ஓ மனிதா/10. பைரவர் கேட்கிறார்

10. பைரவர் கேட்கிறார்

யார் இந்த பைரவர்?’ என்று விழிக்காதீர்கள்; அதுவும் ஏதோ ஒரு புராணக் கதையை ஒட்டி நீங்கள் கொடுத்த பெயர்தான் எனக்கு ‘நாய்’ என்று சொல்லிக் கொள்வதை விட ‘பைரவர்’ என்று சொல்லிக் கொள்வது கொஞ்சம் கெளரவமாயிருக்கிறதே என்பதற்காக அப்படி சொல்லியிருக்கிறேன்!

ஆமாம், ‘கெளரவம் நடத்தையில் இல்லாவிட்டாலும் பெயரிலாவது இருக்கட்டும்’ என்ற புத்திசாலித்தனம் எனக்கு எங்கிருந்து வந்திருக்கும்?...

வேறு எங்கே இருந்து வந்திருக்கப் போகிறது? எல்லாம் உங்களிடமிருந்து தான் வந்திருக்கும். சகவாச தோஷம் விடுமா?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வெள்ளைக்காரன் காலத்தில் உங்கள் பெயருக்கு முன்னால் வந்து சேர்ந்த ராவ்பகதூர், திவான்பகதூர் போன்ற பட்டங்கள் உங்களுடைய கெளரவத்தை எத்தனை வகைகளில் உயர்த்தியிருக்கின்றன!

அவற்றின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்று உங்கள் பெயருக்கு முன்னால் வந்து சேரும் பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் உங்களுடைய நடத்தைக்கு எத்தனை வகைகளில் சப்பைக்கட்டுக்கள் கட்டிக் கொண்டிருக்கின்றன!

அந்த வகையில் பார்த்தால் ‘நாய்’ என்று சொல்லும்போது அடியேனும் அதலபாதாளத்துக்குத் தாழ்ந்து விடுகிறேன்; ‘பைரவர்’ என்று சொல்லும் போது வான முகட்டுக்கு உயர்ந்து விடுகிறேன் போலிருக்கிறதே!

பெயரளவில் உங்கள் கெளரவத்தை மட்டுமா நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள்? பெரிய ‘சீர்திருத்தவாதி’ என்ற பெருமையையும் புகழையும்கூட அடைந்து விடுகிறீர்கள்.

நேற்று வரை பழமைவாதியாயிருந்த கணேசய்யர் ‘அய்யர்’ என்ற வாலை நீக்கிக் ‘கணேசன்’ என்று சொல்லிக்கொண்ட மாத்திரத்தில் ‘புதுமைவாதி’யாகிவிடுகிறார்; நேற்று வரை பத்தாம் பசலியாயிருந்த ராமசாமி அய்யங்கார், ‘அய்யங்கார்’ என்ற வாலை நீக்கி ‘ராமசாமி’ என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘இருபதாம் நூற்றாண்டு பேர்வழி’யாகி விடுகிறார்; நேற்று வரை சுத்த கர்நாடகமாயிருந்த சுப்பராய முதலியார், ‘முதலியார்’ என்ற வாலை நீக்கிச் ‘சுப்பராயன்’ என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘புரட்சிக் கன’லாகி விடுகிறார்; நேற்று வரை பழைய பஞ்சாங்கமாயிருந்த பராங்குசம் பிள்ளை, ‘பிள்ளை’ என்ற வாலை நீக்கிப் பராங்குசம் என்று சொல்லிக் கொண்ட மாத்திரத்தில் ‘பகுத்தறிவுச் சிங்க’மாகிவிடுகிறார்!

இந்தப் ‘பகுத்தறிவுச் சிங்கம்’ ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாயிருந்தால் அதை மாலை நாலரை மணிக்குள்ளேயோ அல்லது ஆறு மணிக்கு மேலேயோ செய்யும். இடையே வரும் ‘ராகு கால’த்தை மட்டும் இது பெயரிட்டுச் சொல்லாது; சொல்லாமலே விலக்கிச் ‘சீர்திருத்தம்’ செய்துவிடும்.

அதே மாதிரி திங்கட்கிழமை ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாயிருந்தால், அதைக் காலை பத்தரை மணிக்குள்ளேயோ, அல்லது பகல் பன்னிரண்டு மணிக்கு மேலேயோ செய்யும், இடையே வரும் ‘எமகண்டத்’தை இது பெயரிட்டுச் சொல்லாது; சொல்லாமலே விலக்கிப் புதுமை பூக்க வைத்து விடும்!

இம்மாதிரி ‘பகுத்தறிவுச் சிங்க’ங்களின் வீட்டுத் ‘திருமண அழைப்பிதழ்’ ஏதாவது இருந்தால் அதை எடுத்துப் பாருங்கள். மிதுன லக்கினம், அமிர்த யோகம், திருவோன கட்சத்திரம், பஞ்சமி திதி என்று ஒன்றும் இருக்காது; ஆனால் மங்கல நாண் கட்டும் நேரம் மட்டும் ‘காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி அளவில்’ என்று கட்டாயம் விட்டுப் போகாமல் இருக்கும். மற்றவை? – பெயரளவில் விடப்பட்டுப் பெரும் புரட்சி நடந்திருக்கும்.

க, எல்லாமே பொய்; போலி; பித்தலாட்டம்!

இவை மட்டுமா? – ‘தெய்வசிகாமணி’ என்ற பெயரை ‘இறை முடிமணி’ என்று மாற்றிக் கொண்டவர், தமிழ்ப் பற்றில் மறைமலையடிகளை மிஞ்சிவிட்டதாக நினைத்துக் கொண்டு மார்பை நிமிர்த்திக் கொண்டு நடப்பார்.

‘மாணிக்கவாசகம்’ என்ற பெயரை ‘மணிமொழி’ என்று மாற்றிக் கொண்டவர் தமிழ்ப் பற்றில் திரு. வி.க.வைப் புறங்கண்டுவிட்டதாகப் பூரித்துப் போய்விடுவார்.

ந்த லட்சணத்தில் வாழும் உங்களைச் சேர்ந்த ஒருவர் ‘விவேக சிந்தாமணி’ என்று ஒரு நூல் இயற்றியிருக்கிறார். அந்த நூலில் அவர் ‘விவேக’த் தோடு பாடியுள்ள விருத்தத்தைப் பாருங்கள்:

'குக்கலைப் பிடித்து நாவிற்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி
மிகுமணம் செய்தா லுந்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகுண் டாமோ?
குக்கலே குக்க லல்லால்
குலந்தனிற் பெரிய தாமோ?

இவர் குலத்தைப் பார்த்த விதம் இப்படி; இவருக்கு முன்னாலேயே ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்று முத்தாய்ப்பு வைத்துப் பாடிய அவ்வை அதோடு நின்றாளா? இல்லை; ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று வேறு ‘சஸ்பென்ஸ்’ வைத்துப் பாடினாள். அது என்ன ‘சஸ்பென்ஸ்?’ என்கிறீர்களா? ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்றதும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆண் ஜாதி பெண் ஜாதி-ஆக இரண்டு ஜாதி என்றுதானே நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லை அவள்; ‘மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்’ என்கிறாள் பின்னால் அதற்கு விளக்கம் கொடுக்கும்போது. அவள் நிலை அப்படி; எப்போதும் யாராவது ஏதாவது இடுவதையே எதிர்பார்த்து வாழ்ந்தவளல்லவா அவள்?

வள்ளுவர் நிலை அப்படியல்ல; அவர் இந்தக் காலத்துப் ‘பெரிய மனிதர்கள்’ சிலரைப் போல அக்தக் காலத்திலேயே பிழைக்கத் தெரிந்தவர். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லிவிட்டுத் தம்மைப் பொறுத்தவரை ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூடத் தேறாது’ என்ற பொன் மொழிக்கு உரித்தான உழவுத் தொழிலை ஏற்காமல், ‘நெய்யுந் தொழிலுக்கு நேரில்லை கண்டீர்’ என்று நெய்யும் தொழிலை ஏற்றவர். அவர் என்ன சொல்கிறார் ஜாதியைப் பற்றி? - ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று அப்படியும் சொல்லாமல் இப்படியும் சொல்லாமல் பொதுப்படையாக ஏதோ சொல்லிவிட்டு, அந்தப் பிரச்னையிலிருந்தே மெல்ல நழுவிவிடுகிறார்.

மனிதர்களான நீங்கள் இப்படி; நாய்களான நாங்களோ?...

எதையும் இப்படி மூடி மறைப்பதும் கிடையாது; எதிலிருந்தும் இப்படி நழுவுவதும் கிடையாது.

எங்கள் குலம் நாய்க் குலம்தான். அந்தக் குலத்துக்கென்று ஒரு தனிக் குணமும் உண்டுதான், அந்தக் குணத்தை ஊரை ஏமாற்றுவதற்காக நாங்கள் செயற்கையாக்கிக் கொண்டுவிடுவது கிடையாது; இயற்கையான குணத்தை இயற்கையானதாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன தப்பு?

உங்களைப் போலவே நாங்களும் அல்சேஷன், ராஜபாளையம், அது இது என்று ஜாதியால் பிரிந்திருந்தாலும் இனத்தால், மொழியால், குணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம். நீங்களோ? இனத்தைத் தவிர வேறு எதிலும் ஒன்றுபட்டிருப்பதாகத் தெரியவில்லை !

எங்கள் மொழி ஒன்றே— அதாவது, லொள் லொள்.

எங்கள் குணம் ஒன்றே— இதோ சான்றுகள்.

‘வாழில் நாற்பது கோடியும் வாழ்வோம், வீழில் நாற்பது கோடியும் வீழ்வோம்’ என்று பழைய கணக்கை வைத்து இன்றும் ஊர் மெச்சப் பாடிவிட்டு, சாப்பாட்டு வேளையின் போது மட்டும் யாராவது வந்துவிட்டால் உங்களைப் போல் நாங்கள் முகத்தைச் சுளிப்பதில்லை; இவன் ஏன் இப்போது வந்து தொலைந்தான்?’ என்று உள்ளூறக் குமைந்துகொண்டே, ‘வாங்க வாங்க’ எங்கே ரொம்ப நாளா உங்களைக் காணோம்?’ என்று உதட்டளவில் உபசாரம் செய்வதில்லை. எங்கள் இயற்கையான குணத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாமல், ஒரு தெரு நாய் இன்னொரு தெருவுக்குத் தப்பித் தவறி வந்துவிட்டால், பொய்யான உபசாரம் எதுவும் செய்யாமலே அதை நாங்கள் விரட்டியடிக்கிறோம். எந்த வீட்டிலிருந்தாவது ஓர் எச்சிலை வந்து வெளியே விழுந்தால், அதை அடைவதில் மறைமுகமான போராட்டம் எதுவும் எங்களிடையே இருக்காது; எல்லாம் பகிரங்கமான போராட்டமாகவே இருக்கும். அதில் எது வெற்றி பெறுகிறதோ, அதற்குத்தான் அந்த இலைகிடைக்கும். இதுவே எங்கள் நாகரிகம்; இதுவே எங்கள் பண்பு. இவற்றுக்காக நாங்கள் எதையும் ஒளிப்பதுமில்லை! மறைப்பதுமில்லை.

எங்கள் வீரமும் அப்படித்தான்-எதிரி எங்களை விடப் 'பலவீனமானது' என்று தெரிந்தால் அதை நாங்கள் நேருக்கு நேராக நின்று எதிர்ப்போம். 'பலசாலி' என்று தெரிந்தால் எதற்கும் தயங்காமல் பகிரங்கமாகவே வாளை தாழ்த்தி, 'வாள், வாள்' என்று கத்திக்கொண்டே பின் வாங்கி ஓடிவிடுவோம். உங்களைப்போல் வேறு யாராவது எதிரியை அடித்து விரட்டும் வரை உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்து ‘யார் அந்தப் பயல்? அதற்குள்ளே ஓடி விட்டானா? அப்போதே சொல்லியிருந்தால் அவன் காலைப் பிடித்து வாழை மட்டையைக் கிழித்துப் போடுவது போல் கிழித்துப் போட்டிருப்பேனே?’ என்று ‘புறநானூறு’ பேசமாட்டோம்.

இப்படி ஒரு சான்றா, இரண்டு சான்றா? - எத்தனையோ சான்றுகள் காட்டிக்கொண்டே போகலாம். அவற்றைப் படிக்க உங்களுக்குப் பொறுமை வேண்டாமா? - சுருங்கச் சொன்னால் எங்கள் வாழ்க்கை உண்மை வாழ்க்கை. அதில் எங்கள் குணத்தை மாற்றி நாங்கள் நடிப்பதே கிடையாது.

மனிதா! உங்களில் ‘இலக்கிய விமரிசகர்கள்’ என்று சிலர் இருக்கிறார்களே, அவர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் நீ கவனித்திருக்கிறாயா? நான் அவர்களைக் கவனிக்கும் போதெல்லாம் உன்னைப் போல் சிரிக்க முடியாத குறையை நினைத்து வருந்துவேன், அவர்கள் கதைகளில் ரியலிஸத்தைத் தேடுவார்கள்; கட்டுரைகளில் ‘ரியலிஸத்’தைத் தேடுவாகள். வாழ்க்கையில் தேடவே மாட்டார்கள்! வேடிக்கையாக இல்லை? - வாழ்க்கையில் ‘ரியலிஸம்’ இருந்தாலல்லவா கதை-கட்டுரைகளில் ‘ரியலிஸம்’ இருக்கும்?

எனக்கும் உனக்கும் எத்தனையோ விஷயங்களில் வித்தியாசம் இருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ‘படு ஒற்றுமை’ உண்டு என்பதை நான் இங்கே கொஞ்சம் வெட்கத்துடனாவது ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும். உன் எஜமானனையோ, அதிகாரியையோ கவருவதற்காக நீ என்ன செய்கிறாய்?-- தலையை ஆட்டுகிறாய்; என் எஜமானனைக் கவருவதற்காக நான் என்ன செய்கிறேன். - வாலை ஆட்டுகிறேன்.

எதுவரை...

எஜமானனிடமிருந்து ஏதாவது கிடைக்கும் வரை உன் தலை ஆடுகிறது; அதே மாதிரி என் வாலும் ஆடுகிறது.

கிடைத்த பின்?...

நீயும் தலையை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறாய்; நானும் வாலை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டு விடுகிறேன்.

இதைத்தான் சிலர் ‘விசுவாசம்’ என்றும், ‘நன்றி’ என்றும் சொல்லுகிறார்கள் சொல்வோர்கள் சொல்லிக் கொண்டு போகட்டுமே, நமக்குத் தெரியாதா, அது ‘வடி கட்டின சுயநலம்’ என்று?