ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/ஏகலைவன்களைத் தேடி



ஏகலைவன்களைத் தேடி…



ந்த மொட்டை மைதானத்திற்கு முடி அலங்காரம் செய்தது போல், மனிதமே மலர்களாகவும், செடி, கொடிகளாகவும் வியாபித்திருந்தது. எட்டடி கம்பத்தில் கால்கள் கட்டப்பட்டு, சலங்கைக் கைகளோடு அந்தரமாய் நின்ற ‘கெக்கலி’ ஆட்டக்காரர்கள்… இறுகக் கட்டிய கண்டாங்கிச் சேலைக்காரிகள்… சல்வார் கமிசுகள்… பஞ்சக் கச்சமும், மஞ்சள் சட்டையும் போட்டிருந்த தேவராட்டக்காரர்கள்… கும்மிப் பெண்கள்… கோலாட்டக்காரர்கள்… என்று பட்டி தொட்டியிலிருந்து வந்த, மாவட்ட ரீதியான இளம் கலைஞர்கள்; எதிரே தோன்றிய மேடையை முகம் சுழித்துப் பார்த்தார்கள்.—ஆனாலும்…

கலெக்டரை காணவில்லை என்று தொலைக்காட்சியில் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்ற நிலைமை… அவருக்காக காத்து நின்ற கால்கள் கோபங் கோபமாய் தரையில் மிதித்தன… கண்கள் பூத்துப் போயின. மத்திய அரசின் இளைஞர் மன்றம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் இளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிப் போட்டிகளை, காலை பத்து மணிக்கு துவக்கி வைக்க வேண்டிய கலெக்டர், பன்னிரண்டாகியும் வரவில்லை. அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளர், பிரசவத்திற்கு அலை மோதும் பெண்ணைப் போலத் துடித்துக் கொண்டிருந்தார். கலெக்டருக்காக 'இறக்குமதி செய்யப்பட்ட கூட்டமும், சுயமாக வந்த அறிவொளி இயக்க கூட்டமும் இப்போது அலைமோதின. இளம் பெண்களில் பலரிடம் ஒரு கலக்கம்... என்னதான் அவர்கள் குடும்பத்தினர் இவர்களை இங்கே அனுப்பி வைக்கும் அளவிற்கு முற்போக்காக இருந்தாலும், காலம் கடந்து வீட்டிற்குப் போனால் அதே குடும்பத்தினர் பார்க்கும் பார்வையை இப்பவே கற்பனை செய்து அல்லாடினார்கள். என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வி. மாவட்ட கலெக்டர் இல்லாது போனால், ஒரு பில் கலெக்டரை வைத்தாவது போட்டியைத் துவக்க வேண்டுமென்பது கூட்டத்தினரின் விருப்பம். ஆனால் மாவட்ட அதிகாரிகள் கலெக்டருக்காகவே கலைப் போட்டிகள்' என்ற பாணியில் எதிர்மாறான விருப்பம் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்...? முடியும் என்பதுபோல், "காவடி' முருகன் கலைக் குழுக்களுடன் கிசுகிசுத்துவிட்டு, காவடியை பயபக்தியோடு சுவர் பக்கம் சாய்த்து விட்டு, மேடையை நோக்கி நடந்தான். எட்டு முழ வேட்டியை தார் பாய்த்துக் கட்டியிருந்தான்... துத்தநாக உலோகத்தை உருளையாக்கியது போன்ற உடம்பு... நெற்றியை மறைத்த விபூதி... புருவ நெற்றியை மறைத்த சூரிய குங்குமம்... சாமியானா பந்தல் வழியாக மேடைப் பக்கம் போய் கலெக்டரின் பி.ஏ. (பஞ்சாயத்து)... பி.ஏ. (வருவாய்)... பி.ஏ.(சத்துணவு)... பி.ஏ. (சேமிப்பு) போன்ற அதிகாரிகளை ஊடுருவி, அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளரை எப்படியோ பிடித்துவிட்டான். அதுவும் பிடிபிடியென்று பிடித்து விட்டான்... 'இதுக்கு மேலயும் காத்திருக்கிறதுல அர்த்தமில்ல சார்... இனிமேயும் காத்திருந்தால், அவங்க நம்மள அவமானப்படுத்துறாங்களோ இல்லையோ... நம்மள நாமே அவமானப் படுத்துறதா அர்த்தம் சார்' மாவட்ட நேரு மைய அமைப்பாளர், கலெக்டரிடம் காட்ட முடியாத செல்லாக் கோபத்தை காவடி முருகனிடம் செலவாணியாக்கினார். அவனோடு நியாயம் கேட்க வந்த சக கலைஞர்கள், அவனை முன்னால் தள்ளிவிட்டு பின்னால் போனதில், அவருக்கு, திண்டாட்டமே கொண்டாட் டமாகியது.... 'இந்தா பாருப்பா... நாய் வேசம் போட்டா குலைச்சுத்தான் ஆகணும்... கலெக்டர வைச்சு நடத்துனா ஆயிரம் கஷ்டம் வரும்... ஆனா அவரு இல்லாம நடத்துனால் ஐயாயிரம் வில்லங்கம் வரும்... பேசாமல் ஒன் இடத்துக்கு போ.... சும்மா குலைக்காதே...' "என்ன சார், நாயை துரத்துற மாதிரி துரத்துறீங்க..." 'இந்தாம்மா மீரா, இந்த மாதிரி ஆளுங்கள எதுக்காகம்மா செலக்ட் பண்ற... எதுக்கும் நாளைக்கு என்னை நீ ஆபீசுல வந்து பாரு...' மீரா, அந்த அமைப்பாளரைப் பார்த்து கண்களால் கெஞ்சினாள்... காவடி முருகனைப் பார்த்து கைகளை நெறித்தாள். எம்.எஸ்ஸி. படித்த இருபத்தைந்து வயதுக் காரி... சர்க்கார் வேலைகளைப் பொறுத்த அளவில் அவள் மூப்படையாமல் இருக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ளன... மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் நேரு மையத்தில் பகுதி நேர அமைப்பாளராக அவள் சேர்வதற்குக் காரணமே இதன் மூலம் கிடைக்கும் மேலிட பரிச்சயத்தால், ஒரு நல்ல வேலைக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கைதான்... ஆனால், இந்த காவடி முருகன் தன்னை பழைய படியும் அன்னக்காவடி"யாக்கி விடுவானோ... நல்லவேளையோ, கெட்ட வேளையோ, மைதானத்தின் வாசற்பக்கம் நின்ற சின்ன அதிகாரிகள் பரபரத்து, அங்குமிங்குமாய் நகர்ந்தார்கள். உடனே மேடைப்பக்கம் நின்ற பெரிய அதிகாரிகள் வாசற்பக்கம் தலைவிரிகோலமாய் ஓடினார்கள். ஒரு சிலர் வாய்களில் கலெக்டர். கலெக்டர்... என்ற வார்த்தைகள் வெட்டுக்கிளியாய் துள்ளின. தானாய் புலம்பிக் கொண்டிருந்த போலீஸ் ஜீப் மேல் சாய்ந்து நின்ற கான்ஸ்டபிள்கள் அலறியடித்து ஓடினார்கள்... கலெக்டர் வருவதாக அனுமானித்த கூட்டத்தினர் கை வலிக்கும்படி தட்டினார்கள். கலைக் குழுக்கள் உஷாராயின... ஆனால் வந்தது ஒரு கழுதை... சின்ன அதிகாரிகளையும் மீறி பெரிய அதிகாரிகளை ஊடுருவி மேடைப்பக்கம் வந்துவிட்டது. ஒலிபெருக்கிகளில் சத்தம் போட்ட அந்த அரபிக் கடலோரம்" பாட்டை கேட்டோ அல்லது கூட்டத்தைப் பார்த்து மிரண்டோ, அங்குமிங்குமாய் துள்ளியது; அந்தக் கழுதை கூட்டத்தினருக்கு இந்தக் கால திரைப்பட நடனங்களை நினைவுப் படுத்தியிருக்க வேண்டும்... அந்த அப்பாவிப் பிராணிக்கு கைதட்டல்கள் கிடைத்தபோது, காவடி முருகன் அமைப்பாளரை மீண்டும் சீண்டினான்... "கழுதை, துவக்கி வச்சுட்டது சார்... போட்டியை நடத்தலாம் சார்...' அமைப்பாளர், ஆற்றுக்குள் திணிக்கப்படும் குடம்போல அரைகுறையாய் முக்கினார்... முனங்கினார்... ஆத்திரம் குரலை அடக்கியது. இதற்குள் மேடையின் இடதுபக்கம் உள்ள நடுவர் நாற்காலிகளில் மத்தியிலிருந்த நடுத்தர வயதுப் பெண்ணால் தாள முடியவில்லை... காவடி முருகனை கையாட்டிக் கூப்பிட்டு அருகே வரவழைத்து, அழுத்தம் திருத்தமாக உபதேசித்தார்... "கொஞ்சம் மட்டுமரியாதையை மிச்சம் வை, தம்பி. நீ இந்த மாவட்டம் முழுவதும் கோவில் விழாக்களில், காவடி ஆடுகிற நல்ல கலைஞன் என்பது எனக்குத் தெரியும்... உனக்கு இந்த நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் எத்தனையோ நிகழ்ச்சி கிடைக்கும்... ஆனால் இங்க வந்திருக்கிற சின்னஞ்சிறுசுகளுக்கு இதான் ஆரம்பத்தளம்...இந்தத் தளத்தை போர் களமாக்கிடாதேப்பா' இந்தச்சமயத்தில் அமைப்பாளர் குறுக்கிட்டார். "யோவ் இருந்தா இரு, போகணும்னா போ... ஏன்யா பிராணனவாங்குறே... கவர்மெண்ட் நிகழ்ச்சின்னாஇப்படித் தானிருக்கும்... பயணப்படி... பஞ்சப்படி... கொடுக்கோமே... சும்மாவா...' காவடி முருகன் கண் சிவந்து நின்றபோது, கம்புகளில் கால் கட்டிய இரண்டு இளைஞர்கள் வந்து காவடி முருகனின் கைகளை செல்லமாகப் பிடித்திழுத்தார்கள். உடனே அவன் அடிக்கப் போவது போல் கைகளை ஓங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவன், வாய் ஓங்கி கத்தினான். "நாங்க காத்திருக்கல?... நீ மட்டுமா காத்திருக்க... ஒரு பானைச் சோத்துக்கு ஒரு பிடி உப்பா இரு... ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமாயிடாதே... வந்துட்டான் பெருசா..." - - இந்தக் குழுவின் மாவட்ட அளவிலான அரங்கேற்றமே இங்குதான்... மாமாங்கமானாலும் காத்திருக்கத் தயாரான இளைஞர்கள்... எப்படியோ மேலும் அரைமணி நேரம் அலைக்கழிந்து, கலெக்டர் வரமாட்டார் என்று போலீஸ் ஜீப் புலம்பியது... உடனே ஒரு கான்ஸ்டபிள் அருகே வந்த நேரு மைய அமைப்பாளரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, டி.ஆர்.வோ." வைத் தேடிக் கொண்டிருந்தார். எப்படியோ போட்டிகள் துவங்கிவிட்டன. பள்ளிக்கூட 'டிரில் மாஸ்டர் மாதிரி ஒரு கலை மாஸ்டர், வாயில் விசிலோடு அங்குமிங்குமாய்ப் பார்த்தார். இதற்குள் ஒரு பகுதிநேர அமைப்பாளப் பெண் ஒருத்தி, கட்டபொம்மன் தேவராட்ட குழுவைப் பற்றி எழுதியதை, வாசிக்க, விசில் சத்தம் அதை முற்றுப்புள்ளியாக்கியது... பத்து இளைஞர்கள் மைதானத்தின் நடுப்பக்கம் நளினமாய் வந்தார்கள். பஞ்சக் கச்சை வேட்டி அவர்களை நெருப்பில் நிறுத்தி, மேல்சட்டை மஞ்சள் ஒளியைக் கேடயமாய்க் கொண்டதுபோல் காட்டியது... ஒரு கையில் சலங்கை கட்டப்பட்டிருந்தது... இரு கைகளிலும் வெள்ளை சிவப்பு செண்டாத்துணிகள்... மத்தியில் நின்ற உறுமி மேளக்காரன், உறுமியை லேசாகத் தடவி, மியாவ் போட வைத்தபோது, தேவராட்டக்காரர்கள், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது மாதிரி பம்மி நின்றார்கள்... அந்த மேளம் படபடத்து அடித்தபோது இவர்கள் புலிகளானார்கள்... சிறுத்தைபோல் ஓடியும், சிங்கம்போல் கர்ஜித்தும், முயல்போல் தாவியும், ஆமைபோல் அடங்கியும் அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கூட்டமே ஆடியது. அடுத்து வந்தது கும்மிப் பெண்கள்... கண்டாங்கி சேலைக்காரிகள்... மண் வாசனைப் பார்வை... மதர்ப்பான தோரணை... முன்பு கையாளப்படாத கால் சதங்கைகள்... மருதாணி போட்ட உள்ளங்கைகள் விரிந்த மலர்களாகவும், விரல்கள் அதன் இதழ்களாகவும், கரங்கள் காம்புகளாகவும் தோற்றம் காட்டின. ஒருத்தி ஒரு பாடலை எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடுத்தனர்... குறுக்கும் நெடுக்குமாய், வட்டத்துள் சதுரமாய், சதுரத்துள் வட்டமாய், பம்பரமாய் சுழன்றார்கள்... பூங்கொடிகள் ஒன்றோடொன்று. பின்னிக் கொண்டது போன்ற நேர்த்தி... வேகித்த ஒன்றின் சுழற்சியில் எப்படி ஆட்டம் தெரியாதோ அப்படிப்பட்ட நிலைப்பாட்டு ஆட்டம்... நின்றவளே நிற்பது போன்ற வேகச் சுழற்சி... 'கலை மாஸ்டர் விசிலடித்த போது கூட்டம் பதிலுக்கு விசிலடித்து கண்டித்தது. அடுத்து வந்தது கெக்கலி ஆட்டக்காரர்கள். எட்டடி உயரக் கம்புகளில் மனிதக் கம்பங்களாய் நின்றவர்கள், அந்தக் கம்புகளை நகர்த்தி நகர்த்தி மைதானத்தின் மத்திக்கு வந்தார்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல் உடம்போடு ஒட்டிய ஜிகினாஉடை... ஆண்களும் பெண்களுமாய் விரவிக் கலந்த இந்தக் குழுவினரின் இரண்டு கரங்களிலும் இருவேறு கலர் துணிகள். பக்க மேள ஒலியின் பின்னணியில் கம்புக் கால்களை தாள லயமாக நகர்த்தினார்கள்... அந்தக் கம்புகளே எலும்பும் சதையுமாகி அவர்களை இழுத்துக் கொண்டு போவது போன்ற லாவகம்... ஐயோ விழுந்திடப் போறாங்க... என்பதுபோல் கூட்டம் அவர்களை அண்ணாந்து வாயகலப் பார்த்தது. அவர்கள் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபடியே, அந்த மரக்கால்களை வேகவேகமாய் நகர்த்தி ஊசி முனை இடைவெளியில் ஒருவரையொருவர் உரசாமல் அங்குமிங்குமாய்ப் பாய்ந்தார்கள். ஆரம்பத்தில் கைதட்டி ஆர்ப்பரித்த கூட்டம், அவர்களின் அடவுகளிலும் அசைவுகளிலும் கட்டுண்டு மெய் மறந்து கிடந்தது. கலை மாஸ்டர் விசிலடித்த பிறகுதான் விழித்துக் கொண்டது... கெக்கலி ஆட்டத்திற்குப் பிறகு, கோலாட்டம். அதையடுத்து, இரும்பு வில்களை சலங்கை மணிகளோடு சேர்த்து ஆடிய 'லஸ்ஜிங் ஆட்டம்... அப்புறம் நாட்டுப்புற நடனம்... இவைகளுக்கு மத்தியில் திருஷ்டி பரிகாரமாய், குட்டாம்பட்டி இளைஞர்களின் ரிக்கார்டு டான்ஸ். ஏழெட்டு கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இறுதியாக வந்தது காவடி முருகனின் குழுவினர். எல்லாக் குழுக்களும் சபைக்கும், நடுவர் குழுவிற்கும் வணக்கம் போட்ட போது, இவனோ, அந்த சபையும், இந்த நடுவர் குழுவும்தான், தனக்கு வணக்கம் போட வேண்டும் என்பதுபோல் 'கீழ் நோக்கிப் பார்த்தான். ஆனாலும் ஆசாமி ஆடக்கூட வேண்டாம்... அப்படியே நின்றால் போதும்...பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அப்படிப்பட்ட லாவகம்... மெருகான கம்பீரம்... "காவடி முருகன் ஆடுகளத்தின் மத்தியில் நின்றான்... அவன்கூட வந்த இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் நான்கு திசையிலும் போய் நின்று அவனுக்கு சதுராட சதுரம் கட்டினார்கள். கைகளிலும், கால்களிலும் சலங்கை கட்டியவர்கள்... விசில் சத்தத்தை வெளிப்படுத்த முடியாதபடி மேளச் சத்தம்.. உடனே முருகன் தனது குழுவினரை அதட்டலாக நோக்கினான். அவர்களும் அப்படிப் பார்க்கப் பொறுக்காதவர்களாய் முன்னாலும், பின்னாலும் நகர்ந்து, கைகளை அவன் பக்கமாய் நீட்டிக் குவித்தார்கள். இவர்களுக்கு மத்தியில் நின்ற முருகன், கையில் வைத்திருந்த காவடியை தலைக்கு கொண்டு வந்தான். மேளம் உச்சத்திற்கு போனது... உடனே தலையிலிருந்த காவடி கழுத்துக்கு வந்தது... அரைவட்டமான அந்தக் காவடி அவன் கழுத்திலும், தலையிலும் மாறி மாறி முழுவட்டமாய்ச்சுற்றியது... அவன் முதுகிலும், தோளிலும் பிட்டத்திலும் குதி போட்டது... தலையிலே தாவி, கழுத்திலே நழுவி ஒற்றைத் தண்டவாளம் போலான வளைத்து வைத்த முதுகெலும்பில், பாலத்தில் ஓடும் ரெயில் போல் ஓடியது... இவனை ஒரு தளமாக வைத்து காவடி மட்டுமே ஆடுவதுபோன்ற கலை மாயை... இந்த மாயையை கலைப்பதுபோல் அவன் தலைக் காவடியுடன் கீழே குனிந்து தரையில் கிடந்த எலுமிச்சை பழத்தை வாயால் கவ்வி, எலுமிச்சை சாறு தெளித்த ஈரமுகத்தோடு நிமிர்ந்தபோது கூட்டம் வஞ்சனை இல்லாமல் கைதட்டியது. அவனை வாஞ்சையோடு பாாத்து ஆர்ப்பரித்தது... ஒன்ஸ்மோர் கூட கேட்டது. மூன்று மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற கலை நிகழ்வு போட்டிகள் நிறைவு பெற்றன. இளம் கலைஞர்கள் வேர்வை துவைத்த உடையோடு நெட்டி முறித்தார்கள். அத்தனை கண்களும் ஒன்றாய்க் குவிந்து நடுவர் குழுவையும், தன் உடம்பை தனது குழுவினர். தூசி தட்ட கொடுத்துக் கொண்டிருந்த முருகனையும் மாறி மாறி பார்த்தது. இதற்குள் நடுவர் குழுவின் சார்பில் அந்த அம்மா எழுந்தார்.. நாட்டுப்புற நாட்டிய தேகக் கட்டு... பறவைப் பார்வைக் கண்கள்... மைக்கிற்கு முன்னால் வந்து பற்றற்ற குரலில் பாராமுகமாய் முடிவை அறிவித்தார். "கட்டபொம்மன் கெக்கலி ஆட்டக் குழு, போட்டிகளில் முதலாவதாக வந்து மாநில போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.” கூட்டம் அல்லோகல்லப்பட்டது. பெரும்பாலானகலைக் குழுக்கள் காவடி முருகனின் அருகே வந்து, அவனுக்கு பக்கபலமாய் நிற்பதுபோல் நின்றன. முருகன், முடிவை உள்வாங்க முடியாமல் நிலை குலைந்தான்... இவனை வைத்து பிழைப்பு நடத்துவதாக நினைக்கும் அவன் குழுவினர் அவனுக்கு முன்னால் கேடயமாகவும், பின்னால் அம்பரா துணியாகவும் நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் 'சுயத்திற்கு வந்த முருகன், நடுவர் குழுவின் பக்கம்போய், அவர்களின் கண்களில் விரலாட்டுவதுபோல் வெறுப்போடு அந்த தீர்ப்புக்கு தீர்ப்பளித்தான்... 'இது பழிவாங்குற தீர்ப்பு... நான் கலெக்டருக்காக காத்திருக்கிறத கண்டிச்சதுக்காக என்னை தண்டிக்கிற தீர்ப்பு...' காவடி முருகன் பேச்சைத் தொடர்வதற்கு அவசியமில்லாமல் ,ஆங்காங்கே ஆட்சேபணைக் குரல்கள் எழுந்தன... 'நேரு மைய அமைப்பாளர் அப்போ இவரைப் பாத்து கத்தும்போதே எனக்குத் தெரியும். ஏதோ கோல்மால் நடக்கும்னு' 'இந்த கெக்கலி ஆட்டத்து பயலுக இரண்டுபேரும், காவடி முருகனை கையைப் பிடிச்சு இழுத்து தங்களோட அடிமை புத்தியை காட்டினதுக்காக எஜமான்கள் கொடுத்த பரிசு இது...' காவடி முருகன் சபைக்கோ, நடுவர் குழுவுக்கோ வணக்கம் போடாதது தப்புதான். அதுக்காக இப்படியா..." 'அப்பவே... இந்தம்மா... முருகனை கண்டிச்சாங்க... இப்போ நடிக்காங்க.." , 'சூட்கேஸ்பேசுது... அந்தம்மா பேசல...' 'நடுவர் குழு காவடி முருகன் குழு வெற்றி பெற்றதாய் அறிவிக்கணும்... இல்லாட்டால் விசயம் விபரீதத்தில் முடியும்.' 'மாற்று... மாற்று... முடிவை மாற்று...' மாவட்ட அமைப்பாளர்கைகளைப் பிசைந்தார். பி.ஏ.டு கலெக்டர்கள் காணாமல் போனார்கள்... சட்டம், ஒழுங்கு பாதிக்குமோ என்று பயந்து போன கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளை கையில் பிடித்து, பயங்கரவாதிகளாய்ப் பார்த்தார்கள்... ஒரே குழப்பம். என்ன நடக்குமோ என்ற கலவரப்பார்வை... இதற்குள் நடுவர் குழுவின் எஞ்சிய இரண்டு உறுப்பினர்கள், அந்தம்மாவின் இரண்டு காதுகளிலும் கிசுகிசுத்தார்கள். நேரு மைய அமைப்பாளர் அந்த குழுவிற்கு முன்னால் போய் மேஜையைத் தட்டித் தட்டிப் பேசினார். கம்புகளை கழட்டி போட்டுவிட்டு சுயகாலில் நடந்து வந்த ஒரு கெக்கலி இளைஞன், "எங்களுக்கு பரிசே வேண்டாம்... இப்படி பாடாப் படவும் வேண்டாம்... எங்களுக்குத் தேவையில்லை' என்றான். அங்குமிங்குமாய் சங்கடமாய்ப் பார்த்த அந்த அம்மா எழுந்தார். முகத்தில் இப்போது லேசாய் சலனம். நடுவர் சகாக்களிடம் மீண்டும் கீழே உட்கார்ந்து கலந்து ஆலோசித்து விட்டு, மைக் முன்னே வந்தார். புதிய முடிவா... பழைய ஏற்பாடா... புதிய முடிவென்றால் அதற்கு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறார்... பழைய ஏற்பாடே என்றால் எப்படி சமாளிக்கப் போகிறார்... எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தமாகக் தோன்றக் கூடிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பாரா... மாட்டாரா... கூட்டம் இப்போது கும்பலாகி அந்த அம்மாவையே வைத்த கண் வைத்தபடி பார்த்தது...

அந்த அம்மா அமைதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசினார்...

"உங்களுக்கு, மகாபாரத அர்ச்சுனன்தான் வெல்ல முடியாத வீரன். அவனைத்தான் ஆராதிப்பீர்கள்... ஆனாலும் அந்த அர்ச்சுனன் வீரனாகவில்லை... வீரனாக்கப்பட்டான்... ஆமாம்... காட்டில் எங்கோ குலைத்த பாண்டவர் நாயை அதன் ஒலியின் திசையறிந்து அதைப் பார்க்காமலே அம்பெய்து அதன் வாயை கட்டிப் போட்டவன் ஏகலைவன் என்ற வேடச் சிறுவன்... இதைப் பொறுக்காத விடலை அர்ச்சுனன், துரோணாச்சாரியைத் தூண்டிவிட்டு ஏகலைவனின் கட்டை விரலை, கட்டை ஆக்கியவன். வியாசர், நன் றாகவே விளக்கி இருக்கிறார். ஆனானப்பட்ட அர்ச்சுனனின் இந்தப் பேடித்தனத்தின் பின் புலத்தில்தான் அர்ச்சுனன் வீரனாக கருதப்படுகிறான்... இதை இங்கு நடந்த கலைப் போட்டிக்கும் பொருத்திக் காட்ட முடியும்..."

அந்தம்மா கூட்டத்தினரைச் சுற்றுமுற்றும் பார்த்தார். அந்தக் கும்பல் இப்போது கூட்டமாக மாறி அந்தம்மாவையும் ஒரு கலைஞராகப் பார்த்தபோது, அவர் தொடர்ந்தார்

"காவடி முருகன், அர்ச்சுனன் மாதிரி அற்புதமான கலைஞன்... ஆனால் தன்னைப் போலவே திறமை மிக்க இரண்டு இளைஞர்களையும், யுவதிகளையும் தான் பிரகாசிப் பதற்காக பின்புலத்து இருளாக்கினார்... குறிப்பாக அந்தப் பெண்களை வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் காட்டி, அவர்களை சினிமாக் காரிகளாய் நகர வைத்து தன்னை முன்னிலைப் படுத்தினார். ஆனால் கெக்கலி ஆட்டக் கலைஞர்களோ தத்தம்மை முன்னிலைப்படுத்தாமல், குழுவையே முதன்மைப் படுத்தினார்கள். இதில் ஒருவர் மிதமிஞ்சிப் போயிருந்தாலோ அல்லது பின்னடைவு ஆனாலோ ஆட்டம் ஆடிப் போயிருக்கும்... குழு உணர்வை மேன்மையாக வெளிப்படுத்துவதும் ஒரு கலையே... அதோடு இவர்களும் கலை வெளிப்பாட்டில் சோடை போகவில்லை... ஆகையால் இவர்களே வெற்றி பெற்றதாக இப்போதும் அறிவிக்கிறேன்... நடுவர் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவனை வீரனாக்க, ஒன்பதுபேரை பேடியாக்கும் கலை, நமக்குத் தேவை இல்லை..."

அர்ச்சுனனையும், ஏகலைவனையும் மனதிற்குள் ஒப்பிட்டு, புதிய சிந்தனைக்கு தளம் கொடுத்த கூட்டம், இப்போது அமைதிப் பட்டது போல் தோன்றியது...

—மகளிர் சிந்தனை—ஜனவரி 1996