ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/எதிர் பரிணாமம்
எதிர் பரிணாமம்
உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான ‘எய்ட்ஸ்’ ஒழிக்கப்பட்ட காலம்… அதாவது கி.பி. 2140. அப்படியே எவருக்காவது தப்பித் தவறி, அந்த நோய் வந்தால், ஒரே ஒரு ஊசி போட்டால போதும். சம்பந்தப்பட்ட உடலில் ரத்தம் உள்ளிட்ட திரவ செல்களுக்கு கோட்டிங் கொடுக்கப்பட்டு, ஹெச்.ஐ.வி. கிருமிகள் சாகடிக்கப் பட்டு விடும். இதனால், ஆரோக்கியத்தைப் பொறுத்த மட்டில், ஒருசில தொண்டு நிறுவனங்களைத் தவிர, அனைவரையும் மகிழ்வாய் வாழச் செய்யும் மகத்தான மருத்துவப் புரட்சியின் பொற்காலம். ஆனாலும், அந்தக் காலக்கட்டத்தில்—
தமிழக மக்களை ஒரு விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது. இது வரை, உலகம் கேள்விப்படாத வியாதி. கேலிக்குரிய வியாதி.ஆமாம்… தமிழர்களில் பணம் படைத்தவர்களில் பெரும்பான்மையோர் தரையில் தவழ்கிறார்கள். தரையோடு தரையாய்த் தவழ்ந்து தவழ்ந்து, பிறகு தரைக்குக் கீழேயும் போக விரும்பி, தலைகளைத் தரையில் மோதி மோதி, மூக்குகள் உடைபட்டு, முகம் சிதைந்து, சிலர்ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. இந்த வியாதி பெண்களை விட, ஆண்களையே அதிகமாய்த் தாக்கி இருப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.
இந்த நோயும் எய்ட்ஸைப் போல பல்வேறு கட்டங்களில் உருவெடுத்துள்ளதாம். ஆஜானுபாகுவாக உள்ள ஆறடி உயரக்காரர்களின் செங்குத்தான முதுகெலும்புகள் வளைந்து வளைந்து, கைகள் தரையில் தானாய் ஊன்றும் அளவுக்குக் தரைக்குமேல் நீளக் கோடாய் நிற்கின்றனவாம். அப்படி ஆனவர்கள், தவளைபோல் தரையில் உட்காருகிறார்களாம். தவளையாவது குதித்துக் குதித்துத் தாவும்... இவர்களோ ஓணான் மாதிரி நெடுஞ்சாண்கிடையாக ஊர்ந்து போகிறார்களாம். பெரியவர்கள் இப்படியென்றால், குழந்தைகள் நிலைமை இதைவிடக் கொடுமையாம். பிறந்து ஒரு வருட காலத்தில், அவை தவழ்ந்தது உண்மை. ஆனால், அதற்குமேல் எழுந்திருக்க முடியாமல் தவழ்ந்த நிலையிலேயே தலை பெருத்தும், உடல் வளர்ந்தும் கிடக்கின்றனவாம். இப்படி முப்பது வயதுக்கு உட்பட்ட இருபத்தாறு லட்சம் 'குழந்தைகள் உள்ளனவாம். இதனால், தமிழகம் நிலைகுலைந்து நிம்மதியற்றுப் போயிருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. உலகம் ஆரம்பத்தில் அக்கறை காட்டியது. வெளி நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மருத்துவர்களும் செய்தியாளர்களும் தமிழகம் வரத்தான் செய்தார்கள். ஆனால், தவழும் தமிழர்கள் இவர்களின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, அவற்றில் தலைகளை உருட்டினார்களாம். இன்னும் சில டாக்டர்கள், ஆழம் தெரியாமல் காலைக் கொடுத்துவிட்டு அவஸ்தைப் படுகிறார்களாம். இந்த ரிஸ்க்கையும் மீறிச் சில மனிதாபிமானிகள், கால்களில் ஷாக் அடிக்கும் காலணி களைப் போட்டுக் கொண்டு இவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்ட சில தவழும் தாதாக்கள், "உலகை ஆண்ட தமிழனிடம் ஒங்களுக்கு என்னடா வேலை...? நாங்கள் இப்போது தமிழ்த் தாய்க்கு வணக்கம் போட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றுகிறோம்...உயிர் பிழைக்க நினைத்தால் ஓடிப் போங்கடா என்று சூளுரைத்திருக்கிறார்கள். எய்ட்ஸ் நோய், ரத்தத்தினால் பரவியதுபோல் அல்லாமல் இந்த தவழும் நோய் வம்சாவழி நோயாக இருப்பதனால் உலகம் முழுவதும் இது வேகமாகப் பரவாமல் இருந்தது. அப்பா, பிள்ளை, பேரன் என்றே இந்தநோய் தாக்கத் தொடங்கியது. முக்கியமாக மூதாதையர் பணக்காரர் களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ள குடும்பத்தில்தான் இந்த நோய் முக்கியமாக ஆண் வாரிசுகளை அதிகமாகத் தாக்கியது. இதனால் உலகம், ஒதுங்கிக் கொண்டு பாராமுகமானது. ஆனால், அப்படியும் நீண்ட நாள் இருக்க முடியவில்லை. காரணம், இந்த நோய் முதலில் பெங்களூர், பம்பாய், டெல்லி ஆகிய நகரங்களில் வாழும் பணக்காரத் தமிழர்களைத் தவழ வைத்ததுடன், இவர்களோடு தமிழர்களை மணந்துகொண்ட கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர் என்று ஒரு சிலரையும் குனிய வைத்துவிட்டது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.நா. அமைப்புகளில் 'டெபுடேஷனில் சென்ற தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தவழத் துவங்கி விட்டார்கள். அமெரிக்கத் தமிழர்களும் ஆங்காங்கே அப்படியே... அமெரிக்கத்தமிழரை மணந்த அமெரிக்கப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையும் இப்படித் தவழ்வதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தது அமெரிக்கா தான் ! உலக நாடுகள் சுதாரித்தன. பல நாடுகளில் தமிழர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகள் அங்கு வாழும் என்.ஆர்.ஐ. தமிழர்களை இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப் போவதாக அறிவித்தன. இந்தியா இதைக் கடுமையாக ஆட்சேபித்து, ஐ.நா. சபைக்கு விண்ணப்பித்தது. அதன் பாதுகாப்பு சபை, அவசர அவசரமாய்க் கூடியது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும், தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தாதலைமையில் சர்வதேச நிபுணர்கமிட்டியை அமைத்து, தமிழகத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா. ஆணையிட்டது. தன்மானமிக்க தமிழக அரசின் நிர்ப்பந்தத்தால் இந்திய அரசு ஆரம்பத்தில் இந்த கமிட்டிக்கு விசா கொடுக்க மறுத்தது. உடனே உலக வங்கிக் கடன் நிறுத்தப்படும் என்றும், பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படும் என்றும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மறைமுகமாய் எச்சரித்ததும், இந்த கமிட்டியை வரவேற்பதாக இந்தியா பகிரங்கமாய் அறிவித்தது. சிவப்புக் கம்பளம் விரித்தது. தாவரவியல், விலங்கியல், உடலியல், வேதியியல், மருந்தியல், சமூகவியல், வரலாற்றியல் போன்ற துறைகளில் அத்தாரிட்டிகளான, நிபுணர்களைக் கொண்ட இந்த ஐ.நா.சர்வதேசக் குழு, தமிழகத்தில் மலை முகடுகளைக் கொண்ட சேலம், தர்மபுரி, பெரியார், மலையான நீலகிரி, மலையே இல்லாத தஞ்சை, காய்ந்து கிடக்கும் முகவை, புதுவை, நீர் சிந்தும் நெல்லை, பொதிகைத் தென்றல் தொடும் குமரி ஆகிய மாவட்டங்களையும், அப்புறம் 'ரெண்டும் கெட்டான் சென்னை, செங்கையையும் பார்வையிட்டது. ஒரு மாத காலம் சுற்றிப் பார்த்தது. பல்வேறு பூகோள வேறுபாடுகளைக் கொண்ட இந்த மாவட்டங்களை இணைக்கும் ஒருமைப்பாடாக, தமிழர்கள் எல்லா இடங்களிலும் தவழ்வதைப் பார்த்தது. அத்தனை இடங்களிலும் தவழ்கிற கணவர்களையும், குழந்தைகளையும் பார்த்துப் பார்த்தே கூன்பட்ட நவீன நளாயினிகளான தமிழ்ப் பெண்கள், நிபுணர்களிடம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்கிறார்கள். தவழும் பெரிய குழந்தைகள், கமிட்டியிடம் கையெடுத்துக் கும்பிட்டுள்ளன. இதைப் பார்த்து, கமிட்டியில் உள்ள பாகிஸ்தானிய நிபுணரே கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
இந்தக் கமிட்டி, தவழாத ஒரு சில விதிவிலக்குத் தமிழர்களைச் சந்தித்து, தமிழனின் பாரம்பரியம் பற்றி விவாதித்திருக்கிறது. இந்த மனிதர்களும் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி கமிட்டியிடம் பேசியிருக்கிறார்கள். காவல் துறையினரும் தவழ்வதால், அவர்களால் நிமிர்ந்து நின்று நடமாடும் முற்போக்குத் தமிழர்களை நெருங்க முடியவில்லை.
நிபுணர் குழு, இதோடு பணி முடிக்கவில்லை. இந்த நோயின் ஒவ்வொரு கட்டத்தையும்பிரதிபலிக்கும் நோயாளிகளைச் சாம்பிளுக்கு ஒன்றாகக் கைப்பற்றி, புதுடெல்லிக்கு கொண்டு வந்தது. மத்திய அமைச்சர்களுடனும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. நியூயார்க்கில் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரிக்க நினைத்த கமிட்டி, நோயின் கடுமையைக் கருதி புதுடெல்லியிலேயே கூடியது-அவசர அவசரமாய்.
புதுடெல்லி விஞ்ஞான பவனை, சாஸ்திரி பவனில் வைத்தது மாதிரியான புதுப்பவன்... ஒயர்கள் இல்லாத மைக்குகள்... பட்டாலே சுளுக்கை எடுக்கும் பட்டு மெத்தை தரை... எல்லாவற்றுக்கும் மேலாக ஒருத்தர் எந்த மொழியில் பேசினாலும், அந்தப் பேச்சை மண்வாசனையுடன் மொழி பெயர்த்துச் சொல்லும் ரோபாட்டுகள். நிபுணர்கமிட்டியின்தலைவரும் தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தா, கான்ஃபரன்ஸ் அறையின் மேடையில் உள்ள சாம்பிள் நோயாளிகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டே முன்னுரையாய் இப்படிப் பேசினார்.
"இந்த இருபத்திரண்டாம் நூற்றாண்டின் இந்தக் கால கட்டத்தில் மானுடம் மகத்தான சாதனைகளை நிகழ்த் தியுள்ளது. வானிலேயே விண்வெளி ஒர்க்ஷாப் அமைத்து விட்டோம். புது மணமக்கள், நிலாவுக்கே ஹனிமூனுக்காக போய்வருவது சர்வசாதாரணமாகிவிட்டது. பிற பிளானட் உயிரினங்களோடு பேச்சு வார்த்தை துவங்கிவிட்டது. அத்தனை நோயும் ஒழிக்கப்பட்டு, ஒவ்வொரு மனிதரும் இருநூறு ஆண்டுகாலம் உயிர் வாழ வகை செய்துவிட்டோம். ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவழ வைப் பதற்கு, மன்னிக்கவும் முறியடிப்பதற்கு வந்ததுபோல், மானுடத்தின் மூலக்கூறாகக் கருதப்படும் திராவிட இனத்தின் மூத்தகுடியான தமிழ்க்குடிக்கு இப்படிப்பட்ட நோய் வந்திருப்பது அதிர்ச்சிக்குரியது. ஆகையால் ஒவ்வொரு நிபுணரும் இதற்கான காரணகாரியங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.'
வரலாற்றில் பேராசிரியரும், பாகிஸ்தானியருமான டாக்டர் ஜனாப் மியான் முந்திக் கொண்டும் முண்டியடித்தும் கருத்துரைத்தார்.
'வாழ்க்கை என்பது ஒரு வாழ்வா சாவா போராட்டம். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தகுதி உள்ளவையே வாழ்கின்றன என்றார் டார்வின். இந்தத் தத்துவத்தின் படி, வளர்ச்சி கண்ட மானுட பரிணாம உறுப்பினர்களில் தமிழர்கள் இப்படித் தரையோடு தரையாய் ஒட்டிப் போனது ஆச்சரியமே."
தாவரவியல் நிபுணரும் யூதருமான டாக்டர் சாலமன் தாள முடியாமல் பதிலடி கொடுத்தார்.
"ஆச்சரியம், ஆதாரமாகாது ஜனாப்... பிரபஞ்சத்தில் எப்படி மேல் கீழ் என்பது கிடையோதோ... அப்படி பரிமாணத்தில் நாம் நினைக்கும் வளர்ச்சி என்று ஒன்றைக் கோடு போட்டுக் காட்ட முடியாது... டார்வின் சுட்டிக் காட்டும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், என்ற வாசகம் முக்கியமானது; அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றி பெறுபவை அடுத்தகட்ட சந்தர்ப்பத்தில் தோல்வியுறலாம். ஆகையால், தமிழர்கள் இப்படி ஆவதற்கான 'குறிப்பிட்ட சந்தர்ப்பம்’ என்ன என்பதை வரலாற்று வழியாய் விளக்குவதை விட்டுவிட்டு, எனது துறையில் நீங்கள் மூக்கை நுழைப்பது ஆட்சேபத்துக்குரியது!'
ஜனாப் மியான் சும்மா இருந்தபோது, விலங்கியல் பேராசிரியரும் சீனருமான டாக்டர் குவான் சுவாங், தனது துறையும் பரிணாமத்தைப் பற்றியது என்று சொல்வதுபோல் மூக்கோடு சேர்த்து முகத்தையும் நுழைத்தார்.
'பரிணாம வளர்ச்சி போல் எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த மிகப் பெரிய மிருகமான டினோஸரஸ்... இப்போது ஓணானாகச் சிறுத்துப் போனது. அன்று மிகப் பெரிய தாவரமான ஒருவித மரவகை இப்போது பெரளிச் செடியாகி விட்டது... இப்படி நடமாடும் பல்கலைக்கழகமான தமிழன், தவழும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஒருவித பரிணாமமே..."
கமிட்டி சேர்மன் தலையைப் பிய்த்துக் கொண்டார்.
'நீங்களும், உங்கள் பரிணாமமும்... தமிழனின் இந்த நிலைமைக்கான காரணங்கள் எவை எவை... இவற்றைப் போக்குவதற்கான வழி என்ன... என்ன... இதைக் கோடி காட்டாமல் என்ன பேச்சு இது?"
சமூகவியல் நிபுணரான டாக்டர் குவாங் லீ, மலேசிய மொழியில் குறுக்கிட்டார்:
"ஒரு உயிரினம், தான் வாழ்வதற்குரிய வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கு, உருவில் திரிபு செய்து கொள்வது இயற்கை. எடுத்துக்காட்டாக நிலத்தில் ஒரு காலத்தில் நான்கு கால்களால் நடமாடிய திமிங்கிலம், நீரில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அதன் நான்கு கால்களும் கூம்பிக் கூம்பி நீந்துவதற்கு ஏற்றதுடுப்புகளாக உருமாற்றம் பெற்றன. மனிதனும் இப்படி மாறலாம். திமிங்கிலத்தின் முன் துடுப்பு எலும்பும், மனிதனின் முன் கை எலும்பும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதே இதற்கு அத்தாட்சி. ஆகையால், தமிழன் உருமாறுவதற்கு டார்வின் குறிப்பிட்ட அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பம் என்பது எது என்பதை வரலாற்றுப் பேராசிரியர் விளக்கினால் விடை கிடைக்கும்.' சேர்மனின் கண்ணசைப்பை ஏற்று வரலாற்றுப் பேராசிரியர் ஜனாப்மியான் விளக்கமளித்தார். அந்தக் காலத்துப் பத்திரிகைகளையும், ஃபிலிம்களையும், கவிதைப் புத்தகங்களையும் பார்த்தபடியே பேசினார். 'இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால், தமிழர் பண்பாடு தனிநபர் வழிபாடாக, துதிப்பாடலாகவே இருந்திருக்கிறது. கவிதைகள், தலைவர்களின் கால்களில் சரஞ்சரமாய்க் கொட்டப்பட்டன. ஒருவனை வீரனாக்க, முப்பது பேரைப் பேடியாக்கும் சினிமாத்தனம் இருந்திருக்கிறது. தலைவர் காலில் குனிந்து விழுந்தால் நேரமாகும். அவருக்கும் கோபமாகும் என்று தமிழர்கள், தொப்பென்று நெடுஞ் சாண்கிடையாக விழுந்ததாகப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. இன்று தவழ்ந்தபடியே உயிர் வாழும் இவர்களின் மூதாதையர்களின் வாழ்க்கை முறை பற்றி விசாரித்தபோது, அவர்கள் அமைச்சர்களாகவோ, அரசியல் வாதிகளாகவோ, அரசு அதிகாரிகளாகவோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளாகவோ இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது... அப்படி அவர்கள் இருந்த சமயத்தில், தங்கள் மூளையைக் கொஞ்சமும் செலவு செய்யாமல், நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்து விழுந்தே 'வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எவர் அதிக நேரம் தன் தலைமை, தலைவரின் கால்மாட்டில் போடுகிறாரோ, அவரே வி.ஐ.பி.-க்களின் வி.வி.ஐ.பி.யாக வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு கட்-அவுட் ஃபாஸில்களும் ஆதாரம்' மருந்தியல், மருத்துவம், பேதாலஜி எனப்படும் உணர்வியல் ஆகிய முப்பெரும் துறைகளின் முடிசூடா மன்னரும் சிங்களருமான டாக்டர் விஜயரத்னே, ஆர்க்மிடீஸ் எப்படி ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்ததும், நிர்வாணமாக அரச சபைக்கு ஓடி வந்தானோ, அப்படி பேண்ட் நழுவுவதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், ஜட்டியோடு நின்று பேசினார். கண்டுகொண்டேன் சேர்மனே... தமிழன் இப்படி ஆனதற்கான காரணத்தைக் கண்டுகொண்டேன் சேர்மனே... உயிரின உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் சங்கிலி மாதிரியான ஒரு கெமிக்கல் உண்டு. இதற்குப் பெயர்தான் ஜீன்... இந்த ஜீன்களில் ஒருத்தரின் மூதாதையர் சேகரித்த அத்தனை தகவல்களும் உள்ளடங்கி இருக்கும். இது ஒரு இன்ஃபர்மேஷன் சிஸ்டம். தாம் சேகரித்த தகவல்களை இவை அடுத்த தலைமுறையான வாரிசுகளிடம் கொடுக்கின்றன. இதன்படி, காலில் விழுகிறவர்கள் வெற்றி பெறும் தகவலை, இந்த ஜீன்கள் தங்களிடம் ஒரு தகவலாகச் சேர்ந்து வைத்தன. இந்த இன்ஃபர்மேஷன் வாரிசுகளுக்கும் வந்தன. இவை காலில் விழுவதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவனின் உடல்வாகை மாற்றுகின்றன. இதோ பாருங்கள், இந்தக் 'குழந்தை மனிதனின் கைகால்கள், ஓணான்கால்களாய் மாறி வருவதை... எப்படி நினைக்கிறோமோ அப்படி ஆகிறோம். உணர்வால் மட்டுமல்ல, உடலாலும்.' “தாங்க்யூ... டாக்டர் விஜயரத்னே... சரி, இப்படியாக ஆகிப்போன தமிழர்களை மீட்பதற்குரிய சிகிச்சைமுறையை யாராவது சொல்ல முடியுமா?" மனோவியல் நிபுணர் டாக்டர் கெமிங்கோ பதிலளித்தார். 'எந்த இன மக்களும்-மாய ஹிஸ்டிரியாவால் பாதிக்கப்படுவதுண்டு. ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சங்ககாலத் தமிழன், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தனக்கென்று தனி நபர் வழிபாடு என்ற ஒரு போலி உலகைச் சிருஷ்டித்துக் கொண்டான். சுயசிந்தனையையும் தலைவர்களிடம் அடகு வைத்து விட்டு, வெறும் வெங்காயடப்பாவானான். மூளை குறைந்தவனுக்கு முதுகெலும்பு எதற்கு?” 'வாருங்கள்... டாக்டர் கெமிங்கோ... சப்ஜெக்டுக்கு வாருங்கள்' 'வருகிறேன் சேர்மன்... சிகிச்சைக்கு வருகிறேன். தரையோடு தரையாய் வீழ்ந்த இந்தத் தமிழ் நோயாளிகளின் காதுகளில் ,கணியன் பூங்குன்றன் என்ற அரும்பெரும் புலவன் பாடிய 'பெரியோரை வியத்தலும் இலமே! என்ற பாடலை இருபத்து நாலு மணிநேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். பலரை, ஒரே ஒருத்தர்காலில் விழும்படி நடிக்கச் செய்து, அப்படி விழுகிறவர்களை, இந்த நோயாளிகளின் கண் முன்னாலேயே சவுக்கால் அடிக்க வேண்டும்.” காலில் விழும் தலைகளை ஏற்றுக் கொள்வோரிடம் 'கயவர்தான், தங்களைத் தாங்களே வியப்பார்கள்' என்று வள்ளுவர் சொன்ன வாசகத்தை, காதில் குத்தும்படி சொல்ல வேண்டும்.'கன்னித் தமிழ்நாட்டின் கயவாளியே... எம் மக்களை, காலில் விழ வைத்துச் சிரிக்கிறியே என்று ஒரு பாட்டை எழுதி, அதை அந்தக் கால ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டில் இசையமைத்து, தமிழகத் தலைவர்கள் அனைவருடைய காதுகளிலும் ஓத வேண்டும். இந்த உணர்வு ஆழ்மனதுக்குச் செல்லும். ஜீன்களில் ஏறும். 270 கோடி தாக்கங்களை உள்ளடக்கும் மூளையின் இயக்கத்தால், இவர்களின் செல்களில் படிப்படியாய் ஜீன் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட ஏற்பட, படுத்துப்போன தமிழனின் முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று தலைமுறை ஆகும். அதுவும் இப்போதே சிகிச்சையைத் துவக்கினால் தான், இன்றைய தவழும் தமிழனின் மூன்றாவது தலைமுறை தேறும்... மீளும்...' கமிட்டி சேர்மன் டாக்டர் அந்தோணி போத்தா, டாக்டர் கெமிங்கோவை நன்றியோடு பார்த்தார். அப்புறம் அனைத்து நிபுணர்களையும் ஒருசேரப் பார்த்துவிட்டு, விவாதத்தை இப்படி ரவுண்ட்டப் செய்தார். “இங்கே நடந்த விவாத விவரங்களையும், எல்லோரும் ஒப்புக்கொண்ட சிகிச்சை முறையையும் ஒர் அறிக்கை நகலாய் எழுதித் தரும்படி இன்ஃபர்மேஷன் சயன்டிஸ்டான டாக்டர் பரமானந்தராயைக் கேட்டுக் கொள்கிறேன். நம் தலைமுறையிலேயே தவழும் தமிழனை நிற்க வைக்க முடியும் என்று நினைத்தேன். ஏமாற்றமும் வேதனையுமே மிச்சம். என்றாலும் இன்றைய தமிழனின் மூன்றாவது தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்...!"
—ஆனந்த விகடன்—14.5.95