ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/புத்தசரிதமும் ஆதிவேதமும்

7

புத்தசரிதமும் ஆதிவேதமும்


அசுவகோசர் வடமொழியில் எழுதிய புத்தசரிதம் இருபத்தெட்டுக் காண்டங்களைக் கொண்டது.ஆனால் அவற்றுள் முதல் பதினான்கே இப்பொழுது நமக்குக் கிடைக்கின்றன. எஞ்சிய பதினான்கும், திபெத்திய, சீன மொழி பெயர்ப்புகளில் கிடைப்பதால் புத்த சரிதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பாளரான ஈ.எச். ஜான்ஸ்டன் (E.H.Johnston) முதல் பகுதிக்கு வடமொழி மூலத்தையும் இரண்டாம் பகுதிக்கு மற்ற இரண்டு மொழிபெயர்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் தமது நீண்ட ஆய்வு முன்னுரையில் அசுவகோசர் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலோ அல்லது இரண்டாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவரது மொழிநடையிலிருந்து அவர் காளிதாசனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் பிராமணராகப் பிறந்து பிராமணர்களுக்குரிய கல்வியைக் கற்றிருக்க வேண்டுமென்றும் வால்மீகி இராமாயணத்தின் தாக்கம் அவர் நூலில் மிகுதியாக இருக்கிறதென்றும் பிராமணர்கள் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பை அவர் நூலிலிருந்து அறிய முடியுமென்றும் புத்தசரிதம் தவிர சவுந்தர நந்தா, சாரிபுத்திரப் பிரகரணா எனும் இரண்டு நூல்களையும் அவர் எழுதியிருக்கலாம் என்றும் எடுத்துரைப்பார். சித்தார்த்தரின் சகோதரனாகிய நந்தனின் சமயமாற்றத்தைப் பதினெட்டுக் காண்டங்களில் பேசுவது சவுந்தர நந்தா எனும் காப்பியம் சாரிபுத்திரர், மெளத கல்யாயனர் ஆகிய இருவரின் சமய மாற்றம் பற்றிப்பேசும் ஒன்பது அங்க நாடகம் சாரிபுத்திரப்பிரகணம் ஆகும்.

திபெத்திய, சீன மொழிபெயர்ப்புகள் அவர் வேறு பல நூல்களும் எழுதியிருப்பதாகத் தெரிவிப்பினும் அவையெல்லாம் அவருடையவையாக இருக்க முடியாதென்பது ஜான்ஸ்டனின் முடிவு. புத்த சமயத்தின் ஹீனயானப் பிரிவினைச் சார்ந்தவராகவே அசுவகோசரை அவரது புத்த சரிதம் காட்டும் என்பதும் மொழிபெயர்ப்பாளரின் கருத்து.

புத்தசரிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் காண்டங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் அதில் கூறப்படும் வரலாற்றின் தன்மையைப் புலப்படுத்தும்.

காண்டம் 1: புண்ணிய மூர்த்தியின் பிறப்பு

காண்டம் 2: அரண்மனையில் வாழ்க்கை

காண்டம் 3: இளவரசரின் உள்ளக் கலக்கம்

காண்டம் 4: புறக்கணிக்கப்பட்ட பெண்கள்

காண்டம் 5: வெளியேறல்

காண்டம் 6: சந்தகனைத் திருப்பி அனுப்புதல்

காண்டம் 7: தவச்சோலையினுள் நுழைதல்

காண்டம் 8: அரண்மனையில் புலம்பல்

காண்டம் 9: இளவரசனுக்குத் தூது

காண்டம் 10: சிரெண்யரின் வருகை

காண்டம் 11: உணர்ச்சிகளை வெறுத்தொதுக்குதல்

காண்டம் 12: அராதரைச் சந்தித்தல்

காண்டம் 13: மாரனின் தோல்வி

காண்டம் 14: ஞான ஒளி பெறல்

காண்டம் 15: அறவாழியின் சுழற்சி

காண்டம் 16: பல சமயமாற்றங்கள்

காண்டம் 17: பெருமைக்குரிய அடியார்களின் சமய மாற்றம்

காண்டம் 18: அனாதபிண்டதருக்கு அறிவுரை

காண்டம் 19: தந்தையும் மகனும் சந்தித்தல்

காண்டம் 20: ஜேத வனத்தை ஏற்றுக்கொள்ளுதல்

காண்டம் 21: சமயப் பரப்பில் முன்னேற்றம்

காண்டம் 22: அம்ரபாலியின் பூங்காவிற்குச் செல்லல்

காண்டம் 23: உடல் வாழ்க்கையின் கூறுகளை நிர்ணயித்தல்

காண்டம் 24: லிச்சவிகளுக்கு அருள் புரிதல்

காண்டம் 25: நிர்வாண நிலை நோக்கிப் பயணம்

காண்டம் 26: மகாபரி நிர்வாணம்

காண்டம் 27: நிர்வாண நிலையின் பெருமை

காண்டம் 28: நினைவுச் சின்னங்களின் பங்கீடு

புத்த சரிதத்தின் இறுதியில் அசுவகோசர் தமது கல்வியறிவைக் காட்டிக் கொள்வதற்காகவோ, காவியம் பாடும் ஆற்றலை வெளிப்படுத்தவோ புத்தர் வரலாற்றை எழுதவில்லையென்றும் பொதுமக்களின் நன்மையும் இன்பமும் கருதியே அச்செயலைச் செய்ய முன்வந்ததாகவும் சொல்வார். பெளத்த சமயக் கோட்பாடுகளில் தம்மை வல்லுநராகக் காட்டும் முயற்சியை மேற்கொள்ளாமல் அவற்றை யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் தரும் பணியையே செய்துள்ளார். சொந்தக் கருத்துகளை வலியுறுத்துவது அவர் நோக்கமன்று. அவர் காலத்தில் அச்சமயம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததோ அவ்வாறு விளக்கமாக, முழுமையாகத் தர முயல்கிறார். புத்தர் வாழ்ந்த காலத்திற்குக் குறைந்தது ஐந்தாறு நூற்றாண்டுகள் பின் வாழ்ந்து புத்தரின் உண்மையான வரலாற்றை அறிந்து சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. காவியநடை கருதி சில கற்பனைக் காட்சிகளைச் சேர்க்கிறார் என்பது தெளிவு. பாத்திரங்களின் உரையாடல்களும் உண்மை வரலாற்றைப் பிரதிபலிப்பவையாக இல்லை. புத்தருடைய அறிவுரைகள் வருமிடங்களில் எல்லாம் பாலிமொழியிலுள்ள புத்தருடைய போதனைகளில் பல எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஏராளமான உவமைகள் கவிஞரால் சேர்க்கப்பட்டவையே. அவருக்குமுன் புத்தரைப்பற்றி எழுதப் பெற்ற நூல்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவற்றையொட்டித் தம் காவியத்தை அசுவகோசர் எழுதியுள்ளார் என்பதே உண்மை. சீனயாத்திரிகரான ஹியன் சாங் (Hiuan Tsang) அசுவகோசரின் நூல்களை உயர்வானவையாக மதிப்பிடவில்லை. பாடலிபுரத்தில் சில தீய ஆவிகளோடு அசுவகோசர் போரிட்டதை அவர் மட்டுமே குறிப்பிடுகிறார். எனினும் அசுவகோசர் கவிஞராகவும் புத்த சமயக் கொள்கைகளைத் தெளிவாகத் தந்தவராகவும் இந்திய மக்களின் நினைவில் இடம்பெற்றுள்ளார்.

அசுவகோசரின் புத்தசரிதத்தில் மகாபாரத, இராமாயணக் கதைகள் பெரிதும் சுட்டப்பெறுகின்றன. இவை புத்தரும் புத்தசமயமும் புறக்கணித்த நம்பிக்கைகளை உட்கொண்டவை. சித்தார்த்தனின் பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது, அவன் “அவுர்வா தொடையிலிருந்தும், பிருது கையிலிருந்தும், மாந்தாத்ரு தலையிலிருந்தும், கக்சிவத் அக்குளிலிருந்தும் பிறந்ததுபோல்” அரசியின் விலாப்பகுதியிலிருந்து வலியின்றிப் பிறந்தான் என்று முதற்காண்டம் கூறும் (சரிதம் 3). புத்தரைத் தங்கள் வலையில் வீழ்த்துமாறு ஏவப்பட்ட பெண்களுக்கு, ஒரு புரோகிதனின் மகன் பெண்ணின்பம் எவ்வாறு பல பெரிய முனிவர்களைக் கவிழ்த்துள்ளது என்பதற்குச் சான்றுகள் தருகின்றான். வியாசர் காசிசுந்தரியெனும் பரத்தையால் காலால் உதைக்கப்பட்டார்; மந்தால கெளதமர் ஒரு பரத்தையை மகிழ்விக்க வேண்டிப் பிணங்களைச் சுமந்தார். தீர்க்கதபாசு கெளதமர் முதிய வயதில் கீழ்ச்சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணால் இன்பம் பெற்றார். பெண்ணினம் பற்றி ஏதும் அறியாத ரிஷ்யசிருங்கர் சாந்தா என்பவளால் ஏமாற்றப்பட்டார்; அருந்தவம் செய்த விசுவாமித்திரரை அப்சரசான கிருதாசி மயக்குவதில் வெற்றி பெற்றாள் (சரிதம் 47). இத்தகைய கதைகளெல்லாம் புத்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு “வேஷ பிராமணர்களால்” எழுதப் பெற்றவையென்பது அயோத்திதாசரின் முடிவாகும். ஒழுக்கத்திற்குத் தலையாய இடம் தரவேண்டுமென்று அறிவுறுத்திய புத்தரின் வரலாற்றில் பல ஆபாசக் கதைகளும் நுழைக்கப்பட்டிருக்கின்றன. முறையற்ற வகையிலும் பெண்ணின்பம் பெறுவதில் தவறில்லையென்று சித்தார்த்தருக்கு அறிவுரை கூறும் உதாயின்,

காமமே தலையாய நன்மையென்று அறிந்த புரந்தரன் கெளதமரின் மனைவியாகிய அகலிகையைக் காதலித்தான்; சோமனின் மனைவியாகிய ரோகினியைக் கேட்ட அகத்தியன் அவளைப் போன்றிருந்த லோப முத்திரையைப் பெற்றான்.

நோன்புகள் பல நோற்ற பிருகஸ்பதி உததியாவின் மனைவியாகிய மமதாவின் வழி பரத்வாஜரைப் பெற்றான்.

சந்திரன் பிருகஸ்பதியின் மனைவி பூசை செய்து கொண்டிருந்த பொழுது அவளைச் சேர்ந்து புதனைப் பெற்றான்.

பராசரன், ஒரு மீனின் மகளாகிய காளியை யமுனை நதிக்கரையில் புணர்ந்தான்.

வசிஷ்டன் அக்சமாலா எனும் இழிகுலத்துப் பெண்ணோடு கூடி, ஒரு மகனைப் பெற்றான் (சரிதம் 55-56).

பிறன்மனை நயந்த கயவர்களெல்லாம் பெரியவர்களாகப் பேசப்படும் கதைகள் கண்டிக்கப் பெறாமல் பின்பற்றப்படவேண்டிய சான்றுகளாகத் தரப்படுகின்றன.

வால்மீகி இராமாயணத்தில் அனுமன் இலங்கையில் புத்த விஹாரத்தைப் பார்த்தது குறிப்பிடப்பட்டிருந்ததாலும், வேறு சில குறிப்புகளாலும் இராமன் புத்தருக்கு முன் வாழ்ந்தவன் என்பதெல்லாம் வெறும் கற்பனையென்று அயோத்திதாசர் சுட்டுவார். ஆனால் இராமாயணப் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் புத்த சரிதத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.

சந்தகன் சித்தார்த்தரிடம் “இராமனைக் காட்டில் விட்டுவிட்டு நகருக்குத் திரும்பிய சுமந்தரனைப்போல் நான் உம்மை இங்கே விட்டுவிட்டு ஊர் திரும்பமாட்டேன்” என்று சொல்கிறான் (சரிதம் 85).

“சித்தார்த்தர் இல்லாமல் சந்தகன் மட்டும் திரும்பியதைக் கண்ட ஊர் மக்கள் தசரதனின் மைந்தனில்லாமல் அவனது தேர் திரும்பியதைக் கண்டவர்கள் போல் வருந்தி அழுதனர்” (சரிதம் 105).

“அவனுடைய அறிவுடைய மைந்தனாகிய இராமன் காட்டுக்கேகியவுடன் கண்ணீர் வடிக்கும் துயர வாழ்வை மேற்கொள்ளாமல் தசரதன் விண்ணுலகம் சென்றானாதலால் அவன் நான் பொறாமை கொள்ளுதற்கு உரியவன்” என்று சுத்தோதனன் வருந்தினான் (சரிதம் 121).

புத்தரைக் காட்டில் பார்க்கச் சென்ற புரோகிதனும் அமைச்சனும் இராமனைக் காட்டில் பார்க்கச் சென்ற ஊர்வசியின் மகனையும் வாமதேவரையும் போன்றிருந்தார்கள் (சரிதம் 124).

அயோத்திதாசர் புத்தருடைய மொழிகளே வேதங்களென்றும் புத்தரே ஐம்புலன்களையும் வென்றமையால் ஐந்திரர் என்றும் இந்திரர் என்றும் அழைக்கப்பட்டார் என்றும் கூறுவார். புத்தசரிதம் வேதங்களில் குறிக்கப்படும் விண்ணுலக இந்திரனைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் அடிக்கடி பேசுகிறது. தாசர் சமண, பெளத்த அரகத்துகளே பிராமணர்களென்றும் அந்தணர்களென்றும் அழைக்கப்பட்டார்கள் என்றும் பின்னால் தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டவர்கள் வேடதாரிகளே என்றும் எடுத்துரைப்பார். புத்தசரிதத்தில் அவர்கள் பெருமையாகப் பேசப்படும் இடங்கள் பல. அவைகளெல்லாம் அசுவகோசருக்குப் பின்னால் வந்தவர்கள் செய்த இடைச் செருகல்களாக இருக்கலாம்.


குழந்தை சித்தார்த்தன் கந்தனோடு ஒப்பிடப்பெறுதலையும் காணலாம். தவ வலிமையால் புத்தரின் பிறப்புபற்றி அறிந்த அசிதன் என்னும் முனிவன் சாக்கிய அரசனின் அரண்மனைக்கு வருகிறான். “அந்திதேவன் வசிட்டனுக்கு மரியாதை செய்ததுபோல் அவனுக்குச் சிறப்புச் செய்தபின்” அரசன் குழந்தையை அவனிடம் காட்டுகிறான். இளவரசன் “பாதங்களில் சக்கரரேகை இருப்பதையும் கை விரல்களும் கால்விரல்களும் மெல்லிய தசையால் இணைக்கப் பட்டிருப்பதையும் இரண்டு புருவங்களுக்கு இடையே மயிர் வட்டம் இருப்பதையும் ஆண்குறியின் காய்கள் யானைக்கிருப்பன போல் பின்னுக்குத் தள்ளியிருப்பதையும்” முனிவன் கண்டு வியப்படைகிறான். “தேவியின் மடியிலிருந்த அக்னியின் குழந்தையைப்போல் சித்தார்த்தன் இருந்ததைக் கண்டு” அவன் கண்ணீர் வடித்தான் (சரிதம் 13).

அசுவகோசரின் புத்தசரிதத்தில் இயற்கையிகந்த நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படவில்லை. பொதுமக்களைக் கவரவேண்டி, புத்தரும் அவரைச் சார்ந்தவர்களும் அற்புதங்களை நிகழ்த்தவேண்டியுள்ளது. எதிரிகளை வீழ்த்துவதற்குச் சமயக்கோட்பாடுகளைவிட அற்புதச் செயல்களே அதிகம் பயன்படுகின்றன. காஸ்யபர் என்பவரைப் புத்தர் தம்நெறிக்குக் கொண்டுவந்த பின் மகத நாட்டு மக்கள் பலர் கூடியிருந்த அவையில் அவரது மந்திர ஆற்றலைக்காட்டுமாறு பணிக்கிறார். காஸ்யபரும் பல செப்பிடு வித்தைகள் செய்து மக்களைக் கவர்கிறார்.

“காஸ்யபர் தம்மை ஒரு பறவையாக மாற்றிக்கொண்டு காற்றில் பறந்தார். அதி அற்புத ஆற்றல்களால் வானில் நின்றார்; தரையில் நடப்பதுபோல் வானில் நடந்தார்; படுக்கையில் அமர்வதுபோல் வானில் அமர்ந்தார். பிறகு படுத்தார்.

ஒருசமயம் தீயைப் போன்று ஒளி வீசினார்; ஒரு சமயம் மேகத்தைப்போன்று நீரைக் கொட்டினார்; ஒரு சமயம் தீயைப்போன்று ஒளிவீசி, நீரையும் உடன்கொட்டினார்; மழை பெய்யும் மேகம் போன்றும் மின்னல் கீற்றுகள் போன்றும் காட்சி அளித்தார்.

மக்கள் அவரைப் பார்த்துப் பெருவியப்புற்றனர்; அவர் காது கண்கள் அவரையே உற்றுநோக்கின; அவருக்கு மரியாதை செலுத்தி அரிமா போன்று முழக்கம் செய்தனர்.

அவருடைய வித்தைகளை முடித்தவுடன் புத்தருக்குத் தலைதாழ்த்தி வணக்கம் செய்து, “நான் கடமையை ஒழுங்காகச் செய்த மாணவன்; என்னுடைய தலைவர் புண்ணியமூர்த்தி ஆவார்” என்று கூறினார்” (சரிதம் 21).

புத்தரும் தன் தந்தையைச் சந்திக்கும்போது பலவித்தைகளைச் செய்து காட்டுவதாகப் புத்தசரிதம் கூறுகிறது.

புத்தர், அவருடைய தந்தை இன்னும் அவரைத் தம் மகனாகவே கருதுவதை அறிந்து அவர்பால் இரக்கம் கொண்டு அவருக்காக விண்ணிற்குப் பறந்தார்.

கதிரவனின் தேரைத் தன் கையால் தொட்டார்; விண்ணில் காற்று வீசும் பாதையில் காலால் நடந்தார்; தண்ணீரில் தரையில் நடப்பது போல் நடந்தார்; அமைதியாக மலையை ஊடுருவிச் சென்றார்.

அவருடைய உடலின் ஒரு பகுதியால் மழையைப் பொழிந்தார். இன்னொரு பகுதியால் தீயைப்போல் ஒளிவீசினார்.அவரிடம் பேரன்பு கொண்டிருந்த மன்னனுக்கு இச்செயல்களால் மகிழ்ச்சியூட்டிய புத்தர் விண்ணில் இரண்டாவது கதிரவனைப்போல் வீற்றிருந்து கொண்டு, அவனுக்கு அறத்தைப் போதித்தார் (சரிதம் 44).

செப்பிடுவித்தைகளைக் காட்டியதன் மூலமே மன்னனின் மனத்தைத் தம்பால் திருப்பி, அறவுரை கேட்கும் ஆர்வத்தை அவனிடம் புத்தர் தூண்ட முடிந்தது என்றும் புத்தசரிதம் கூறும் (சரிதம் 45).

புத்தருடைய அற்புதச் செயல்கள் மண்ணுலகில் மட்டுமல்லாமல் விண்ணுலகிலும் நிகழ்த்தப்பெறுகின்றன. பல அறிஞர்கள் கூடி அவரை அற்புதங்கள நிகழ்த்துமாறு கேட்கின்றனர். அவரும் தம் மந்திர ஆற்றலைக் காட்டச் சம்மதிக்கிறார். வேறு சமயக்கோட்பாடுகளைக் கொண்டவர்களையெல்லாம் விந்தைகள் செய்து தோற்கடிக்கிறார். விண்மீன்களிலும் ஒளிவீசும் பரிதிபோல் காட்சி தந்த பின் மூவுலகையும் தாண்டி வானவர் வாழும் இடத்தை அடைந்து தம் தாயைச் சந்தித்து அறவுரைகூறிப் பெளத்த தர்மத்திற்கு அவரை மாற்றுவதாகவும் புத்தசரிதம் கூறும்.

வானவர் உலகத்திலேயே கார்காலத்தில் வாழ்ந்து தேவர்களின் அரசனிடமிருந்து பிச்சையேற்று உண்டு விண்ணுலகங்களிலிருந்து கீழ் இறங்கினார். மன அமைதியை அடையப்பெற்றிருந்த தேவர்கள் தங்களுடைய மாளிகைகளில் நின்றுகொண்டு அவர் செல்வதைத் தம் கண்களால் இறுதிவரை பார்த்தனர். மண்ணுலகிலிருந்த அரசர்கள் விண்ணை நோக்கித் தம் கண்களை உயர்த்தி அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்றனர். வானவர் உலகிலிருந்த அவரது அன்னையையும் வானவரில் விருப்பமுள்ளவரையும் தம் அறத்திற்கு மாற்றிய பிறகு அவர் இவ்வுலகிற்குத் திரும்பினார் (சரிதம் 55-56).

புத்த சரிதத்தின் இறுதிப்பகுதியில் வரும் புத்தர் பெளத்த தன்மத்தைப் பரப்பும்போது அறக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வதோடல்லாமல் அவ்வப்போது அற்புதங்களும் நிகழ்த்துகிறார். செளதாசனைப்போன்று கொடிய பிராமணனான அங்குலிடமாலனைச் சமயமாற்றம் செய்ய அவர் பயன்படுத்தியது மந்திரவலிமையே (சரிதம் 57). தேவதத்தன் என்பான் புத்தரின் புகழால் ஏற்பட்ட அழுக்காறு காரணமாக அவருக்கு எதிராகப் பல தீச்செயல்களில் ஈடுபட்டதாக இருபத்தோராம் காண்டம் விளக்கும்.

அவனுடைய மனம்கெட்டதால் அவருடைய குடியைச் சார்ந்தவரிடையே பிளவை ஏற்படுத்தினான். கிருதரக்கூட மலையிலிருந்து அவரைக்குறி வைத்து ஒரு பெரும் பாறையைத் தள்ளினான். அது அவர்மேல் விழாமல் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. ததாகதர் இருந்த திசையில் யானைகளின் மிகப் பெரியதொன்றைக் கட்டவிழ்த்து விட்டான். அது வழியிலிருந்த பலரைக் கொன்று குவித்து முன்னேறியது. ராஜ கிருகத்தில் இருந்தவர்கள் கூக்குரலிட்டுக் கதறினர். அவர் அதனை நோக்கி அமைதியாக அடிமேல் அடி வைத்துச் சென்றார் . . . அவருடைய அடியார்கள் பலரும் அவரைவிட்டு ஓடி ஒளிந்தனர். ஆனந்தர் மட்டுமே அவர் பின் சென்றார். பித்தம் தலைக்கேறிய யானை அவரை நெருங்கியவுடன் அவரது ஆன்மிக ஆற்றலால் பித்தம் தெளிந்து தலையைத் தரையில் வைத்துப் பணிந்து நின்றது. அவருடைய அழகிய கையால் அதன் தலையைத் தடவிக் கொடுத்த முனிவர் அதற்கு அறவுரை கூறினார்.

பாவமற்றவரைக் கொல்வது துயரத்தைக் கொடுக்கும். யானையே, பாவமற்றவருக்குத் தீமை செய்யாதே, பாவமற்றவரைக் கொலை செய்வார் எட்டு நல்ல பிறவிகளில் பிறவிக்குப்பிறவி முன்னேற்றம் அடைய முடியாது. உணர்ச்சி மிகுதி காரணமாகப் பிறவிக்கடலாகிய படுகுழியில் மீண்டும் விழுந்து விடாதே.

இதுகேட்ட யானை மன அமைதியும் மகிழ்ச்சியும் பெற்றது. . . பல பாவங்களையும் கொடுமைகளையும் செய்த தேவதத்தன் யாவராலும் இகழப்பட்டுக் கீழ் உலகத்தில் வீழ்ந்தான் (சரிதம் 62-63).

சித்தார்த்தனைப் புத்தனாக்குவதற்கு விண்ணிலிருக்கும் தேவர்கள் அவ்வப்போது தமது பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று புத்த சரிதம் காட்டுகிறது.

இளவரசன் அரண்மனையிலிருந்து தேரிலேறி அரச வீதியில் செல்லும்போது நகரம் விண்ணுலகம்போல் இருக்கக் கண்ட தேவர்கள் அவன் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு முதியவன் வழியில் இருப்பதைப் போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்கினார்கள். அம் முதியவன் ஏன் அவ்வாறு முதுமைக் கோலத்தில் இருக்கிறான் என்று புரியாத இளவரசன் அதுபற்றித் தேரோட்டியைக் கேட்க, தேவர்கள் தேரோட்டி தன்னையறியாமல் உண்மையைச் சொல்லுமாறு அவனது உணர்வை மயக்கி விடுகிறார்கள் (சரிதம் 37).

இரண்டாம் முறை மன்னனின் அனுமதியுடன் இளவரசன் வெளியில் செல்லும்போதும் “அதே தேவர்கள்” பிணியால் பீடிக்கப்பட்ட உடலை உடைய மனிதனைப் படைக்கிறார்கள். அவனைப் பார்த்து மனம் வருந்தும் இளவரசன் அதுபற்றித் தேரோட்டியைக் கேட்கத் தேரோட்டி மக்களை நலியச் செய்யும் நோய் பற்றி அவனுக்கு விளக்குகிறான் (சரிதம் 39).

தேரோட்டியையும் தேரையும் மன்னன் மாற்றிவிட்டு மூன்றாம் முறை இளவரசன் வெளியே செல்ல அனுமதிக்கிறான். இம்முறையும் “அதே தேவர்கள்” ஒரு பிணம் தூக்கிச் செல்லப்படும் காட்சியை இளவரசனும் தேரோட்டியும் மட்டும் காணுமாறு படைக்கிறார்கள். அதுபற்றித் தேரோட்டியை இளவரசன் வினவ அவன் எந்த உண்மையைச் சொல்லக்கூடாதோ அந்த உண்மையைச் சொல்லுமாறு அவனது உணர்வை மயக்கி விடுகிறார்கள் (சரிதம் 41).

இளவரசனுடைய மாளிகையில் அழகிய இளம் பெண்கள் நிறைந்திருந்து இசைக்கருவிகளை மீட்டி அவனுக்குக் களிப்பூட்ட முயல்கிறார்கள். ஆனால் “சுந்தாவாசத்தேவர்களின் ஐந்து வகைகளில் மிகவுயர்ந்தவர்களான அகனிஷ்தர்கள்” அவனது திடமனத்தைக் கண்டு அப்பெண்களையெல்லாம் தூங்குமாறும் அவர்கள் தூங்கும்போது அவர்கள் அங்கங்கள் எல்லாம் அருவருப்பூட்டும் நிலையில் தெரியுமாறும் செய்தார்கள் (சரிதம் 70).

நள்ளிரவில் யாரும் அறியாமல் காட்டிற்கேகிய இளவரசன் தேரோட்டியிடமிருந்த உடைவாளை வாங்கித் தன் தலையணியை அறுத்துத் துக்கியெறியும் போது அதை விண்ணுலகிலிருந்த தேவர்கள் பிடித்துத் தாங்கள் வணங்குவதற்காக வைத்துக் கொள்கிறார்கள். இளவரசன் தன் உடையை நீக்கி விடவேண்டும் என்று எண்ணியவுடன் விண்ணுலகத்தேவன் ஒருவன் காவி உடையணிந்து மான்வேட்டை ஆடும் வேட்டைக்காரன் உருவத்தில் தோன்ற, அவர்கள் உடை மாற்றிக் கொள்கிறார்கள்.

சித்தார்த்தனுடைய வாழ்க்கையில் தேவர்கள் தலையீடும் துணையும் அளவுக்கதிகமாக இருப்பதாகப் புத்தசரிதம் காட்டுவதால் அவனுடைய துறவின் பெருமை சிதைக்கப்படுகிறது. இது புத்த சரிதத்தின் ஆசிரியரால் அறிந்து செய்யப்படுகிறதா, அறியாமல் செய்யப்படுகிறதா என்பது புரியவில்லை. சித்தார்த்தன் முதியவனையும் நோயுற்றவனையும் பிணத்தையும் கண்டு மாந்தர்களின் மூப்பு, பிணி, இறப்பு ஆகியவற்றிற்கு முடிவு காணவேண்டுமென்று அரண்மனையிலிருந்து காட்டிற்குச் சென்று வெவ்வேறு கோட்பாடுகள் கொண்ட முனிவர்களைச் சந்தித்து அவர்கள் கண்ட வழிகள் சரியில்லையென்று தீர்மானித்து உண்மை வழி எதுவென்று ஆராய முற்படுவதாகவே புத்தசரிதம் கூறும். பிராமணர்கள் பசு, குதிரை போன்ற விலங்குகளைக் கொன்று வேள்விகள் செய்யும் காட்சியோ அது கண்டு அவன் சினம் கொண்டு வேள்வியால் பயனில்லையென்றும் உயிர்க் கொலை பாவமென்றும் அவ்வாறு செய்து விண்ணுலகம் அடையலாம் என்ற அவர்களது நம்பிக்கை தவறானதென்றும் கூறும் காட்சியோ புத்தசரிதத்தில் இடம் பெறவில்லையென்பதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை யென்பதும் கருதற்குரியவை.

தவவனத்தை அடையும் இளவரசர் தவம் மேற்கொண்டுள்ள முனிவர்கள் பலரைப் பார்க்கிறார்; அவர்களோடு உரையாடி அவர்களுடைய நோக்கங்களை அறிகிறார். ஒரு பிராமணன் அத்தவவனத்தில் இருக்கும் முனிவர்களின் வாழ்க்கை பற்றிக்கூறும் விளக்கம் நீண்டதும் ஆய்வுக்குரியதும் ஆகும்.

இங்குள்ள முனிவர்கள் வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி சமையல் செய்யப்படாத உணவையே உட்கொள்வர். நீரில் வளர்வன, இலைகள், நீர், பழங்கள், கிழங்குகள் ஆகியவையே முனிவர்கள் உட்கொள்பவை. சிலர் பறவைகளைப்போல் தரையிலிருந்து பொறுக்கியெடுக்கக் கூடியவற்றை உண்பர்; சிலர் மான்களைப்போல் புல்லை மேய்வர்; மற்றவர் காட்டுக் காற்றினால் புற்றுகளாக மாற்றம் பெற்றுப் பாம்புகளோடு தங்களது பொழுதைக் கழிப்பர் . . . .

நீரில் நனைக்கப்பட்ட சடை முடிகளோடு சிலர் நாளைக்கிருமுறை அக்கினிக்குப் புனித நூல்களால் அவிகளை அளிப்பர்; மற்றவர் நீரில்மூழ்கி மீன்களோடு வாழ்வர்;

உரிய காலத்திற்கு இத்தகைய நோன்புகளைச் செய்து உயரியவற்றால் மோட்சத்தையும் தாழ்ந்தவற்றால் மாந்தர் வாழும் உலகத்தையும் அடைவர். ஏனெனில் ஆனந்தம் என்பது துன்பத்தின் வழியாகத்தான் அடையப் பெறுகிறது; தர்மத்தின் இறுதி நோக்கம் ஆனந்தம் என்று சொல்வார்கள் (சரிதம் 94-95).

இவைகளைக் கேட்ட சித்தார்த்தன் அவர்களுடைய வழி தவறானதென்றும், உடலை வருத்திக் கொள்வதுதான் தர்மம் என்றால் உடலின்பம் தர்மத்திற்கு மாறானதென்றும் தர்மத்தினால் மறு உலகில் இன்பம் அடையலாமென்றால் இவ்வுலகில் தர்மத்தால் கிடைக்கும் பயன் தர்மத்திற்கு எதிரானதென்றும் எண்ணினான்.

தூய்மையான உணவை உண்ணுவதன்மூலம் தான் புண்ணியம் அடையமுடியுமென்றால் மான்களுக்குப் புண்ணியம் சேரவேண்டும். செல்வம் இல்லாததால் எளிய உணவை உட்கொள்வார், தர்மம் பற்றி அறியாதபோதும் புண்ணியம் பெற வேண்டும் . . . தங்களுடைய செயல்களைத் தூய்மையாக்கிக் கொள்ளத் தங்கள் தலைகளில் தண்ணிரைத் தீர்த்தமென்று தெளித்துக் கொள்வார்க்கு அவர்களுடைய மனநிறைவு உணர்வு அளவிலேயே நின்றுவிடும். ஏனெனில் தண்ணிர் ஒரு பாவியைத் தூய்மைப்படுத்த முடியாது (சரிதம் 97).

அவ்வனத்தில் தவம் செய்து வந்தவர்களின் தலைவர் சித்தார்த்தனை அவ்வனத்திலேயே அவர்களோடு தங்கிவிடுமாறு சொன்னபோதும் அவர் “உங்களுடைய தர்மம் மோட்சத்தைக் குறித்தது; என்னுடைய விருப்பம் பிறப்பிலிருந்து விடுதலை பெறுவது” என்று விடையிறுத்து வெளியேறினார் (சரிதம் 101).

காட்டுக்கேகிய சித்தார்த்தனை மீண்டும் நகரத்திற்கு அழைத்து வருவதற்காக அரசனால் அனுப்பப்பட்ட அமைச்சனும் புரோகிதனும் சித்தார்த்தனைச் சந்தித்து நிகழ்த்தும் உரையாடலில் வேள்விகளின் தீமை பற்றிய பேச்சோ, வருணப்பாகுபாடுகள் பற்றிய விவாதமோ இடம்பெறவில்லை. சித்தார்த்தனைத் தங்களோடு ஊர் திரும்ப வேண்டுமென்று சொல்லும் அமைச்சன்,

நீ தருமத்தைக் கடைப்பிடிப்பதற்கு இது தக்கசமயம் ஆகாது. வயதானகாலத்தில் உன்தந்தைக்குத் துயரம் அளிப்பது உன்னுடைய தருமமாக இருக்கமுடியாது. நீ தருமம், செல்வம், காமம் பற்றிப் பெற்றிருக்கும் அறிவு குறையுடையது. உன் கண்களுக்குமுன் இருக்கும் பொருளை இகழ்ந்துவிட்டு யாரும் பார்த்திராத பயன் ஒன்றைத்தேடி அரண்மனையை விட்டு வெளியேறுவது நுட்பமான அறிவைக்காட்டாது. சிலர் மறு பிறவி உண்டென்பர்; வேறு சிலர் இல்லையென்பர். இது ஐயத்திற்கு இடமான கருத்தாதலால் உனக்கு அளிக்கப்பெறும் நாட்டுரிமையை அனுபவிப்பது தான் சரியாகும் . . . சிலர் இறப்பிற்குப்பின் ஒரு வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் விடுதலை பெறுவதற்கான வழிகளை அவர்கள் விளக்கவில்லை.... நன்மை, தீமை, வாழ்க்கை, வாழ்க்கையின்மை ஆகியவையெல்லாம் இயற்கையான வளர்ச்சி என்று சிலர் விளக்குவர். இவ்வுலகம் இயற்கையான வளர்ச்சியின் விளைவென்றால், அல்லது விலங்கு பறவைகளின் வெவ்வேறான தன்மைகளை யார் உருவாக்குகிறார்கள்?

இவையெல்லாம் இயற்கையாக நிகழ்பவை. நம்முடைய விருப்பம் என்பதற்கோ, நம்முடைய முயற்சிக்கோ இங்கு இடமில்லை. வேறு சிலர் ஈஸ்வரனிடமிருந்துதான் படைப்பு உண்டாகிறது என்கிறார்கள்; அவ்வாறானால் மனிதனின் செயலுக்கு என்ன தேவை இருக்கிறது? இங்கு வருவதும் இங்கிருந்து போவதும் ஆத்மாவின் காரணமாக மட்டுமே என்று பிறர் உறுதியாகச் சொல்வார்கள். ஆனால் அவர்களே இங்கு வருவது முயற்சியின்றி நடைபெறுகிறதென்றும் இங்கிருந்து விடுதலை பெறுவது முயற்சியால் நிகழ்வதென்றும் விளக்குகிறார்கள். ஒரு மனிதன் தன் முன்னோர்களிடம் பட்ட கடனைக் குழந்தைகள் பெறுவதன்மூலமும் முனிவர்களிடம் பட்டகடனை வேதங்கள் மூலமும் தேவர்களிடம் பட்ட கடனை வேள்விகள் மூலமும் தீர்க்க வேண்டுமென்பதால் அவைகளைத் தீர்ப்பதன் மூலம் அவன் பெறுவதே முத்தியாகும். இவ்வேத நெறிகளின்படி முயல்பவனே விடுதலை பெறமுடியும் என்று அறிஞர்கள் கூறுவார்கள். தத்தம் ஆற்றலால் முத்தி பெறவிரும்புவோர் எத்துணை முயன்றாலும் தோல்வியும் சோர்வும் அடைவார்களே தவிர பயனேதும் பெற இயலாது. எனவே முத்தி அடைய நீங்கள் விரும்பினால் நான் விளக்கிய வழிகளைப் பின்பற்றவேண்டும். அவ்வாறு செய்தால் முத்தியும் பெறுவீர்கள்; அரசனின் துயரமும் முடிவுக்கு வரும் (சரிதம் 134-136).

என்றெல்லாம் எடுத்துச் சொல்வான். அதற்குச் சித்தார்த்தன் கூறும் விடையிலும் வேள்வி செய்து முத்தி அடையும் முயற்சி, மாந்தருக்குள் ஒரு சாரார்க்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவை பற்றிய கண்டனம் ஏதும் இல்லை.

இவ்வுலகில் வாழ்க்கை, வாழ்க்கையின்மை பற்றிய கேள்வியைப் பொறுத்தமட்டில் இன்னொருவருடைய சொற்களை வைத்துக்கொண்டு முடிவெடுப்பது என்னால் முடியாததாகும் . . . ஐயத்தில் பிறந்ததும் தெளிவற்று முன்னுக்குப் பின் முரணானதுமான ஒரு நெறியை நான் ஏற்பது முறையாகாது . . . நன்மை- தீமை பற்றிய விவாதத்தில் என்முடிவு நன்மையின் சார்பானதாகும். பயனற்றுப் போனாலும் நற்செயல் இகழத்தக்க தீச்செயல்மூலம் பெறும் இன்பத்தினும் சிறப்புடையதாகும் (சரிதம் 139).

என்பது அவர் தரும் விடையாகும்.

அராதமுனிவர் என்பார் சித்தார்த்தரிடம் தம்முடைய கோட்பாடுகள் பற்றிச் சொல்வதும் அதற்கு அவர் விடையளிப்பதும் ஒரு காண்டத்தில் கூறப்படுகின்றன. அவர் உலகநிலை பற்றி அளிக்கும் விளக்கம் சாங்கியாக் கோட்பாடு என்று அடையாளம் காணப்பட்டதாகும்.

முதல்தரப்பொருள், இரண்டாந்தரப்பொருள், பிறப்பு, இறப்பு, முதுமை - இவையே, இவை மட்டுமே, இருப்பவை என்று அழைக்கப்படும். முதல் தரப்பொருள் என்பதில் ஐந்து மூலங்கள், தன்முனைப்பு, அறிவு, காணமுடியாத ஆற்றல் ஆகியவை அடங்கும். புலன்களின் பொருள்கள், புலன்கள், கைகள், கால்கள், குரல், பிறப்பு உறுப்புகள், மலக்கழிவு உறுப்புகள், மூளை ஆகியவை இரண்டாந்தரப் பொருள்களாகும்.... எது பிறந்து, வளர்ந்து, முதுமையடைந்து, நோயால் நலிந்து, இறக்கின்றதோ அது ‘பார்க்கப்படுவது’ என்றும் அதற்கு மாறானது ‘பார்க்கப்படாதது’ என்றும் உணரப்படும் (சரிதம் 167-170).

இத்தகைய கருத்துகளையெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லும் அராதகர் அதே தர்மத்தை இன்னொரு முறையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்வதாக அசுவகோசர் சில கருத்துகளைத் தருவார். அவை சாத்திரங்கள் விதித்துள்ளபடி முத்தி நிலையை எவ்வாறு அடைவது என்பது பற்றியவை ஆகும்.

முத்தி பெறவிரும்புவோன் முதலில் குடும்பத்திலிருந்து நீங்கி, இரந்துண்ணும் கட்டுப்பாடான வாழ்வை மேற்கொள்கிறான்; கிடைப்பதைக் கொண்டு மன நிறைவோடு வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து விலகி தனி இடத்தில் தங்கி சாத்திரங்களை முறையாகப் படிக்கிறான்; புலனின்பங்களைத் துறந்து புலன்களை அடக்கி மன அமைதியைப் பெற முயல்கிறான்; அவன் அடையும் முதல் சுழுத்தி நிலை, பிறரிடம் அன்பு பாராட்டல், பிறருக்குத் தீமைசெய்ய விழைதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகும்.

. . . இரண்டாவது சுழுத்தி நிலை அடைபவன் ஆபாசுவர தேவதைகளின் மத்தியில் இடம்பெறுவான் . . . மூன்றாவது சுழுத்தி நிலை அடைந்து அதில் மூழ்கி மேலும் முன்னேற முயலாதவன் சுபகிருத்துன தேவதைகளோடு வாழ்வான்.

மூன்றாவது சுழுத்தி நிலை அடைந்தும் அதில் ஈடுபாடு கொள்ளாதவன் இன்பமும் துன்பமும் அற்றதுமான நான்காவது சுழுத்திநிலை அடைவான். அவ்வாறு அடைந்தவர்களுள் சிலர் அஃதே முத்தி என்று கற்பனை செய்துகொண்டு ஏமாறுவர். ஆனால் இவ்வழியில் மேலும் முன்னேறிச் செல்வோர் பிருகத்பாலத் தேவதைகளோடு இணைந்திருப்பர். அந்த ஆழ்நிலைத் தியானத்திலிருந்து வெளிப்பட்டு, ஞானியானவன் உடல் பெற்றிருப்பதால் விளையும் தீமைகளை உணர்ந்து உடலிலிருந்து விடுபடும் வழியை ஆராய்கிறான் . . . உடலின் கட்டிலிருந்து விடுபட்டவனே முத்தி நிலை அடைந்தவன் ஆவான் (சரிதம் 174-177).

அராதமுனிவரின் கோட்பாடுகளைக் கேட்கும் சித்தார்த்தன், அவர் சொல்லும் நெறி இறுதி முத்தியை அடையத்துணை செய்யாதென்றும் ஆன்மா தூய்மையடைவதாலேயே விடுதலை பெற்று விட்டதாகக் கருதமுடியாதென்றும் ஆன்மா தொடர்கின்ற வரை அறியாமையிலிருந்தும் ஆசையிலிருந்தும் செயலாற்றலிலிருந்தும் விடுபடுவது அவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டதாகாதென்றும் விடையிறுப்பான்.

அராதருடைய நெறியில் ஆன்மாவென்று ஒன்று கற்பிதம் செய்யப்படுவதால் ஏற்படும் பயன் ஏதும் இல்லையென்று கூறும் சித்தார்த்தன் அதற்கும் மேலான தத்துவத்தை அறிய வேண்டி உத்ரகர் எனும் முனிவரின் ஆசிரமத்திற்குச் செல்கிறான். அவருடைய நெறியும் ஆன்மாவென்று ஒன்று இருப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அதையும் சித்தார்த்தன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று புத்த சரிதம் கூறும்.

பிறப்பு, இறப்பு என்னும் வளையத்திலிருந்து விடுபட வேண்டிச் சித்தார்த்தன் அடுத்து மேற்கொண்டது உண்ணா நோன்பாகும். குறைந்த அளவு அரிசி, கனி, விதை ஆகியவற்றை மட்டும் உணவாகக் கொண்டு ஆறு ஆண்டுகள், கடுந்தவம் புரிந்ததால் அவன் உடல் நலிந்து, எலும்புந்தோலுமான பின்னும் மனவலிமையால் உறுதியோடிருந்த சித்தார்த்தன் முத்தி பெறுதற்கோ, ஞானம் அடைதற்கோ இது சரியான வழியன்று என்றும் பசியும் தாகமும் உடல்தளர்ச்சியை உண்டாக்குமே தவிர மன அமைதியைத் தரவியலாது என்றும் உணர்ந்து நல்ல உணவை உட்கொள்ள முடிவு செய்தான். நதிக்கரையிலிருந்து பழமரங்களின் கிளைகள் தாழ்ந்து அவன் பழங்களைப் பறித்துக் கொள்ளத் துணைசெய்தன. தெய்வத் தூண்டுதலால் நந்த பலா எனும் பெண் அங்குத்தோன்றி அவனுக்குப் பால்சோறு அளித்தாள். அவனுடனிருந்த ஐந்து சந்நியாசிகள் அவன் துறவறத்தைக் கைவிட்டு விட்டான் என்று குறை கூறி அவனை விட்டுநீங்கினர் (சரிதம் 185).

சித்தார்த்தனுடைய வாழ்க்கையில் தேவர்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் பல அவன் புத்தனாக மாறுதற்குத் துணை செய்தனவாகப் புத்த சரிதம் கூறுகிறது. அவன் போதிமரத்தடிசேர்ந்து ஞானம் பெறுதற்கு அவ்வப்பொழுது தேவர்கள் அவனை வழி நடத்தும் செயல்களை மேற்கொள்கிறார்கள். காலன் என்னும் பாம்பு அவன் காலடியோசை கேட்டு எழுந்து “நீ கதிரவனைப்போல் ஒளி வீசுவதால் விரும்பியதை இன்று அடைவாய். நீல நிறப் பறவைக் கூட்டங்கள் உன்னைச் சுற்றி வலம் வருதலாலும் மெல்லிய பூங்காற்று வீசுவதாலும் இன்று நீ புத்தனாவது உறுதி,” என்று வருவது உரைக்கிறது. பெருமைக்குரிய, தூய மரத்தடியில் அமர்ந்து “என் பணிமுடியாமல் நான் இவ்விடத்திலிருந்து எழுந்திருக்க மாட்டேன்” என்று அவன் கூறியவுடன் “விண்ணுலகிலிருந்த தேவர்கள் இணையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்; பறவைகளும் காட்டு விலங்குகளும் ஒலி எழுப்புவதை நிறுத்தின; காட்டு மரங்களில் கிளைகள் காற்றால் தாக்கப்பட்டபோதும் சற்றும் அசையவில்லை” (சரிதம் 187).

அரிய முயற்சிக்குப் பின் புத்தர் ஞான ஒளி பெறும் சிறப்பைச் சொல்லும் பதினான்காம் காண்டத்திலும் புத்தநெறிக்கு ஏற்புடையவைதானா என்று நாம் ஐயுறத்தக்க நிகழ்வுகளும் கருத்துகளும் இடம் பெறுகின்றன.

ஆழ்ந்த தியானத்தில் வெற்றி பெறும் புத்தர் முதல் கட்டத்தில் தம்முடைய முன்னைய ஆயிரக்கணக்கான பிறவிகளையெல்லாம் நினைவுகூர்கிறார். அவருடைய உள்ளம் எல்லா உயிர்களின் பாலும் இரக்கத்தால் நிரம்புகிறது. பிறவிச் சுற்று என்பது வாழை மரத்தின் தண்டுபோல் உள்ளீடு அற்றது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. இரண்டாவது கட்டத்தில் உலகம் முழுவதையும் களங்கமற்ற கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவர் பார்க்க முடிகிறது. எல்லாவுயிர்களும் மறைவுக்குப்பின் அடையும் நிலைகளை அவர் பார்த்து அவற்றின்பால் மேலும் இரக்கம் கொள்கிறார். பாவச் செயல்களைப் புரியும் உயிர்கள் நரகத்தில் மீண்டும் பிறந்து பல துன்பங்களை அடைகின்றன. சிலர் உருக்கி வார்க்கப்பட்ட இரும்பைக் குடிக்கக் கட்டாயப்படுத்தப் பெறுகின்றனர்; சிலர் நெருப்புத் தூணில் கழுவேற்றப்படுகின்றனர்; சிலர் இரும்பு உலைகளில் உணவுபோல் வேக வைக்கப்படுகின்றனர்; சிலர் எரியும் நிலக்கரிக்குவியல்களில் வறுக்கப்படுகின்றனர், சிலர் இரும்புப்பற்கள் கொண்ட நாய்களாலும், பறவைகளாலும் கடித்துக் குதறப்படுகின்றனர் (சரிதம் 204).

உயிர் வாழ்பவையாவும் எப்பொழுதும் உழைக்க வேண்டியிருப்பதையும் பிறப்பு, முதுமை, இறப்பு, மறுபிறப்பு ஆகிய சுழற்சியில் சிக்கித் தவிக்க வேண்டியிருப்பதையும் கண்ட புத்தர் பிறவி எவ்வாறு ஏற்படுகிறது என்று சிந்தனை செய்தார். அவரது தெய்வீகப் பார்வையால் வினையிலிருந்து பிறப்பு ஏற்படுகிறதென்றும் ஒரு படைப்பாளனிடமிருந்தோ, இயற்கையிலிருந்தோ, தன்னிலிருந்தோ ஏற்படவில்லையென்றும், காரணம் ஏதுமின்றிப் பிறப்பு நிகழ்வதில்லையென்றும் கண்டறிந்தார் (சரிதம் 209). உயிர் வாழ்க்கையின் மூலமும் தொடக்கமும் பற்றிய ஆய்வையும் புத்தர் மேற்கொள்கிறார். வாழ்க்கையின் விதிகள், புலனின்பம், தன்னைப்பற்றிய கருத்துக்கள், தவறான கருத்துக்கள், ஆகியவற்றைக் கைப்பற்றுதலிலிருந்து உயிர் வாழ்க்கையும், வேணவாவிலிருந்து கைப்பற்றுதலும், உணர்ச்சியிலிருந்து வேணவாவும், இணைப்பிலிருந்து உணர்ச்சியும், ஆறு உறுப்புகளின் மூலம் இணைப்பும் பெயர்- உருவத்திலிருந்து உறுப்புகளும், நனவிலிருந்து பெயர்உருவமும் தோன்றுகின்றனவென்றும் பெயர்- உருவத்தின் ஆதரவினால் நனவு தோற்றம் பெறுகிறதென்றும் பெயர் உருவமும், நனவும் ஒன்றுக்கொன்று காரணிகளாய் அமைகின்றன வென்றும் புத்தர் உணர்ந்தார்.

புத்தர் எல்லாம் அறியும் நிலையை அடைந்தவுடன் “நிலமானது மது குடித்த மங்கைபோல் அசைந்தாடியது; சித்தர்களின் கூட்டங்களால் திசைகளெல்லாம் பொலிவுற்றன; வானில் பெரிய முரசங்கள் பேரொலி செய்தன” (சரிதம் 213).

அருள் நிறைந்த உள்ளம் பெற்ற புத்தர் உலகிற்கு அறிவுரை கூறவும் மக்களுக்கு மனஅமைதி தரவும் விழைந்தார். அப்பொழுது விண்ணுலகத் தலைவர்கள் இருவர் (இவர்கள் இந்திரனும் பிரம்மாவும் என்ற கதை பின்னால் உருப்பெற்றது) உலக நன்மையை விரும்பிக் கீழுலகம் வந்து அவரைப் பாராட்டி மாந்தர் யாவரும் பிறவிக் கடலிலிருந்து விடுதலை பெற அவர் உழைக்க வேண்டுமென்றும் உலக நன்மைக்காகப் பாடுபடும் எண்ணங் கொண்டவர் இவ்வுலகிலோ விண்ணுலகிலோ வேறு யாரும் இல்லையென்றும் கூறிச் சென்றனர் (சரிதம் 216).

திசைகள் நான்கிலிருந்தும் தேவர்கள் தோன்றி அவருக்குப் பிச்சைப் பாத்திரங்கள் நான்கைக் கொடுத்தனர். கெளதமர் அவை நான்கையும் ஒன்றாக மாற்றிக்கொண்டார். அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இரண்டு வணிகர்கள் ஒரு தேவதையின் துண்டுதலால் அவருக்கு வணக்கம் செலுத்தி பிச்சையும் அளித்தனர் (சரிதம் 217).

புத்தர் மாந்தரின் அறியாமையைப்போக்க வேண்டும் என்ற முடிவுடன் பீமரதன் விரும்பும் காசி நகரம் நோக்கிப் பயணமானார் என்று இக்காண்டம் முடிவுறும். பீமரதன் என்பவன் யாரென்பதையும் அறிஞர்கள் முடிவு செய்ய இயலவில்லை. காசி மன்னர்களில் ஒருவனாக இருக்கலாம் என்றும் சிவனாக இருக்கலாமென்றும் ஊகங்களை முன்வைப்பர் (சரிதம் 217).

புத்தசரிதத்தின் சீன, திபெத்திய மொழிபெயர்ப்புகள் என்று நமக்குக் கிடைப்பவற்றிலும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும், வித்தைகளும், விண்ணுலகங்களும், தேவர்களும் இடம் பெறக் காணலாம். பதினைந்தாம் காண்டம் ஞானமடைந்த புத்தர் புத்த தன்மத்தைப் போதிக்கத் தொடங்குகிறார் என்றும் அதனைக் கேட்ட நூறு தேவதைகளும் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவனும் உண்மை அறிந்து உய்வுற்றார் என்றும் விளக்கும்.

புத்தரிடமிருந்து முதலில் அறவுரை பெற்றவன் கெளண்டின்யனே.... அதனைக்கேட்ட நிலவுலகில் வாழும் யக்சர்கள் அறச்சக்கரமானது யாவும் உணர்ந்த ஞானியால் எல்லா உயிர்களின் நன்மைக்காகவும் நல்லமுறையில் திருப்பப்பட்டுள்ளது என்று உரத்த குரல்களில் சொன்னார்கள்.... வானிலிருந்த தேவதைகள் அவற்றைக் கேட்டவுடன் அவர்களும் பெருங்குரல் எழுப்பினர். அவ்வொலி ஒரு விண்ணுலகிலிருந்து மற்றொன்றுக்குப் பரவி இறுதியில் பிரம்மாவின் உலகத்தையும் எட்டியது. அவ்வுலகங்களிலிருந்த தன்னடக்கம் உள்ள தேவதைகள் சிலர் மூவுலகமும் நிலையற்றது என்ற கருத்தைக் கேட்ட அளவில் புலன் இன்பங்களை வெறுத்துச் சாந்த நிலை பெற்றார்கள்.... இவ்வாறு அறச்சக்கரமானது மண்ணிலும் விண்ணிலும் சுற்றப் பட்டபோது மேகங்களற்ற வானிலிருந்து பூ மழை பொலிந்தது; மூவுலகங்களிலும் இருந்தவர்கள் வலிய முரசங்களை அதிரச் செய்தனர் (சரிதம் 14).

இத்தகைய வருணனை எல்லாம் சீன மொழிபெயர்ப்பு, திபெத்திய மொழிபெயர்ப்பிலிருந்து சில இடங்களில் மாறுபடுவதையும் எது வடமொழிமூலத்திற்கு உண்மையானது என்று கண்டறிய முடியவில்லை யென்பதையும் ஜான்ஸ்டன் ஆங்காங்கே சுட்டிச் செல்வார்.

அம்ரபாலி எனும் பரத்தைக்குக் கெளதமர் அருள்புரியும் காண்டத்தில் பெண்களைப் பற்றி அவருடைய கருத்துகளென்று சொல்லப் பெறுபவையும் ஆய்வுக்குரியன.

அம்ரபாலி நம்மிடம் வருகிறாள். மனவலி குறைந்த ஆண்களுக்கு அவள் நோயாவாள்; நீங்கள் உங்கள் உள்ளங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.

அறிவும் விழிப்புணர்வும் இல்லாத ஆணுக்குப் பெண் என்பவள் அருகில் குடியிருப்பார்க்குப் பாம்பைப் போலும், உருவிய உடைவாள் கொண்ட பகைவனைப் போலும் துன்பம் தரவல்லவள்.

அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும், நடந்தாலும், நின்றாலும், ஓவியமாக வரையப்பட்டிருந்தாலும் பெண் ஆண்களின் உள்ளங்களைக் கவர்ந்து விடுவாள்.

துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், கைகளை விரித்து அழுது புலம்பிக் கொண்டிருந்தாலும், பரட்டை முடியால் எரிக்கப்பட்டிருந்தாலும்(?), பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள்.

வெளிப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பல உத்திகளால் ஏமாற்றுவார்கள்; தங்களுடைய உண்மையான தன்மைகளை மறைத்துவைத்து முட்டாள்களை மயக்குவார்கள்.

அறிவுடையோர் பெண் அனித்தியமானவள், துன்பம் தருபவள், தன்னுணர்வு அற்றவள், தூய்மை கெட்டவள் என்பதை உணர்ந்திருப்பதால் அவளைப் பார்த்தாலும் அவளிடம் தோல்வியடைய மாட்டார்கள் . . . .

பெண்களின் சுழல்கின்ற கண்களைத் தவறான எண்ணத்தோடு பார்ப்பதைவிட எரிகின்ற இரும்புக் குண்டுசிகளால் கண்களைக் குத்திக் கொல்வது நல்லது (சரிதம் 65-66).

அம்ரபாலி அவரை அணுகி வணங்கி அருகில் அமர்ந்தவுடன் அவளிடம் அவர் பெண்கள் பற்றிச் சொல்லுபவையும் கருதற்குரியவை.

இளம் வயதினளாகவும் அழகுடையவளாகவும் இருக்கும் பெண்ணிடம் தருமத்தின்மேல் விருப்பத்தைக் காண்பது அரிது. அறிவுடைய ஆண்கள், துன்பமுற்ற அல்லது தன்னடக்கமுள்ள அல்லது நோயால் வருந்துகின்ற பெண்கள் ஆகியோர் தருமத்தின்பால் நாட்டம் கொள்வதில் வியப்பில்லை.

ஆனால் புலன் இன்பங்களுக்கே இடமளிக்கும் இவ்வுலகில் இயற்கையாகவே குறைவான புரிதலும் நிலையற்ற மனமும் கொண்ட ஓர் இளம் பெண் அறநெறிபற்றி எண்ணுவதென்பது அரிதாகும்... மற்றவர்களைச் சார்ந்திருப்பது பெருந்துன்பமாகும்; தன்னை நம்பியிருப்பதே பேரின்பமாகும்; ஆனால் மனுவின் குலத்தில் பிறந்த எல்லாப் பெண்களும் மற்றவர்களின் ஆதரவிலேயே இருப்பவர்கள் . . .

என்றெல்லாம் பெண்களைப் பற்றி மனுநீதி போன்ற பின்னால் வந்த வட நூல்களில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளை ஒத்தவை இக்காண்டத்தில் இடம் பெறுகின்றன. ஆயினும் அம்ரபாலி புத்த நெறியில் தான் கொண்டிருந்த நம்பிக்கையையும் பிடிப்பையும் விட்டுவிடாமல் விடாப்பிடியாய் அதனை ஏற்றுக்கொள்வதாக அவரிடம் உறுதி கூறி விடை பெறுவதாக அக்காண்டம் முடிவு பெறுகிறது.

புத்தசரிதத்தின் இறுதிப் பகுதியிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிராமணர்கள் புகழ்ந்து பேசப்படுகிறார்கள். இவர்களெல்லாம் புத்தர் காலத்திற்கு முன் வாழ்ந்த வரலாற்றுப் பாத்திரங்களாகவே காட்சி தருகிறார்கள். புத்தர் அவர்களுடைய நெறிக்கு எதிராக ஏதும் பேசாததோடு மட்டுமல்லாமல் அவர்களைப் பாராட்டிப் பேசும் இடங்களும் உண்டு. அசுவகோசர் பிறப்பால் பிராமணர் என்பதால் இவற்றையெல்லாம் தவிர்க்க முடியவில்லையா அல்லது அவையெல்லாம் அவருக்குப் பின்னால் வந்தவர்களால் நுழைக்கப்பட்டவையா என்பது தெரியவில்லை. புத்தர் ஒரு பிராமண மதகுருவைப்போல் பேசும் இடங்களும் உண்டு. தான் ஞானம் அடைந்து விட்டவராதலால் அவருடைய உறவினர்களும் பிறரும் அவரைக் குடும்பப் பெயரைச் சொல்லி அழைக்கக் கூடாது என்கிறார். கங்கையைப் படகில் கடந்தால் தன்னுடைய ஆற்றல் மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவருடைய அடியவர்களின் படகுகளைப் பயன்படுத்தாமல் ஒரு நொடியில் மாயமாய் அக்கரை அடைகிறார் என்று புத்த சரிதம் கூறும்.

இறப்பை எதிர்நோக்கியிருக்கும் புத்தர் அது கருதி வருந்தும் ஆனந்தருக்கும் மற்றைய அடியவர்களுக்கும் உலகில் எதுவும் நிலையற்றது என்று அறிவுரை கூறுகிறார்.

வசிட்டர், அத்திரி ஆகியோரும் ஏனைய முனிவர்களும் காலத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இவ்வுலகில் வாழ்க்கையென்பது அழிவிற்குரியது. உலகின் மன்னனான மாந்தாத்திரி, வாசவருக்கு இணையான வசு, பெருமைக்குரிய நாகபாகர் ஆகிய யாவரும் மூலப்பொருள்களோடு இரண்டறக் கலந்து விட்டனர்.

யயாதி, சிறந்த தேரைப்பெற்ற பகீரதன், பழி பூண்ட குரு வமிசத்தார், ராமர், கிரிராஜர்கள், அஜன் ஆகிய அரச முனிவர்களும் ஏனைய இந்திரனுக்கு ஒப்பான பலரும் அழிவெய்தினார்கள் யாரும் அழிவிலிருந்து தப்பமுடியாது.

பரிதி தன் நிலையிலிருந்து கீழே விழுகிறது; செல்வமுடைய தேவர்கள் கீழிறங்கி இவ்வுலகிற்கு வந்தார்கள்; நூற்றுக்கணக்கான இந்திரர்கள் இறந்து போனார்கள்; யாரும் இறப்பின்றி என்றும் வாழ்தல் என்பது இயலாது. உலகிற்கு அறிவொளி கொடுத்த சம்புத்தர்கள் யாவரும் எண்ணெய் தீர்ந்த விளக்குகளைப்போல் நிர்வாணம் அடைந்தார்கள். எதிர்காலத்தில் ததாகதர்களாகப் போகும் மகாத்மாக்கள் யாவரும் விறகு தீர்ந்த நெருப்புப்போல் நிர்வாணம் அடைவார்கள் (சரிதம் 80).

புத்தசரிதத்தின் இறுதிக் காண்டம் புத்தர் மறைந்த பின் அவருடைய நினைவுச் சின்னங்களுக்காக மல்லர்களுக்கும், அவர்களுடைய நாட்டிற்கருகாமையிலிருந்த ஏழு அரசர்களுக்கும் நடந்த போர்பற்றிப் பேசுகிறது. மல்லர்களின் நகரத்தைப் பின்னவர்களின் படைகள் சூழ்ந்து கொள்ள, துரோணன் என்று அழைக்கப்பெறும் பிராமணன் அவர்களுக்குப் போர் செய்தல் தவறென்றும் அமைதி காத்தல் வேண்டுமென்றும் எடுத்துரைத்து மல்லர்களிடம் தூது சென்று அவர்களையும் சமாதானப்படுத்துகிறான். அவர்கள் அவனிடம்,

நீ சொல்வது ஒரு நல்ல நண்பனும் பிராமணனுக்குரிய பண்புகள் கொண்ட ஒருவனும் சொல்லத் தகுந்ததாகும். நாங்கள் தவறான பாதையில் சென்ற தீய குதிரைகளை ஒத்தவர்கள்; நீ எங்களை நல்வழிப்படுத்தினாய் (சரிதம் 121).

என்று அவனுடைய உரையை ஏற்றுப் புகழ்ந்து பகைவர்களோடு ஒத்துப்போவதாக அக்காண்டம் ஒரு பிராமணனின் நற்பண்பையும் நற்செயலையும் முற்படுத்திக் காட்டும்.

அயோத்திதாசர் புத்தரது வரலாற்றைக் கூறும் நூலின் முகப்பில் அதனைப் “பூர்வத்தமிழ் ஒளியாம் புத்தரது ஆதிவேதம்” என்று அழைப்பதும் “இஃது பெளத்த தன்மப் பாலிப் பிரதிகளைக் கொண்டும், தமிழ்ப் பிரதிகளைக் கொண்டும் பரம்பரை சுருதி வாக்கியங்களைக் கொண்டும் எழுதப்பெற்றது” என்று குறிப்பிடுவதும் பொருள் பொதிந்த கூற்றுகளாகும். அவர் வடமொழியிலுள்ள அசுவகோசரின் புத்த சரிதத்தை மூலங்களில் ஒன்றாகச் சேர்க்கவில்லை. அசுவகோசரை வேறு சில இடங்களில் தமது கட்டுரைகளில் சுட்டுகிறார். அவர் எழுதிய நூலிலிருந்து பல கருத்துக்களை தரும் அவர் ஏன் புத்தசரிதத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு புதிராக உள்ளது. அது அவருக்குக் கிடைக்கவில்லையா அல்லது அதனைப் படித்து அதன் பிராமணச் சார்பு கருதி ஒதுக்கினாரா என்று முடிவு கட்டுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. எனினும் புத்தர் வரலாற்றிற்கும் புத்த அறத்தை விளக்குதற்கும் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களையே சான்று ஆதாரங்களாகக் கொள்கிறார் என்பது நூலை ஒரு முறை படிப்பார்க்கும் தெளிவாகும். பாலி நூல்களிலிருந்தும் ஆங்காங்கே மேற்கோள்கள் தருகிறார். வடமொழி அறிந்தவராயிருந்தும் அம்மொழி நூல்களான வேதங்களையும் உபநிடதங்களையும் மனு சாத்திரத்தையும் மேற்கோள்கள் பல காட்டிக் கண்டிக்கின்றாராயினும் புத்த தன்மத்தை விளக்க அவற்றைப் பயன்படுத்தவில்லை யென்பதால் அவை பொய்யும் புரட்டும் மிகுந்தவை என்று கருதியே புறக்கணித்தார் என்ற முடிவுக்கு வரலாம்.

“ஆதி வேதத்திற்கு” அயோத்திதாசர் எழுதிய பாயிரத்தில் தாம் எவற்றை மூலங்களாகக் கொண்டாரென்பதற்கான பட்டியலைத் தருகிறார்.

எமது குல மரபோரிடத்துச் சிதலுண்டது நீங்கி எஞ்சிய நூற்களாகும் அருங்கலைச் செப்பு, அறநெறிச் சாரம், நிகழ்காலத்திரங்கல், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, சிலப்பதிகாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், திரியறக்கலை செய்யுட்களைக் கொண்டும் சமணமுனிவர்களால் சித்திபெற்றோரும் சித்தர்கள் இயற்றியுள்ள சித்த நூல்களின் ஆதாரங்களைக் கொண்டும் சாக்கைய வமிச வரிசையோர் தங்கள் கர்ண பரம்பரையால் வழங்கி வந்த கருதிகளைக் கொண்டும் சென்னை சாக்கைய புத்தசங்கத்திற்கு வந்திருந்த மாண்டலே, யு. சாந்தவாரா வென்னும் சமண முனிவராலும், ஹோன்னா சிலோன், யு. வினயலங்காரா வென்னும் சமண முனிவராலும் மோல்மென், யு. தேஜோவன் ஸா வென்னும் சமண முனிவராலும், பாலி பாஷையிலுள்ள அபிதம்மத சங்கஹ, பட்தானா, தம்மசங்கினி, சம்ஹிதகத்தா வென்னும் தம்மநூற்களை மொழி பெயர்த்தும் — நாளது வரையில் வெளியிட்டுள்ள சரித்திர நீதிநெறி ஒழுக்கங்கள் யாவையும் புத்தக ரூபமாகத் திரட்டி வெளியிட்டுள்ளோம் (ஆதிவேதம் 1 — 2).

தம்முடைய நூல் வடநூலார் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை, அது “அன்னிய மதத்தார்களால் வரைந்து வைத்துள்ள பெளத்த நூற்களுக்கு மாறுபட்டே நிற்கும். அதாவது பாலி நூற்களிலிருந்து மொழி பெயர்த்ததனால் உண்டாம் பேதங்களும் செய்யுட்களிலிருந்து பொருள் பிரித்த பேதங்களும் இத்தேசத்திற்கு வந்துள்ள யாத்திரைக்காரர் வசம் எழுதியளித்துள்ள பேதங்களும் பேரானந்த புத்த தன்மத்திற்கு மாறுதலடைந்து பல வகையாய சந்தேகத்தில் ஆழ்த்தித்திகைக்க வைத்திருக்கிறது” (ஆதிவேதம் 2) என்று அவர் வெளிப்படையாகத் தெளிவுபடுத்துவார்.

புத்த தன்மத்தை அறியாதவர்கள் பாலியையும் ஆங்கிலத்தையும் கற்றறிந்து செய்துள்ள மொழிபெயர்ப்புகள் நம்பத் தக்கவையல்ல என்பது அவர் முடிவு:

ஞானசாதன ரகசியங்கள் விளங்காது . . . தங்கள் தங்கள் மனம் போனவாறு பன்றி இறைச்சியைத் தின்றாரென்றும் பேதிகண்டு தள்ளாடி நடந்து ஓர் அரச மரத்தடியில் இறந்தாரென்றும் புத்ததன்மத்திற்கு எதிரிடையாய அபுத்த தன்மத்தை மொழி பெயர்த்து வரைந்து வைத்திருக்கின்றார்கள் (ஆதிவேதம் 3).

“புத்தர் காலத்திலேயே வேஷப் பிராமணர்கள் இருந்தார்களென்றும் அப்பிராமணர்கள் பெளத்த மார்க்கத்தில் சேர்ந்ததாகவும் எழுதியிருக்குமாயின் அவைகள் யாவும் மத்தியில் சேர்த்துள்ள பொய் சரித்திரங்களென்றே நீக்க வேண்டும்” (ஆதிவேதம் 7) என்று அவர் கூறும்போது அசுவகோசரின் புத்த சரிதமும் அத்தகைய நூல்களில் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும். புத்தரது காலத்திற்கு முன்னும் தங்கள் மதம் இருந்ததென்பதை மெய்ப்பிக்க வேண்டிப் பல பொய்க் கதைகளைப் பின்னால் வந்தவர்கள் சேர்த்தார்கள் என்பது தாசரின் முடிவு.

சீன யாத்திரைக்காரர்களும் சிங்கள யாத்திரைக்காரர்களும் இந்திர தேசம் வந்து புத்த பிரான் சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுங்கால் இந்த வேஷப் பிராமணர்கள் தற்காலம் தோன்றினவர்களன்றி முற்காலத்திலேயே இருந்தவர்களென்று கூறித் தங்களைப் பூர்வகுடிகளென்று சிறப்பித்துக் கொள்வதற்கு, புத்தரது சிற்சில சரித்திரங்களுடன் பிராமணர்களையும் ஜெயித்து, பெளத்த மார்க்கத்தில் சேர்த்து விட்டாரென்று எழுதிக் கொடுத்துள்ளவைகள் யாத்திரைக்காரர்களுக்கு மிக்க வியப்பாயிருந்த படியால் அவைகளைப் பத்திரமாக வரைந்து கொண்டு போய் இப்போது வெளியிட்டு வருகின்றார்கள் (ஆதிவேதம் 7).

பிராமணர்கள் பலரோடு புத்தர் உரையாடுவதாகப் புத்த சரிதத்தில் வரும் காட்சிகள் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியவை.

யாகங்கள் என்று கூறி மாடுகளையும் குதிரைகளையும் சுட்டுத்தின்ற ஆரியர்கள் புத்தருக்கு ஆயிரத்து எண்ணுாறு வருடங்களுக்குப் பின்பே இந்தியாவில் வந்து குடியேறினர் என்பதால் புத்தர் யாகங்களைக் கண்டித்ததாக வரும் கதைகளெல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட வெறும் கற்பனைகள் என்பது தாசர் தரும் விளக்கம்.

அதற்குப் பகரமாக ஓர் ஆட்டிடையனின் கால் உடைந்த ஆட்டுக்குட்டியையும் தோற்பை கம்பளத்தையும் புத்தபிரான் தூக்கிச் சென்று ஆட்டிடையன் வீட்டில் விட்டுச் சென்றதாக சரித்திரம். அதை அனுசரித்தே ஓர் பொய்க்கதையைச் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். அவையாதெனில் பகவன் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு பிராமணர்கள் என்போர் யாகம் செய்யும் இடத்திற்கே போனதாகவும் யாகத்தைத் தடுத்ததாகவும் அதனால் ஆடுகளை நெருப்பிலிட்டுக் கொள்ளாமல் நிறுத்தியதாகவும் ஓர் கட்டுக்கதையை நுழைத்து யாத்திரைக்காரர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் அதை மெய்யென்று நம்பி எடுத்துப்போய் இப்போது அச்சிடும் புத்தகங்களில் வெளியிடுகின்றார்கள். ... அவர்களுக்குள் பெரும்பாலும் மாடுகளையும் குதிரைகளையும் சுட்டுத் தின்றதாக வரைந்து கொண்டிருக்கிறார்களேயன்றி ஆடுகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்றதாகக் கிடையாது (ஆதிவேதம் 8).

அயோத்திதாசர் கூறுகின்றவாறு, புத்தரைப்பற்றி யெழுதப் பெற்ற நூல்களில் காலத்திற்கேற்ப இடைச்செருகல்கள் நிகழ்ந்துள்ளன வென்பதையும் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு கற்பனை நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன வென்பதையும் அசுவகோசரின் புத்தசரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ஜான்ஸ்டன் அதன் வடமொழி மூலம், சீன திபேத்திய மொழிபெயர்ப்புகள் பற்றி ஆங்காங்கே தரும் குறிப்புகளாலும் அறிய முடியும்.

புத்தரே பல சித்து விளையாட்டுக்களைச் செய்து மக்களைக் கவர்வதாகவும் பிராமணர்களையும் அரசர்களையும் தம் நெறிக்கு மாற்றுதற்கு அவர்களிடம் தம் ஆற்றலைக் காட்டச் சித்து வித்தைகளைக் கையாள்வதாவும் அசுவகோசரின் புத்த சரிதம் கூறும். ஆயினும் இது பற்றி அயோத்திதாசர் கொண்டிருந்த கருத்து தெளிவானது.

மனிதனால் செய்யக்கூடிய வித்தைகள் அனந்தமுண்டு. அவ்வித்தைகளால் தருமம் சிறப்படையாது. மனிதனை சீலமும் ஒழுக்கமுமே சிறப்படையச் செய்யும். சித்துக்களை விளையாடியவர்கள் யாவரும் சமணமுனிவருள் சித்தி பெற்றோர்களேயன்றி வேறொருவரும் கிடையா. அவர்களினும் மேலாய சித்து வித்தைகளைக் கையாடினோர் வேறொருவரும் கிடையாதென்பதே திண்ணம். இவ்வித்தைகள் யாவற்றையும் பெளத்தர்கள் வெகுவாக மதிக்க மாட்டார்கள். சீலத்தையும் ஒழுக்கத்தையுமே மேலாக மதிப்பர். மனிதன் அபூர்வமாய சித்துக்களை விளையாடிய போதிலும் அவைகள் யாவுமோர் வித்தையென்றே புத்த பிரானின் பிரதம தமிழ் மாணாக்கர் அகஸ்தியர் இயற்றியுள்ள செய்யுட்களைக் காண்க.

அகஸ்தியர் விவேக தசபாரதம்

கடல் வரவழைக்க, மேருவையனைக்க, கடமுயிர்ப் பெய்யவே செய்ய,

உடல் பிரிந்து அயலோர் உடலதில்பாய, ஊரிலா வெளியில் ஊர்காட்ட,

வடவனல் வளைக்க, அஷ்டநாகங்கள் அனைத்தையும் முன்னிலை அழைத்து,

விட பலகோடி சித்து ஆடிடினும் வித்தை யென்றறிவதே விவேகம்,

கரி பலகோடி வனத்திருந்தழைக்கக் கரடி சிங்கங்களை ஆட்ட,

வரி பலகோடி அழைக்க மேற்கொள்ளவவனியைத் துறந்தறக் காட்ட,

நரி பலகோடி பரியென நடத்தி நஞ்சமுதாக்கியே கொடுக்க,

விரி பலகோடி சித்தை யாடிடினும் வித்தை யென்றறிவதே விவேகம் (அலாய்சியஸ் II 450-51).

புத்தரது வரலாற்றை ஓர் உரைநடைக்காப்பியமாகத் தரும் அயோத்திதாசர் அவரைத் தமிழ்க் காப்பியத் தலைவனாகவே படைத்துள்ளார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் அடியொற்றித் தமது நூலின் பிரிவுகளைக் காதைகள் என்றே அழைக்கிறார்.

சித்தார்த்தர் உற்பவக்காதை, சித்தார்த்தர் திருமணக் காதை, சித்தார்த்தர் வாய்மை விசாரிணைக்காதை, சித்தார்த்தி மகாராஜ துறவு காதை, சித்தார்த்தர் பஞ்ச விந்திரியத்தை வென்று இந்திரரும், மெய்கண்டு புத்தருமாய காதை, ஆதி வேத வாக்கிய விவரகாதை, சதுர் சத்தியகாதை, சங்கங்களின் ஸ்தாபன காதை, மானைக் காத்து மழுவேந்திய காதை, சதுரகிரிக் காதை, தந்தைக்கு மைந்தன் குருவாய காதை, பரத்துவாசருக்கு வியாதிக்குத் தக்க ஓடதிகளோதிய காதை, விசாகா காதை, குருச்சேத்திர காதை, தர்மசக்கர பிரவந்தன் காதை, கோசல நாட்டரசன் காதை, கலக விவாத காதை, தந்தையின் இரண்டாமுறை தரிசன காதை, சிகாளா விசாரிணைக் காதை, புக்கசாதி துறவு பூண்ட காதை, பிரமன் தரிசன காதை, மகா மங்கள காதை, உபதேச காதை, சுவர்க்க காதை, பரிநிருவான காதை ஆகிய இருபத்தெட்டுக்காதைகளில் புத்தரது வரலாறு கூறி இறுதியில் “ஆதிவேத விளக்கம்” என்னும் தலைப்பில் புத்தரது வேதவாக்கியங்களையும் அவற்றின் முப்பத்திரண்டு உட்பொருள்களின் நுட்பங்களையும் விளக்குவார். நூலின் இறுதியில் தமது ஆதிவேதம் தமிழில் உள்ள “பஞ்ச காவியங்களின்” ஆதாரம் கொண்டும், பாலி பாஷையிலுள்ள பிடகங்களின் ஆதாரம் கொண்டும், திராவிட பெளத்தருள் பிரபலமாக வழங்கி வந்த சுருதியின் அனுபவம் கொண்டும் வரையப்பட்டது என்று தெரிவிப்பார் (ஆதிவேதம் 296).

புத்தர் பிறந்தவுடன் பல இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் நடந்தனவென்றும் அசித்தா எனும் முனிவர் வருவதற்குமுன் பல பிராமணர்கள் குழந்தையைப் பார்த்துவிட்டு அவன் பின்னால் பேரரசானகவோ முற்றும் துறந்த முனிவனாகவோ ஆவானென்று சொன்னதாகவும் கூறும். அசுவகோசர் பல புராணப் பாத்திரங்களையும் கதைகளையும் அவர்களுடைய உரையாடல்களில் கொண்டு வருகிறார். மாயாதேவியின் விலாவிலிருந்து பிறந்த ஆண் குழந்தை நான்கு திசைகளையும் சிங்கம் போல் பார்த்து விட்டு “நான் உலக நன்மைக்காகவும் ஞான வொளி பெறவும் பிறந்துள்ளேன்; இதுவே இவ்வுலகில் என் இறுதிப் பிறவி” என்று சொன்னதாகவும் அசித்தா பார்த்த ஆண் குழந்தையின் பாதங்களில் சக்கர அடையாளம் இருந்ததோடு கை, கால் விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருந்ததாகவும் ஆண்குறியின் கொட்டைகள் யானைக் கிருப்பனபோல் பின்தள்ளி இருந்தனவென்றும் (சரிதம் 10 - 13) அசுவ கோசரின் புத்தசரிதம்கூறும். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிடும் தாசர்,

கலிவாகு சக்கரவத்தியின் அரசாங்கக் கலியுலகின் நீண்ட கணக்கு 1616 இல் சாக்கையகுல வீரவாகு வமிச வரிசையில் மண்முகவாவென்னும் அரசனுக்கும் மாயாதேவியென்னும் இராக்கினிக்கும் சித்தார்த்தி வருஷம் வைகாசி மாதம் 13 ஆம் நாள் பெளர்ணமி திதி கேட்டை நட்சத்திரம் மீனலக்கணம் ஆதிவாரம் அதிகாலையில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது.

அக்காலத்தில் தேசமெங்கும் சிற்சில நற்சகுணங்கள் தோன்றியதைக்கண்ட சிற்றரசர்களும் சோதியின் இடம் கண்டு கூறும் சோதிட சாஸ்திரிகளும் குழந்தையைக் காணும்படி வந்தார்கள்...

பெரியோன் மண்முகனை நோக்கி அரசே! குழந்தையைப்பற்றி நீர் யாதுக்கும் அஞ்ச வேண்டாம். இதன் அங்க பாத தாமரை ரேகையின் பலாபலனை ஆராயுங்கால் குழந்தை வளர்ந்து பாலதானத்தில் ஏக சக்கிராதி தலைத்தார் வேந்தனாக விளங்கினும் விளங்கும், அல்லது வாலறிஞனாகத்தோன்றி சருவ சீவர்களுக்கும் சற்குருவாக விளங்கினும் விளங்கும். ஆதலின் அம் மகத்துவத்தை என் கண் குளிரக் காணாது அற்பாயுளைப் பெற்றுள்ளதால் துக்கித்தேனென்றான் . . . பசுவின் பாலுண்டமர்ந்தகுழவிக்கு பாலிபாஷையில் கெளதமர் கெளதமர் என்னும் மறு பெயரையும் அளித்தார்கள்... அரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).

என்று புத்தரது உற்பவக் காதையைச் சொல்லிச் செல்வார்.

சித்தார்த்தனுடைய திருமணம் பற்றிக் கூறும்போது புத்தசரிதம் அவனுடைய வயதைக்குறிக்காது அழகும் பண்பும் மிகுந்த யசோதரை எனும் பெண்ணை அரசன் தேர்ந்தெடுத்து மணம் முடித்து வைத்ததாகவும் சனத்குமாரனைப் போல் இருந்த சித்தார்த்தன் யசோதரையை மணந்து இந்திரனும் சசியும் போல் இன்பவாழ்வு வாழ்ந்ததாகவும் தெரிவிக்கும் (சரிதம் 25).

சித்தார்த்தனுக்குப் பதினாறு வயதானபோது மலையரசன் சுப்ர புத்தியின் பன்னிரண்டு வயதான மகள் அசோதரை மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரச குமாரன் தன் ஆற்றல்களை யெல்லாம் காட்டி அவளை மணம் செய்து கொள்வதாகத் தாசர் திருமணக் காதையைச் சீவகசிந்தாமணியில் வரும் ஒரு காட்சி போல் தருகிறார். (ஆதிவேதம் 8-13). சித்தார்த்தனின் கலையறிவும் பாராட்டப்பெறுகிறது.

சக்கரவர்த்தித் திருமகன் சங்கீதம் கோஷிக்குங்கால், அவர்முகம் பேரியாழ் முடிக்கி சச்சற்புடமிடுங்கால் சத்தியோசாத முகமாகவும், சகோட யாழ் முடிக்கி சாசற்புட மிடுங்கால் வாமமுகமாகவும், மகரயாழ் முடிக்கி சட்பிதா பத்திரமிடுங்கால் கோரமுகமாகவும், செங்கோட்டி யாழ் முடிக்கி சம்பத்து வேட்டமிடுங்கால் தற்புருடமுகமாகவும் ஆகிய சதுர்மக தோற்றங்கள் உண்டாயிற்று. அதனால் சித்தார்த்தரை சதுர்முகன் சதுர்முகன் என்றும் அழைத்தார்கள் (ஆதிவேதம் 13).

இளவரசன் அரண்மனையை விட்டு நீங்குதற்குக் காரணமாக இருந்த காட்சிகளை விண்ணுலகத் தேவதைகளே மாயத் தோற்றங்களாக உருவாக்கியதாக அசுவகோசரின் புத்தசரிதம் கூறும். ஆனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை பற்றிய விசாரனையில் அவனை ஈடுபடுத்திய மூன்று நிகழ்ச்சிகளும் இயற்கையாய் நிகழ்ந்தவைகளாகத் தாசர் காட்டுவார். சித்தார்த்தனைப் பெண்ணின்பத்தில் ஆழ்த்தி விடவேண்டுமென்பதற்காக அவன் தந்தை பல அழகிய பெண்களை அவனிடம் அனுப்பி அவனைக் கவிழ்க்க, உதாயின் என்னும் பிராமணனை முனிவர்கள் பலர் பெண்களிடம் நாட்டம் கொண்ட கதைகளைச் சொல்லுமாறு பணிப்பதாகப் புத்த சரிதம் கூறும். அப்பெண்கள் அவனைக் கவர மேற்கொண்ட முயற்சிகளை ஓர் அதிகாரம் விரிவாக விளக்கும் (புத்தசரிதம் 44-60). தாசர் இத்தகைய காட்சியை முற்றும் புறக்கணித்து சித்தார்த்தர் வாய்மை விசாரணையில் ஈடுபட்டதாகவும் ஆறு சங்கத்தைச் சேர்த்தவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தியபின் அரண்மனையை விட்டு வெளியேற முடிவெடுத்ததாகவும் கூறுவார். இவர்களுள் முதல் சங்கத்தார் இறப்பும் பிறப்பும் உயர்வும் தாழ்வும் நன்மையும் தீமையும் பஞ்ச பூதங்களால் உண்டானவையென்று கருதிப்பஞ்ச பூதங்களை வணங்குபவர்கள். இரண்டாவது சங்கத்தார் மனிதன் விலங்காகவும் விலங்கு மனிதனாகவும் பிறக்காது, மனிதன் மனிதனாகவும் விலங்கு விலங்காகவும் பிறக்குமாதலால் ஒன்றை வணங்குவதால் நன்மையும் இல்லை, வணங்காதலால் தீமையுமில்லையெனும் நம்பிக்கை கொண்டவர்கள். மூன்றாவது சங்கத்தார் மனிதனுக்கு யாதொரு இன்பமும் இல்லையென்றும் இறப்பிற்குப்பின் யாவும் சூன்யமாதலால் சூன்யத்தை விசாரிப்பதில் யாதொரு பயனும் இல்லையென்றும் கருதுபவர்கள். நான்காம் சங்கத்தார் உயிர்களுக்கு ஆதியுமில்லை அந்தமும் இல்லையென்றும் எல்லாம் தானே ஏற்றுக்கொள்வதால் யாவும் தற்செயல் என்றும் எண்ணுபவர்கள். ஐந்தாம் சங்கத்தார் புசிப்பை விரும்பாதவனும் தாகத்தை அடக்குவோனும் அக்கினியின் கொதிப்பைச் சகிப்போனும் சூரிய வெப்பத்தைத் தாங்குபவனும் எக்காலும் சுகமடைவான், இவைகளைத் தாங்காதவன் சுகமடைய மாட்டானென்று முடிவு செய்தவர்கள். ஆறாம் சங்கத்தார் ஒன்பது கோள்கள் கூடி நடத்தும் செயல்களே உலகத்தில் பொருந்தும் நிகழ்ச்சியென்றும் தோற்ற ஒடுக்கங்கள் யாவும் நவகோட்களின் ஆட்டங்கள் என்றும் அறிந்து நடப்பவர்கள் (ஆதிவேதம் 17-23).

பெளத்தத்திற்குமுன் வேதநெறியாளர்களென்றழைத்துக் கொண்ட பிராமணர்கள் இருந்தார்களென்றும் அவர்களோடு புத்தர் பின்னால் வாதிட்டதாகவும் புத்தசரிதம் கூறும். ஆனால் தாசர் இந்து சமயம் என்பதெல்லாம் பின்னால் வேஷ பிராமணர்கள் கற்பித்துக் கொண்டதென்றும் உண்மையான வேதங்கள் புத்தரின் அறவுரைகளே என்றும் எடுத்துரைப்பவராதலால் புத்தருக்கு முன் கடவுளைப்பற்றி வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்த ஆறு சங்கத்தார் பற்றி மட்டும் பேசுகிறார். இவ்வாறு சங்கத்தார் பற்றிய செய்திகளை அருங்கலைச் செப்பு எனும் தமிழ் நூலிலிருந்து அவர் மேற்கோள்களாகத் தருவதும் குறிப்பிடத்தக்கது. ஆறாம் சங்கத்தார் என்போர் கலிவாகு மரபில் வந்த சாக்கையர்கள் என்றும் சோதிடத்தில் வல்லவர்கள் என்றும் தாசர் கூறுவதும் கருதற்குரியது. அவர்கள்,

சக்கரவர்த்தித் திருமகன் போதித்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஊழ்வினையற்று ஜெனனத்தில் புண்ணிய பலன் தோற்றம் உணர்ந்து ஒவ்வொருவர் கணிதக்குறிப்பையும் ஒலிவடிவ பாலிபாஷையில் “ஐநநீ ஜென்ம செளக்கியானாம் வத்த நீ குல சம்பதாம் பதவிபூர்வ புண்யானாம்” என சுருதியாக ஏதுக்குத் தக்க நிகழ்ச்சியாகும் பூர்வச் செயலுக்குத்தக்க தோற்றங்களை விளக்கி ஒழுக்கத்தை விருத்தி செய்து கலிவாகுவின் கணிதத்தைப் பரவச் செய்து வந்தார்கள் (புத்தசரிதம் 25).

சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியேறி, துறவறம் மேற்கொண்டு, புலன்களைவென்று, மெய்யுணர்ந்து, உள்ளொளி பெற்றதை நான்கு, ஐந்தாம் காதைகளிலேயே தாசர் கூறிவிட்டு மேல் வரும் காதைகள் பலவற்றைப் புத்த தன்மத்தை விளக்கப் பயன்படுத்திக் கொள்வார். ஆனால் அசுவகோசரின் புத்தசரிதம் சித்தார்த்தரின் பிறப்பு, அரண்மனை வாழ்க்கை, மன உளைச்சல், ஈர்க்கமுயன்ற பெண்களைப் புறக்கணித்தல், அரண்மனையிலிருந்து வெளியேறல், சந்தகனைத் திருப்பி அனுப்புதல், தவப்பூங்காவில் நுழைதல், அரண்மனையில் புலம்பல், சித்தார்த்தனை மீண்டும் அரண்மனைக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பெற்ற முயற்சி, சிரென்யர் சித்தார்த்தரைச் சந்தித்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல், அராதமுனிவருடன் விவாதம், மாரனை வெல்லுதல் என்ற தலைப்புகளில் சித்தார்த்தன் புத்தராதற்கு முன் நடந்தனவற்றைப் பதிமூன்று காண்டங்களில் கூறிவிட்டுப் பதினான்காம் காண்டத்தில் அவர் ஞானம் அடைந்ததைச் சொல்லும் வடமொழிக்காப்பியம் நிகழ்ச்சிகளிலும் உரையாடல்களிலும் கவனம் செலுத்த, ஆதிவேதம் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றி வாழ்க்கைக்குரிய நெறிகளைப் புத்தரின் வாயிலாக விளக்கிச் செல்லும்.

புத்தர் ஆதிவேதம் என்னும் மூன்று பேத வாக்கியங்களையும் அவற்றோடு வீட்டையும் சேர்த்து நான்கு வாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உப நிடதங்களையும் வழங்கினார் என்றும் பிம்பாசார நகரத்துள் சென்று அதன் மன்னனின் மூலம் தசபாரமாம் பாரதப்பத்தைப் பாறையில் பதியச் செய்தார் என்றும் தாசர் எடுத்துரைப்பார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல், ஏழையர்க்கு ஈதல், மனத்தை அடக்கல், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தல், பிறன்மனை விரும்பாதிருத்தல், பிறர் பொருளைக் களவாடாதிருத்தல், பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருத்தல், அறிவை மயக்கும் பொருள்களை அருந்தாதிருத்தல், பொய்சொல்லி வஞ்சியாதிருத்தல், காம வெகுளி மயக்கங்களை அகற்றல் ஆகிய பத்தையும் தசபாரங்கள் என்றழைத்துப் “பாரதம் பத்தும் பாறைப்பதிந்து சீரது தந்தான் சினன்” என்று பாரதப் பத்திலிருந்து மேற்கோள் காட்டுவார் தாசர்.

விநாயகர் என்னும் புத்தபிரான் பாரதத்தை மலையில் எழுதியுள்ளாரென்பதும் மகா புராண பாடம் பாரதமென்பதும் தச பாரமென்பதும் பாரமிதமென்பதும் செய்யுட்களாய் இராது. வாசக நடையில் எழுதியுள்ள தசசீலத்தின் பெயராம் (ஆதிவேதம் 49).

புத்தரை விநாயகர் என்றழைப்பதற்கு ஆதாரமாகப் பின்கலை நிகண்டிலிருந்து,

தருமராசன், முநிந்திரன், சினன் பஞ்சதாரை விட்டே அருள் சுரந்து அவுணர்க் கூட்டும் ததாகதன் ஆதிதேவன் விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினம் தவிர்ந்தோன் அரசு நீழலில் இருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்

எனும் பாடல் வரிகளைத் தாசர் சுட்டுவார் (ஆதிவேதம் 49).

அசுவகோசரின் புத்தசரிதமும் புத்தரை விநாயகர் என்று அழைப்பது குறிப்பிடற்குரியது (புத்தசரிதம் 56).

“சதுர்சத்ய காதை” யில் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய நான்காலும் துக்கமுண்டாமென்பது சத்தியம் என்றும் துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கும் பரிசுத்த சத்தியங்களென்றும் புத்த தன்மம் விளக்கப்படும். இக்காதையில் புத்தருடைய கோட்பாடு பற்றித் தாசர் கூறும் கருத்தொன்று குறிப்பிடற்குரியது.

உங்கள் சகோதரர்களில் ஒருவர் உங்களை நோக்கி நமது ஆசான் கெளதமர் ஒரு கோட்பாட்டை உடையவரா என்று கேட்பார்களாயின் அதற்குப் பதிலாக, ததாகர் எவ்விதக் கோட்பாடுகளுக்கும் உட்பட்டவர் அல்லர், ஏனெனில் இந்த தேசம் இவ்வகையானது இவ்விதமாக வளருகிறது இவ்விதமாக மடிகிறதென்றும், உணர்ச்சி இவ்விதமானது இவ்விதமாக உதிக்கின்றது இவ்விதமாக மடிகிறதென்றும்... அறிவு இவ்விதம் இவ்விதமாக உதிக்கின்றது இவ்விதமாக மடிகிறதென்றும் தேறக்கண்டு தெளிந்திருக்கின்றனர். ஆதலின் சகலவித கோட்பாடுகளினின்றும் சகல எண்ணங்களினின்றும் சகலவித தப்பபிப்பராயங்களினின்றும் தற்பெருமையினின்றும் தன்னயத்தினின்றும் முற்றும் நீங்கியுள்ளவர் என்று அறிந்து கூறுவீர்களாக (சதுர்சத்வ காதை 67).

“சங்கங்களின் ஸ்தாபன காதை” புத்தர் காசியில் தன்மசங்கங்களை நாட்டி யட்சர் என்பானுக்கும் அவனுடைய நண்பர்களாகிய நான்கு சிறுவர்களுக்கும் அறிவுரை கூறியதாகப் பல புத்த சமயக் கருத்துகளை விளக்கும்.

... சருவசீவராசிகளுக்குள்ளும் சிவமென்னும் அன்பும் பிரமம் என்னும் சாந்தமும் ஈசன் என்னும் ஈகையும் நிறைந்துள்ள படியால் அதனதன் கூட்டத்தைப் பாதுகாத்து ஒன்று கூடி விருத்தி செய்து வருகிறது. ஆனால் பட்சிகள் அதனதன் குஞ்சுகளை மட்டிலும் பாதுகாத்து விருத்தி செய்யும், மிருகங்கள் அதனதன் குட்டிகளை மட்டிலும் பாதுகாத்து விருத்தி செய்யும், மக்கள் என்னும் மநுக்களோ பட்சிகளைப் போலும் தலை குனிந்து தன்னினத்தில் அன்பு செலுத்துவதுபோல் இராது, தலை நிமிர்ந்து சகல சீவர்களிடத்தும் அன்பு பாராட்டி ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் (ஆதிவேதம் 109).

“சதுரகிரிக் காதை”யில் புத்தர் சதுரகிரியென்றும் இவ்வுலகத் தீவகமென்றும் வழங்கும் ஒரு மலையின் மீதேறி உச்சியில் நின்று அவரைச் சூழ்ந்து நிற்கும் மக்களுக்கு அறவுாரை கூறுகிறார். “பிராஹ்மணவாக்கம்” என்ற பகுதியில்,

பாபத்தினின்று விலகின படியால் பிராஹ்மணனென்றும் சாந்த வாழ்க்கையில் நடப்பதால் சமணனென்றும் பாப குறறங்களை விலக்கி வருகிறபடியால் பி...ஜிதாவென்றும் அழைக்கப்படுவான் மனவாக்கு காயத்தால் ஜீவர்களுக்கு யாதொரு துன்பமும் செய்யாதிருப்பவன் எவனோ

அவனே பிராஹ்மணன்... உலகப் பற்றற்றவனும் ஏழையுமாய் இருப்பவன் எவனோ அவனே பிராமணன்” (புத்தவேதம் 121-122).

என்றெல்லாம் பிராமணனுக்குரிய இலக்கணம் கூறப்பெறுகிறது. “பிக்கு வர்க்கம்” எனும் பகுதியில் யார் உண்மையான பிக்கு என்பது வரையறை செய்யப்படுகின்றது.

எவனொருவன் கையைக் காத்துக் கொள்பவனாயும் காலைக் காத்துக் கொள்பவனாயும் வாக்கைக் காத்துக் கொள்பவனாயும் சகலத்தையும் காத்துக் கொள்பவனாயும் தனக்குள் ஆனந்தத்தையும் சாந்தத்தையும் அடைந்தவனாயும் ஏகாந்தமானவனாகவும் ஆறுதலை உடையவனாகவும் இருக்கின்றானோ அவனே பிக்கு. எவனொருவன் நாமரூபமாம் தேகத்தையும் சித்தத்தையும் ஒரு பொருட்டாக மதியாதும் மேலும் மேலும் பொருள் சேர்க்கும் அவாவில்லாமலும் மேலான பதவியை நாடுகின்றானோ அவனே பிக்கு (ஆதிவேதம் 124).

புத்தபோதனையை விரிவாகத் தரும் இக்காதை,

தெய்வம் தெளிமின் தெளிந்தோர் பேணுமின்

பொய்யுரை, அஞ்சுமின் புறஞ்சொல் கூறன்மின்

ஊனுன் அகற்றுமின் உயிர்க்கொலை அஞ்சுமின்

..........................................

மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென

என்னும் சிலப்பதிகார வரிகளை மேற்கோளாகத் தருகிறது. (ஆதிவேதம் 135).

புத்த சரிதத்தின் பத்தொன்பதாம் காண்டம் புத்தரும் அவர் தந்தையும் சந்திக்கும்போது புத்தர் தமது தந்தை தம்மை இன்னும் மகனாகவே கருதும் எண்ணத்தை மாற்ற வேண்டுமென எண்ணிப் பல வித்தைகளைக் காட்டி அவரை வியக்கச் செய்ததாகக்கூறும். தாசரின் “தந்தைக்கு மைந்தன் குருவாய காதை”யில் இத்தகைய காட்சி எதனையும் சேர்க்காமல் தந்தைக்கு மகன் பெளத்த தன்மத்தைப் போதித்ததாகவும் அதனால் அவர் “தகப்பன் சுவாமி” என்றும் “பிதா விதாதா” என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவார் (ஆதிவேதம் 140). புத்தர்- அசோதரை சந்திப்பை உள்ளத்தை உருக்கும் ஒரு சிறு நாடகமாகவே உருவாக்குகின்றார் தாசர்.

ததாகதர் தனது தந்தைக்கு ஞானோபதேசம் செய்துவிட்டு அசோதரை வாசம் செய்யும் இடத்தை நாடி வாயிற்படியில் நின்று ததாகதன் வரலாமோவென்றார். தேவிகா லோத்திரம் தடையின்றி வரலாம் என்னும் மிருது வாக்கு எழும்பிற்று. அதனை வினவிய பகவன் அறைக்குள் சென்று அசோதரையை

நோக்கி அம்மே! சுகமோ வென்றார். அசோதரையோ நமது ஐயன் பாதத்தை இறுகப்பற்றி ஐயனே! உமது கருணா நோக்கத்தால் இம்மட்டும் சுகமே யென்றாள். அம்மே! யாதொரு துக்கமும் இல்லையோ வென்றார்.

ஐயே! உம்மைப் பிரிந்த துக்கம் ஒன்றேயன்றி வேறு துக்கம் யாதும் அறியேன் என்றாள்.

ததாகதர் சகலருக்கும் தோன்றி நமக்குத் தோன்றாமல் இருக்கின்றா ரேயென்று துக்கித்தாயா என்றேல் ததாகதர் தோற்றமே மறைந்து விட்டதென்று துக்கித்தாயா வென்றார்.

உலகெங்கும் சத்தியதருமமாம், அமுதத்தை ஊட்டிவரும் ஐயன் உடனுயிர் பொருந்தி வாழ்ந்த அடியாளுக்கு அப்பேரின்ப அமுதை ஊட்டாது பிரிந்து நின்ற குறையே பெருந்துக்கத்தில் ஆழ்த்தியதென்றாள்.

அம்மே, நீவிர் தோன்றிக்கெடும் சிற்றின்பமாம் உலகவிச்சையை ஆசிக்கின்றாயா அன்றேல் அன்றும் கெடாமல் நித்தியமாம் பேரின்ப சதா சுகத்தையும் தெரிந்து கொள்ள ஆசிக்கின்றாயா என்றார்.

ஐயனே! சதாசுக நித்ய தன்மமாம் பேரின்பத்தையே தெரிந்து கொள்ள ஆசிக்கின்றேனென்றாள் (ஆதிவேதம் 140).

புத்தர் தமது தந்தைக்கு ஞானோபதேசம் செய்ததோடல்லாமல் மனைவிக்கும் மகனுக்கும் ஆறுதல் கூறி அறநெறியுரைத்துப் புத்ததன்மத்தில் சேரச் செய்கிறார் (ஆதிவேதம் 143) என்று தாசர் எழுதிச்செல்வது புத்தரின் கருணை உள்ளத்தை எடுத்துக்காட்டவே.

புத்தர் கலைகள் யாவற்றிலும் வல்லவர், கலைகள் பலவற்றின் தோற்றத்திற்கும் அவரே மூலம் என்று சுட்ட விரும்பும் தாசர் அதற்கேற்பச் சில காதைகளை அமைத்துக் கொள்கிறார். “பரத்துவாசருக்குப் பிணிக்குத் தக்க ஓடதிகள் போதித்த காதை”யில் தாசரின் மருத்துவ அறிவும் பளிச்சிடுகின்றது.மருத்துவத்தோடு புத்த தன்மமும் முறையாக இணைக்கப்படுகிறது.

பகவன் பரத்துவாசரை நோக்கி அன்பனே! உமக்குள் எழும் ரசோகுண, தமோகுண, சத்துவகுணம் என்னும் முக்குணத்திரய காம, வெகுளி, மயக்கங்களைக் காரணமாகக் கொண்டு எழுஉம் முக்குற்றங்களே வாத, பித்த, சிலேத்துமம் என்னும் மூவியாதி பீடமாகி வாதத்தால் ஆயிரத்து ஐந்தாறு வகைத் தோற்றங்களும் பித்தத்தால் ஆயிரத்து ஐந்நூற்றுநாற்பது வகைத் தோற்றங்களும் சிலேத்துமத்தால் ஆயிரத்து நானூற்று எட்டுவகைத் தோற்றங்களையும் உண்டு செய்து மக்களை மாளாத்துன்பத்திற்கு ஆளாக்கி மடித்து வருகின்றது. இத்தியாதி வியாதிகளின் தோற்றத்திற்கும் உபாதைக்கும் மக்கள் அவாக்களே காரணமாகும் (ஆதிவேதம் 147).

உமக்குள்ள அன்பை நீடிக்கச் செய்தும், உமக்குள்ள சாந்தத்தை நீடிக்கச் செய்தும் உமக்குள்ள ஈகையை நீடிக்கச் செய்தும் இருப்பீராயின் உமக்குள்ள தீங்குகள் உம்மையறியாமல் நீங்கும் (ஆதிவேதம் 153)

“குருச்சேத்திர காதை”யில் காயா சமாதி, வேதனா சமாதி, சித்த சமாதி, தம்ம சமாதி ஆகிய நான்கு வித சமாதிகளைப் பற்றியும் விளக்கங்கள் தரும் தாசர் ஓரிரண்டு இடங்களில் பாலிமொழி மூலங்களையும் தருகிறார்.

ஓ! சகோதிரர்களே! சகோதிரன் ஒருவன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையும் ஊக்கமும் அறிவும் ஆராய்ச்சியும் உடையவனாகவும் காமமும் துயரமும் அற்றவனாயும் உணர்ச்சி விஷயத்தில் ஜாக்கிரதையும் ஊக்கமும் அறிவும் ஆராய்ச்சியும் உடையவனாகியும் காமமும் துயரமும் அற்றவனாயும் மனவிஷயத்தில் ஜாக்கிரதையும் ஊக்கமும் அறிவும் ஆராய்ச்சியும் உடையவனாகியும் பூதவிஷயங்களில் ஜாக்கிரதையும் ஊக்கமும் அறிவும் ஆராய்ச்சியும் உடையவனாகியும் காமமும் துயரமும் அற்றவனாகவும் இருந்து சிந்திப்பதே நற்கடைபிடி அல்லது நல்தியானம் என்னப்படும் (ஆதிவேதம் 186).

“தர்ம சக்ர பிரவர்த்தன காதை”யில் பெளத்தர்கள் போற்றிய புத்தாங்க சரணம், தர்மாங்க சரணம், சங்காங்க சரணம் எனும் மூன்றையும் திரி ரத்னங்களென்றும் மூன்று கீதைகளென்றும் பெயரிட்டுப் பாலிமூலத்தையும் மொழி பெயர்ப்பையும் தாசர் தருவார்.

புத்தம்

மனுக்களில் பெருமையும் அருமையுமான ஆசானும் பகவான் சாக்கைய முனிவர் சகலருக்கும் குருவாக விளங்கி உலகில் முடிக்க வேண்டியதை முடித்துக் கரையேறி நிருவாணமடைந்த மங்கலகரமான புத்தபிரானை யாங்கள் துணைக் கொள்கிறோம்.

தம்மம்

காமம், அவா, துக்கம் இவைகளினின்று விலகிச் செய்யும் தருமமும் அழியா தருமமும் குற்றமற்றதும் மதுரமானதும் தெளிவானதும் தருக்க ரீதியானதுமான தருமத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம்.

சங்கம்

எட்டு மார்க்கங்களை உடையவர்களும் நான்கு வித வாய்மை உடையோர்களும் தர்க்கத்தில் தேர்ந்து அதன் பலனைக் கண்டடைந்த சங்கத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம் (புத்தவேதம் 196).

இவற்றையே உண்மையான கீதைகள் என்று தாசர் கருதி அறிமுகப்படுத்துவார்.

“கோசல நாட்டரசன் காதை”யில் புத்தரை நாடி வந்த கோசல நாட்டு மன்னனுக்கு அவர் கூறும் செறிவான அறவுரைகளைக் காணலாம்.

மரமானது பற்றியெரியுங்கால் ஓர் பட்சியும் அதனருகில் அணுகாமல் திகைப்பதுபோல் கோபாக்கினி, காமாக்கினி, லோபாக்கினியால் பற்றியெரியும் உள்ளத்தின்கண் உண்மைசேராது திகைத்துப் பேதைமையால் பிறப்புண்டாகிப் பிணி, மூப்பு, சாக்காட்டிற்கு இழுத்துப் பின்னும் துக்கத்திற்கு ஆளாக்கும் (ஆதிவேதம் 198)

சந்தக் குழம்பிலோர் பாதமும் அக்கினிக்குண்டத்தில் ஓர் பாதமும் வைத்துக் கொண்டிருப்பதுபோல் இன்னின்னது தீயச் செயல்களென்றும் இன்னின்னது நியாயச் செயல்களென்றும் பகுத்துணர்ந்து தீயச் செயலாலுண்டாகும் தீவினைப் பயனாகும் பிறப்பையும் இறப்பையும் அறுத்து நற்செயலால் எழூஉம் நல்வினைப் பயனாகும் பரி நிருவாண நித்திய வாழ்வைப் பெறுவாய் (ஆதிவேதம் 201).

“கலஹ விவாத காதை” யார் யாரையெல்லாம் பிராமணன், சமணன், நாகன், அரஹத்து, பரிபாஜகா, தீரன், குஸலன், முனி, மஹாபிக்கு வென்று அழைக்கலாம் என்று பாலி மேற்கோள்களுடன் விளக்கும். உலகைப் படைத்த இறைவன் ஒருவன் உண்டா, இல்லையா? ஆன்மா எத்தகையது? பிரமம் அதுவா, இதுவா? என்பன போன்ற கேள்விகளைக்கேட்டு யாரும் புரிந்து கொள்ளமுடியாத விடைகளை அளிக்காமல் எளிய மக்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை எளிய முறையில் புத்தர் பலருக்கும் எடுத்துச் சொல்கிறார். இல்லறத்தார், துறவறத்தார் ஆகிய இருசாராரும், எப்படியிருக்க வேண்டுமென்று தெளிவாகச் சொல்லப்படுகிறது.

ஓ! சகோதரர்களே! தகாத காலங்களில் வெளியே செல்லாமலும் குறித்த நேரத்தில் பிச்சா பாத்திரத்தைக் கரத்திலேந்தி கிராமங்களுக்குச் சென்றும், பிச்சை வாங்குங்கால் இவர்கள் ஏழை, இவர்கள் தனவான் என நினையாது சமமனதுடனும் பிச்சா பாத்திரத்தைக் கரத்தில் ஏந்திச் செல்லுங்கால் இந்த இல்லத்தில் நமக்கு நல்லுணவு கிடைக்கும், இந்த இடத்தில் நல்லுணவு கிடைக்காதென்னும் அபிப்பிராயத்துடன் செல்லாமலும் சாவகர்களாம் குடும்பிகள் அன்புடன் அளித்த உணவைப் பிச்சாபாத்திரத்தில் வாங்கிய பின் திரும்புங்கால் இன்னின்ன இல்லத்தில் இவ்விவ்வகைத்தான பதார்த்தங்கள்,

இவ்விவ்விதமான குடும்பிகளால் அளிக்கப்பட்டனவென நினையாது நடக்கும் போதே மூன்று அடிதூரத்தில் தலை குனிந்து ஒரே பார்வையுடனும் ஒரே மனத்துடனும் சென்று சேர்ந்த பின் இவ்வுணவோ இரும்புத்துாளை ஒத்தது. இத்தகைய உணவோ பசியென்னும் நோய்க்கு மருந்து எனச் சிந்தித்துக் கொண்டும் புசித்தபின் ஒரு தனிமையான இடத்தில் சென்று தான் வருங்கால் மனம் எந்தெந்த விடத்தில் தவறிச் சென்றதோ, அவைகளைத் தியானத்தில் சிந்தித்து மறுபடியும் அவ்வகைத்தான பார்வையில் மனத்தைச் செலுத்தாதிருக்கும்படித் திருத்தியபின் தன்னில்தானே விழிப்புடன் தியான சமாதியில் இருப்பவர் எவரோ அவரையே முனி என்று அழைக்கலாம் (ஆதிவேதம் 207).

“தந்தையின் இரண்டாவது தரிசன காதை”யில் புத்தரும் அவர்தந்தையும் சந்தித்துப் பேசுவதை ஓர் அரிய நாடகக் காட்சியாக மாற்றுகிறார் தாசர். இத்தகைய சந்திப்பும் அசுவகோசரின் புத்த சரிதத்தில் இடம்பெறவில்லை.

சக்கரவர்த்தியாரும் தனக்குள்ளிருந்த வியாதியின் உபத்திரவம் நீங்கித் திருமகனை விழித்துப் பார்த்து அருமை மைந்தனேயென்று அழைக்கலாமோ வென்று சிந்தித்தான். மறுபடியும் தன்னைத் தேற்றிக்கொண்டு நாம் அவருக்குப் பிதாவாயினும் நமக்கு அவர் ஞானப்பிதாவாம் தாதாவாச்சுதே அவரை மைந்தன் என்று அழைக்கலாமோ வென்று மருண்டான். அவரது முக தேஜசைக் கண்டு ஆனந்தக்கண்ணிரைச் சொரிந்தான்.

சுத்தோதயச் சக்கரவர்த்தியின் இத்தியாதி எண்ணங்களின் உதயங்களையும் ஒடுக்கங்களையும் உள்ளுணர்ந்த ஒப்பிலாவப்பன் சுத்தோதயன் அருகில் சென்று ஐயனே யாது குறையென்று வினவினார் . . .

ஐயனே! தோற்றும் பொருட்கள் யாவும் கெடும் என்பதைத் தெள்ளறத் தெளிந்து கொண்டீரா இல்லையாவென்றார். தாதா தெரிந்து கொண்டேன், தெரிந்து கொண்டேன் என்று கூறினான்.

நீவிர் தெரிந்து கொண்டது திண்ணமாயின் உமது கோரிக்கையை மறந்து விடுவதே மகிழ்ச்சியாகும் என்று கூறியவுடன் கத்தோதயச் சக்கரவத்தியின் பேச்சும் மூச்சும் ஒடுங்கிப் பிரேதமானார் (ஆதிவேதம் 210-11).

இதை அடுத்து வரும் காட்சி வியப்புக்குரியது. இறந்த அரசனின் உடலைச் சுடலைக் கெடுத்துச் சென்று தகனம் செய்யும் போது அசோதரையும் இராகுலரும் சங்கத்தவர்களும் உறவினர்களும் சூழ்ந்து நின்றார்கள்.

தகனக்காட்சியைக் கண்டு நின்ற ததாகதர் சுத்தோதய மறுமை பிறப்பறுமோ அறாதோ வென்று உள்ளத்துணர்ந்து அறுமென்னும் தோற்ற உணர்ச்சியால் ஆனந்தமுற்று மலைமகள் அசோதரையும் மற்றுமுள்ளோரும் காண, தகன குண்டத்தைச் சுற்றிச் சுற்றித் தனது ஏக சடையுடை துலங்க இவ்வுரு ஆணோ பெண்ணோ என்று கலங்கச் சுடலையில் நடனமாடினார் (ஆதிவேதம் 211).

தந்தைக்கு மறுபிறவியில்லை யென்பதறிந்து தனயன் மகிழ்ச்சிக் கூத்தாடியதாகவும் அதனாலேயே அவர் நடராசனென்றும் சுடலையாடி யென்றும் அழைக்கப்பட்டாரென்றும் சொல்லி இக்காதை முடிகிறது. இந்நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் அசோதரை “மலைமகள்” என்று அழைக்கப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

குடும்பிகளுக்கு அறவுரை கூறவிழையும் தாசர் “சிகாளா விசாரிணைக் காதை”யை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். சிகாளன் என்னும் குடும்பியொருவன் புத்தரை வணங்கிக் “குடும்பிகளாகிய எங்களுக்குப் பாபகர்மங்களைப் போதித்துக் காத்தல் வேண்டும்” என்று இறைஞ்ச அவர் (1) உம்மையடுத்திருக்கும் சீவர்களின் மீது அன்பு பாராட்டாது கொலை புரிவது பாவம் (2) ஒருவன் மனம் உவந்து உனக்கு ஈயாத பொருளை அபகரிப்பது பாவம் (3) தன் தாரம் இருக்கப் பிறர் தாரம் இச்சிப்பது பாவம் (4) தாம் சொல்லும் சங்கதிகள் யாவும் பொய்யென்று அறிந்தும் அவற்றைப் பேசுதல் பாவம் என்று கூறுவதோடு அமையாது (1) புத்தியை மயக்கும் கள்ளை அருந்தும் பாவக் கிளைகள் (2) சோம்பேறியாய்த் தெருக்களில் உலாவுவதினால் உண்டாகும் பாவக்கிளைகள் (3) நடனம், பாட்டுக்கச்சேரி ஆகியவற்றால் உண்டாகும் பாவக் கிளைகள் (4) குடும்பிகளுக்குச் சூதாட்டத்தால் விளையும் பாவக் கிளைகள் (5) சோம்பேறிகளுடன் சேர்ந்து பழகுவதால் உண்டாகும் பாவக்கிளைகள் ஆகியவற்றையெல்லாம் பட்டியலிட்டு விளக்குவார். யார் யாரை நண்பர்களாகக் கொள்ளலாம், யார் யாரைத் தள்ள வேண்டும், பெற்றோர் மக்களுக்குச் செய்யவேண்டியவை, மக்கள் பெற்றோரை ஆதரிக்க வேண்டியமுறைகள், ஆசிரியனுக்குத் தேவையான சிறப்புகள், மாணவர்கள் ஒழுக வேண்டிய நெறிகள், கணவன் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும், மனைவி கணவனிடம் நடந்து கொள்ள வேண்டியமுறை, குடும்பத்தான் தன்னைச் சார்ந்தார்க்குச் செய்ய வேண்டியவை, குடும்பத்தானுக்கு அவனது உறவினர் செய்ய வேண்டியவை, எசமானன் வேலையாட்களை எவ்வாறு நடத்த வேண்டும், வேலையாட்கள் எசமானனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிக்குகளுக்கு அடியவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், அடியவர்களுக்குப் பிக்குகள் போதிக்க வேண்டிய அறவுரைகள் என்னும் தலைப்புகளில் புத்தர் நீண்ட உரையொன்று ஆற்றுவதாக இக்காதை அமைகிறது.

“மத்திம பதிபதா காதை” பேதைமை, செய்கை, உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத்தொகுதி, பிறப்பு ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று உண்டாகின்றன வென்றும் பிறப்பிலிருந்து மூப்பும், மரணமும், வலியும், அழுகையும், துன்பமும், கவலையும் ஏக்கமும் உண்டாகின்றனவென்றும் விளக்கும். “சதுர் பரமார்த்த காதை” மனம், மனத்தின் ஆற்றல், உருவம், நிருவாணம் ஆகிய நான்கு வகைப் பரமார்த்தங்கள் பற்றிப் பேசும். “கன்மகாதை” பேராசையால் செய்யப்படும் கன்மங்கள், பகையால் செய்யப்படும் கன்மங்கள், செறுக்கால் செய்யப்படும் கன்மங்கள், பேராசை யற்றுச் செய்யப்படும் கன்மங்கள், பகையற்றுச் செய்யப்படும் கன்மங்கள், செறுக்கற்றுச் செய்யப்படும் கன்மங்கள் என்று கருமங்களைப் பட்டியலிடும்; ஒருவன் பலபிறவிகளில் தசபாரமிதைகளாம் தானம், சீலம், நிக்கஹமா (பிறர் நலனையே கருதுதல்), பிரஞ்ஞா (ஞானத்தை விருத்தி செய்தல்), வீரியா (துய்மை பெற அச்சமின்றிச் சிந்தித்துத் தெளிதல்), சாந்தி (அன்பு பாராட்டிச் சினம் கொள்ளாதிருத்தல்), சத்யா (சத்தியத்தைக் கைப்பற்றல்), அதிஷ்டானா (நல்வழியிலிருந்து பிறழாமலும் அவாக்களை எழவிடாமலும் இருத்தல்), மைத்ரீ (தாய் தன் ஒரே மகனைக் காப்பாற்றுதல்போல் எல்லாவுயிர்களிடத்தும் கருணை காட்டல்), உபேட்சா (நண்பனையும் பகைவனையும் ஒரே விதமாகப் பாவித்தல்) ஆகியவற்றைத் தன் நடைமுறை வாழ்க்கையில் கைக்கொண்டானானால் அரகத்து நிலையை அடைவான் என்றும் எடுத்துரைக்கும் (ஆதிவேதம் 243).

புக்க சதி துறவு பூண்ட காதை (1) களவு செய்யாமை (2) கள்ளருந்தாமை (3) பொய் சொல்லாமை (4) பிறன் மனை நயவாமை (5) கொலை செய்யாமை (6) அகால உணவு அருந்தாமை (7) இசை, வாசனை, கூத்து ஆகியவைகளுக்கு இடங்கொடாமை (8) உயர்வான படுக்கையின்மேல் துயிலாமை ஆகிய எட்டுச் சீலங்களை வற்புறுத்தும்.

“பிருமன் தரிசன காதை” ஒரு தனித்தன்மை கொண்டது. சங்க இலக்கியம் கூறும் ஐந்நில மக்களின் வாழ்க்கை முறைகளை இக்காதை விளக்கும். புத்தர் பாலைவனம் சென்று அங்குள்ள மக்களுக்குக் கண்ணாடி செய்யும் தொழிலைக் கற்றுத் தருகிறார். குறிஞ்சி நிலம் சேர்ந்து அங்கு வாழும் குறவர்கள் கொலைத் தொழில் புரியாது கனிகாய் கிழங்கு போன்றவற்றையும் தானியங்களையும் உண்டு வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். முல்லை நிலம் அடைந்து அம்மக்கள் கொண்டுவந்த பாலில் நெய்யும், தயிரும் கலந்திருப்பது கண்டு அவற்றைப் பிரிக்கும் வகையைக் கற்பிக்கிறார். மருத நில மக்களுக்குப் பயிர்த் தொழில் பயிற்றுவிக்கிறார். நெய்தல் நில மக்களுக்கு மீன் பிடிப்பதைக் கைவிட்டு முத்து, பவழம், சங்கு, உப்பு ஆகியவற்றை விற்று வாழுமாறும் போதனை செய்கிறார். இவ்வாறு ஐந்து நில மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும்போது “அருங்கலைச் செப்பு”, “அசோதரை நெஞ்சுவிடுதூது” ஆகிய தமிழ் இலக்கியங்களிலிருந்து தாசர் பொருத்தமான மேற்கோள்களைத் தரக் காணலாம்.

“மஹா மங்கள காதை”யில் புத்தர் ஆசிரமவாசிகளுக்கு எது மங்களம் என்று விளக்குமுகத்தான் எப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறார்.

சமணீர்காள்! உலக மாக்கள் தங்கள் தங்கள் இல்லங்களில் வாழை, கமுகு, பலா முதலியவைகளை நாட்டி சகல வாத்தியங்களும் முழங்க சிலர் துக்கத்திலும் சிலர் ஆனந்தத்திலும் சிலர் சுகதுக்கக் கலப்பிலுமிருந்து வரும் செயலை மங்கள காலமென்றும் மங்களகரமென்றும் கூறுவார்கள். அஃது அகுஸல கர்மங்களாகும். அதாவது, பாம்பின் வாய்ப்பட்ட தேரை எறும்பைப் பிடித்துண்பதற்கு ஒக்கும். குஸ்லகன் மங்களாவது யாதெனில் ஒரு குடும்பத்தில் சதியும் பதியுமாகிய இருவர் மனம் ஒன்றாகவும் களங்கமற்ற நெஞ்சினராகவும் இருந்து இல்லற் தருமத்தை நல்லறமாக நடாத்தி, சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்கி சத்தியதன்மத்தில் நடப்பார்களாயின் அச்செயலையே மகா மங்களமென்று கூறப்படும் (ஆதிவேதம் 259).

“உபதேச காதை”யில் புத்தர் பிக்குகளை அழைத்து “உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் நடக்கும்போதும் அன்பு மயமாக உட்காருங்கள், அன்பு மயமாக எழுந்திருங்கள், அன்புமயமாக நடவுங்கள்” என்று அறிவுரை கூறுவார்.

“சுவர்க்க காதை” இராஜ கிருகத்தை அடுத்திருந்த ஒரு சிற்றுார் மக்கள் ததாகதரின் உபதேசம் பெற்றுச் சமண நிலையெய்தி சத்துவசதானத்தில் நிலைத்து விட்டதாகச் சொல்லும். “பரிநிருவாண காதை”யில் புத்தர் தமது அடியார்களாகிய ஆனந்தனையும் பிருங்கியையும் சத்தியசங்கத்து அடியார்களையும் அழைத்துப் பரிநிருவாணத்தை விளக்குவார். தாம் பரிநிருவாணம் அடையுங்காலம் நெருங்கி விட்டதென்றும் அவர்கள் யாவரும் அதன் அந்தரங்க ஒளியின் பிரிவையும் அதன் இன்பத்தையும் துய்த்துப் பிறவியை அறுத்து நித்திய வாழ்வில் நிலைக்க வேண்டுமென்றும் வாழ்த்துவார். மலைவாழ் மக்களுக்கும் ஆனந்தனுக்கும் புத்த தன்மத்தையும், சேணிபன் என்னும் அரசனுக்குக் குடும்ப தன்மத்தையும் போதிப்பார். இக்காதையில் ஒரு மகிழ்வூட்டும் நாடகக்காட்சி இடம் பெறுகிறது. துறவறம் மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் குருவோடு மண்டபத்திற்குள் நுழைந்து பெளத்த பிக்குவாம் “திரிபிடகாச்சாரி பிரதான நாயகருக்கு” முன் வணங்கியெழுந்து செய்ய வேண்டிய சடங்குகளையும் பெற வேண்டிய உபதேசங்களையும் அழகிய உரையாடல்கள் விளக்கும். இதையடுத்து வரும் காட்சி உள்ளத்தை உருக்குவதாகும். யாவரும் பரிநிருவாணம் அடைந்து பிறவி துக்கத்தை ஒழித்துக் கொள்ளுங்கள் என்று கூறி அடங்கிய நிலையில் புத்தர் இருக்கும்போது விதர்ப்ப நாட்டு மன்னனும் அவன் அமைச்சனும் அவரை அணுகி “எங்களைக் காப்பாற்றும் பொருள் யாதேனும் உண்டா இல்லையா” வென்று கேட்பார்கள். இறைவன் என்று ஒருவன் உண்டா வெனும் இக்கேள்விக்குப் புத்தர் தரும் விடையாக அயோத்திதாசர் கூறுவது ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவது.

உண்டென்பதை உங்கள் உள்ளத்திலும் இல்லையென்பதைத் தோற்றும் பொருள் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிதலிலும் அறிந்து கொள்ளலாம். அன்னையானவள் குழந்தைக்கு அன்னம் ஊட்டுவாள். அதனை விழுங்கித் தன்னைப் போஷித்துக் கொள்ள வேண்டியது குழவியின் செயலாகும். அது போல ததாகதர் தான் கண்டடைந்த சுகவழியைப் போதிப்பார். நீங்களோ அவ்வழியில் சென்று சுகமுற்று உண்டா இல்லையாவென்பதை உங்களுக்குள் நீங்களே உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். உண்டென்னிலோ விசாரணையற்ற சோம்பலால் எங்குண்டு என்னும் எதிர்வினாத் தோன்றும். இல்லையென்னிலோ மகோத்மத்தச் சோம்பலால் யாதுக்கில்லையென்னும் பதில் மொழித்தோன்றும். ஆதலின் உண்டென்பதை அவனவன் உள்ளத்திலும் இல்லையென்பதை அவனவன் விசாரணையிலுமே தெரிந்து கொள்ள வேண்டியது இயல்பாமென்று தனது இரு கண்களையும் மூடி மார்கழி மாதம் பெளர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரத்தில் பரிநிருவாணம் அடைந்துவிட்டார் (ஆதிவேதம் 286).

அஸ்வகோசரது புத்த சரிதம் புத்தரின் இறப்பிற்குப் பின் அவருடைய உடல் எரியூட்டப்பட்டதென்றும் எலும்புகளை நினைவுச் சின்னங்களாகக் கொள்ள விரும்பிய அரசர்களுக்கும் மல்லர்களுக்கும் பெரும் போர் நடக்க விருந்ததென்றும் துரோணன் என்னும் பிராமணன் தலையிட்டு அவர்களுக்கு அறவுரை கூறி அப்போரை நிறுத்தி அவர்களெல்லாம் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வழி செய்தானென்றும் கூறும். இக்கதைக்கு ஒரு காண்டம் புத்த சரிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தாசரோ பரிநிருவாண காதையை இறுதிக் காதையாக்கி அஸ்திகளுக்கான தகராறு அரசர்களுக்குள் நிகழ்ந்ததாகவும் அதனை அரஹத்துகளாம் அந்தணர்கள் தீர்த்து வைத்தார்களென்றும் ஒரு சில வரிகளில் சொல்லி முடிப்பார். சாக்கையக் குடும்பத்தினருக்கு விபூதி பூசும் பழக்கம் எவ்வாறு ஏற்பட்டதென்பதையும் இங்கு விளக்குவார்.

சிறு பெட்டியிலுள்ள மாபூதியாம் சாம்பலைச் சற்குருவின் சிந்தனையும் தருமமும் மாறாதிருக்க புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்றையும் சிந்தித்து மூன்று கோடுகளாக நெற்றியில் பூசி அவ்விடம் மிகுந்து கிடந்த சந்தனக் கட்டைகளையும் எடுத்து அரகத்துகளாம் தென்புலத்தோர் உத்தரவின்படி உரைத்துப் புருவ மத்தியில் பொட்டிட்டு புருஷோத்தமனைச் சிந்திக்கும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

சாக்கைய வமிச வரிசையோர் சற்குருவைத் தரிசனம் செய்தவிடத்துள்ள மகாபூதியாம் சாம்பலின் மீது ஒர் இந்திரவிகாரம் கட்டி மகாபூதி யென்னுமோர் பெயரளித்தார்கள். மற்றும் நாதனை தகனம் செய்த விடத்திற்கு ஜகந்நாதமென்னும் ஓர் பெயரையும் அளித்தார்கள். நாதனின் அஸ்தியை அடக்கம் செய்தவோர் தேசத்திற்கே அஸ்திநாதபுரமென்னும் ஓர் பெயரையும் அளித்தார்கள்.

அதே காசியம்பதியில் பகவன் ஆதியில் தன்மசங்கத்தை நாட்டி, ஆதிவேதம் போதித்தவிடத்தில் பெரும் விகாரம் கட்டி, பகவன் சின்முத்திரா ரூபத்தையும் பரிநிருவாணகால ரூபத்தையும் ஸ்தாபித்து காசிநாத விகாரமென்றும் காசி விஸ்வேச விகாரமென்றும் வழங்கி வந்தார்கள்.

கங்கை ஆதாரனாம் புத்தபிரானால் தோன்றிய கங்கைக் கரையின் அருகிலேயே அறவாழியான் பள்ளிகொண்ட பரிநிருவாண ஆனந்தத்தால் கங்கா நதி ஸ்நானத்தையும் சங்கரர் அந்தியான பீடத்தையும் புத்தகயாவென்னும் பதியையும் உலகிலுள்ள சகல பெளத்தர்களும் சென்று தெரிவித்து, கங்கையில் மூழ்கிக் காசிநாதா! காசி விசுவேசா! கங்கையாதரா! கமல நாயகரே! கருணாலயனே யெனக் கொண்டாடி வந்தார்கள் (ஆதிவேதம் 290).

தாசரின் கருத்துப்படி ஜகந்நாதம், அஸ்தினாபுரம், காசி, கங்கை ஆகியவையெல்லாம் புத்தரது வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையனவென்பதையும் அவரே முதலில் சங்கரர், காசிநாதன், காசி விசுவநாதன், கங்கையாதரன், கமலநாயகன் என்றெல்லாம் அழைக்கப்பட்டாரென்பதையும் இக்காதையிலிருந்தும் அறியலாம்.

அஸ்வகோசரின் புத்தசரிதத்தையும், தாசரின் புத்தரது ஆதிவேதம் எனும் நூலையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நாம் சில முடிவுகளுக்கு வர முடியும். புத்த சரிதம் இந்து சமயத்திற்கும் பிராமணர்களுக்கும் இதிகாசங்களுக்கும் வேதநெறிக்கும் புராணக் கதைகளுக்கும் மதிப்பும் மட்டற்ற மரியாதையையும் அளித்தே புத்தரது வரலாற்றைக் கூறிச் செல்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் புத்த சரிதம் எனும் பனுவல் (Text) எந்த அளவுக்கு நம்பகத்தன்மை (Authenticity) வாய்ந்ததென்பது புலப்படவில்லை. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ஜான்ஸ்டன் முதல் பாதி மட்டுமே வடமொழி மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்றும் இரண்டாம் பாதியின் வடமொழி மூலம் அழிக்கப்பட்டுவிட்டதால் சீன, திபெத்திய மொழி பெயர்ப்புகள் என்று கிடைத்தவற்றிலிருந்து தாம் தமது மொழிபெயர்ப்பைக் கட்டமைத்துக் கொண்டதாகவும் கூறுவார். நூல் முழுவதற்கும் பாட பேதங்கள் இருப்பதையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டுவார். தம்மபதம் கூட மூல மொழியில் கிடைக்கவில்லை யென்பதையும் அதன் சீன மொழி பெயர்ப்பிலிருந்தே ஏனைய மொழி பெயர்ப்புகள் செய்யப்பட்டன வென்பதையும் நாம் இங்கு நினைவு கூரவேண்டும். பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிக்கப்பட்டதும் எஞ்சியவை இடைச்செருகல்களாலும் பாட வேறுபாடுகளாலும் சிதைக்கப்பட்டதும் மேலை ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இது கருதியே அயோத்திதாசர் வடமொழி மூலத்தைத் தவிர்த்துவிட்டுத் தமிழிலுள்ள பெளத்த, சமண சார்புடைய இலக்கியங்களைக் கொண்டும் பாலி மொழி நூல்களைக் கொண்டும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இந்து சமயமும் வேத உபநிடதங்களும் வேஷ பிராமணர்களால் புத்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு கற்பிதம் செய்து கொள்ளப்பட்டவையென்பது அவரது அழுத்தமான நம்பிக்கையும் முடிவும் ஆகும். தாம் எழுதும் நூலில் புத்தரின் வரலாற்றுச் செய்திகளைவிட புத்த சமயக் கொள்கைகளுக்கே அதிக இடமும் முக்கியத்துவமும் தருகிறார். புத்தரைத் தமிழருக்கு நெருக்கமானவராக, ஒரு தமிழ்க் காப்பியத் தலைவனாகக் கருதப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் இடங்களும் அவைகளின் பெயர்களும் சடங்குகளும் விழாக்களும் தொடக்கத்தில் புத்த சமயத் தொடர்புடையன என்பதை எடுத்துக் காட்ட முனைப்புடன் செயல்படுகிறார் தாசர். அவர் சொல்லுவனவற்றுள் சிலவற்றுக்குத் தக்க ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிலவற்றிற்குக் கிடைக்கவில்லையாயினும் இந்து சமயத்தார் என்று சொல்லிக் கொள்பவர்கள் பழந்தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்து, பழம் வரலாற்றைத் தம் நன்மை கருதி மாற்றியெழுதிக் கொண்டதைப் போன்று அவர்கள் செய்த, இருட்டடிப்பையும் புரட்டையும் அம்பலப்படுத்த அவர்கள் கையாண்ட ஆயுதங்களைக் கையாள அவருக்கும் உரிமை இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது.