ஒரு கோட்டுக்கு வெளியே/ஒடுங்கி நின்று …

14. ஒடுங்கி நின்று…

புயலுக்குப்பின் அமைதி வருமோ, வராதோ, உலகம்மைக்கு. அந்த அமைதிக்குப் பிறகு, புயல் வந்தது. ஒரு வாரம் வரைக்கும் ஒன்றுந் தெரியவில்லை. பின்னர், ராத்திரி வேளையில் அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவள் வீட்டுக் கூரையில் திடீர் திடீரென்று கற்கள் விழுந்தன. இடுப்பில் எப்போதும் இருந்த கத்தியுடன் மாயாண்டி சொல்வதைக் கேட்காமல் அவள் வெளியே போவாள். யாருங் கிடையாது, எதுவும் கிடையாது.

உலகம்மை, ஊரில் சொல்லாமல் பொறுத்துக் கொண்டாள். ஆனால் நாளுக்கு நாள் கற்கள் அதிகமாக விழத் துவங்கின. ஒரு கல், ஏற்கனவே ஓட்டையாய்க் கிடந்த கூரை வழியாக உள்ளே விழுந்தது. மாயாண்டியின் தலைக்கும் அதற்கும் அரை அங்குலந்தான் இடைவெளி. உலகம்மையும் ஒரு கல்லை வைத்துக்கொண்டு, வெளியே உட்கார்ந்தாள். கல் விழவில்லை. கண்ணயர்ந்து வீட்டுக்குள் போய் படுக்கும் போது. உடனே சரமாரியாகக் கற்கள் விழும். முதலில் கூரையில் மட்டும் விழுந்த கற்கள், போகப் போகச் சுவர்களிலும், வாசல்பக்கமும் விழுந்தன. 'ஊராங்கிட்ட பிச்சக்காரி மாதுரி சொல்லாண்டாம்' என்று தீர்மானித்தாள். சொல்லப்போன அய்யாவையும் அடக்கிவிட்டாள்.

வீட்டுக்குள் இப்படி என்றால், வெளியேயும் அப்படித்தான். அவள் சட்டாம்பட்டி வயக்காட்டில்தான் வேலை பார்த்து வந்தாள். அவள் போகும்போதும், வரும்போதும், மாரிமுத்து நாடாரின் 'கான்ஷியன்ஸ் கீப்பர்' பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் ஆபாசமாகச் சினிமாப் பாட்டுக்களைப் பாடத்துவங்கினார்கள். ஆபாசமில்லாத பாடல்களை 'எடிட்' செய்தும் பாடினார்கள்.

"மெதுவா மெதுவாத் தொடலாமா - உன்
மேனியிலே கை படலாமா" என்று ராமசாமியும்,
"மெதுவா மெதுவா விழலாமா - உன்

மேலே மேலே விழலாமா"
என்று வெள்ளைச்சாமியும், பாடும் கவிஞர்களாக மாறினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் உலகம்மை போவதைக் கண்டு, ஒரு நாள், "இன்னிக்கு அவா எத்தன பேருகூடல படுத்திருப்பா" என்று ராமசாமியும், அதற்கு வெள்ளைச்சாமி "பத்துப் பேருட்ட போயிருப்பா. பைத்தஞ்சு அம்பது ரூவா" என்றும் லாவணி போட்டார்கள்.

உலகம்மை பதிலுக்கு ஜாடையாகப் பேசலாமா என்று பார்த்தாள். காறித்துப்பலாமா என்று நினைத்தாள். பிறகு "சந்திரனப் பாத்து நாயி குலைச்சுட்டுப் போவட்டுமே" என்று நினைத்துக்கொண்டு, பேசாமல் போவாள்.

அய்யாவிடம்கூட பலநாள் சொல்லவில்லை . இறுதியில் அவரிடம் சொல்லிவிட்டாள். "காறித் துப்பட்டுமா?" என்று யோசனை கேட்டாள். அவரோ “கூடாது. நாம சொல்றதுதான் கடைசில நிக்கும். ஏழ சொல் இந்த மாதிரி விஷயத்தில் தான் அம்பலமேறும். குத்தம் எப்பவும் ஒரு பக்கமாகவே இருக்கணும். நாமளும் குத்தம் பண்ணக் கூடாது" என்று சொல்லிவிட்டார்.

விஷயம் அத்தோடு நிற்கவில்லை.

ஒருநாள் பலவேச நாடார், அவள் வீட்டுப்பக்கமாக நின்றுகொண்டு "மாயாண்டி, நெலம் எனக்கு வேணும். வீடு கட்டப்போறேன். பதினைஞ்சு நாளையில நெலத்த தராட்டா நானே எடுத்துக்கிடுவேன்" என்று குரலே கொடுத்தார். உலகம்மையும் "முப்பது வருஷமா இருக்கிற பூமி. சட்டப்படி நமக்குச் சொந்தமுன்னாலும் காலி பண்ணிடுறோம். ஆனால் பதினைஞ்சி நாளுல முடியாது. ஒரு வருஷத் தவண வேணுமுன்னு சொல்லுவய்யா" என்று அய்யாவுக்குச் சொல்வது போல், பலவேச நாடாருக்குச் சொன்னாள்.

பலவேச நாடார், அப்போதே கூரையைப் பிய்த்து எறிந்து விடலாமா என்று நினைத்தார். பிறகு எதுக்கும் "அத்தாங்கிட்ட (மாரிமுத்து) கேட்டுக்குவோம்" என்று நினைத்து, "தேவடியாச் செறுக்கியவளுக்கு திமிரப்பாரு. எங்கப்பன் சொத்து. அவருக்கா இவா பொறந்திருக்கா?" என்று வழி முழவதும் சொல்லிக்கொண்டே போனார்.

சில நாட்கள் சென்றன. இப்போதுதான் உச்சக்கட்டம் வந்தது.

உலகம்மையின் வீடு, ஊருக்கு வடகோடியில் இருந்தது. கூம்பு மாதிரி இருந்த அந்தக் குடிசையின் நான்கு பக்கமும் நிலம் வெறுமனே கிடந்தது. வீட்டில் இருந்து. எந்தப்பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.

அந்த வீட்டுக்குக் கிழக்கே இருந்த நிலம் பலவேச நாடாருடையது. அந்த நிலத்தின் 'பொழியை' பலவேசம் பனை ஓலைகளால் செருவை' வைத்து அடைத்தார். மேற்குப் பக்கத்து நிலம், படி ஏஜெண்ட் ராமசாமியுடையது. அவன், அதில் வேலிக்கரையான் செடிகளை வைத்தான். உலகம்மை அதையும் மீறி நடக்கக்கூடாது என்பதற்காக, 'கறுக்கு மட்டைகளை' வைத்ததோடு, கருவேல மர முட்களையும் கொண்டு வந்து போட்டான். தெற்குப் பக்கத்து நிலம், பிராந்தனுடையது. அவன் சார்பில் மாரிமுத்து நாடார், மூன்றடி நீளச் சுவரைக் கட்டி, அதற்குமேல் சில முட்கம்பியை வைத்து, அதன் இரண்டு பக்கத்தையும் சுவரையொட்டி இருபக்கமும் நட்ட கம்புகளில் கட்டிவிட்டார். ஆக உலகம்மை மூன்று பக்கமும் போக முடியாது. ஊரில் என்ன நடக்கிறது என்று பார்க்கவும் முடியாது. 'ஏன் இப்படி' என்று கேட்கவும் முடியாது. அவர்கள் பூமி. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

வடக்குப் பக்கத்தில் நிலம் கிடையாது, மேற்குப் பக்கத்து நிலமும் கிழக்குப் பக்கத்து நிலமும் ஒன்றாகச் சேர்ந்த முக்கோணத்தின் முனைமாதிரி இருந்த ஒற்றடிப்பாதை அது. மூன்றடி அகலம் இருக்கும். ஐம்பதடி தாண்டியதும், ஒருவருடைய தோட்டம் வரும். தோட்டத்திற்கு அதன் சொந்தக்காரர், கிழக்கே இருந்தோ, தென்மேற்கிலிருந்தோ வருவார். ஆனால் உலகம்மை இப்போது அந்த வழியாகத்தான் நடந்தாக வேண்டும். மேற்குப் பக்கத்தின் வடகிழக்குப் பகுதியும், கிழக்குப் பக்கத்தின் வடமேற்குப் பகுதியும் அடைக்கப்பட்டு விட்டதால், ‘எமர்ஜன்ஸி எக்ஸிட்டாக' இருந்த அந்த ஒற்றையடிப்பாதைதான் இப்போது ஒரே பாதை. அதன் வழியாக அவள் நடந்து அதை அடுத்திருக்கும் தோட்டத்துச் சுவரில் ஏறி. தோட்டத்தின் வரப்பு வழியாக நடந்து, கிழக்கே இருக்கும் புளியந்தோப்புக்கு வந்து அதற்குக் கிழக்காக இருக்கும் இன்னொரு தோட்டத்திற்குப் போய், அதை ஒட்டியுள்ள 'யூனியன்' ரோடில் மீண்டும் மேற்கே நடந்தால், அவள் ஊருக்குள் வர முடியும்.

உலகம்மை, எட்டுத் திசைகளில் ஏழு அடைபட்டுப் போனாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தாள்.

உலகம்மை அயராததைக் கண்ட, மாரிமுத்து - பலவேச நாடார்கள் முதலில் அசந்தார்கள். "பயமவா கோலத்துக்குள்ள பாஞ்சா நாம குடுக்குக்குள்ள பாய மாட்டோமோ?"

பாய்ந்தார்கள்.

கேட்பாரற்றும், நடப்பாரற்றும் கிடந்த அந்தப் பாதையில், முதலில் சின்னப் பிள்ளைகளை வைத்து மலங்கழிக்கச் சொன்னார்கள். இரவில் மாரிமுத்து கோஷ்டியின் ஆட்களும், இளவட்டங்களும் அங்கே 'ஒதுங்கினார்கள்.'

உலகம்மை ஒதுங்கி ஒதுங்கிப் போனாள், அப்படி ஒதுங்கிப் போன ஒருமாத காலத்தில், அந்தச் சின்ன இடம் தாங்க முடியாத அளவுக்கு அசிங்கமாயிற்று.

பொந்துக்குள் அடங்கிய பெருச்சாளியை 'மூட்டம் போட்டால்' புகை தாங்காமல், அது வெளியே வருவது போல், அவளும் ஊராரிடம் முறையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

'வழக்குப் பேசி' பைசல் செய்த அய்யாவு நாடாரைப் பார்த்தாள். ஏற்கனவே, மாரிமுத்து நாடாரிடம் குட்டுப்பட்ட அவர் 'பார்க்கலாம்' என்றார். பார்க்கலாம் என்றால் 'மாரிமுத்து நாடாரைப் பார்த்து கலந்த பிறவு பார்க்கலாம்' என்று அர்த்தம். "ஊரைக் கூட்டுங்க மாமா" என்று அவள் சொன்னதற்கு, "நீநெனச்சா கூட்டணுமா" என்று எதிர்க்கேள்வி கேட்டார். அப்படிக் கேட்டதை, உடனே மாரிமுத்து நாடாரிடம் சொல்ல வேண்டும் என்றும் துடித்தார். உலகம்மை, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, பொதுப்பாதையிலே இப்டி 'இருக்க'லாமா?" என்று முறையிட்டாள். அவரோ "அவனவன் தாசில்தார பாக்கதுக்கும் கலெக்டர பாக்கதுக்கும் நேரமில்லாம கிடக்கான். நீ அந்த அசிங்கத்தப் பாக்கச் சொல்றியாக்கும்?" என்று சீறினார். அவள் கிராம முன்ஸிப்பைப் பார்த்தாள். வீட்டு வாசலில் 'பழி' கிடந்தாள். தலையாரி, அவர் சார்பில் வந்து மிரட்டினான். "ஒனக்கு வேற வேல கெடயாதா? அய்யா என்ன பண்ணுவாரு?"

உலகம்மை, மாரிமுத்து நாடாரின் சின்னையா மவனான பஞ்சாயத்துத் தலைவரையும் விட்டு வைக்கவில்லை. அவரோ பட்டுக் கொள்ளவில்லை. அதோடு அவர் 'லெவலில் பேசக்கூடிய விவகாரமாக அதுபடவில்லை . உலகம்மை, கிராம சேவக்கைத் தேடிப் பார்த்தாள். ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வரும் அவரும், அவள் கண்களுக்கு அகப்படவில்லை .

'என்ன பண்ணலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பஞ்சாயத்து அலுவலகம் முன்னால், ஜீப் வந்து நின்றது. பஞ்சாயத்து யூனியன் கமிஷனரை அவளுக்குத் தெரியும். குட்டாம்பட்டியில் நடந்த ஒரு விழாவில் "சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசியதைக் கேட்டிருக்கிறாள். அன்றைக்கும் ‘என்வரன்மென்ட் வீக்கை' எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பதற்காக, பஞ்சாயத்துத் தலைவரைப் பார்க்க வந்தார். உலகம்மை, நேராக அவரிடம் போனாள்.

"கும்பிடுறேன் ஸார். என் வீட்டுக்கு வடக்க இருக்க ஒரே பாதையிலயும் வேணுமுன்னு அக்கிரமமா அசிங்கமாக்குறாங்க. ஒரே நாத்தம். யாருகிட்டல்லாம் சொல்லணுமோ அவங்ககிட்டெல்லாம் சொல்லியாச்சு. ஒண்ணும் நடக்கல. அய்யாதான் எதாவது செய்யணும்."

பெரிய ஆபீசரிடம், இந்தச் சின்ன விஷயத்தைச் சொன்னதற்காக, சுற்றி இருந்த கிராம சேவக், கணக்கப்பிள்ளை முதலிய பிரமுகர்கள் சிரித்தார்கள். அவளைப் பைத்தியம் மாதிரியும் பார்த்தார்கள்.

உலகம்மை இப்படிப் பேசுவாள் என்று பஞ்சாயத்துத் தலைவர் எதிர்பார்க்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டார். கமிஷனரும், அசந்து போனார். 'கண்டுக்காமலும் இருக்க முடியாது. கலெக்டர் தப்பித்தவறி வந்தா அவருகிட்டேயும் சொல்லுவாள். அந்த மனுஷனும் இத பெரிய விஷயம் மாதிரி கேப்பான். அப்புறம் இதுக்குன்னு ஒருபைல் போடணும். ஆகையால் ஆணையாளரான கமிஷனர் சிந்திக்காமலே வேகமாகப் பேசினார்.

"தலைவரே, இந்தப் பொண்ணு சொன்னத பாத்தியரா?"

"இன்னும் பாக்கலங்க. நாளைக்குப் பாத்துடுறேன்."

"உடனே பாத்துடணும். இப்படி இருக்கது தப்பு. பூச்சி கிருமி வரும். கிருமி வந்தா ஜுரம் வரும். ஜூரம் வந்தா தப்பு. நம்ம அரசாங்கம் அதனாலதான் சுத்துப்புறத்த சுகாதாரமா வைக்கச் சொல்லுது. இதுக்காக பல லட்சம் ரூபாய் பட்ஜெட்ல ஒதுக்கி இருக்காங்க."

உலகம்மைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"ஐயா வந்து ஒரு நட பாத்திடுங்களேன்."

பஞ்சாயத்துத் தலைவர் கமிஷனரைப் பேச விடாமல் பேசினார்.

"நான்தான் நாளக்கி வந்து பாக்கேன்னு சொல்லியிருக்கேன." கமிஷனர். தலைவருக்குத் தலையாட்டினார். பிறகு இருவரும், இன்ன பிறரும், யூனியன் ஜீப்பில் ஏறி, மாரிமுத்து நாடார் வீட்டுக்குப் போனார்கள். அங்கே கோழிக்கறியோடு சாப்பாடு.

'நாளை வரும்' என்ற நம்பிக்கையோடு உலகம்மை வீட்டுக்குப் போனாள்.

'நாளை' வந்தது. பஞ்சாயத்துத் தலைவர் வரவில்லை . மறுநாளும் வரவில்லை . மறுவாரமும் வரவில்லை.

உலகம்மை, அவரைப் பார்க்க நடையாய் நடந்தாள். ஒருநாள் வயக்காட்டு வேலைக்குக்கூட போகாமல், காத்துக் கிடந்தாள். வெள்ளைச்சாமியும், ராமசாமியும் இளக்காரமாகச் சிரித்துக் கொண்டே. தலைவர் வீட்டு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, உலகம்மை உருவத்தை ஒடுக்கிக்கொண்டு, வெளியே நின்று கொண்டிருந்தாள்.

காலையில் போன அவளுக்கு மாலையில் 'தரிசனம்' கிடைத்தது. வெளியே போய்விட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தலைவர், வீட்டுக் குள்ளிருந்து எட்டிப் பார்த்தார். உலகம்மை, ஒரு கும்பிடு போட்டுக் கொண்டாள்.

"வந்து பாக்கேன்னு சொன்னியரு, வரலிய மச்சான்."

தலைவர் எகிறினார்:

"சொன்னா சொன்னபடி வரணுமா? ஒன் வேலைக்காரனா நான்?" "வேலைக்காரர் இல்ல. எனக்குஞ் சேத்துத் தலைவரு."

"கிண்டல் பண்றியா?"

"கிண்டல் பண்ணல மச்சான். என்னால தாங்க முடியல. வந்து பாத்தாத் தெரியும்."

உலகம்மை அவளே வெட்கப்படும் அளவிற்குக் கேவிக்கேவி அழுதாள். உலகத்துப் பாவ மல மூட்டைகள், அந்த நிர்மலத் தலையில் வந்து அழுத்தும் சுமை தாங்க மாட்டாது. அதை இறக்கும் வழியும் தெரியாது. கலங்கிப்போன குளம் போல, உள்ளக்குளம் கண்ணணைகளை உடைத்துக்கொண்டு, அருவிபோல் பொங்கியது. அரசியலில் அனுபவப்பட்டு, பல 'அழுகைகளைப் பார்த்த தலைவருக்கு. அவள் அழுகை ஆச்சரியத்தை அளிக்கவில்லை . அவரே, இப்படி அழுதிருக்கிறார். ஆகையால் அவள் அழஅழ, அவருக்குக் கோபம் கூடிக்கொண்டே வந்தது.

"இந்தா பாரு. விளக்கு வைக்கிற சமயத்துல நீலி மாதிரி அழாத."

"என்னால தாங்க முடியல மச்சான். ஒன்னுந் தெரிய மாட்டக்கு."

"சட்டாம்பட்டிக்குப் போவமட்டும் தெரிஞ்சுதோ?"

பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிவிட்டு, ஏன் சொன்னோம் என்பது மாதிரி உதட்டைக் கடித்தார். இதுவரை, அவளிடம் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற தோரணையில் பேசிய அவர், தன்னை அறியாமலே, மாரிமுத்து அண்ணாச்சியின் தொண்டன் போல் பேசியதற்காகச் சிறிது வெட்கப்பட்டார். அந்த வெட்கத்திற்குக் காரணமான உலகம்மை மீது அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது.

உலகம்மையும், அவர் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டாள். 'மச்சான்' என்று அவரை விளிக்காமல், ஆவேசம் வந்தவள்போல் ஒரு பிரஜை என்ற முறையில், அதே சமயம் பிரஜை என்றால் என்னவென்று தெரியாத அவளின் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை வெடிகளாயின. "பஞ்சாயத்துத் தலைவர! நீரும் மாரிமுத்து நாடார்கூட சேர்ந்துக்கிட்டியரா? நீரு எப்ப எனக்கும் தலைவர் என்கிறத மறந்துட்டீரோ அப்பவே நீரு எனக்குத் தலைவராயில்ல."

அவள் தொடர்ந்தாள் : "எத்தனயோ பேரு ஆடாத ஆட்டம் ஆடுனாங்க. அவங்கெல்லாம் எப்டி ஆயிட்டாங்கங்றது கண்ணாலேயே பாத்தோம். இப்ப நீங்க எல்லாருமா ஆடுறிங்க. அவ்ளவு பெரிய ராவணன் ஆடாத ஆட்டமா ஒங்க ஆட்டம்? ஆடுனவங்க அமுங்கிப்போன இடத்துல புல்லுகூட முளைச்சிட்டு. யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரத்தான் செய்யும்."

"ஊர்க்காரங்க ஒங்களக் கேக்காமப் போவலாம். ஆனால், காளியம்மா ஒங்கள மட்டுமில்லாம ஒங்களக் கேக்காதவங்களயும் கேக்காம போமாட்டா. இது கலிகாலம். நாம செய்யுறத நாமே அனுபவிச்சுதான் ஆவணும். பத்ரகாளி பத்தினின்னா , ஒங்கள நீங்க என்னைப் படுத்துற பாட்டுக்குக் கேக்காமப் போவமாட்டா. அவா பத்தினியா இல்லியான்னு பாத்துடலாம். கடைசி வரைக்கும் நல்லா இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க. என் வயத்துல எரியுற தீ ஒங்களப் பத்தாமப் போவாது!"

அசாத்தியமான தைரியத்துடன், வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்தவள் போல், விஸ்வரூபியாக, அவள் போய்க் கொண்டிருந்தாள்.