ஒரு கோட்டுக்கு வெளியே/சரோஜாவாகி…

3. சரோஜாவாகி…


லகம்மையும், சரோஜாவும் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையும்போது, கோவிலுக்கருகே கேட்பாரற்றுக் கிடந்த கருங்கல்லில் உட்கார்ந்திருந்த நான்குபேர் எழுந்தார்கள், நால்வரில் ஒருவன் மாப்பிள்ளைப் பையன், இருபத்து நாலு வயதிருக்கலாம். கருப்பும், சிவப்பும் கலந்த புதுநிறம். சுருட்டைக் கிராப்பு: நெட்டை நெற்றி. இரு கண்களையும், தனித்தனியாய்ப் பிரித்துக் காட்டும் செங்குத்தான மூக்கு. சிரிக்காமலும், சீரியஸாக இல்லாமலும் இருக்கும் வாய். பையன், தந்தைக்கு ஒத்தாசையாக வயலில் வேலை பார்த்திருக்கவேண்டும். இல்லையென்றால், இந்தக் காலத்துப் பையனான அவனுக்கு. உடம்பில் அப்படி வைரம் பாய்ந்திருக்க முடியாது. கிழவிகள்கூட திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அமைந்த அவன் அழகை. பீடிக்கடை ஏஜெண்ட் ராமசாமி அள்ளிப் பருகிக்கொண்டிருந்தான். உலகம்மை வந்த பிறகும், அவளைப் பார்க்காமலே, இவனையே பார்த்தான் என்றால், அது நாகரிகத்தால், பண்பால் உந்தப்பட்ட செயலல்ல. பையனின் 'களையே காரணம். 'பிராந்தன்' வெள்ளைச்சாமி, அங்கேயும் 'பராக்குப்' பார்த்துக் கொண்டிருந்தான், உலகம்மை, சரோஜா. மாப்பிள்ளையைவிட் அவனுக்குப் பிள்ளையாரின் வயிறுதான் பிடித்திருந்தது. நாலாவது மனிதரான பையனின் சித்தப்பா, நடுத்தர வயதுக்காரர். அந்த இரண்டு பெண்களையும், விழுங்கி விடுவது போல், கூர்மையாகப் பார்த்துவிட்டு, தன் சந்தேகத்தைக் கேள்வியாக்கினார்.

"இதுல எது பொண்ணு ?"

"குட்டையா மாங்கா மூஞ்சி மாதிரி என்று இழுத்தான் வெள்ளைச்சாமி. ராமசாமி, அவன் தொடையைக் கிள்ளிவிட்டு "என்ன கேக்கரீக" என்று தெரியாதவன் போல் கேட்டான்.

"இதுல எது பொண்ணு? பச்சைச் சீலையா, செவப்புச் சீலையா?"

"செவப்புத்தான். ஏல, வெள்ளையா. கோவிலுக்குள்ள போயி விபூதி வாங்கிட்டு வால."

வெள்ளைச்சாமி, விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மாப்பிள்ளைப் பையன், இரண்டு பெண்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். பின்னர் கோவிலுக்குள் அவர்கள் தலை மறைந்ததும், நிதானத்திற்கு வந்தான். உலகம்மைதான் மணப்பெண்ணாக இருக்க முடியும் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை . 'இந்தச் சித்தப்பாவுக்கு மூளையே கிடையாது. பொண்ணுகூட வந்திருக்கிறவளுக்கு சித்தி - அதுதான் இவரோட பொண்டாட்டி - வயது இருக்கும். மறுபடிக்கு இப்டியா சந்தேகம் வாரது?

சித்தப்பாக்காரர் விடவில்லை.

"வே ராமசாமி, கோயிலுல முன்னால நிக்கரவா பொண்ணா , பின்னால நிக்கரவளா?"

"ரெண்டும் பொண்ணுதான்."

ராமசாமி சிரித்து மழுப்பினான். சித்தப்பாக்காரர் சீரியஸாகவே பேசினார்:

"வே ஒழுங்காச் சொல்லும். யாருவே, பொண்ணு செவப்பு சேலதான"

"செவப்புதான், செவப்புதான்."

மாப்பிள்ளைப் பையனுக்கு, சித்தப்பாவின் போக்குப் பிடிக்கவில்லை. "என்ன சின்னய்யா நீரு? துருவித் துருவிக் கேக்கியரு; இன்னுமா ஒம்மால பெண்ண பாக்க முடியல?"

சித்தப்பாக்காரர். அண்ணன் மகன் அந்நியர்கள் முன்னால் தன்னை மானபங்கப் படுத்திவிட்டதாக நினைத்தவர் போல், முகத்தைத் 'தொங்கப்' போட்டார். இதற்குள் சரோஜாவும், உலகம்மையும், பூசாரியோடு வந்தார்கள். உலகம்மை நேராக உடையாமல், தாறுமாறாக உடைந்திருக்கிற தேங்காயைப் பார்த்துவிட்டு "ஐயரே, தேங்கா ஒரு மாதிரி உடஞ்சிருக்கே" என்றாள்.

"பீட கழியுதுன்னு அர்த்தம்" என்று அனர்த்தம் கூறினார் ஐயர்.

உலகம்மையும் சரோஜாவும், கோவிலுக்கு வெளியே வந்து பிள்ளையாரை இறுதியாக வணங்குபவர்கள் போல் கைகளிரண்டையும் தலைக்குமேல் தூக்கிக் குவித்துவிட்டு மெள்ள நடந்தார்கள். சரோஜா. "மாப்பிள்ளன்னு ஒருவன் கிடச்சா சரிதான்" என்று நினைத்தவள் போல் பையனைப் பார்க்கவில்லை. உலகம்மை, மாப்பிள்ளைப் பையனை ஜாடைமாடையாகப் பார்த்தாள். 'சரோசாக்கா யோகக் காரிதான். பொறுத்தவர் பூமியாள்வார்னு சொல்றது சரிதான். காத்துக் கிடந்தாலும் கச்சிதமா கெடச்சிருக்கு. எவ்வளவு 'அளகா' இருக்காரு. சட்ட எப்டி மினுங்குது! அதுக்குள்ள கையுந்தான் எப்படித் தளதளப்பா இருக்கு. துணிமணிய எவ்ளவு சீரா போட்டுருக்காரு! இந்த ராமசாமியும் இருக்கான, தட்டுக்கெட்ட பய. பொம்பிளய ஜென்மத்துலயும் பாக்காதது மாதிரி வாயப்பிளந்துகிட்டுப் பாப்பான். ஆனால் இவரு சரோசாக்காவ பட்டும் படாம எப்படிப் பாக்காரு அக்கா குடுத்துவச்சவா. பிள்ளயாரு சாமி, யெனக்கும் இவருல நாலுல ஒரு அளவாவது ஆம்பிள கெடைக்கணும். ராமசாமி மாதுரி பொந்தன் வரப்படாது. வெள்ளச்சாமிப் பிராந்தன் மாதிரி ‘ஒடக்கு’ கூடாது...’

உலகம்மையும், சரோஜாவும், பிள்ளையார் கோவிலில் இருந்து சற்று தூரம் நடந்திருப்பார்கள். உலகம்மை திரும்பிப் பார்த்தாள். முதலில் சரோஜாவுக்காகப் பார்த்தவள். இப்போது தனக்காகப் பார்ப்பவள்போல், நாணத்தோடும் தலையை லேசாகச் சாய்த்துக் கொண்டும் பார்த்தாள். மாப்பிள்ளைப் பையன், முன்கால்களை ஊன்றி, பின்கால்களைத் தூக்கி, தன்னைச் சற்று உயரமாக்கிக் கொண்டு, அவளைப் பார்த்தான். உலகம்மை சட்டென்று தலையை திருப்பிக்கொண்டு சரோஜா காதில் ஏதோ கிசுகிசுத்தாள். பிள்ளையார் கோவிலை மறைக்கும் குறுக்கத்திற்கு வந்துவிட்டார்கள். திரும்புவதற்கு முன்னால், இறுதியாகப் பார்ப்பவள் போல், கழுத்தை மட்டும் திருப்பாமல், உடல் முழுவதையும் திருப்பினாள் உலகம்மை. பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பற்கள் தெரிந்தன. உடனே அவள் காறித் துப்பினாள். சரோஜா நாணத்தோடு உலகம்மையிடம் பேச்சைத் துவக்கினாள்.

“எப்டி இருக்கார் ஒலகம்ம...?”

“தக்காளியப் பாத்தா இவரு நெறத்த பாக்காண்டாம். எலுமிச்சம் பழத்த பாத்தா மூக்க பாக்காண்டாம். தேக்கு மரத்தப் பாத்தா உடம்பப் பாக்காண்டாம். ஒங்க வீட்டுக் கிடாயப் பாத்தா அவரு தோரணயப் பாக்காண்டாம். ஒன் பெரியய்யா மவன் ராமசாமியோட மூஞ்ச பாத்தா அவரு செருப்பப் பாக்காண்டாம்.”

சரோஜா சிரித்துக்கொண்டு தலைகவிழ்ந்தாள்.

“நல்லா பாத்தியா?”

“நல்லாவே பாத்தேன். நீ பாக்கலியாக்கா?”

“என்னால பாக்க முடியல. வெக்கம் பிடுங்கித் தின்னுட்டு. ஒயரமா இருக்காரா?”

“ஒனக்குஞ்சேத்து வளந்துருக்காரு...

"தடியா? ஒல்லியா?"

"ராமசாமி மாதுரி ஊதிப்போயி இல்ல. வெள்ளச்சாமி மாதுரி ஒடிஞ்சும் விழல. அளவான தடி."

"சும்மா சொல்றியா, நிசமாவா..."

"சொன்னதுல்லாம் சத்தியம். அவரோட செருப்பப் பத்தி சொன்னமில்லா அதுவும் நெசந்தான்..."

"பாக்காமே போயிட்டேன். நல்ல வேள நீ நல்லா பாத்திருக்க."

"இன்னும் பத்து நாளையில ஆறஅமர ராத்திரியும் பகலுமா பாக்கப் போற. ஆக்கப் பொறுத்தவா ஆறப் பொறுக்காண்டாமா?"

"என் அம்மா மட்டும் இதையும் தட்டி விட்டான்னா தெரியும் சங்கதி. அவரு வீட்டுக்கே ஓடிப் போவேன்..."

சரோஜா தலை குனிந்து கொண்டே சிரித்தாள். மாப்பிள்ளைப் பையன் வருகிறானா என்ற சந்தேகத்துடனும், வரவேண்டும் என்ற அபிலாஷையுடனும், உலகம்மை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆவலை அடக்க முடியாமல், சரோஜாவிடம் சில விவரங்களைக் கேட்டாள். சரோஜாவும் சளைக்காமல் பதில் சொன்னாள்.

"மாப்பிள்ளக்கி எந்த ஊராம் அக்கா...?"

  • சட்டாம்பட்டி..."

"எவ்வளவு படிச்சிருக்காராம்...?"

"எம்.ஏ.வாம்."

"பேரு என்னவாம்?"

"சும்மா சொல்லுக்கா. புருஷனா ஆனபெறவுதான் பேரச் சொல்லப் படாது. இப்பச் சொல்லலாம்..."

"இப்பச் சொன்னா அப்பறம் வரும்..."

"பரவால்ல சொல்லுக்கா..."

"மாட்டேன். வெட்க..."

"அட சும்மாச் சொல்லுக்கா, ஒங்களுக்குப் பேர்ப் பொருத்தம் இருக்கான்னு பாக்றேன்..." "லோகநாதன்னு பேரு. லோகுன்னு கூப்பிடுவாவுகளாம்."

உலகம்மை ஒருகணம் திடுக்கிட்டாள். எந்தப் பேருக்கு எந்தப் பேரு பொருத்தம்? என்றாலும் இறுதியில் சுதாரித்துக் கொண்டாள்.

"பரவால்லிய. லோகநாதன் லோகாயிட்டாரு. சரோசா, சரோஜ்ஜாயிட்டா. சரோஜ், லோகு சரியான பொருத்தந்தான், எக்கா நீ நெசமாவே குடுத்து வச்சவாதான்..."

சரோஜா பெருமையோடு தலையைத் தூக்கிக்கொண்டு, உலகம்மையின் கையைப் பிடித்துக்கொண்டு அழுத்தினாள். "நான்... லோகில்லக்கா" என்று சொல்லிச் சிரித்தாள் உலகம்மை.

இருவரும், பண்ணை வீட்டுக்குள் நுழையும்போது "போயும்... போயும் பனையேறிப் பய மவனக்காட்டி என் பொண்ண கரயேத்தணுமாக்கும்" என்று மாரிமுத்து நாடாரின் கையைப் பிடித்தவள் சொல்லிக் கொண்டிருந்தாள். நாடார் உலகம்மையின் முகத்தைப் பார்த்தார். ஒரு சுழிப்பும் இல்லை . கேட்டிருக்காது... இருந்தாலும்.., இந்த ‘பயபெண்டாட்டிக்கு இப்படி வாய் ஆகாது', ஏதோ சொல்லப்போன மனைவிக்காரியை அடக்கினார்.

"சும்மா ஏன் மூளியலங்காரி, மூதேவி, சண்டாளி மாதிரி பிலாக்கணம் பாடுற?"

உலகம்மையும், சரோஜாவும் வீட்டுக்குள் போனபோது வெள்ளைச்சாமி வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்.

"பெரிய்யா, பெரிய்யா! ஒலகம்மய மாப்பிள்ளைக்கு பிடிச்சிப் போச்சி, பிடிச்சிப்போச்சி. அவளத்தான் கட்டுவேன்னு சின்னய்யா கிட்ட ஒத்தக் கால்ல..."

மாரிமுத்து நாடார் திடுக்கிட்டாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"ஏல பொண்ணு பிடிச்சிருக்குன்னாங்களா? ஒலகம்ம பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"

வெள்ளைச்சாமி சிறிது யோசித்தான். பிறகு பேசினான்:

"பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாவ..."

மாரிமுத்து நாடாருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. 'எப்படியோ சமாளிச்சாச்சு. செவப்பு சேலதான பொண்ணுன்னு கேட்டிருப்பான். ராமசாமி ஆமான்னுருப்பான். மணவறையில பொண்ண மாறாட்டம் பண்ணிட்டாங்கன்னு மாப்பிள்ள குதிச்சா இவளத்தான் காட்டி னோம்னு சொல்லிடலாம். பொண்ணு செவப்பு சேலன்னு சொன்னி யேன்னு கேட்டா, ஆமா செவப்புக்கரை சேலதான் கட்டியிருந்தான்னு சொல்லிடலாம். மணவறைக்கி வந்த பிறகு மாப்பிள்ள மாற முடியுமா என்ன .'

முட்டுக்குள் தலையை விட்டுக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்த மாரிமுத்து நாடார். சத்தம் கேட்டு நிமிர்ந்தார். உலகம்மை போய்க் கொண்டிருந்தாள். இதற்குள் உள்ளேயிருந்து அவர் மனைவிக்காரி வெளியே வந்து, "ஒலவு, சேலய களஞ்சிட்டு ஒன் சேலய உடுத்துக்கிட்டு போ" என்றாள்.

அப்போதுதான் நினைவு வந்தவளாய், உலகம்மை விடுவிடு வென்று உள்ளே போய், பட்டுச் சேலையை அவிழ்த்து விட்டு, தனது சேலையான அச்சடிச் சேலையைக் கட்டிக்கொண்டாள். அந்தப் பட்டுச் சேலையையே சிறிது வெறித்துப் பார்த்தாள். பிறகு 'அனாவசிய ஆச கூடாது' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல், தலையைப் பலமாகப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டு வெளியே வந்து மாரிமுத்து நாடாரைக் கடக்கப் போனாள்.

"ஒலகம்மா சாப்பிட்டியா?" என்றார் நாடார்.

"ஆமா."

"பொய் சொல்ற. ஏய் கனகு, ஒலகம்மா சாப்புட்டாளா, சோறு போட்டியா?"

"வேண்டாம் மாமா, பசிக்கல."

"சாப்பிட்டுப் போழா. ஒனக்கும் சீக்கிரமா ஒரு வழி பண்ணுறேன்."

உலகம்மை தயங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளேயிருந்து சரோஜா வந்து, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். சாப்பிட்டு முடிக்க, மணி இரவு எட்டு ஆகியிருக்கும். 'அய்யா பசியில துடிச்சிக்கிட்டு இருப்பாரு. பசிய பொறுக்க முடியாதவரு அய்யா. இந்தச் சாப்பாட்டப் பாத்தா ஆசயோட சாப்பிடுவாரு. கேப்பமா? சீ! எனக்கு ஏன் பிச்சக்காரப் புத்தி? கேட்டா குடுப்பாங்கதான், கெடைக்கிங்றதுக்காவ எல்லாத்தையும் கேக்கணுமா, என்ன? 'ேJ நொடியில் சோறு பொங்கலாம்." அடுப்பில் தீ மூட்டி, அய்யாவின் பசித்தீயை அணைப்பதற்காக உலகம்மை கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். வழியில் அவளுக்குத் தெரிந்த கிழவி ஒருத்தி. "யாரு ஒலக்கமாடி பேத்தி ஒலவுவா?" என்று குசலம் விசாரித்தாள்.

"பாட்டி சொல்றேன்னு தப்பா நெனக்காத. என் பாட்டி உலகம்ம பேரத்தான் ஒலக்கமாடின்னு சொல்லிப் பழகிட்ட. என் பெயரயாவது உலகம்மான்னு ஒழுங்காச் சொல்லேன். ஒலவுன்னு சொன்னா கேக்கதுக்கு நல்லா இல்ல்."

"மொளச்சி மூணு இல விடல. வாயப்பாரு. நான் அப்படித்தாண்டி சொல்லுவேன். ஒலவு, ஒலவு, ஒன்னச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஒன் பாட்டியும் நானும் உயிர விட்டுப் பளகுனம். என்னழா நிக்காம போற? பாத்துப் போடி, எதுலயும் மோதிராத."

உலகம்மை வீட்டுக்குள் நுழைந்தபோது. கிழவி சொன்ன மாதிரி அவள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சின்ன ஓலைவீட்டில், அவள் அய்யா மாயாண்டி நாடார் கட்டிலில் முடங்கிக் கிடந்தார். மாரிமுத்து நாடாரின் தங்கை புருஷன் பலவேசம், "நீரு இந்த வீட்ல இருந்துடுறத பாத்துப்புடலாம். ஒம்மவளுக்கு அவ்ளவு திமிரா? திமுர அடக்குறனா இல்லையான்னு பாரும்" என்று அவரை அடிக்காத குறையாகக் கத்திப் பேசினார். உலகம்மையைப் பார்த்ததும், அவர் குரல் பலமாகியது.