ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/தமிழில் பெளத்தம், பெளத்தத்தில் தமிழ்

6

தமிழில் பெளத்தம், பெளத்தத்தில் தமிழ்


பாலிமொழியும் வடமொழியும் அறிந்தவராயினும் அயோத்திதாசர் பெளத்தக் கோட்பாடுகளைப் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களைக் கொண்டே விளக்குவதும் புத்தரது வரலாற்றையும் கூட அவற்றை வைத்தே மீட்டுருவாக்கம் செய்வதும் நோக்கற்பாலது. இதனை அவரே தெளிவுபடுத்தி அதற்கான காரணத்தையும் எடுத்துரைக்கிறார்.

பிறவியை ஜெயித்துத் தேவனாகும் பலனை விரும்புவோர் புத்தரையும் புத்தரது தன்மத்தையும் சிந்திக்க வேண்டியதே செயலாதலின் அவரது பிறப்பு வளர்ப்பின் சரித்திரத்தையும் அறமொழிகளாம் சத்திய தன்மத்தையும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது அவர் பிறந்து வளர்ந்து இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலைச் செப்பு, அறநெறி தீபம், அறநெறிச்சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நிகழ்காலத்திரங்கல், நிகண்டு, திவாகரம், பெருங்குறவஞ்சி, சிறுகுறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, மற்றுமுள்ள சமண முனிவர்களின் நூற்களைக் கொண்டும் புராதன பெளத்த விவேகிகள் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளைக் கொண்டும் அனுபவச் செயல்களைக் கொண்டும் ஆராய்வதாயின் சத்ய தன்மம் நன்கு விளங்கும். நாமும் அவைகளை ஆராய்ந்தே பூர்வத் தமிழ்

ஒளியான புத்தரது அரிய சரித்திரத்தையும் அவரது அரிய தன்மத்தையும் விளக்கி வரைந்திருக்கிறோம் (அலாய்சியஸ் II 190).

தாசர் தரும் பட்டியலில் புத்தசமய நூல்கள் மட்டும் அல்லாமல் சமண சமய நூல்களும் அவ்விரண்டில் ஒரு சமயத்தைச் சார்ந்தவையென்று அடையாளம் காணப்பட்டிராத நூல்களும், சேர்க்கப்பட்டிருக்கக் காணலாம். சமணத்தை அவர் பெளத்தத்தினின்றும் வேறானதாகக் கருதவில்லை.

புத்தபிரானுக்கே அருகன் என்னும் பெயரும் உரியதென்பதை அடியிற் குறித்துள்ள பின்கலை நிகண்டால் அறிந்து கொள்ளலாம்.

11-வது நிகண்டு தகரவெதுகை

புத்தன் மால் அருகன் சாத்தன்

ரகர வெதுகை

தருமராசன் தான் புத்தன் சங்கனோடு அருகன்தானும் உலகரட்சகனை வடதேசமெங்கும் பகவனென்றும் புத்தரென்றும் வழங்கி வருவதுபோல் தென்தேசமெங்கும் இந்திரரென்றும் அருகரென்றும் விஷேமாகக் கொண்டாடி வந்தார்கள் . . . . . இத்தேசத்தார் அருகரென்று எவ்வகையால் கொண்டாடி வந்தார்களென்றால் சாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் ஆதலின் அருகரென்று கொண்டாடியதுமன்றி சகலரும் மறவாதிருப்பதற்காய் புத்தபிரான் பரிநிருவாணம் அடைந்தபின் அவரது தேகத்தைத் தகனம் செய்து அவ்வஸ்திகளை ஏழு அரசர்கள் எடுத்துப்போய் பூமியில் அடக்கம் செய்து கட்டிடங்கள் கட்டியபோது அஸ்தியை வைத்துள்ள இடம் விளங்குவதற்காய்க் குழவிக் கல்லுகளைப்போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அவ்விடம் ஊன்றி வைத்திருந்தார்கள். . . . .அருகம் புல்லை வழங்கும் வழக்கத்தை அனுசரித்து அருகனை மறவாதிருக்கும் ஓர் வழிபாடு தெய்வ வணக்கமும் செய்து வைத்திருந்தார்கள். . . . இவற்றைப் புத்த தன்மமென்றும், பகவத் தன்மமென்றும், இந்திரர் தன்மமென்றும், அருகர் தன்மமென்றும், அவலோகிதர் தன்மமென்றும், ஐயனார் தன்மமென்றும், மன்னர் சுவாமி தன்மமென்றும், தருமராசன் தருமமென்றுமே கூறல் வேண்டும் (அலாய்சியஸ் II 107).

ஜின ஜைநரென்னும் புத்தருக்குரிய பெயரால் அவர் தன்மத்தைப் பின்பற்றிய சைனர்கள் யாவரும் தமிழ் மொழிக்குரியவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று வாதிடும் தாசர் கீழ்க்கண்ட சான்றுகளைத் தருவார். 

தமிழில் “நீ” என்னும் மொழிக்கு சீன பாஷையில் “நீ” என்றும், “நான்” என்பதற்கு “ஞான்” என்றும், “யாம்” என்பதற்கு “யாம்” என்றும், “பெண்” என்பதற்குப் “பெண்” என்றும், “எஃகு” என்பதற்குக் “கண்” என்றும், “ஈர்” அல்லது “இரண்டு” என்பதற்கு “ஈர்” என்றும், “மை” என்பதற்கு “மை” என்றும் வழங்கிவரும் தொந்த மொழிகளால் அறிவதும் அன்றி மகத நாட்டைச் சார்ந்த ஜீனமலை சைன மலையருகில் சைனர்கள் என்னும் பெளத்தர்களும் தமிழர்கள் என்னும் பெளத்தர்களும் பூர்வத்தில் ஓர் குலத்தினராக விளங்கினார் என்பதும் புலப்படுகிறது (அலாய்சியஸ் II 78).

பெளத்தமும் சமணமும் ஒன்றென்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் முன் வைப்பார்.

ஓர் மகதநாட்டுச்சக்கரவர்த்தியே புத்தரென்றும் ஜைநரென்றும் அழைக்கப்பெற்ற படியால் தற்கால ஜைநர் என்போருள் சக்கரவர்த்தி என்னும் பெயரை வழங்கி வருகிறார்கள். கொடுந்தமிழ் வாசிகளாம் மலையாளிகள் புத்தரை நாயன், நாயனார் என்று வழங்கி வந்தது கொண்டு திருவனந்தபுரத்தைச் சார்ந்த வள்ளுவர் நாடென்னும் பதியில் வாழும் வள்ளுவர்கள் குப்புலிங்க நாயனார் என்றும் மார்க்கலிங்க நாயனாரென்றும் வழங்கி வருவது போல் ஜைனருக்குள்ளும் பாகுவலி நாயனார், தீர்த்தங்கர நாயனார், ஜெயசீல நாயனார் என வழங்கி வருகிறார்கள் (அலாய்சியஸ் II 442).

தமிழ்மொழி வரலாற்றைச் சொல்லும்போதும், புத்த சமயக் கோட்பாடுகளை விளக்கும்போதும் திருமூலருக்குத் தனியிடம் அளிக்கத் தாசர் தயங்குவது இல்லை. திருமந்திரத்தில் அவர் ஆழங்கால் பட்டவரென்பதை அவர் தரும் மேற்கோள்களால் அறியலாம். சிவனே வடமொழியையும் தென்மொழியையும் படைத்தான் எனும் தொன்மத்திற்கு எதிராக ஒரு தொன்மம் படைக்கும் தாசர் வடமொழியும் தென்மொழியும் புத்தரால் உண்டாக்கப்பட்டவையென்றும் அவரே வடமொழியைப் பாணினி, ஜனகர் முதலானோரிடமும் தென்மொழியை அகத்தியர், திருமூலர் முதலானோரிடமும் ஈந்து பரப்பினார் என்றும் கூறுவார். இதற்கு ஆதாரங்களாக முன்கலை திவாகரத்திலிருந்து “வடநூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன் கவியரங்கேற்றும் உபயக் கவிப்புலவன்” என்ற அடிகளும் வீரசோழியத்திலிருந்து “இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல் வாய்ப்ப” என்னும் அடியும் முன் வைக்கப்படும். புத்த தன்மத்தை மேலும் மேலும் பரப்ப வேண்டி, ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி ஆகியோருக்கு வடமொழியையும் அகஸ்தியருக்குத் தென்மொழியையும் கற்பித்து ஜனகரை மகத நாட்டிற்கு வடபுறத்தும் அகஸ்தியரைத் தென்புறத்தும் திருமூலரை மேற்புறத்தும் சட்ட முனிவரைக் கீழ்ப்புறத்தும் அனுப்பி வைத்தாரென்பது தாசரின் கூற்று, (அலாய்சியஸ் I 601). “பஞ்சலியார் ஞானம்” எனும் நூலிலிருந்து இக்கருத்தைச் சொல்லும் பாடல் மேற்கோளாகத் தரப்படும்.

ஆசியாக் கண்டம் முழுவதும் பெளத்தம் பரவியிருந்த காலத்தில் புத்தரையே சிவனென்றும் சிவகதி நாயகன் என்றும் கொண்டாடி வந்தார்களென்றும் மக்களுள் காம, வெகுளி, மயக்கங்களாம் முக்குற்றங்களையும் அகற்றி அன்பைப் பெருக்கி இறவா நிலையாகும் நிர்வாணத்தை அடைகின்றவன் சிவன் என்றும் சிவகதி அடைந்தோனென்றும் கருதப்படுவான் என்றும் கூறும் தாசர் திருமூலரின்

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின்

அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே (அலாய்சியஸ் I 561)

எனும் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளக் காணலாம்.

குண்டலி நாடியின் பெருமையைப் பேசும்போது

அற்றார் பிறவி அவரிரு கண்களை

வைத்தார் புருவத்திடையே நோக்கி

ஒத்தேயிருக்க உலகெல்லாம் தெரியும்

எக்காலும் சாவில்லை இறையவாமே (அலாய்சியஸ் I 553)

என்ற பாடலும், மலர்மிசை ஏகினவன் புத்தன் என்பதற்குக்

கடந்து நின்றான் கமலா மலர் மீதே (அலாய்சியஸ் (I 571)

என்ற பாடலும் அறவாழி அந்தணன் புத்தன் என்பதற்கு,

அருமை வல்லான் கலைஞாலத்துள் தோன்றும்

பெருமை வல்லான் பிறவிக் கடல் நீந்தும்

உரிமை வல்லான் அடியூடுர வாகி

திருமை வல்லா ரொடுஞ் சேர்ந் தன்னியானே (அலாய்சியஸ் II 576)

என்ற பாடலும், மேற்கோள்களாகும்.

புத்தரின் மும்மொழிகளும் மும்மொழிகளைத் தழுவிய நான்கு வேதவாக்கியங்களும் முதல் நூலென்றும் திருக்குறள் வழி நூலென்றும் திருமூலரின் திரிமந்திரமும் ஒளவையாரின் திரிவாசகமும் சார்பு நூல்களென்றும் அடிக்கடி எடுத்துரைப்பது தாசர் விரும்பிய செயலாகும். இக்கருத்தும் திருமந்திரத்திலிருந்து அவர் தரும் ஏராளமான மேற்கோள்களும் அதன் மேல் அவருக்கிருந்த பற்றையும் வெளிப்படுத்தும்.

சீவகசிந்தாமணி, தமிழ் பயின்ற மேலை நாட்டவரான எல்லிஸ், போப் போன்றவர்களால் உயர்ந்த காப்பியமெனப் பாராட்டப் பெற்றது. அப்பெரு நூலை ஆழமாகக் கற்று ஆய்ந்த அயோத்திதாசர் அதனைப் பெளத்த நூலாகவும் சீவகன் என்னும் பெளத்த மன்னன் வரலாறு கூறும் நூலாகவும் கருதி அதிலிருந்து பல மேற்கோள்கள் தருவார்.

புத்தனே சீவகசிந்தாமணியில், ‘அறன்’ என்றும் ‘பகவன்’ என்றும் ‘அந்தணர் தாதை’ என்றும் ‘விண்டார் பூந்தாமரையின் விரை ததும்ப மேல் நடந்தான்’ என்றும் பாராட்டப் பெற்றுள்ளான் என்றுரைக்கும் தாசர் பல சொற்கள் தாம் கூறும் பொருளில் கையாளப்பட்டிருத்தலுக்குச் சீவகசிந்தாமணியிலிருந்தும் ஆங்காங்கே சான்றுகள் தருவார். புத்தன் சொன்ன மும்மொழிகளே முதல் வேதங்கள் என்று வாதிடும் தாசர்,

ஆதிவேதம் பயந்தோய் நீ அலர் பெய்மாரி அமர்ந்தோய் நீ

நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகரில் காட்சிக்கு இறையோய் நீ

நாதன் என்னப்படுவோய் நீ நவை செய் பிறவிக் கடலகத்துன்

பாத கமலம் தொழ வெங்கள் பசையாப்பவிழப் பணியாயே

- (அலாய்சியஸ் I 545)

என்னும் பாடலைச் சான்று காட்டுவார். சாக்கைய முனிவருக்கு மட்டுமல்லாமல் அவர் பின் வந்த அடியார்களுக்கும் ‘கடவுள்’ என்ற பெயர் உண்டென்பதற்கு,

மணப் புடைமாலை மார்பன் ஒரு சொலே ஏதுவாகக்

கணைக் கவின் அழித்த கண்ணார் துறந்து போய்க் கடவுளானான்

என்னும் அடிகளையும், சமணப் பெரியோர் ‘சாமி’ என்று அழைக்கப்பட்டதற்கு,

தேனுடை மலர்கள் சிந்தித் திசை தொழச் சென்ற பின்னாள்

தானுடை உலகம் கொள்ளச் சாமி நாள் சார்ந்த தன்றே

- (அலாய்சியஸ் II 77)

என்னும் அடிகளையும் ஐந்து இந்திரியங்களையும் அடக்கி வெற்றி

கொண்ட புத்தரும் அவரது அடியார்களும் “இந்திரர்” என்று அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு,

ஆசை யார்வமோடு ஐயமின்றியே

ஓசை போய் உலகுண்ன நோற்ற பின்

ஏசு பெண்ணொழித்து இந்திரர்களாய்

தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார் (அலாய்சியஸ் II 117)

என்னும் அடிகளையும், பூர்வ புத்த சமய அரசர்கள் வாழ்ந்து வந்த இடத்திற்குச் சேரி என்ற பெயர் உண்டென்பதற்கு,

தேனுலாமதுச் செய்கோதை தேம்புகை கமழ்வூட்டி

வானுலாச் சுடர் கண்மூடி மாநகர் இரவுச் செய்யப்

பானிலாச் சொரிந்து நல்லராணிகலம் பகலைச் செய்ய

வேனிலான் விழைந்த சேரி மேலுலகனைய தொன்றே

என்ற பாடலையும் வள்ளுவர் என்பார் புத்த அரசர்களின் கன்மத் தலைவர்களாக விளங்கியவர் என்பதற்கு,

கோத்த நித்திலக் கோதை மார்பினான்

வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொனான் (அலாய்சியஸ் II 125)

என்னும் அடிகளையும் வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய ஆரியர்களே மிலைச்சர், மிலேச்சர் என்று அழைக்கப்பட்டனர் என்பதற்கு,

‘வெங்கண் நோக்கிற்குப் பாயமிலேச்சனைச் செங்கண் தீவிழியால் தெறித்தான்’ (அலாய்சியஸ் I 123)

என்னும் அடிகளையும் புத்த சங்கத்தில் சேர்ந்து சத்திய தன்மத்தைப் பின்பற்றிச் சமண நிலையிலிருந்து தம்மைப் பார்ப்போர்களே பார்ப்பார் என்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்

என்பாரை ஓம்பேன் எனின் யான் அவனாவனென்றான் (அலாய்சியஸ் I 120)

என்னும் அடிகளையும் சமணரில் சித்தி பெற்றோர் சாரணர் என்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

இலங்கு குங்கும மார்பன் எந்துசீர்

நலங்கொள் சாரணர் நாதன்கோயிலை (அலாய்சியஸ் I 558)

என்னும் அடிகளையும் ஒழுக்கமுடையோராய்த் தீவினையை அகற்றியவர்களே தேவர்களென்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

யாவராயினும் நால்வரைப் பின்னிடில்

தேவரென்பதும் தேறும் இவ்வையகம் (அலாய்சியஸ் I 560)

என்னும் அடிகளையும் இறவா நிலையிலிருக்கும் நிர்வாண நிலையே சிவகதியாகும் என்பதற்கு,

இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத் தீற்றித்

துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியென்னும் தொழுவில் சேர்த்து

நின்ற பற்றார்வநீக்கி நிருமலன் பாதஞ்சேரின்

அன்பு விற்றுண்டு போகிச் சிவகதி அடையலாமே (அலாய்சியஸ் 1562)

என்னும் பாடலையும் மேற்கோள்களாகத் தருவார்.

இந்துக்கள் என்னும் ஆரியர்கள் இந்நாட்டில் குடியேறுவதற்கு முன் பெளத்த அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் வேளாளர்களுக்கும் கன்மக் குருக்களாயிருந்து திருமணச் சடங்குகளை நடத்தி வந்தவர்கள் வள்ளுவர்களேயென்றும் இப்பொழுது வள்ளுவர்கள் செய்யும் சடங்குகள் இந்து சமயத்தைச் சார்ந்தவை என்றெண்ணுவது தவறென்றும் சாக்கைய பெளத்தர்கள் நடத்திய திருமணங்கள் பற்றி மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் எடுத்துரைப்பார் தாசர். அன்னார் “மணவரை இயற்றியதை”

அடிமணை பவழமாக அரும் பொனால் அலகு சேர்த்தி

முடிமணி அழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக்

கடிமலர் மலரை நாற்றிக் கம்பல விதானம் கோலி

இடும்புகை மஞ்சிற் சூழ மணவரை இயற்றினாரே

என்ற பாடலும் வடமீன் எனும் அருந்ததியை மணமகளுக்குக் காண்பித்து அருந்ததியைப் போல் கற்புடையவளாக வாழும்படி வாழ்த்தியதை,

விளங்கொலி விசும்பில் பூத்த அருந்ததிக் காட்டியின் பால்

வளங்கொளப் பூத்த கோல மலரடி கழிஇய பின்றை

இளங்கனை யாழி யேந்த வயினி கண்டமர்ந்திருந்தான்

துளங் கெயிற்றழுவை தொல்சீர் தோகையோ டிருந்தது ஒத்தான்

என்ற பாடலும் மஞ்சள் நீரினாலும் சந்தனக் குழம்பினாலும் மணமக்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதை,

அன்னப் பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்

மன்னர் குடைநடுக்கும் மாலை வெள்வேல் மறவோனும்

மின்னு மணிக்குடத்தின் வேந்தரேந்த மண்ணாடி

கன்னங்கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே (அலாய்சியஸ் II 127-9)

என்ற பாடலும் சுட்டும்.

புத்தரது வரலாற்றைக்கூறும்போதும் தாசரின் “ஆதிவேதத்”திலும் சீவக சிந்தாமணிப் பாடல்கள் பல இடம்பெறும். பொருத்தமான இடங்களில் அரிய பாடல்களைச் சேர்த்து ஆதிவேதத்தை ஒரு தமிழ்க் காப்பியமாகவே தருகிறார். சித்தார்த்தனின் திருமணத்திற்காக நகர் அணி செய்யப் பெற்றதை,

இரும்பிடி தழீஇய யானை இழிமதங் கலந்து சேறாய்ச்

சுரும்பொடு மணி வண்டார்க்குந்துகிர் கொடி மாடவீதி

பெருங்கடி நகரம் பேசின் இராச மா கிருகமென்பர்

அருங்குடி அமரர் கோமான் அணி நகராய தொன்றே

என்ற பாடல் கொண்டு வருணிப்பார். “சதுர் சத்ய காதை”யில் இறப்பினால் விளையும் துயரம் வீணானது என்பதை,

பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற்றழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடு கடல் வெள்ள மாற்றா

முரிந்த நம்பிறவி மேனாள் முற்றிழை இன்னு நோக்கால்

பரிந்தழுவதற்குப் பாவா அடியிட்டவாறு கண்டாய்

(அலாய்சியஸ் II 239)

என்ற பாடலால் விளக்குவார்.

உண்மையான புத்தன் என்போன் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு காட்டிக் கொல்லாமை எனும் அறத்தைக் கையாளுவோன் எனும் புத்த அறத்தை வலியுறுத்தும்போது,

ஊன் சுவைத்து உடம்பு வீங்கி நரகத்தில் உரைதல் நன்றோ

ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உரைதல் நன்றோ

ஊன்றி இவ் விரண்டினுள்ளும் உறுதி உரைதி என்ன

ஊன்றினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்

(அலாய்சியஸ் (II 268)

எனும் பாடலை இணைப்பார்.

ஒழுக்கத்தினின்று ஐம்பொறி காத்தலால் வீட்டின்பம் அடையலாம் என்பதற்கு,

ஒன்றாய ஊக்க வேர் பூட்டி யாக்கைக் கெறு வுழுது

நன்றாய் நல்வரகுச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர்

குன்றாமற்றாங் கொடுத் தைம்பொறியின் வேலி காத்தோம்பின்

வென்றார் தம் வீட்டின்பம் விளைவிக்கும் விண்ணோர் உலகின்றே

(அலாய்சியஸ் II 274)

எனும் பாடல் மேற்கோளாகும். அவாவின் பெருக்கமே துக்கத்திற்கு மூலமென்னும் புத்தபிரானின் அறிவுரையை விதந்து கூறவும் தாசர் சிந்தாமணிப் பாடலையே தருவார்.

வேட்டன பெறாமை துன்பம் விழைநரைப் பிரிதல் துன்பம்

மோட்டெழில் இளமை நீங்க மூப்பு வந்தடைதல் துன்பம்

மேட்டெழுத்தறிதலின்றி யெள்ளற் பாடுள்ளிட்டெல்லாம்

சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றான்

(அலாய்சியஸ் II 395)

புத்த சமயக் கோட்பாடுகளை விளக்குதற்கும் புத்தர் வரலாற்றைக் கூறுதற்கும் தாசருக்குச் சீவக சிந்தாமணி கைகொடுத்துதவுவதைப் பார்க்கும்போது அவர் தமிழிலுள்ள சமண இலக்கியங்கள் கூறுவனவும் பெளத்தமே என்றுரைப்பது மெய்யென்றே முடிவு கட்ட நேரும்.

சிவவாக்கியம் புத்த மதத்தைச் சார்ந்த நூலென்றே கூறுவார் தாசர். இதற்கு “அண்டர் கோன் இருப்பிடம் அறிந்து கொண்ட ஞானிகள் கண்ட கோவில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே” என்னும் பாடலே போதுமான சாட்சியென்பார். அண்டர் கோன் என்பது புத்தருக்குரிய ஆயிர நாமங்களில் ஒன்றென்பதைச் சூளாமணி என்னும் நூலில் கூறியிருக்கும் புத்தர் தியானத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்பது அவர் கருத்து.

தண்டா அமரை மலரின் மேல் நடந்தாயென்றும்

தமணீயப் பொன் அணையின் மேல் அமர்ந்தா யென்றும்

வண்டார சோகி நிழல் வாய் அமர்ந்தாயென்றும்

வாழ்த்தினால் வாராயோ வானவர் தம் கோவே

(அலாய்சியஸ் II 21)

தம் கருத்துக்களை வலியுறுத்த வேறிடங்களிலும் சிவவாக்கியத்தைத் தாசர் பயன்படுத்திக் கொள்வார். “வேஷ பிராமணர்கள் தங்களை உயர்ந்த சாதியென்றும் திராவிட பெளத்தர்களைத் தாழ்ந்த சாதியென்றும் வகுத்து வழங்கி வந்த காலத்தும் மேன்மக்கள் மிலேச்சர்களைக் கண்டித் தெழுதினார்கள்” என்பதற்குச்

“சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ”

“பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா”

(அலாய்சியஸ் I 130)

என்று தொடங்கும் பாடல்களையும், பூணு நூலுக்கு ஆதாரமாகும் குண்டலி என்றும் பிரம்மரத்தினம் என்றும் வழங்கும் நாடியின் மகத்துவ்த்தை வலியுறுத்த,

உருதரித்த நாடி தன்னில் ஓடுகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே கபால மேற்ற வல்லிரேல்

விருத்தர்களும் பாலராவர் மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த நாதன் ஆணை அம்மை ஆணை உண்மையே

(அலாய்சியஸ் I 552)

என்னும் பாடலையும், “தெய்வகதி அடைய வேண்டியவர்கள் அண்டர்கோன் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டுமென்”பதற்குப்

பேசுவானும் ஈசனும் பிரம்மஞானம் உம்முளே

ஆசையான ஐவரும் அலைந்தலைச்சல் படுகிறார்

ஆசையான ஐவரை அடக்கி ஓரிடத்திலே

பேசிடாதிருப்பிரேல் ஈசன் வந்து பேசுமே

(அலாய்சியஸ் I 578)

என்ற பாடலையும்,“ஆதியட்சரமாம் அகாரமே அறிவின் விருத்திக்குக் காரணமாகி உகாரமாம் உண்மை ஒளி கண்டு மகாரமாம் காமவெளி மயக்கங்கள் அற்றுச் சிகாரமாம் அன்பில் நிலைப்பதே நிருவாண சுகமாகும்” என்பதற்கு,

அகார காரணத்துளே அநேக னேக ரூபமாய்

உகார காரணத்துளே ஒளி தரித்து நின்றனன்

மகார காரணத்தின் மயக்கமற்று வீடதாம்

சிகார காரணத்துளே தெளிந்தே சிவாயமே

(அலாய்சியஸ் II 468)

என்ற பாடலையும் சான்றுகளாகத் தருவார்.

சிவவாக்கியர் சைவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ சார்ந்தவர் என்ற கருத்து அவருக்கு உடன் பாடானதன்று.

ஒளவையார் பற்றி வழங்கி வரும் கதைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் அயோத்திதாசர் அவரைப் புத்த அறத்தின் தலையாய சாட்சியாளர்களில் ஒருவராகக் காட்டும் வாழ்க்கை வரலாறு எழுதியதுடன் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை எனும் பெயர்களில் தமிழகம் அறிந்துள்ள அறநூல்களுக்குப் புத்த நெறி நின்று விளக்கமளித்துள்ளார். அவற்றைத் “திரிவாசகம்” என்று அழைத்து புத்தரின் மும்மொழிகளும் அவற்றைத் தழுவிய நான்கு வேத வாக்கியங்களும் முதல் நூலென்றும் வள்ளுவரின் “திரிக்குறள்” வழி நூலென்றும் ஒளவை தந்த அறநூல் சார்பு நூலென்றும் வலியுறுத்துவார். ஆத்திசூடியை ஆத்திச்சுவடி யென்றும் கொன்றை வேந்தனைக் குன்றைவேந்தன் என்றும் வெற்றிவேற்கையை வெற்றி ஞானம் என்றும் அழைத்து அவற்றின் காப்புச் செய்யுள்களிலிருந்து இறுதிப் பாடல்கள் வரை அவை புத்தரையும் புத்த நெறியையும் போற்றுகின்றன வென்பதை வலியுறுத்தும் வகையில் உரை வரைவார். ஆத்திச்சுவடியின் காப்புச் செய்யுளிலுள்ள “ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை” எனும் தொடர் கல்லாத்தி மர நிழலில் வீற்றிருந்த ஆதி தேவனாம் புத்தபிரானைக் குறிக்கும் என்றும் அருங்கலைச் செப்பிலுள்ள,

ஆத்தியடி அமர்ந்து ஆகமங்கள் ஆய்ந்து

சாத்தன் நமக்கு அளித்த சீர்

என்ற பாடலையும் பின்கலை நிகண்டிலுள்ள,

தருமராசன் முனீந்திரன் சினன் பஞ்ச தாரை விட்டே

அருள் கறந்த உணர்கூட்டும் ததாகதன் ஆதிதேவன்

விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினம் தவிர்ந்தோன்

அரசு நீழலில் இருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்

என்ற பாடலையும் சான்றுகளாகத் தருவார்.

கொன்றை வேந்தனின் காப்புச் செய்யுளாக

குன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏற்றித் தொழுவோம் யாமே

எனும் அடிகளைத் தந்து,

“குன்றைவேந்தன்” எனும் தொடரும் “செல்வன்” எனும் சொல்லும் புத்தனையே குறிக்கும் என்றும் “சிறந்திடும் குன்றைவேந்தன் குணபத்திரன்” என்று பின்கலை நிகண்டும் “சக்கரப் பெருஞ்செல்வன்” என்று சூளாமணியும் “சினவுணர்கடந்த செல்வன்” என்று சீவகசிந்தாமணியும் குறிப்பிடுவதைச் சான்றுகளாகவும் எடுத்துரைப்பார்.

வெற்றி வேற்கையின் காப்புச் செய்யுளாக,

வெற்றி ஞான வீரன் வாய்மை

முற்றும் அறிந்தோர் மூதறிவோரே

என்னும் அடிகளைத் தந்து “வெற்றி வீரனாகிய புத்தனின் மெய் வாக்கியங்கள் நான்கையும் முழுவதும் தெரிந்து கொண்டவர்கள் முற்றும் உணர்ந்த பேரறிவாளராகும்” என்று பொருள் உரைப்பார். ஆத்திசூடியின் “அறம் செய விரும்பு” எனும் முதற் செய்யுள் “அறன் செயல் விரும்பு” என்று மாற்றப்பட்டு அறக்கடவுளாகும் புத்தபிரான் செய்கைகளாம் நற்சாட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கருத்து, நல்லமைதி எனும் இவைகளை விரும்ப வேண்டும் என்று பொருள் உரைக்கப் பெறும். அறன் என்னும் வல்லின றகரம் அமைந்த தெய்வப் பெயர் உண்டோ வென்பார்க்கு அயோத்திதாசர்,

கொடு வெஞ்சிலை வாய்க் கணையில் கொடிதாய் நடு நாளிரவின் னவைதான் திருமால் நெடு வெண்ணிலவின் நிமிர்தேர் பரியா தடு மாரெழினின்றறனே யருளே

எனும் சீவக சிந்தாமணிப் பாடலை மேற்கோள் காட்டுவார்.

புத்த நெறி கொண்டு பொருள் தரும் அயோத்திதாசர் ஆங்காங்கே தமது பாலிமொழி யறிவையும் பயன்படுத்திக் கொள்கிறார்.“சனிநீராடு” எனும் வரிக்கு உலோக ஊற்றுகளில் உடல் முழுவதும் அழுந்தக் குளித்தெழு என்று பொருள் உரைத்துச் சனி நீரென்பது பாலிமொழியில் உலோக ஊற்றைக் குறிக்குமென்றும் அதற்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்னும் பொருள் பொருந்தாதென்றும் வாதிடுவார்.

எள் நெய் கண்டு பிடித்த காலம் ஆயிர வருஷங்களுக்குப் பிந்தியும் கானிஷ்காவரசனுக்கு முந்தியது மாகும். இந்திய மாதா என்னும் அம்பிகையம்மன் வாசக நூல் இயற்றிய காலம் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு மேற்பட்டதாகும். ஆதலின் எள் நெய் தேய்த்து முழுகென்பது வாசக நூலின் காலவரைக்குப் பொருந்தாது. இன்னும் சகலதேச மக்களுக்கும் எண்ணெய் ஸ்நானம் பொருந்தாதென்பதும் திண்ணம் (அயோத்திதாசர் II 25.6).

“அரனை மறவேல்” என்பதை “அறனை மறவேல்” என்று பாடம் கொண்டு அறவாழிக் கடவுளாம் புத்தபிரானை என்றும் மறவாதே என்று பொருள் உரைப்பார். புத்தர் வாழ்ந்த காலத்தில் தன்னைத் தொழ வேண்டுமென்றோ, தன்னை மறக்கக் கூடாதென்றோ அவர் சொல்லவில்லையாயினும் ஒளவையார் இவ்வாறு கூறுதற்குக் காரணம் புத்தனை எண்ணும்போது புத்தன் மொழிந்த பொருளை முற்றும் சிந்திக்க ஏது உண்டாகும் என்பதே எனும் விளக்கமும் தரப்படும்.

“அனந்தல் ஆடேல்” என்னும் வரிக்கு “அதி நித்திரை செய்யாதே” எனும் பொருள் தவறானதென்றும் “அதிக வெள்ளப் பெருக்கத்தில் நீந்தி விளையாடாதே” என்பதே சரியான பொருளென்றும் பாலிமொழியில் அனந்தல் என்னும் சொல்லுக்கு வெள்ளம், பேரலை, நீர்வேகம் எனும் பொருள் உண்டென்றும் கூறி,

திரிபிடகம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், திரிவாசகம் முதலிய நூற்கள் யாவற்றிலும் பாலி மொழிகளே மிக்க மலிவுள்ளது கொண்டு அனந்தல் என்னும் மொழிக்கு வெள்ளம் என்னும் பொருளை விவரித்துள்ளோம்.

என்று குறிப்பிடுவது பழந்தமிழ் இலக்கியங்களில் பாலி மொழிச் சொற்களின் பயன்பாடு பற்றிய ஆய்வைத் தூண்டுவதாகும்.

“சக்கர நெறி நில்” எனும் அடிக்கு அறவாழியாம் தருமச் சக்கர ஒழுக்கத்தில் நிலைத்திரு என்று பொருள் கூறிச் சக்கர நெறி பற்றி அவர் தரும் விளக்கம் கருதற்குரியது.

திரிபேத மென்றும் திரிபீடமென்றும் வழங்கிய சுருதி மொழிகளைக் கலை நூற்களில் வகுத்து நூல் நெறி யென்றும் செய்யுட்களில் வகுத்துப் பாநெறி யென்றும் அரசர்கள் செவ்வியக்கோல் வழியில் வகுத்துக் கோனெறியென்றும் பொதுவாய் நீதிநெறியில் வகுத்து நீள்நெறி யென்றும் போதித்துள்ளவற்றில் உலகெங்கும் சூழ்ந்துள்ள சருவ சீவர்கள் மீதும் கருணை வைத்துக் காக்கும் நெறியே விசேஷ நெறியாதலின் நமது ஞானத்தாய் சக்கர நெறி நில்லென வற்புறுத்திக் கூறியுள்ளாள் (அயோத்திதாசர் II 41-42).

“சையெனத் திரியேல்” எனும் அடிக்கு “ஞானியென்று உன்னை மெச்சும்படியான வேஷம் பூண்டு நீ உலாவாதே” என்று பொருள் கூறிப் பாலிமொழியில் ஸை என்னும் சொல்லுக்கு ஞானமென்றும் ஸைலம் என்னும் சொல்லுக்கு ஞானக்குன்று என்றும் ஸைவம் என்னும் சொல்லுக்குத் தன்னை அறிதல் என்றும் ஸையோகம் என்னும் சொல்லுக்கு ஞான பாக்கியம் என்றும் பொருள் இருப்பதை எடுத்துரைப்பார்.

“திருமாலுக்கு அடிமை செய்” என்னும் அடியில் “திருமால்” மனுமக்களுள் சிறந்த புத்தபிரான் என்று பொருள் தரும் எனக் குறித்துத் தம் கருத்தை வலியுறுத்த அவர் தரும் விளக்கம் நீண்டது.

தன்மசக்கரப் பிரவர்த்தனன் என்ன உலகெங்கும் வட்டமிட்டு அறவாழியை உருட்டியது கொண்டு மாலென்னும் பெயர் பெற்ற புத்தபிரானின் பாததுரளி யென்றெண்ணிச் சங்கத்தோர்களையே சங்கரன் எனப் பாவித்துச் சங்க தருமத்தையே சிந்தித்துப் பற்றறுக்க வேண்டும் என்னும் கருத்தால் பற்றற்றானுக்கு அடிமையாக வேண்டுமென்பது கருத்து (அயோத்திதாசர் II 50).

“தெய்வம் இகழேல்” எனும் அடிக்குத் தேய்வகமாம் உள்ளொளி கண்டோரைத் தாழ்வு செய்யாதே என்று பொருள் உரைத்து மனிதருள் உயர்ந்தோரே தேவரென்றழைக்கப்படுவார் என்றும் அவர் புராணங்கள் கூறும் பொய்த் தேவர் அல்லர் என்றும் தாசர் தரும் விளக்கம் சிறப்புடையது.

பொய்வேதப் புலம்பலாலும் பொய் புராணக் கட்டுக் கதைகளாலும் ஆகாயத்தினின்று பூமியில் வந்து தோன்றினாரென்னும் பொய் தேவக் கதைகளையும் ஆகாயத்திலிருந்த தேவர் பெண் வயிற்றில் பிறந்தார் என்னும் பொய் தேவக் கதைகளையும் அவனைக் கொல்ல அவதரித்தான், இவனைக் கொல்ல அவதரித்தான் என்னும் பொய்த் தேவர்களையும் அந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் இந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் என்னும் பொய்த் தேவர்களையும் விசாரணைப் புருஷர் இழிவு கூறுவவதில் ஒர் இடுக்கணும் இல்லை, புகழ்ச்சி செய்வதால் ஓர் பிரயோசனமும் இல்லை.

மக்களினின்றும் தேவரெனத் தோன்றியவர்கள் பிறப்பு இறப்பு அற்று மறுபடியும் கருவில் வந்து தோன்றார்கள் என்பது சத்தியமாம் (அயோத்திதாசர் II 53).

“தையல் சொற்கேளேல்” என்பதற்குப் “பெண்களின் சொற்களைக் கேட்காதே” என்று பொருள் உரைக்காமல் “எதிரிகள் உன் உள்ளத்தைத் தைக்குமாறு கூறும் சொற்களுக்குச் செவி கொடாதே” என்று பொருள் தருவார்.

“பொருள்தனைப் போற்றி வாழ்” என்னும் அடியும் புதிய விளக்கம் பெறுகிறது. இங்குப் பொருள் என்பது மெய்ப் பொருளைக் குறிக்கும் என்பார் தாசர்.

தன்னைத்தான் உணரென்றும் தனக்குள்ள நற்செயல்களையும் துற்செயல்களையும் உணர்ந்து தனக்கொரு கேடும் வராது துற்செயல்களை அகற்றி நற்செயல்களைப் பெருக்கி சுகநிலையாம் உண்மைப் பொருள் உணர்ந்து நிற்றலே நித்திய வாழ்க்கைக்கு ஆதாரமாதலின் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து கொண்டே போகும் பொய்ப் பொருளைப் போற்றாது நித்திய ஒழுக்கமாம் நீடுவாழ்க்கையைத் தரும் மெய்ப்பொருளைப் போற்றி வாழென்று கூறியுள்ளார்கள் (அயோத்திதாசர் II 67).

“ஆலயந் தொழுவது சாலவும் நன்று” என்னும் அடிக்கும் தாசர் புதுப்பொருள் உரைப்பார். கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடல் நன்றென்று கூறாமல் “முதல் தெய்வமாகக் காணும் தந்தை தாயாரை மனோவமைதி பெற வணங்குவது எக்காலும் சுகம்” என்பது அவர் விளக்கம்.

. . . . அன்னையையும் பிதாவையும் அன்புடன் போஷித்து ஆலயம் பெறத்தொழுவதை விடுத்து, கல்லையும் செம்பையும் தொழ வேண்டுமென்பது கருத்தன்றாம் . . . பாலி பாஷையில் ஆலயமென்றும், ஆவிலயமென்றும் மனோலயமென்றும் வழங்கும் வாக்கியங்கள் மூன்றும் ஒரு பொருளைத் தரும் (அயோத்திதாசர் II 81).

“ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்” என்னும் அடியில் வரும் வேதியர் என்னும் சொல் சமண முனிவரைக் குறிக்கும் என்பார். பாபம் செய்யாதிருங்கள் என்னும் கன்ம பாகைகளையும் நன்மைக் கடைபிடியுங்கள் என்னும் அர்த்த பாகைகளையும் இதயத்தைச் சுத்தி செய்யுங்கள் என்னும் ஞான பாகைகளையும் அடக்கியுள்ள திரிவேத வாக்கியங்களைச் சகல மக்களுக்கும் அறிவிப்பதே சமண முனிவர்களுக்கு ஒழுக்கமாகும் என்பது அவர் தரும் விளக்கம்.

“சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு” எனும் அடியில் வரும் சிவத்திற்கு அன்பென்று பொருள் கூறித் தம் கருத்துக்கு அரண் செய்யத் திருமந்திரம், அறநெறித் தீபம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் தருவார்.

கோபம் என்னும் அக்கினிக் குன்றின் மீதேறி அவித்து அன்பே ஓருருவு கொண்ட சாந்த ரூபியாம் புத்த பிரானைக் குணகாரணத்தால் சிவனென்றும் சதா சிவனென்றும் கொண்டாடி வந்தார்கள்.

அவன் கொல் இவன் கொல் என்று ஐயப்படாதே சிவன் கண்ணே செய்ம்மின் கண் சிந்தை - சிவன் தானும் நின்றுக்கால் சீக்கு நிழல் திகழும் பிண்டிக் கீழ் வென்றிச் சீர் முக்குடையான் வேந்து (அயோத்திதாசர் II 95).

“வையம் தொடரும் தெய்வம் தொழு” எனும் தொடரும் தாசர் கூறும் புத்தநெறிக்கேற்ற உரை பெறும்.

பாச அடவியின் பந்தப் பற்றானது வண்டி எருதின் காலைச் சக்கரம் தொடர்ந்து செல்லுவது போல் மாறாப் பிறவிக்கும் மீளாத் துக்கத்திற்கும் கொண்டு போய்விடும். ஆதலின் தெய்வமாம் உள்ளொளியின் அன்பை வளர்த்தி ஒடுங்க வேண்டுமென்பது கருத்து (அயோத்திதாசர் II 119).

“ஓதாதர்க்கில்லை உண்மையில் ஒழுக்கம்” எனும் அடிக்கும் “நற்கேள்வியில் முயலாதார்க்குத் தன்னுள்தானே ஒடுங்கிச் சுயம்பாம் நிலை கிடையாதென்பதாம்” என்று புதுப்பொருள் தருவார் தாசர்.

வெற்றிவேற்கையின் காப்புச்செய்யுளில் வரும் வெற்றி ஞான வீரன் புத்தனையே குறிக்கும் என்று சொல்லும் தாசர் “எழுத்தறிவித்தன் இறைவனாகும்” எனும் முதற் பாடலில் இறைவன் என்று போற்றப்படுபவன் புத்தனேயென்றும் அவனே வரிவடிவாம் அட்சரங்களை ஓதுவித்தவன் என்றும் அவன் காலத்தில் பாலி மொழி வரிவடிவாம் எழுத்துகளின்றி இருந்ததென்றும் அவனே “சகட பாஷையாம் சமஸ்கிருத அட்சரங்களையும் திராவிடபாஷையாம் தமிழ் அட்சரங்களையும் இயற்றி வரிவடிவாய்க் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்துக்கொண்டு எழுத்தறிவித்தவன்” என்றும் வாதிடுவார்.

வேதம் என்பது புத்தன் மொழிந்தது, வேதியர் என்பார் புத்த சமயத் துறவியரே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் தாசர் “வேதியர்க்கழகு ஓதலும் ஒழுக்கமும்” எனும் பாடலுக்கு,

சத்திய தன்மமாம் சதுர்வேத மொழிகளை ஓதுவோர்க்கழகு யாதெனில் எத்தேச எப்பாஷைக் காரனாயிருப்பினும் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்து சகலருக்கும் நன்மை விளக்க வேண்டியவனாகவும் அன்றேல் ஓதியுணர்ந்த பயனால் சகலருக்கும் நல்லவனாகவும் விளங்குவோன் எவனோ அவனே வேதம் ஓதும் சிறப்புடையான் என்பது கருத்து (அயோத்திதாசர் II 128).

என்று விளக்கம் தருவார்.

சாதிப் பாகுபாட்டைச் சாடும் தாசர்,

நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலன் ஆயின் கீழிருப்பவனே

என்னும் வரிகளுக்கு,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் எனும் நான்கு வகைத் தொழில் நடத்தும் நான்கு குடும்பத்தோருள் விவேகம் மிகுந்த மேற்குடும்பமாம் அந்தணர் குடும்பத்தில் பிறந்தும் கலை நூற்களை வாசித்து உணராதவனாய் இருப்பின் அவனைக் கீழ்க் குடும்பமாம் கடைக்குலத்தான் என்றே அழைக்கப்படுவான்.

என்றும்,

எக்குடிப்பிறப் பினும் யாவரேயா யினும்

அக்குடியில் கற்றோர் அறவோராவர்

என்னும் வரிகளுக்கு,

மேற் கூறியுள்ள நால்வகைத் தொழிலை நடத்தும் நாற்குடும்பத்தோருள் எக்குடும்பத்திலாயினும் எவன் ஒருவன் கலை நூற்களைக் கற்றுப் பூரணம் அடைகின்றானோ அவனே அறிவோனாம் அந்தணன் என்றழைக்கப்படுவான் (தாசர் II 134)

என்றும் பொருள் கூறுவார். “மனு நெறி” எனும் தொடருக்குத் தாசர் மனுக்களாகிய மனிதர்களுக்குரிய நெறியென்றே பொருள் கூறுவது நோக்கற்பாலது.

இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டு

இருவரும் பொருந்த உரையராயின்

மனு நெறிமுறையால் வழுத்துதல் நன்று

எனும் பாடலுக்கு

நியாயாதிபதியானவன் வாதிப் பிரதிவாதி யிவர்களின்

வார்த்தைகளை எழுதரம் மடக்கி விசாரித்து யதார்த்த

மொழி கண்டு நீதியளித்தல் வேண்டும்

என்றும்,

மனு நெறிமுறையின் வழக்கிழந்தவர் தாம்

மன மறவுறுகி யழுத கண்ணீர்

முறையுறத் தேவர் முனிவர்க் காக்கினும்

வழிவழி ஊர்வதோர் வாளாகும்மே

எனும் பாடலுக்கு,

அங்ஙனம் மனுக்களுக்காய நியாய நெறி வழுவி கெடு நீதி உரைத்து விடுவானாயின் அந்நியாய மடைந்தோன் தான் அடைந்தக் கேட்டை முனிவரிடத்தேனும் தேவரிடத்தேனும் அழுது முறையிடுவானாயின் அம்முறைப்பாடு பொய்ச்சான்று கூறியவன் சந்ததியையும் அநியாயம்யளித்தவன் சந்ததியையும் விடாமல் வாள் போன்று அறுத்து வரும்.

என்றும் பொருள் தருவார்.

தாயுமானவர் சமண முனிவர்களில் ஒருவரென்றும் புத்த தருமப் பிரியரென்றும் தாசர் எழுதுவார்.

இத்தகைய சமண முனிவரின் தியானப் பாக்களுடன் சில நூதன மதத்தோர் தங்கள் மதக்கருத்துக்கு இயைந்தப் பாடல்களை இயற்றிப் பொன்னுடன் தரா கலந்தன போல் சேர்த்துக் கொண்டு தங்கள் மத நூலென மாறுகொளக் கூறி வருகிறார்கள் (அலாய்சியஸ் II 426).

தாயுமானவர் “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்றும் “செங்கமல பீடமேல் கல்லாலடிக்கு வளர் சித்தாந்த மூர்த்தி முதலே” என்றும் “பந்தமெல்லாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய் வந்த வடிவை மறவேன் பராபரமே” என்றும் கூறுவது அவர் வணங்கிய சற்குருவாம் புத்தரை மனத்தில் எண்ணியே என்பார் தாசர். “சைவ சமயமே சமயம் சமய வாதீதப் பழம் பொருள் கைவந்திடவும் அன்றுள்ளொளிக் காட்டும் கருத்தை விட்டுப் பொய் வந்துழலும் சமயநெறி புகுத வேண்டா மடநெஞ்சே தெய்வச்சபையைச் சேர்வதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே” என்று தாயுமானவர் சொல்லும்போது அவர் உலக மக்களைத் தெய்வச் சபையாம் புத்த சங்கத்தில் சேருமாறு அழைப்பதாகப் பொருள் கொள்வார். சைவம் எனும் பாலி மொழிச் சொல்லின் பொருள் தன்னையறிதல் என்றும் சமயம் என்னும் சொல் பாலியில் காலக் குறிப்பு என்று பொருள் தரும் என்றும் தாயுமானவர் சைவ சமயம் என்பது புத்தரது சத்திய சங்கத்தைக் குறிக்குமென்றும் வற்புறுத்தும் தாசர் “காடும்கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன் பிறகே ஓடும் தொழிலால் பயனுளவோ” எனும் அடி புத்தரது மூன்றாம் வேத வாக்கியப் பொருளையே தரும் என்றும் எடுத்துரைப்பார்.

தாயுமானவரின்,

ஆங்காரம் உள்ளடக்கி

ஐம்புலனைக் கட்டறுத்து

தூங்காமல் தூங்கிச்

சுகம் பெறுவது எக்காலம்

எனும் அடிகளுக்குத் தாசர் தரும் விளக்கம் நீண்டது.

ஞானாசிரியரால் அருளப் பெற்ற உபநயனம் என்னும் உதவி விழியாகும் ஞானக்கண் பெற்றுப் புருவ மத்திய சுழிமுனை நாடியை அழுத்தி சதாவிழித்து சருவ பாச பந்தங்களையும் ஒழித்து நனவினில் சுழித்தியாகித் தூங்காமல் தூங்குங்கால் தச நாடிகளின் தொழில் ஒடுங்கிக் குண்டலி நாடி நிமிர்ந்து தச நாதங்கள் தோன்றிக் கலங்கச் செய்யும் (அலாய்சியஸ் I 553).

தமிழ்ச் சித்தர்களையும் அரகத்துகளோடு இணைத்துப் பேசும் தாசர், “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” என்றும்,

ஞான கருணாகர முகங்கண் போதிலோ நவனாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார்” (அலாய்சியஸ் I 558).

என்றும் தாயுமானவர் கூறியிருப்பதைச் சுட்டுவார்.

ஞானசாதகக் கடைசி நாளில் நிகழ்வன பற்றிப் புத்தரும் ஏசுவும் தமிழ்ச் சித்தர்களும் தாயுமானவரும் கூறியுள்ளவற்றைத் தாசர் ஒப்பிட்டுக் காட்டுவது அறியற்பாலது.

நாதவொலி விவரம் இத்தகைய ஐம்புலன் ஒடுக்க சதா விழிப்பின் ஜாக்கிரதையால் தச வாயுக்கள்

ஒடுங்கித்தச நாதங்கள் எழுமென்று ததாகதர்

அஷ்டாங்க மார்க்க மன அமைதியில் விளக்கியிருக்கின்றார்.

விழிப்பின் விழிப்பால் வளர் நாதம் தோன்றி

சுழித்திக் கெடும் என்றறி

சுழித்திக் கெடுதல் சுத்த ஞானத்தில்

விழித்தப் பலன் என்றறி.

சுத்த ஞானத்தால் தோன்றிய நாதம்

முத்தியின் வாயன் முனை (அருங்கலைச் செப்பு)

இதை அனுசரித்தே கிறீஸ்துவானவரும் தனது மாணாக்கர்களுக்கு ஞான சாதகக் கடைசி நாளில் எக்காளம் தொனிக்கும் என்று கூறியிருக்கிறார் . . .

இதையே அப்போஸ்தலர்கள் சுரமண்டல தொனிகளென்று வரைந்திருக்கிறார்கள்.

அக்காலத்தில் தேகங்கூர்ச்சி, உரோமம் சிலிர்த்து, இதயம் படபடத்து, இரத்த வியர்வை பொழிவதாகும். கிறீஸ்துவுக்குப் பாடு நேரும் சமயத்தில் கெத்திசேமென்னும் தோட்டத்தில் மேற்கூறிய குறிகள் நேர்ந்தது.

இத்தகைய சாதனத்தையே தாயுமானவரும் தெள்ளற விளக்கியிருக்கிறார்.

உடல்குழைய என்பெலா நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற

ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே ஒருரவும் உள்ளி உள்ளி

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குறப் பாடியாடிக் குதித்து

(அலாய்சியஸ் I 579)

கடவுள் என்னும் சொல் தமிழ்ச் சொல்லேயென்றும் அச்சொல்லை முதலில் கையாண்டவர்கள் சமண முனிவர்களேயென்றும் அது நன்மையென்று பொருள்தரும் என்றும் புத்தரையே அவர்கள் ஆதிதேவனென்றும் கடவுள் என்றும் குறித்தார்களென்றும் உலகத்தைப் படைத்த கடவுள் ஒன்று உண்டு என்று பேசுவதெல்லாம் வீண் என்றும் ஒரு கடவுள் இல்லாததால்தான் பல சமயத்தார் பல கடவுளைப் பற்றிப் பேசி வருகின்றார்களென்றும் வாதிடும் தாசர் தம் கருத்திற்கு அரண் செய்யத் தாயுமானவர் பாடல்களையும் கொண்டு வருவது வியப்பளிக்கும். அவர் அதற்குச் சான்று காட்டும் பாடல்,

எனதென்பதும் பொய் யானெனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும்

நினதென்பதும் பொய் நீயெனல் பொய் நிற்கு நிலைக்கே தேசித்தேன்

மனதென்பதுவோ என் வசமாய் வாராதைய நின்னருளே

தன தென்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே.

(அலாய்சியஸ் II 30)

என்பதாகும். இப்பாடலை “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் தொடருக்குப் பொருள் கூறும்போது தாசர் பயன்படுத்துவார்.

அவன் செய்த கன்மத்தை அவனே அனுபவித்துத் தீரல் வேண்டும்; பல சீவர்கள் செய்யும் குற்றங்கள் யாவற்றிற்கும் ஒருவன் காரணன் என்று கூறுவது ஒவ்வாத மொழியாகும். அவன் செயல் நற்செயலாயின் நற்பலன் அடைவான். துற்செயலாயின் துற்பலனடைவான். அவ்விரு வினைப் பயனுடன் ஓரணுவேனும் அகற்றலாகாது.

இப்பொருளை வலியுறுத்தும்போது “தானான தன் மயமே யல்லால்” என்று தாயுமானவர் வேறோரிடத்தில் கூறியுள்ளதையும் மேற்கோள் காட்டி “தனக்கு அன்னிய வேறு மயமில்லை” என்பதே முடிந்த முடியென்பார் (அயோத்திதாசர் II 115).

ததாகதர் ஒரு முறை அன்பர்களை அழைத்துத் தாமரை மலர்களையும் தாமரைக் கொட்டைகளையும் கொண்டு வரச் செய்து அவற்றைப் பூமியில் பரப்பி அவற்றின் மேல் அமர்ந்து “தாமரை நீரிலிருந்தும் நீர் ஒட்டாமல் இருப்பது போல் நான் உங்களுடன் கலந்திருந்தும் பற்றற்று இருக்கிறேன்” என்று அறிவுறுத்தியதால் அன்று முதல் தாமரைக் கொட்டைக்குக் குருமணி என்றும் தாமரை மலருக்குத் தாமரையென்றும் பெயர் உண்டாயிற்று என்று ஒரு தொன்மத்தைக் கட்டமைக்கும் தாசர்,

செங்கமல பீடமேல் கல்லால டிக்குள்வளர்

சித்தாந்த முத்தி முதலே

குருமணி இழைத்திட்ட சிம்மாதனத்தின் மிசை

கொலு வீற்றிருக்கு நின்னை

எனும் தாயுமானவர் கூற்றில் போற்றப்படுவது புத்தரே எனச் சுட்டுவார் (அலாய்சியஸ் II 224).

தாசரின் கட்டுரைகளில் “நிகள பந்தக் கட்டறுப் பாரே” எனும் தாயுமானவரின் அடியும் ஒரு முறைக்கு மேல் மேற்கோளாக வரக் காணலாம். பர்மாவைச் சேர்ந்த பெளத்த குரு ஒருவரின் இறப்பிற்குப் பின் அவரது கால் பெருவிரல் கட்டப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு,

“பெளத்த குருக்களில் சமணநிலையில் உள்ளவர்கள் பிணி மூப்பை வெல்லாதவர்கள்; அரகத்து நிலையடைந்தவர்கள் பிணி, மூப்பை வென்றவர்கள்; பெருவிரலைக் கட்டுவது நமது நாட்டிலும் உண்டு. பர்மாவிலும் உண்டு, அவ்வாறு கட்டுதற்குக் காரணம் உலக பாச பந்தக் கட்டு விடவில்லையென்பதைக் குறிக்கவே இதனால் தான் தாயுமானவர் பதிகள பந்தக் கட்டு அவிழ்ப்பாரே” என்றுரைப்பார் (அலாய்சியஸ் III 75)

என்பது தாசர் அளிக்கும் விடை. வேத நெறியாளர்கள் என்றும் பிராமணர்கள் என்றும் அந்தணர்கள் என்றும் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் சமண, பெளத்த நூல்களில் பெரும்பாலானவற்றை அழித்ததோடல்லாமல் தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களிலெல்லாம் இடைச்செருகலையும் பாட வேறுபாடுகளையும் புகுத்தி அவற்றின் உயிர் நாடியான கருத்துக்களைச் சிதைத்தார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டும் வண்ணம் திருக்குறள், சீவகசிந்தாமணி, அறநெறிச்சாரம் போன்ற அறநூல்கள், ஒளவையின் பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் மறு ஆய்வு செய்து அவற்றின் பொருளைப் புத்தநெறிக்கேற்ப விளக்குவதோடு சிவவாக்கியர், இடைக்காடர் போன்ற சித்தர்களையும் தாயுமானவர் போன்ற அனுபூதிமான்களையும் மீள் பார்வைகளின் மூலம் பெளத்த சமயச் சார்புடையவர்களாகவே காட்டுகிறார். பகைவர்களைப் பழிவாங்க வன்முறைகளில் தாமும் ஈடுபடாது பிறரையும் தூண்டாது அவர்களுக்கு இரக்கம் காட்டி அன்பு வழியில் திருத்த முயல வேண்டும் என்பது அவர் நம்பிக் கடைப்பிடித்த கொள்கை. அதற்கேற்பவே பழந்தமிழ் இலக்கியங்களை இத்தகைய மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார் தாசர் என்பது பெரும் பாராட்டுக்குரியதாகும்.