனத்தைக் காட்டிவிட்டதற்கு வருந்துபவள் போல், முகத்தைச் சுழித்தபோது அதைப் புரிந்து கொண்டு, அந்தக் காம்ப்ளெக்ஸை' விலக்கும் விதத்தில், லோகு விளக்கினான். உலகம்மை, லோகுவைப் பார்த்துக் கேட்டாள் :

"ஐயாதான் இன்ஸ்பெக்டரா?"

"ஆமா."

"சப்-இன்ஸ்பெக்டர்னு சொல்லுங்க. சர்க்கிள் காதுல விழப்போவுது."

"நான் எப்பவாவது கஷ்டம் வந்தா ஐயாகிட்ட வருவேன்னு சொல்லுங்க. ஆனால் நியாயத்துக்குத்தான் போவேன்."

"என் பேர சொல்லிக்கிட்டுப்போ. நிச்சயம் உதவுவார். இல்லையா ஸார்?"

"ஷுர், ஓ.கே. டாடா."

சப்-இன்ஸ்பெக்டர் போய்விட்டார். மீண்டும் மௌனம். உலகம்மை மொத்தமாக ஒரே நேரத்தில் பேசிவிடுவதுபோல் இனிமேல் அப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பம் கிடைக்காதது போல் பேசினாள்.

"எங்க சரோசாக்காவ பண்ணியிருக்கலாம். நீங்க செய்றது நல்லா இல்ல. போதாக்குறைக்கி என் பேர வேற இழுத்து விட்டுட்டீங்க. ஊர்ல ஒரே சண்ட." "அதனாலதான் சப் இன்ஸ்பெக்டரப் பற்றிக் கேட்டியா? கலாட்டா பண்ணுறாங்களா? சொல்லு. நொடியில கம்பி எண்ண வைக்கலாம். என்ன நினைச்சிட்டாங்க?"

அவன் துடித்த துடிப்பில், அவள் கிறங்கிப் போனாள். சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள். கூடாது. கூடவே கூடாது. அவளுக்கு ஏனோ, மீண்டும் அழ வேண்டும் போலிருந்தது. சமாளித்துக்கொண்டு சமாதானப்படுத்தினாள்.

"அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது. நீங்க பண்ணுன கலாட்டாவுல நான் ஒங்கள, ஒங்கள வச்சிக்கிட்டு' இருக்கதா கூடப் பேசுறாங்க, அவ்வளவுதான்." “வச்சிக்கிட்டு' என்ற வார்த்தை அவனுக்கு இன்பத்தையும், அவளுக்குப் பேரின்பத்தையும் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்து, புன்னகை செய்து கொண்டார்கள். ஆண்டாண்டுக் காலமாகக் குடும்பம் நடத்திப் பிள்ளை பெற்று, பேரன் பேத்திகளை எடுத்தவர்கள் போல் சிரித்துக் கொண்டார்கள். அந்த எண்ணத்தை அவள் வளாவிட விரும்பாதது போல் பேசினாள்.

"சரோசாக்காவதான் வேண்டான்னுட்டிங்க."

"நான் வேண்டான்னோ பிடிக்கலன்னோ சொல்லல. நீ ரகசியமா வந்து பார்த்ததக்கூடச் சொல்லல. ஒரு பொண்ண பிடிக்கலன்னு வெளிப்படையா சொல்றது மிருகத்தனமுன்னு எனக்குத் தெரியும். அதனால பொதுப்படையா இப்பக் கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன்."

"எப்ப பண்ணிப்பீங்க?"

"கடவுளுக்குத்தான் தெரியும். ஏற்கனவே ஒன்கிட்ட சொன்னது மாதிரி நான் கொம்பில் பூச்சூடிய கிடா. எப்ப கோவிலுல வெட்டினாலும் சரிதான். ஆனால் என்னப் பொறுத்த அளவுல கல்யாணம் நடந்து. நடந்த வேகத்திலேயே முடிஞ்சி போச்சி! இனிமேல் நடந்தாலுஞ் சரி தான். நடக்காட்டாலுஞ் சரிதான். சொல்லுறது புரியுதா சரோஜா?"

உலகம்மை, அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் உதடுகள் துடித்தன. இமைகளில் நீர்தேங்கி நின்றது. அவன் சொன்னது புரிந்தது போலவும், புரியாமல் இருந்திருந்தால் தேவலாம் என்பது போலவும், அவள், அவனை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு, அவனையும் ஏங்க வைத்து, இறுதியில் மௌனமாகக் கண்ணீர் விட்டாள்.

அவள் கண்ணீரைத் துடைத்துவிடத் துடித்த லோகு, கைகளைப் பின்பக்கமாகக் கொண்டு போய்க் கட்டிக் கொண்டான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. அவன் கண்களும், இப்போது நீரைச் சுமந்தன, கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

"ஒனக்குப் படிக்கத் தெரியுமா?"

"ஆறு வரக்கிம் படிச்சேன் எளுத்துக்கூட்டி படிச்சிடுவேன்."

அவன் மடமடவென்று ஒரு தாளில் எழுதினான். பிறகு "இதுதான் என் அட்ரஸ். என் உதவி எப்பவாவது தேவன்னா எழுது" என்று சொல்லிவிட்டு, தாளை அவளிடம் கொடுத்தான். அவன் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, பிறகு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இதற்குள் பஸ் டிரைவர் ஹாரன் மூலம் கத்தினார்.

"வரட்டுமா சரோஜா?"

"ஒரு தடவயாவது உலகம்மான்னு சொல்லுங்க."

"வரட்டுமா உலகம்மா, இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ரயில பிடிக்கலாம். வரட்டுமா? பேசேன் சரோஜா."

பஸ் நகரத் துவங்கியதால், அவன் அதற்குள் முண்டியடித்து ஏறிக் கொண்டிருக்கையிலேயே, அவன் கையாட்டி விடைபெறு முன்னாலேயே பஸ் போய்விட்டது.

"கடைசி பஸ்ஸா கடைசி சந்திப்பா" என்று தனக்குக் கேட்கும்படி சொல்லிக் கொண்டே, பல்போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாள் உலகம்மை.