ஒரு கோட்டுக்கு வெளியே/ஒயிலாய் நடந்து…

2. ஒயிலாய் நடந்து…

மாரிமுத்து நாடாரும், உலகம்மையும் மடையின் கற்சுவர் வழியாக, மெள்ள நடந்தார்கள். ஓடையை அவர்களால் என்ன, யாராலும் தாண்ட முடியாது. பாசி படிந்த சுவரை அடிமேல் அடிவைத்துக் கடந்தபோது, சின்னப் பையன்கள் மதகுகளில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சிப்பூ போல பல்லாண்டுகளுக்குப் பின்னர் குள வெள்ளம், அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பாட்டியிருக்க வேண்டும். ஊரே அங்கு நின்றது. ஓடைக்குத் தென் பகுதியில் இருந்த சேரியில் முட்டளவிற்கு நீர் புகுந்து விட்டதால், சேரிப் பையன்கள், அதையே குளமாக நினைத்துக்கொண்டு விளையாடினார்கள்.

ஊரின் மேற்கு முனையில் இருந்த ‘பிள்ளைமார் குடி’ வழியாக இருவரும் நடந்தார்கள். காவல் கடவுள்போல முருகன் கோவில் கம்பீரமாக நின்றது. தோரணமலையில் இருக்கும் பால முருகனைத் தரிசிப்பதற்காக வந்த அகஸ்தியர் மலையேற முடியாமல், பிள்ளைமார் தெருப்பக்கம் உள்ள மடத்தில் தங்கியதாகவும், தோரணமலை முருகன் மனமிரங்கி, தந்தையின் நண்பரைப் பார்க்க இந்த இடத்தில் எழுந்தருளினான் என்பதும் ஐதீகம். இந்த எடத்தத் தாண்டி முருகன் ஆசாரிக் குடிக்குள்ளேயோ, நாடார் குடிக்குள்ளேயோ போகல - என்பது பிள்ளைமார்கள் வாதம். இந்த வாதம் முன்பு பகிரங்கமாகவும், இப்போது ரகசியமாகவும் நடந்து வருகிறது.

ஆலயமணி அடித்தது. ஊர்க்கணக்குப்பிள்ளை சிவசண்முகம், காதைப் பிடித்துக்கொண்டு ‘சரவணபவ, சரவணபவ’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர், “வாரும் நாடாரே, வாரும் நாடாரே” என்றார். நாடார், அவசர அவசரமாகக் கையை மேல்நோக்கி எடுத்துவிட்டு, நழுவிப் பார்த்தார். உலகம்மை அந்தத் தெய்வச்சிலையையே உற்றுப் பார்த்தாள். உதிரமாடசாமியை உணர்ச்சி பூர்வமாகக் கும்பிட்டுப் பழகியவள். இப்போது முருகன்சிலையை அறிவு பூர்வமாகக் கும்பிட்டாள்.

நழுவப்போன நாடாரை பிள்ளை விடவில்லை.

“நம்ம சொள்ளமாடன் வயல குளம் அழிச்சிட்டு. தாசில்தார் நாளைக்கு வாராரு. நீரும் சொல்லி நஷ்ட ஈடு கேக்கணும்.”

“செஞ்சா போச்சி, வரட்டுமா?”

“அப்புறம், ஒம்ம பெரிய்யா மவன் நான் ரெண்டு மூட்ட நெல்லும் நாலு கோழியும் சொள்ளமாடங்கிட்ட கேட்டதா பொரளிய கிளப்பி இருக்கார். நல்லா இல்ல.”

“நம்ம கிராம முனிசிப்பா? நான் கண்டிக்கிறேன். வரட்டுமா?”

“அப்புறம், ஒம்ம சின்னய்யா மகங்கிட்ட சொல்லி, என் மவளுக்கு பாலசேவிகா வேல வாங்கிக் குடுக்கணும். பீ.டி. ஓவப் பார்த்தேன். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னா சரிங்றார்.”

“சொல்றேன், வரட்டுமா?”

“அப்புறம்...”

“அப்புறம் இருக்கட்டும். பிள்ளைவாள். சட்டாம்பட்டி சங்கரநாடார் குடும்பம் எப்படி? ஒரு பையன் இருக்கானாம்.”

“அந்த ஊர்ல அவன் எம்.ஏ. படிச்சவனாம். நல்ல பையன்னு கேள்வி. என்ன விஷயம்? அப்புறம் ஒம்ம கொழுந்தியா மவன்கிட்ட சொல்லும். வார லட்டர சீக்கிரமா கொடுக்க மாட்டேங்கறான்.”

“சங்கர நாடார் குடும்பம் எப்படி?”

“கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு காலத்துல... பனை ஏறுனாங்களாம்.”

“பனையேறிப் பய குடும்பமா?”

“ஒரு காலத்துல.”

“இப்ப இல்லியே?”

“இல்ல.”

“அப்படின்னா சரிதான்.”

“என்ன விஷயம்?”

“நாளக்கி சாவகாசமா சொல்றேன், வரட்டுமா?”

“செய்யும். அப்புறம்...”

மாரிமுத்து நாடார் கணக்குப்பிள்ளையைத் திரும்பிப் பாராமல் நடந்தார். உலகம்மைக்குப் பகீரென்றது. ‘பனையேறிப் பய குடும்பமான்னு மாமா நாக்கு மேல பல்லுப் போட்டுக் கேக்கறாரே. ஏன், இவரு தாத்தா பனையேறினாராமே. எங்க அய்யா மட்டுமா பனையேறினாரு? பனையேறுற நாடார் சாணான்னும் ஏறாதவங்க நாடார்னும் ரெண்டு சாதியா மாறிட்டு. இப்படித்தான் சாதிங்க வந்திருக்குமோ? இத்தன சாதி இல்லாம, ஏழை சாதி, பணக்கார சாதின்னு ரெண்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். பறையன், பணக்காரன், பணக்கார நாடார்கூட போறான். ஆனால் நாடார்ல ஏழை பறையர்ல ஏழகூட ஏன் சேரல? சாணான்னு இவனத் தள்ளி வச்சாக்கூட, இவன் ஏழ பறச்சாதி கூடச் சேராம நாடார் நாடார்னு சொல்றவங்கூட ஏன் ஒட்டிக்கணும்? பிராமணன்ல ஏழ பறையன் மாதிரி கஷ்டப்படுறான். பறையன்ல பணக்காரப் பிராமணன் மாதிரி குதிக்கிறான். ஏழப் பறயனும், ஏழ சாணானும், ஏழ பிராமணனும் ஒண்ணாச் சேந்தா, ஊரையே மாத்திப்பிடலாம். அம்மாடி! என் புத்தி ஏன் இப்படிப் போவுது? நமக்கென்ன! எந்த ஜாதி சந்தைக்குப் போனா நமக்கென்ன? முருவா, ஒன்ன ஒருதடவை கும்பிட்டதுக்கா இப்டி புத்தியக் கெட வைக்கிற?”

இருவரும், ‘ஆசாரிக்குடி’ துவங்கும் பகுதிக்கு வந்தார்கள். உதிரமாடசாமிகோவில், கோட்டைச் சுவரோடு குளத்து முனையில் இருந்தது. நாடார் மாடனுக்கு ஒரு கும்பிடு போட்டார். வெட்டருவாளுடன் இருந்த மாடனைப் பார்க்க, உலகம்மை கொஞ்சம் பயந்தாள். அந்த ஊரில் ஐந்தாறு மாடன் கோவில்கள் உண்டு. உதிரமாடனுக்கு இங்கே இருபது மாட தேவதைகள் ‘எக்ஸ்ட்ரா’ தேவதைகள். இதே போல் கோட்டை மாடசாமி கோவில். அங்கே உதிரமாடன் ‘எக்ஸ்ட்ரா’. ‘சொள்ளமாடன் கோவில்’ - அங்கே ‘ஹீரோ’ சாமியான சுடலையாண்டிக்கு உதிர கோட்டை மாடர்கள் ‘எக்ஸ்ட்ரா’. கிராமத்தில் நாடார்கள் பல குடும்பப் பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். கன்னிமாடன் குடும்பம், சிவப்பன் குடும்பம், கருப்பன் குடும்பம், சங்கிலிக் குடும்பம். இப்படிப் பல குடும்பங்கள் உதிரமாடசாமி கோவில், கோட்டைச்சாமி கோவில் என்பதுபோய், இப்போதெல்லாம் சிவப்பன் கோவில், கருப்பன் கோவில் என்று கோவில்சாமிகளை குடும்பச்சாமிகளாக்கி விட்டார்கள்.

உதிரமாடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே உலகம்மை நடந்தாள். உதிரமாடசாமி ‘ஆடி மாசம் நடக்கும் ‘அம்மங்குடையில்’ ‘சல்லடமும் குல்லாயும்’ போட்டு, தட்டி வரிஞ்சிகட்டி, தாமரப்பூ சுங்கு விட்டு, ஆனப்பந்தம் ஒரு கையில, முறுக்குத்தடி ஒரு கையிலயுமா’ குளத்தப்பாத்து வேட்டைக்கிப் போவும்போது, வில்லுப்பாட்டாளி சொன்னது மாதிரி பாக்க நல்லா இருக்கும். குளத்துல தண்ணியிருக்கே, எப்படிப் போவாரு? அடுத்த ஆடிக்குள்ள தண்ணி வத்திடாது? ஒருவேள தண்ணி வத்தாம சாமி ஊருக்குள்ள வந்தா, ஊரு தாங்காதே. வரட்டும். பீடிக்கடை ஏஜெண்ட்ட உயிரோட துக்கிட்டுப் போவட்டும். மருவாதி கெட்ட பய.

கலப்பைகளைச் சரிபார்த்த தச்சர், ‘மம்பெட்டியை’ அடித்துக்கொண்டிருந்த கொல்லர், தங்க நகைகளை ‘ஒக்குட்டு’ செய்த தட்டார் ஆகிய ஆசாரிக் குடும்பங்களைக் கடந்து, ஊரின் நடுப்பகுதிக்கு வந்தார்கள். மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடம். இரண்டு பக்கமும் டிக்கடைகள், வெத்தலைபாக்குக் கடைகள் அனைத்தையும் தாண்டி கிழக்கே வந்தார்கள். ஊர்க்கிணறு, அதன் பக்கம் எல்லா நாடார் ஜனங்களுக்கும் பொதுவான காளியம்மன் கோவில்.

அவர்கள் கோவிலை நெருங்கும்போது, ஒரு பெரிய கூட்டமே நின்று கொண்டிருந்தது. மத்தியில் ஒரு சைக்கிள். அதன் ‘ஹாண்ட்பாரில்’ இரண்டு பெரிய பைகள், இரண்டு பக்கமும் தொங்கின. உள்ளே ஊதுபத்திகள், கர்ப்பூரங்கள், சிகரெட்டுகள், பீடிக்கட்டுகள், பின்னால் கேரியரில் வெற்றிலைக்கட்டுகள். சைக்கிள்காரன் வெளியூர்க்காரன். அடிக்கடி, அந்த ஊர்க் கடைகண்ணிகளில் சாமான்கள் போட்டுவிட்டுப் போகிறவன்.

அவன் கழுத்தை மளிகைக் கடைக்காரர் ஒருவர் நெரிக்காத குறையாகப் பிடித்துக்கொண்டு. “செருக்கி மவன பொலி போடுகிறோம் பாரு” என்று மிரட்டினார். கூட்டத்தில் ஒரு சிலர் “கழுத்தை நெரிடா” என்றனர். ஒரு சிலர் “விட்டுடுடா பாவம்” என்றனர். மெஜாரிட்டி வேடிக்கை பார்த்தது.

மாரிமுத்து நாடாரைப் பார்த்ததும், கழுத்தைப் பிடித்தவன். அதை விட்டுவிட்டு சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தான். உலகம்மை, தன்னைப் பார்த்துதான், அவன் சைக்கிள்காரனை விட்டுவிட்டதாகக் கற்பனை செய்து பார்த்தாள். அவளுக்கு அந்தப் போலித்தனம் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் கண்கள் பிதுங்க, உடம்பெல்லாம் ஆட, வியர்வையால் நனைந்து போயிருந்த சைக்கிள்காரனைப் பார்க்க, அவளுக்குப் பாவமாக இருந்தது. அழுகை வரும்போலவும் இருந்தது.

மாரிமுத்து நாடார் அதட்டினார்.

“என்னடா விஷயம் உலகம்மா, நீ மொதல்ல என் வீட்டுக்குப் போ. என்னப்பா விஷயம்?”

சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தவன். பிடியை விடாமலே பேசினான்:

“இந்தச் செறுக்கி மவனுக்கு திமிறு மாமா. குட்டாம்பட்டிக் குளம் பெருகிட்டு. இனிமேல் குட்டாம்பட்டிக்காரங்கள தென்காசி கோர்ட்ல பாக்கலாமுன்னு சொல்றான். நாம மூளைகெட்டதனமா சண்ட போட்டுக்கிட்டு கோர்ட்ல போவுறது பாக்க, இந்தத் தேவடியா மவனுக்கு ஆசயப் பாரும். இவன இப்பவே கைய கால ஒடச்சிட்டு, போலீஸ்ல சரணாவலாம்னு பாக்றேன். கோர்ட் வரைக்கும் வேணுமுன்னாலும் போகலாம். பரதேசிப்பய மவன், என்னமா கேட்டுட்டான்?”

மாரிமுத்து நாடார், சைக்கிள்காரனைப் பார்த்தார். அவன் நடுங்கிக் கொண்டே சொன்னான்:

“மொதலாளி, ஒங்க ஊரோட தாயா பிள்ளயா பழவுனவன். பதினைஞ்சு வருஷமா நெதமும் சைக்கிள்ல சாமான் கொண்டு போடுறவன். பழகுன தோஷத்துல, தமாஸுக்குச் சொல்லிட்டேன். அதுக்கு என்ன... என்ன...”

“பழகுன தோசத்துக்கு, அத்து மீறிக் கேட்ப, இல்லியால-?”

சைக்கிள்காரன் ஏங்கி ஏங்கி அழுதான். மாரிமுத்து நாடார் கூட்டத்தைக் கண்களால் அடக்கிவிட்டுப் பேசினார்.

“நீ சொன்னது நல்லா இருக்கான்னு நீயே நெனச்சிப் பாரு. இந்த குட்டாம்பட்டிக்கு வடக்கே, கோவூர்ல ஆத்துப் பாசனம் இருக்கு. மேக்க, நித்தியப்பட்டையில குத்தால ஆறு பாயுது. தெக்க, கடையத்துல இருந்து தெக்க போகப் போக ஆத்துப் பாசனம். கிழக்கே, ஆலங்குளத்துக்கு அங்க நல்ல குளத்துப்பாசனம். இதுக்கு இடையில இருக்கறது பொட்டல் காடா இருக்குது. இதில எங்க ஊருதான் கழிச்சிப்போட்ட பயவூரு. காளியாத்தா கிருபையில இந்த வருஷந்தான் குளம் பெருகியிருக்கு. எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். நீ அபசகுனமா கோர்ட் கீட்டுன்னு பேசலாமா? இது ஒனக்கே நல்லா இருக்கா?”

“தப்புத்தான் மொதலாளி -”

“சரி, திரும்பிப் பார்க்காம போ. அவன விடுடா, ஏய் தங்கச்சாமி ஒன்னத்தாண்டா. ஒழுஞ்சிபோறான். விட்டுடு-”

சைக்கிள்காரன், பெடலை மிதிக்கக் காலைத் தூக்கப் போனான். கால் தரையிலிருந்து வரமறுத்தது. ‘மொதலாளி, தங்கச்சாமி எனக்கு நூறுரூபா கடன் பாக்கி தரணும். போன வருஷம் கேட்டேன். நாளக் கடத்துறாரு. 'ஒமக்கெல்லாம் எதுக்கய்யா வேட்டி சட்டைன்னு' கேட்டேன். அத மனசுல கருவிக்கிட்டு. மனுஷன் நான் தமாசுக்குச் சொன்னத பெரிசு படுத்துறான். நீங்களும் 'ஊரு ஊருன்னு' தலைய ஆட்டுறியள, நெயாயமா -' என்று கேட்க நினைத்தான். பிறகு, 'உடம்பு உருப்படியாக ஊர்போய்ச் சேர வேண்டும்' என்று நினைத்து சைக்கிளைத் தள்ளினான்.

மாரிமுத்து நாடார் வீட்டுக்கு வேகமாகப் போனார்.

அவர் வீடு பழைய காலத்து வீடு. சில பகுதிகளை நாடார் நாகரிகமாகப் புதுப்பித்திருந்தார். நான்குபேர் படுக்குமளவிற்கு வெளியே திண்ணை இருந்தது. சிமிண்ட் திண்ணை. அதையொட்டி அணைத்தாற்போல் இருந்த மூன்று படிக்கட்டுகள், படிக்கட்டில் ஏறித்தான் வாசலுக்குள் நுழைய வேண்டும். அந்த அரங்கு வீட்டுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏழெட்டு அறைகள்.

மாரிமுத்து நாடார் உள்ளே நுழையும்போது. தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்த அறையில், அவர் மகள் சரோஜா, கோணிக்கொண்டும், நாணிக்கொண்டும் உட்கார்ந்திருந்தாள், அவளைச்சுற்றி அவள் அம்மா உட்பட நாலைந்து பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உலகம்மையும் அங்கே உட்கார்ந்திருந்தாள்.

சரோஜாவுக்கு முப்பது வயதிருக்கலாம். திருமணம் நடக்கும் என்று பத்து வருடமாகக் கற்பனை செய்து அலுத்து, களைத்து சலித்துப் போனவள். சின்ன வயதில் எப்படி இருந்தாளோ, இப்போது கழுத்து குறுகிவிட்டது. தார்க்கம்பு மாதிரி பிடிக்கச் சதையில்லாத உடம்பு. கண்கள் அமாவாசை இரவு மாதிரி ஒளியிழந்து கிடந்தன என்றால், வாயே தெரியாதபடி நீண்ட கோரைப்பற்கள் அடைத்திருந்தன. உயரமோ, சராசரிக்கும் கீழே: மார்பகம், ஆண்களுக்குக்கூட சற்றுத் தடிப்பாக இருக்கும். என்றாலும் அவளைப் பார்க்கும்போது, அரூபி என்ற வெறுப்போ சிரிப்போ வருவதற்குப் பதிலாக, ஒருவிதப் பரிதாபமே வரும். இப்படிப்பட்டவளுக்கும் ஆறைந்து ஆண்டுகளுக்கு முன்பு. சொத்துக்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். ஆனால் அவளுக்கு வாய்த்த அம்மாக்காரி, கிராமத்துப் பாணியில் சொல்லப்போனால் 'விளங்காதவா' 'மஞ்சக்கடஞ்சவா' பி.ஏ. படித்த மாப்பிள்ளைப் பையன் ஒருவனின் அய்யா ஒரு காலத்தில் பனையேறினார் என்பதற்காக, "பனையேறிக் குடும்பத்திலயா சரோசாவ குடுக்கறது? இதவிட அவள, எருக்குழியில வெட்டி பொதச்சிடலாம்" என்று சொல்லித் தட்டிவிட்டாள். பக்கத்து ஊர் மிராசுதார் தம் பையனுக்குக் கேட்டார். சம்பந்தப்பட்ட இந்த மிராசுதாரின் தாத்தா, ஒருகாலத்தில் திருமதி மாரிமுத்துவின் பாட்டி வீட்டில், தண்ணீர் பாய்ச்சியவராம்.... "போயும், போயும், வேலக்காரக் குடும்பத்திலயா பொண்ணக் குடுக்கறது? இதவிட 'பைரோன' வாங்கி அவளுக்குக் குடுக்கலாம்" என்றாள். இதே போல் இன்னொரு பி.ஏ. வந்தது. அந்தப் பையனின் ஒன்றுவிட்ட. பெரியம்மாவின் சின்னமாமனாரின் அத்தையோட பேத்தி, ஒருவனோடு ஓடிப்போய்விட்டாளாம். "ஓடிப்போன குடும்பத்துலயா சம்பந்தம் வைக்கது? இதவிட சரோசா கழுத்த ஒம்ம கையாலே நெரிச்சிக் கொன்னுடும்” என்று புருஷனைப் பார்த்துச் சீறினாள். கழுத்துக்குத் தாலி வரும்போதெல்லாம். அதை நெரிக்கச் சொல்லும் அம்மாவை நினைத்து அழுதாள் சரோஜா. அம்மாக்காரியோ "நான் பெத்த பொண்ணு. என்ன விட்டுட்டு போவணுமேன்னு அழுவுறாள்.. ஊரு உலகத்துல இருக்கது மாதிரி மினுக்காதவா குலுக்காதவா, சிலுக்காதவா -" என்று பெருமையடித்துக் கொண்டாள்.

ஆனால், 'நாலு காடு சுத்திய' மாரிமுத்து நாடாரால் பெருமையடித்துக் கொள்ள முடியவில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டால், பெண்ணுக்குத் தாலி ஏறாது என்பதைக் காலங்கடந்து தெரிந்து கொண்டவராய் ஒரு மாப்பிள்ளைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். மாப்பிள்ளைப் பையனும், அவன் சித்தப்பாவும் பிள்ளையார் கோவில் ஆலமரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். சரோஜாவும் உலகம்மையும் கோவிலுக்குப் போகிற சாக்கில், அங்கே போக வேண்டும். பையன் பெண்ணைப் பார்த்த பிறகுதான் கட்டிக்குவானாம்.

"சீக்கிரம். ராகு வரப்போவுது" என்று அதட்டினார் மாரிமுத்து.

தாம்பாளம் ஒன்றில் தேங்காய், வெற்றிலைபாக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு, உலகம்மை வாசற்படியைத் தாண்டினாள். சரோஜாவும் கையில் ஒரு மாலையை வைத்துக்கொண்டு, அவள் பின்னால் நடந்தாள்.

"ஜோடியா நடங்க, சேந்தாய் போல போங்க-" என்றார் நாடார்.

சரோஜா, சிவப்புக்கரை போட்ட பச்சைப்புடவை கட்டியிருந்தாள். உலகம்மை, பச்சைக்கரை போட்ட சிவப்புச்சேலை கட்டியிருந்தாள்.

இருவரும், 'பிள்ளையார் பிடிக்கப்' போய்க் கொண்டிருந்தார்கள்.