24. இரணியன் ஏன் வந்தான்?


சை பற்றிக் கம்பர் இராம காதையை எழுதினார். இராவணனின் கொடுமைகளிலிருந்து உலகை மீட்க இராமன் பிறந்தான். அவன் வரலாற்றை வால்மீகி எழுதினார்; அதைக் கம்பர் தமிழில் ஆக்கித் தந்தார். எனினும் வால்மீகி காட்டாதன சிலவற்றைக் கம்பர் காட்டுகிறார்; தம் தமிழ் நாட்டு மரபுப்படி சில நிகழ்ச்சிகளை மாற்றியும் அமைத்துக் கொண்டார். வால்மீகியோ வீடணனோ வேறு யாரோ நினைத்துப் பார்க்காத அளவிற்கு இந்த இரணியப் படலத்தைக் கம்பர் புதிதாக இராமாயணத்தில் புகுத்தினார்! ஆம்! இது இராம காதை-இராவண காவியம், இதில் இரணியன் ஏன் வந்தான்? கம்பன் இந்த இரணியன் வரலாற்றை-வால்மீகி தொட்டுக்காட்டாத ஒன்றை ஏன் தொட வேண்டும்? அதில்தான் கம்பன் உயர்நலம் காக்கும் தன்மை புலனாகின்றது.

இராவணன் தவறிழைத்தான்; இடித்துரைப்பார் எடுத்துக் காட்டியும் திருந்தவில்லை. முடிவன்றி வேறு முடிவு இல்லை என்ற நிலைக்கு அவன் சென்றுவிட்டான். அங்கேதான் கம்பர் எண்ணிப் பார்க்கிறார். இவன் போலத் தருக்கினால்—தான் என்ற ஆணவத்தால்—தரணி வாழ்வே தனக்கு அடிமை என்ற மமதையால் வாழ்ந்து அதனால் அனைத்தும் இழந்து மறைந்த ஒருவன் அழிவைக் காட்டினால் ஒருவேளை இராவணன் மனம் திருந்தக்கூடும்—ஏன்?—வழிவழியாக உலகம் உள்ளளவும் வருகின்ற ‘இராவணர்’ மனந்திருந்தக் கூடும் என நினைத்தார். நல்ல புலவன் தான் தீட்டும் காவியத்தைக் காலம் கடந்து வாழவைப்பவன்; என்றென்றும் வாழும் சமுதாயத்துக்கு அறம் உணர்த்தி நல்வழி காட்டுபவன் எனவேதான் கம்பர் அந்த இராவணனுக்கு மட்டுமன்றி-இன்றும்-இனி வருங்காலத்தும் வாழும்-வாழப்போகும் இராவணருக்கு-தருக்கு மிக்க அரசர்களுக்கு-அமைச்சர்களுக்குத் தாம் நாட்டுக்கு அல்ல; நாடு தனக்காக என எண்ணும் அரக்கர்களுக்குப் பாடம் கற்பிக்க இரணியனை வரவழைத்தார்-ஆயினும் அந்த இராவணன் கேட்கவில்லை. முடிவு அறிந்ததே! ஆனால் உலகில் வாழும் இன்றைய இராவணர்?

கம்பர், இரணியப் படலத்தினை வீடணன் வாயிலாக இராவணனுக்குச் சொல்லும் முகத்தான் அமைக்கின்றார். ‘இதற்கும் முன் நிகழ்ந்தது’ எனக் காட்டி அவனைத் திருத்தி, சீதையை விடுவித்து இராமனைப் பணிய வேண்டும் என்று வேண்டுகிறான் தம்பி வீடணன். நமக்கு இங்கே அவன் கதை வேண்டுவதில்லை. அவன் காட்டிய இரண்டொரு கருத்தினைக் கண்டு அமைவோம்.

தான் ஆண்ட அத்தனை உலகங்களும் தன் பெயர் அன்றி வேறு பெயரைக் கூறவும்கூடாது என்பது இரணியன் கட்டளை. தனக்கு மேல் இறைவன்-தன்னைச் செலுத்துபவன் உளன் என்பதை மறந்தான். ‘யான், எனது’ என்னும் செருக்கினால் கண் மூடினான். அவனைத் திருத்த வேறு யாரும் வரவில்லை? அவன் மகனே வந்து திருத்த முற்பட்டான். அவன் மகன் பிரகலாதன் இறைவன் எளிமையினையும் இறைவனின் முடிவிலா ஆற்றலுடைமையையும் தெளியக் காட்டினான். இரண்டு இடங்களைக் கண்டு அமைவோம்.

தன் குருவின் விருப்பினுக்கு மாறாகப் பிரகலாதன் இறைவன் பெயரைச் சொல்கிறான். ஆசிரியர் ‘கெடுத்தே... மிந்தனை உன்னையும் என்னையும்’ என, அதற்குப் பதிலாக, இறைவன் பெயரைச் சொல்லி, அதனால் அவ்விருவர் மட்டுமன்றித் தரணியே பிழைத்து ஓங்கும் என்கிறான் பிரகலாதன்.

‘என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இளைய
உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதற்பொருள் மொழிவது மொழிந்தேன்’

எனக் கூறுகிறான். இதனால் தனக்கும் பிற யாவற்றிற்கும் மேலுள்ள இறைவன் பெயரே உலகை உய்விப்பது எனக் காட்டி, ‘யான், எனது’ என்ற தருக்கற்று வாழ வேண்டும் எனக் காட்டுகிறான்.

பின் இரணியன், ‘தானன்றி எவரே உலகு தந்தார்’ என்று தருக்கொடு கேட்ட வினாவிற்குப் பதிலாகப் பல பட உரைப்பதாக அநேக பாடல்களைக் கம்பர் பாடுவர். அவற்றுள் இறைவனின் அலகிலா விளையாட்டின் திறத்தினையும் யாண்டும் நீக்கமற நிறைந்து அங்கங்கே உள்ளனவற்றை வாழ வைக்கும் அருள் நலனையும் அவனைக் கண்டு தொழ வேண்டிய நிலையினையும் அதனால் உலகு பெறும் பயனையும் பிறவற்றையும் எடுத்துக் காட்டி, இரணியனைத் திருத்த நினைக்கின்றான். அவன் திருந்தவில்லை. அவற்றைக் கண்டு நாமாவது திருந்த முயல்வோமே!

‘உலகு தந்தானும் பல்வேறு உயிர்கள் தந்தானும் உள்ளுற்று
உலைவிலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின்றானும்
மலரில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும்
அலகில் பல்பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா’

என்றும்

‘சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன் மாமேருக்குன்றினும் உளன் இந் நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லிலும் உளன் இத்தன்மை
காணுதி விரைவில்’

என்றும் இன்னும் பல வகையிலும் இறைவன் தன்மையினைப் பிரகலாதன் வழியே கம்பர் உலகுக்குக் காட்டுகிறார். பிறகு நடந்த கதை நாமறிவோம். அதுபற்றி இங்கே நான் எழுத வேண்டுவதில்லை.

இந்தப் பாடல்களில் இறைவன் தன்மையினைக் காட்டி, உலகில் வாழும் உயிர்களுக்கு-சிறப்பாக மக்களுக்கு, என்றென்றும் அன்பில் வாழ-அணைந்து வாழ-இன்பில் வாழ-இனிமையுற்று வாழ வழிகாட்டுவதை நாம் நினைக்க வேண்டும். ‘எவ்வுயிரும் பராபரன் சன்னதியதாகும்’ என்று மேலோர் காட்டிய உயரிய நிலையினை எண்ணின் யாருக்கு யார் வேறு பட முடியும்? பொறாமை ஏது? பொய்மை ஏது? கொலை-கொள்ளை-கொடுமை-பிற வன்செயல் யாவும் ஏது? மேலும் ‘அணுவினைச் சதகூறிட்ட’ நிலையினைக் காட்டி அணுவினைப் பிளக்க முடியாது என்று நேற்றுவரை நினைந்த ஒன்றினை அன்றே விளக்கி, அதை எத்தனை எத்தனை கூறாக வேண்டுமாயினும் பிரிக்கலாம் என விளக்கினார். மேலும் அக் கூறுபாடு மக்கள் வாழ்வில் நல்லதுக்குப் பயன்பட வேண்டும் என்பதையும் அல்லலுக்குப் பயன்படின் அழிவே என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டாரே! ஆம்! இந்த உண்மையினை அன்றைய இரணியனும் உணரவில்லை-இன்றைய இரணியரும் உணரவில்லை. அவன் அழிந்தான்-இவர்களும் அழியத்தான் போகிறார்கள். ஆனால் இவர்கள் அழிவோடு உலகில் உயிரினமே அழிவுறுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

கம்பர் இவ்வாறு இரணியன் வாழ்வினை வீடணன் வாக்கால் இராவணன் முன்னிறுத்தி, என்றென்றும் வாழும் மக்கள் இனத்துக்கு நல்ல அறிவு காட்டி, நாடும் நானிலமும் சிறந்துவாழ வழி காட்டியுள்ளார். இந்த இருபாடல்களின் அடிகளையும் பிறபாடல்களையும் தனித் தனியாக எண்ணின் பலப் பல வாழ்வியல் கருத்துக்களைக் காணஇயலும். அவற்றைக் கண்டு மகிழுங்கள் என்ற வேண்கோடுளோடு நான் அமைகின்றேன்.

வால்மீகி காட்டாத இரணியனை இராவணனுக்குக் காட்டுவதன் மூலம் நமக்கு வழிகாட்டிய கம்பருக்கு இன்றைய ‘உலகம்’ தன் கொடுமைகளை விட்டு, இராவணத் தன்மையினை விட்டு-இரணியத் தன்மையினைவிட்டு-‘நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற நல்ல உளத்தொடு நடந்து நன்றி காட்டக் கடமைப்பட்டுள்ளது. அத்தகைய அறநெறிக்கு உலகை ஆற்றுப்படுத்த முயல்வோமாக.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/024-026&oldid=1135855" இலிருந்து மீள்விக்கப்பட்டது