25. ஊழ்வினையும் ஆள்வினையும்

ள்ளுவர் வையம் வாழ, வழிவகுத்தவர். உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தம்முள் கலந்து வேறு பாடற்று ஒன்றிய வாழ்வில் திளைக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அந்த அடிப்படையில் மறம் கடிந்து அறம் ஓம்பும் வாழ்வுக்கு உரிய ஆக்க நெறிகள் பலவற்றை வகுக்கின்றார் அவர். எடுத்துக்காட்ட விரும்பும் ஒவ்வொரு பொருள் பற்றியும் திட்டவட்டமாக அறிவிக்க நினைக்கிறார். அறிவிக்கவும் செய்கிறார். எனினும் இரு பொருள்களின் திறனும் செம்மையும் உயர்வும் பயனும் விளக்க நேரிடும்போது அவர் நடுநிலை பிறழாது உள்ளதை எப்படியும் கூறிவிடுகின்றார். ஆழ்ந்து நோக்கின் அவரது தெளிந்த புலமை வழி உருவாகும் உண்மையின் செம்மை உலகுக்கு நன்கு புலனாகும். ஒவ்வொரு அதிகாரத்திலும் எடுத்துக்கொண்ட பொருளின் செம்மையினையோ அன்றிக் கொடுமையினையோ அதன் எல்லையின் கோடியிலே நின்று காட்டும் வள்ளுவர், அப்பொருள்களை இணைத்துக்காட்டும்போது அவற்றுள் ஒன்றன் மேலாய்ப் பொருந்திய உயர்வினைக் காட்டத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் காண்போம்.

அறங்களைப் பல வகையில் வகுத்துக் காட்டும் வள்ளுவர் பொய்யாப்பெரு நெறியினையும் அறத்திற்குள்ளேயே அடக்குவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவார் உயர்வைப் பலபடப் பாராட்டுகின்றார் வள்ளுவர். ஒருவன் பொய் சொல்லாதிருப்பானாயின், அவன் வேறு எந்த அறமும் செய்யா நிலையிலேயே உயர்வு பெறுவான் என வற்புறுத்திக் காட்டுவார் அவர்.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”

என்ற குறளில், அதன் ஏற்றத்தை உச்சியில் வைத்துப் போற்றுகின்றார். பரிமேலழகரும் பிறரும் இக் குறளுக்குப் பலவகையில் உரைகள் கூறுவர். இத்தகைய உயரிய நிலையில் காட்டிய பொய்யாமையே உலக அறங்களிலெல்லாம் மேலானது என்றுதான் இந்த அதிகாரத்தோடு நிற்பார் நினைப்பர். ஆயினும் பிற அதிகாரங்களைப் பயிலும்போது வள்ளுவர் ஏற்றம் இதனினும் மேம்பட்டு நிற்பதை உணரமுடியும். கொல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவருடைய உயரிய அறம் தெளிவாகக் காட்டப் பெறுகின்றது. கொல்லாமையே உயர்ந்த அறம் என்றும், முன் வேறு அறம் ஆற்ற வேண்டா நிலையில் போற்றப்பெற்ற பொய்யாமை அதற்கு இர்ண்டாவதாகவே வைக்கப் பெற வேண்டியதென்றும் காட்டுவர் வள்ளுவர். இதனால் பொய்யாமையைத் தாழ்த்திய தாகாது. அதன் ஏற்றத்தின் சிறப்பையெல்லாம் திட்டமாகக் காட்டிய பின்பே, அதனினும் மேம்பட்ட முதலாவதாகிய கொல்லாமையைக் காட்டுகிறார் அவர். எனவே பொய்யாமை பிற அறங்களிலெல்லாம் மேம்பட்டது என்பதும் உண்மை! அதனினும் மேம்பட்ட ஒரே அறம் கொல்லாமை என்பதும் தெளிவு. இந்த வகையில்தான் வள்ளுவர் தாம் கொண்ட பொருளை விளக்கிச் செல்வர்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”

என்பது அவர் வாக்கு.

இந்த அடிப்படை நெறியில் நின்று பார்த்தால் வள்ளுவர் ஊழ்வினையையா அன்றி ஆள் வினையையா எதைச் சிறந்தது எனக் காட்டுகின்றார் என்பது, நன்கு புலனாகும். வள்ளுவர் இரு வேறு வினைகளைப் பற்றியும் இரு வேறு அதிகாரங்களில் திட்டவட்டமாக விளக்கிக் காட்டுகின்றார். இரண்டும் ஒன்றை ஒன்று வெல்ல முடியா நிலையில் இருப்பது போன்று தோன்றினும், வள்ளுவர் தம் குறள் வழியே இரண்டில் எது சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டிவிடுகிறார். இரண்டு அதிகாரங்களிலும் இருபது குறட்பாக்களிலும் இரு வேறு வினைகளைப்பற்றிக் காட்டினாலும் ஒவ்வொன்றினும் ஒவ்வொரு குறட்பாவினை எடுத்துக்காணின் வள்ளுவர் உள்ளம் தெள்ளிதிற் புலனாகும்.

ஊழே அனைத்தினும் மேம்பட்டது என்பது உலகத்தார் கொள்கை. வள்ளுவர் அக் கொள்கையை மறுக்கவில்லை. அதனினும் பெரு வலிவுள்ளது வேறு இல்லை என அவரும் வற்புறுத்துகின்றார். ஆனால் அது ஆள்வினை உடைமையோடு போட்டியிட்டு வெல்லுமா? இக் கேள்விக்கு வள்ளுவர் அவருடைய இயல்பான தெள்ளிய நெறியிலேயே விடை தருகின்றார்.

வகுத்தான் வகுத்த வகையில் வாழவைக்கும் ஊழ்வினையைப்பற்றி வள்ளுவர் பத்துக் குறள் வெண்பாக்களால் நன்கு விளக்குகின்றார். அவற்றுள் இறுதிக் குறளில் ‘ஊழிற் பெருவலியாவுள?’ என்ற வினாவையும் எழுப்பி இல்லை என விடை தருமாறு முடிக்கின்றார். ஊழினும் வேறாய பல-ஆள்வினை உடைமை, ஊக்கமுடைமை போன்ற செயலாற்றும் திறன்கள்-வந்து சூழ்ந்தாலும் இவ்வூழே அவற்றின் முன்னிற்கும் என்று காட்டுகின்றார்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”

என்பது அவர் வாக்கு.

இங்கே பிற செயல்களால் முன்னேறவோ வேறு வகையில் செயலாற்றவோ மனிதன் முயன்றாலும், அவற்றிற்கெல்லாம் முன்வந்து நின்றுஊழ் முட்டுக்கட்டை இடும் என்று தான் வள்ளுவர் கூறுகின்றார். இதனால் நாம் மற்றோர் உண்மையை உணர்ந்து கொள்கிறோம். மற்றொன்று சூழும் காலத்து இவ்வூழ் முன்னிற்குமே ஒழிய, அது வெல்லும் என்று வள்ளுவர் கூறவில்லை. ‘முந்துறும்’ என்பது அவர் வாக்கு. முன் வருவதெல்லாம் வெல்லுவதாகுமோ? செயலாற்றும் வீரன் தன் ஆள்வினையின் திறத்தால் முன்னிற்பதைத் தள்ளிவிட்டு, மேலே முன்னேறிச் செல்ல முடியுமே! இதைத்தான் வள்ளுவர் ஆள்வினை உடைமையில் காட்டுகின்றார். மேற்கொள்ளும் வேறு முயற்சிகளைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமேயன்றி, அம்முயற்சி வலுவுடைத்தாகி ஊழை உடைப்பதாயின் தான் அதை வெல்வது கூடாது என்பதே வள்ளுவர் காட்ட நினைத்த உண்மை. மற்றவற்றைத் தடுக்கும் வகையில் ஊழ் முன்னிற்குமே ஒழிய அது வெற்றி பெறாது என்பது தெளிவு. இந்த உண்மையினையேதான் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் தெள்ளத் தெளியக் காட்டிவிடுகின்றார் வள்ளுவர்.

ஊழினைப்பற்றிக் கூறும்போது ‘தான் முந்துறும்’ எனக் காட்டிய வள்ளுவர் ஆள்வினை உடைமையைக் கூறும்போது, அவ்வினையுடைமை ‘ஊழையும் உப்பக்கங் கானும்’ நிலையினைத் தெளிவாகக் காட்டிவிடுகின்றார். தெய்வத்தான் ஆகாதனவும் ஆள்வினையுடைமையால் ஆகும் எனக் காட்டிய வள்ளுவர் அங்கே ஊழ்வினை வந்தால் என்னாகும் என்ற வினாவினை எழுப்பி, அதற்குப் பதில் உரைப்பார் போன்று,

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்”

என விளக்கங் காட்டுகின்றார்.

எனவே, வள்ளுவர் கருத்து ஊழ்வினையிலும் ஆள்வினை உடைமையே வலுவுடைத்தென்பதும், திண்ணிய ஆள்வினையால் செயலாற்றும் எவரும் ஊழுக்கோ அதைச் செலுத்துவதாகக் கருதப் பெறும் தெய்வத்துக்கோ அஞ்சவேண்டுவதில்லை என்பதும், அவ்வாள்வினை உடையார்க்குத் தெய்வம் ஊழ்வினை நீக்கிச் செம்மை நலம் அருளும் என்பதுமே யாகும். இந்த அடிப்படையில் ஆள்வினை ஊழ்வினையை ஒட்ட வல்லது என்பதை உணர்ந்து, வள்ளுவர் குறளை வாழ்விடைக் கொள்ள விரும்பும் நாம் நம் செயலைச் செம்மையாகச் செய்து சிறப்புறுவோமாக!

ம.தி.தா.இந்துக் கல்லூரி
(திருநெல்வேலி) ஆண்டுமலர்—1970

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/025-026&oldid=1135866" இலிருந்து மீள்விக்கப்பட்டது