ஓ மனிதா/11. கோழி கேட்கிறது

11. கோழி கேட்கிறது

‘கொக்கரக்கோ’ என்றதும் நான் சேவற் கோழி என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் கடிகாரம் வாங்கி வைத்துக் கொள்ள வசதியில்லாதவர்களையெல்லாம் நான் தானே குப்பை மேட்டின் மேல் ஏறி நின்றும், கூரை வீட்டின் மேல் ஏறி நின்றும் குரல் கொடுத்து எழுப்பி வருகிறேன்?

மனிதர்களான நீங்கள் உங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தில் நீண்ட நாட்களாகவே தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்—அதாவது, உங்களில் சிலருக்குத் திடீரென்று பைத்தியம் பிடிக்கிறதல்லவா? அவர்கள் மட்டுமே ‘வேடிக்கைக்குரியவர்கள்’ என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உண்மை அதுவல்ல; பைத்தியம் பிடிக்காவிட்டாலும் நீங்கள் அனைவருமே வேடிக்கைக்குரியவர்கள்தான்!

நீங்களே சொல்லுங்கள், பொழுதுபோக்குக்கு இந்த உலகத்தில் என்னதான் இல்லை?—நீலவான் இருக்கிறது; அதில் நீங்கள் நினைத்தபடியெல்லாம் கோலமிட்டுக் காட்ட மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. பெருங்கடல் இருக்கிறது; அதில் உங்களிடமிருந்து ஊதியம் எதையும் எதிர்பார்க்காமலே உங்களுக்காகப் ‘பங்க்கா’ இழுத்து, உங்கள் மேல் ஜிலுஜிலு– வென்று காற்று வீசச் செய்யப்பொங்கி வரும் அலைகள் இருக்கின்றன. அடுத்தாற் போல் சோலை இருக்கிறது; அதில் கூவும் குயில்களும், ஆடும் மயில்களும் இருக்கின்றன. தடாகம் இருக்கிறது; அதில் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள் இருக்கின்றன. சலசலத்து ஓடும் ஆறு இருக்கிறது, அதில் மினுமினுத்து ஓடும் மீன்கள் இருக்கின்றன. கொஞ்சம் துணிந்து காட்டுப் பக்கமாகப் போய்விட்டால் மலைகள், அருவிகள்—அவற்றுக்கருகே துள்ளித் திரியும் மான்கள், கனி கொடுக்கும் மரங்கள்—அந்த மரங்களில் கிளைக்குக் கிளை தொத்தித் திரியும் குரங்குகள்—அடாடாவோ, அடடா! அங்கே கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கிறது!

பொழுது போக்குக்காக இயற்கை அளித்துள்ள இத்தனை வசதிகள் போதாதென்று செயற்கையாக வேறு நீங்கள் எத்தனையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். சினிமா, சங்கீதம், நடனம், நாடகம் என்று ஒரு புறம்; கண்காட்சி, காபரே, லயன்ஸ் கிளப், காஸ்மா பாலிட்டன் கிளப் என்று இன்னொரு புறம்—இவை தவிர எத்தனையோ புத்தகங்கள், விதவிதமான விளை யாட்டுக்கள்—இத்தனை இருந்தும் அந்தக் காட்டு மிராண்டிக் காலத்தில் உங்களைப் பற்றியிருந்த மிருக வெறி, ரத்த வெறி போன்றவையெல்லாம் இன்னும் உங்களை விட்டுப் போன பாடாயில்லையே?

அவற்றைக் களைந்தெறிந்து உங்களைத் தெய்வமாக்காவிட்டாலும் மனிதனாக்க இதுவரை உங்களிடையே தோன்றிய மகான்கள் எத்தனை! மகாத்மாக்கள் எத்தனை! மதங்கள் எத்தனை! சமயங்கள் தான் எத்தனை எத்தனை!

‘நாங்கள் வாழாவிட்டாலும் பரவாயில்லை, மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும்’ என்பதற்காகப் புத்தர் ராஜபோகத்தைத் துறந்தார்; கொடுங்கோலர்கள் தமக்குச் சூட்டிய முள் கிரீடத்தை இயேசு பிரான் மலர்க்கிரீடமாக ஏற்றார், நபிகள் நாயகம் கல்லடிபட்டார்; காந்திஜி துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.

பலன்? உங்களிடையே காந்தியும் பிறக்கவில்லை; சமாதானமும் நிலவவில்லை.

எப்படி நிலவும்?—உங்களுக்குத்தான் பொழுதைப் போக்கக்கூட இன்னும் ஏதாவது ஒரு சண்டை வேண்டியிருக்கிறதே!

அதற்காக நீங்கள் முதலில் பயன் படுத்தியது சின்னஞ்சிறு காடை—ஒரு பாவமும் அறியாத அவற்றில் இரண்டை ஒன்றோடொன்று மோத விட்டு நீங்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தீர்கள். அவையிரண்டும் மூர்க்கத்தனமாக ஒன்றையொன்று மூக்கால் குத்திக் கொள்வதையும், கால்களால் உதைத்துக் கொள்வதையும், சிறகால் அடித்துக்கொள்வதையும் பார்த்துப் பரவசமடைந்தீர்கள். கடைசியாக அந்தச் சண்டையில் ஒன்றினிடம் ஒன்று தோற்று ஓடுவதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தீர்கள்.

அடுத்தாற்போல் நீங்கள் அதே நோக்கத்துக்காகத் தேர்ந்தெடுத்தது காடையை விடக் கொஞ்சம் பெரிதான கவுதாரி. உங்களுக்குப் பொழுது போகாத போதெல்லாம் அவற்றில் இரண்டைப் பிடித்துச் சண்டை மூட்டிவிட்டு ‘ஹாய்ஹூய்’ என்றுகுதுாகலித்தீர்கள்.

அதற்கடுத்தாற்போல் நாங்கள் கிடைத்தோம் உங்களுக்கு. எங்களில் இரண்டைப் பிடித்து ஒன்றோடொன்றை மோத விட்டீர்கள். அதை நீங்கள் மட்டும் வேடிக்கை பார்த்தால் போதாதென்று கூட்டம் வேறு சேர்த்தீர்கள். வெறும் நகத்தை வைத்துக் கொண்டு நாங்கள் சண்டையிட்டது உங்களுக்கு அவ்வளவு ரசமாகப்படவில்லை; அதற்காகக் கத்தியை வேறு எங்கள் கால் விரல்களில் கட்டிவிட்டீர்கள். அதனால் எங்களுக்கிடையே ஏற்பட்ட ரத்தக் களறி உங்கள் இதயத்தை இரக்கத்தால் துடிக்க வைக்கவில்லை; இன்பத்தால் மலர வைத்தது—தெய்வமாக முயன்று கொண்டிருக்கும் மனிதர்களல்லவா?

பிறகு, உங்கள் கவனம் மிருகங்களின் மேல் சென்றது. ‘எந்தெந்த மிருகங்களுக்கு இடையே சண்டை மூட்டி விட்டால் வேடிக்கை பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்?’ என்று நீங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து யோசித்தீர்கள். சிங்கம், புலி, கரடி, யானை நினைக்கும்போதே உங்கள் உள்ளம் நடுங்கிற்று; உடல் சில்லிட்டுப் போயிற்று—யானை, ‘ஏ மனிதா, என்னையா சண்டையிட வைத்து வேடிக்கை பார்க்கப் போகிறாய்?’ என்று துதிக்கையால் நம்மை ஒரு பிடி பிடித்து எலும்பை நொறுக்கினாலும் நொறுக்கலாம்; புலி பாய்ந்தாலும் பாயலாம், சிங்கம் ஒரே கவ்வில் நம் ரத்தத்தை உறிஞ்சி குடித்தாலும் குடிக்கலாம்—அப்புறம்?—மனிதனை எதிர்த்துத் தாக்கத் துணியாத ஆட்டுக்கடாதான் அதற்குச் சரியென்று பட்டது உங்களுக்கு உடனே அவற்றில் இரண்டிைப் பிடித்துத் தயார்செய்து ஒன்றுடன் ஒன்றை மோத விட்டீர்கள். அவை மண்டை உடையச் சண்டையிடுவதைச் சந்தோஷமாக, படு சந்தோஷமாகப் பார்த்துக் களித்தீர்கள்!

இந்த வேடிக்கையெல்லாம் வேடிக்கையாகவே நின்றிருக்கக் கூடாதா?—அதுதான் இல்லை; சண்டையில் சூடு பிடிக்கவேண்டும் என்பதற்காக ஒரு கட்சி, மறு கட்சி என்று இரண்டு கட்சிகளைத் துவக்கி வைத்தீர்கள். கட்சி இரண்டு பட்டதும் போட்டியும் பொறாமையும் தாமாகவே உண்டாயின. அதற்கு மேல் ‘பந்தயம்’ என்று ஒன்று ஏற்பட்டு, உங்கள் ஆசையை பேராசையாக வளர்க்கும் புண்ணியத்தை ஏற்றது.

முடிவு?—காடையும் கவுதாரியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே, சேவலும் ஆடும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போதே நீங்கள் வாயோடு வாய் கலந்து, கையோடு கை கலந்து சண்டையிட ஆரம்பித்து விட்டீர்கள். காடைக்கும் கவுதாரிக்கும் மட்டும் அல்ல, சேவலுக்கும் ஆட்டுக்கும் கூட ஒரே ஆச்சரியம்!—அவை தங்கள் சண்டையை மறந்து உங்கள் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டன!

இதுவே நீங்கள் வேடிக்கைக்காகக் கண்ட சண்டை வினையான வரலாறு.

மனிதா! இப்படி நீ வளர்த்த சண்டை, இப்படி நீ வளர்த்துக்கொண்ட சண்டை இப்போது எப்படி இருக்கிறது? உங்களில் ஒரு சிலரை மட்டும் அல்ல, எல்லாரையுமே பைத்தியக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!

இப்போதெல்லாம் நீங்கள் சண்டைக்கு என்னையோ, ஆட்டையோ தேடுவதில்லை; உங்களில் இருவரையே தேடி எடுத்துக்கொண்டு விடுகிறீர்கள். அவர்களை மாமிசமலை போல் ஊட்டி வளர்க்கிறீர்கள். ‘குஸ்தி’ என்னும் பேரால் அவர்கள் இருவரையும் மேடையில் ஏற்றி, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துத் தூக்கிக் கீழே எறியவிட்டோ, குத்துச்சண்டை என்னும் பேரால் ஒருவர் முகத்தை ஒருவர் குத்திக் கிழிக்க விட்டோ வேடிக்கை காட்டுகிறீர்கள்; அந்த வேடிக்கையைப் பார்க்க ஐந்து ரூபாய் டிக்கெட்டும், பத்து ரூபாய் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு ஆயிரம் பேர் பதினாயிரம் பேர் என்று கூடுகிறீர்கள்.

‘ஆகா!’

‘வாரே வா!'

‘சபாஷ்!’

‘அப்படிப் போடு!’

‘இப்படிப் போடு!’

‘மார்வெலஸ்!’

‘ஒண்டர்ஃபுல்!’

என்ன உற்சாகம், என்ன கை தட்டல்!

இவர்களெல்லாம் யார்? மொழியாலோ, நாட்டாலோகூட வேறு பட்டவர்கள் அல்ல; எல்லாவற்றாலும் ஒன்றுபட்டவர்கள். உடன் பிறந்த உறவு முறை கொண்டாடுபவர்கள். இவர்களில் ஒருவர் இன்னொருவரைத் தூக்கிக் கீழே விட்டெறிவது வேடிக்கையா? ஒருவர் முகத்தை ஒருவர் குத்திக் கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட நிற்பது தமாஷா?

இதுவா உங்கள் மனிதாபிமானம்? இதுவா உங்கள், மனிதத் தன்மை? இதுவா உங்கள் மனிதப் பண்பு?

சுய புத்தியுடனா இதை நீங்கள் செய்கிறீர்கள்?— இல்லை; உங்களுக்கெல்லாம் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!

இப்படியல்லவா நினைக்க வேண்டியிருக்கிறது நாங்கள்?

‘குஸ்தியும் குத்துச் சண்டையும் சும்மா ஒரு விளையாட்டுக்குத்தானே?’ என்று நீங்கள் சொல்லலாம். அந்த விளையாட்டை யார், யாருக்காக விளையாடுவது?

அந்தக் காலத்து ராஜாக்கள் பொழுது போகவில்லை என்றால் இரண்டு அடிமைகளைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவன் இன்னனொருவனால் கொல்லப்படும் வரை குஸ்தியிடச் செய்வார்களாம்; குத்துச் சண்டை போடச்சொல்வார்களாம். அப்படியும் அவர்களில் ஒருவனும் சாகவில்லை என்றால், அவர்கள் இருவரையுமே கூண்டில் ஏகப் பசியோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிங்கத்துக்கோ, புலிக்கோ இரையாக்கி அவர்கள் வேடிக்கை பார்த்து ரஸிப்பார்களாம். அந்த மாதிரி வேடிக்கையையா நீயும் பார்க்க விரும்புகிறாய்?

பார்—இந்த ஜனநாயக யுகத்தில்தான் நீயும் ‘இந்த நாட்டு மன்னன்’ என்று பெயரளவிலாவது சொல்லப்படுகிறயே? பார், நன்றாய்ப் பார்! மனிதனா நீ தேவனாகாவிட்டாலும் நிச்சயம் சைத்தானாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓ_மனிதா/11._கோழி_கேட்கிறது&oldid=1638417" இலிருந்து மீள்விக்கப்பட்டது