ஓ மனிதா/16. யானை கேட்கிறது

16. யானை கேட்கிறது

சும்மா சொல்லக் கூடாது; பல விஷயங்களில் நீ வினாவுக்குரிய மனிதனாக இருந்தாலும், சில விஷயங்களில் வியப்புக்குரிய மனிதனாகவும் இருக்கிறாய்!

அவற்றில் ஒன்று இது;

எவ்வளவு பெரிய ஜீவன் நான்; எவ்வளவு சிறிய மனிதன் நீ. என்னை நீ எப்படியோ பிடித்து அடக்கி ஆண்டுவிடுகிறாயே!

முதலில் நீ காடையை வைத்துக் காடையைப் பிடிக்கக் கற்றாய்; அடுத்தாற்போல் கவுதாரியைப் பிடிக்கக் கற்றாய். இப்படியே நீ மானை வைத்து மானையும், யானையை வைத்து யானையையும் பிடிக்கக் கற்றுக் கொண்டு விட்டாய்!

இந்தப் புத்திசாலித்தனம் உனக்கு எப்படி வந்திருக்கும்?—சந்தேகமென்ன, என்னை வைத்துத்தான் இந்தப் புத்திசாலித்தனம் உனக்கு வந்திருக்கும்!

உன்மேல் உனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அதாவது, உன் மனத்தை உன்னாலேயே அடக்கி ஆண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை உனக்கு எந்த நாளிலுமே வந்ததில்லை.

ஆகவே, அந்த நாளிலேயே உன்னை அடக்கி ஆள நீ உன் கூட்டத்துக்குத் ‘தலைவன்’ என்று ஒருவனைக் கண்டாய். அந்தத் தலைவன் பின்னால் ‘ராஜா'வானான்; அந்த ராஜா பின்னல் ‘ஜனாதிபதியாகி’ அந்த ஜனாதிபதி இப்போது பிரதமமந்திரி காட்டிய இடத்தில் கையெழுத்தும் போடும் அளவுக்கு ‘உயர்ந்’திருக்கிறார்.

இதுவே ‘அரசு’ என்று ஒன்று பிறந்து அந்த அரசு முடியரசாகி அப்புறம் குடியரசான கதை.

எந்த ஆசாமியாயிருந்தால்தான் என்ன, அந்த அரசு உன்னை எப்படி அடக்கி ஆளுகிறது?—அது தான் விஷயம்!—உன்னில் சிலரைப் பிடித்து, ‘காவற் படை’ என்று ஒன்றை அது அமைக்கிறது. அந்தப் படைக்கு மேல் கீழ்க்கோர்ட் மேல்கோர்ட் சுப்ரீம் கோர்ட் என்று என்னென்னவோ கோர்ட்டுகள்...

முடிவு?

உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியாமல் ஏதாவது தப்புத் தண்டா செய்தால் போதும், உன்னில் ஒருவன் வந்து உன்னைப் பிடிக்கிறான்; உதைக்கிறான்; சிறையில் தள்ளுகிறான்; தூக்கு மேடையிலும் ஏற்றி ‘ஓம் சாந்தி’ என்று சொல்லி விடுகிறான்!

எதற்கு?

‘எல்லாம் உனக்காக, உன் சமுதாயத்துக்காக’ என்கிறான் அவன்; நீ என்ன சொல்கிறாய்?

ஒரு பாவமும் அறியாதவன் நான். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை—அதாவது, வோட்டுப் போடும் அன்றைக்கு மட்டும் நான் இந்த நாட்டு மன்னனாக்கப்படுகிறேன். அதற்குப்பின் ‘மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மதிப்புமிகு எம். எல். ஏ., எம். பி.க்களுக்கும் அடிமையிலும் அடிமையாக இருக்கிறேன்’ என்கிறாயா?

அதனால் என்ன, ‘ஏக் தின் கா சுல்தா’னாகவாவது உன்னை இருக்க விடுகிறார்களே, அது போதாதா?

ப்படி அரசினர் உன்னை வைத்தே உன்னைப் பிடிப்பதிலிருந்துதான் என்னை வைத்து என்னைப் பிடிக்கும் வித்தையை நீ கற்றிருக்க வேண்டும். இல்லையா?

அது எப்படியாவது இருக்கட்டும்—அந்த நாளில் ராஜாக்கள் உன்மேல் பவனி வந்து, தங்கள் ‘தனித் தன்மை’யை நிலைகாட்ட வேண்டியிருந்தது. அதைப் பார்த்த புலவர் பலர் பாடிப் பிழைக்க வேண்டியிருந்தது. அதற்காகக் கற்பனையிலாவது பல பெண்களை விட்டு, அந்த ராஜாக்களை அவர்கள் காதலிக்க வைக்க வேண்டியிருந்தது. இந்தக் கஷ்டத்துக்காக என்னைப் பிடித்து அப்போது பழக்கித் தொலைத்தார்கள்!

அடுத்தாற்போல் போர்! ‘போர்’ என்றதும் ‘வைக்கோல் போராக்கும்’ என்று நினைத்துவிடப் போகிறீர்கள்;—யுத்தம்! அந்த யுத்தத்தில் எதிரிகளின் கோட்டைக் கதவுகளை உடைத்தெறிய அந்த நாளில் நம் மதிப்புக்குரிய மன்னர்களுக்கு வெள்ளைக்காரனும் துணைக்கு வரவில்லை; அவன் பீரங்கியும் துணைக்கு வரவில்லை. அதனால் என்னைப் பிடித்து பழக்கி அந்தக் கதவுகளுடன் மோதவிட்டு, அவற்றையும் உடைத்தார்கள்! என் தலையையும் உடைத்தார்கள்.

அதெல்லாம் போய்ப் பளுதுாக்கும் வேளை வந்தது. உங்களால் தூக்கமுடியாத பாரத்தைத் தூக்க என் துணை உங்களுக்கு வேண்டியிருந்தது. அதற்காக எங்களைப் பிடித்துப் பழக்கினிர்கள்.

ரொம்ப சரி.

இப்போதுதான் விதம் விதமான ‘கிரேன்’களெல்லாம் வந்துவிட்டனவே பளு தூக்க? இன்னுமா நீங்கள் எங்களைப் பிடித்துப் பழக்கிக்கொண்டிருக்க வேண்டும்? அதிலும், அன்றிலிருந்து இன்றுவரை கூட்டு ‘வாழ்க்கை’யில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, அந்த வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டிருப்பவர்கள் நாங்கள். நீங்களோ?...

‘நாட்டு வாசிகளாயிருந்த’ காலத்தில் பக்கபலத்தைக் கருதியோ என்னவோ, எங்களைப்போல் நீங்களும் கூட்டுவாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தீர்கள். எல்லாருமாகச் சேர்ந்து உழைத்து கிடைத்ததைச் சேர்ந்து உண்டு களித்தீர்கள். ‘நாளைக்கு நம்மால் உழைக்கமுடியாதே. உட்கார்ந்து சாப்பிடவேண்டுமே, அதற்காக இப்போதே ஏதாவது சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமே’ என்ற கவலையெல்லாம் அப்போது உங்களுக்கு இல்லை; ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறந்து ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிதாய் வாழ்ந்து இன்புற்றிருந்தீர்கள், இன்றோ?

‘நாட்டு வாசிகளாகி நாகரிகம் மிக்கவர்களாகிவிட்ட உங்களுக்கு, ‘கூட்டு வாழ்க்கையில் இருந்த நம்பிக்கை போய்விட்டது; தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கை வந்துவிட்டது. அதற்காகப் பெற்ற பிள்ளைக்குக் கலியாணம் செய்து வைத்ததும் தந்தையும், உடன் பிறந்த தம்பிக்குக் கலியாணம் செய்து வைத்ததும் அண்ணனும்கூட அவர்களே உடனே பிரித்துத் தனிக் குடித்தனம் வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வைக்காவிட்டால் கலியாணம் செய்து கொண்டவர்களே அவர்களை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் செய்யப் போய் விடுகிறர்கள்!

உறவு?

நல்லது, கெட்டது நடக்கும்போது நாலு பேருக்கு அஞ்சி ஓரளவு கூட்டம் சேர்க்க மட்டுமே உதவுகிறது!

இத்தகைய வாழ்க்கையே சரி என்று சாதிக்க உங்களிடையேதான் இன்று எத்தனை மூதுரைகள், எத்தனை பழமொழிகள்!...

‘தாயும் பிள்ளையுமாயிருந்தாலும் வாயும் வயிறும் வேறே,’ பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்டு...’ எக்ஸட்ரா ... எக்ஸட்ரா.

இந்த அளவுக்குச் சுயநலவாதிகளாகிவிட்ட நீங்கள்தான் இந்தியாவை ஒரே தாய் என்கிறீர்கள்; அந்தத் தாயின் வயிற்றில் இருந்தே எல்லாரும் பிறந்ததாகச் சொல்கிறீர்கள்; சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ என்கிறீர்கள்; வாழ்ந்தால் எல்லாரும் வாழ்வோம், வீழ்ந்தால் எல்லாரும் வீழ்வோம் என்று சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தொண்டை கிழியக் கத்துகிறீர்கள்.

உங்களை நான் ரகசியமாகக் கேட்கிறேன்—இதெல்லாம் நிஜமாக இல்லையே? சும்மா ஒரு தமாஷூக்குத்தானே?

இல்லையென்றால் வீட்டில் காணமுடியாத ஒற்றுமையை நாட்டில் காணமுடியுமென்று நீங்களா நம்புவீர்கள்!

தைவிடத் தமாஷானது ஏகபோகத்தை அறவே ஒழித்து, சோஷலிசத்தை இந்தக் கணமே கொண்டு வந்து, எல்லாருக்கும் பங்களா, கார், தெரிந்து ஒரு மனைவி, தெரியாமல் பல உள்நாட்டு வெளி நாட்டுத் துணைவிகள் எல்லாம் கிடைப்பதற்காக நீங்கள் கடைசியாகக் கண்டுபிடித்துள்ள இயக்கம் கூட்டுறவு இயக்கம். இந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாமல் சொல்வது என்ன? செய்யாமல் செய்வது என்ன—? ‘கூட்டுறவுதானே? உங்கள் வீட்டுச் சொத்தா, எங்கள் வீட்டுச் சொத்தா, யார் வீட்டுச் சொத்தோ, அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? அடி, கொள்ளை’ முடிந்தால் தனியாகவே அடி! இல்லா விட்டால் கூட்டுச் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடி! தப்பித் தவறி அகப்பட்டுக் கொண்டுவிட்டால் இரண்டு வருடமோ, மூன்று வருடமோதானே உள்ளே இருந்து விட்டு வரவேண்டும்? வந்த பின் அடித்ததை வைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் போச்சு!’ என்பதுதான்.

அதாகப்பட்டது, எதையாவது செய்து ‘உழைக்காமல் சாப்பிட வேண்டும்.’ இதுவே உங்கள் வாழ்க்கையின் லட்சியம், இல்லையா?

ஓ, மனிதா! எங்களுக்கு வேண்டாம் இந்த வாழ்க்கை; எங்களுக்கு வேண்டாம் இந்த லட்சியம். உங்களைப் போல் நாங்கள் கூட்டுறவு வாழ்க்கை வாழவும் வேண்டாம்; கூட்டுக் கொள்ளை அடிக்கவும் வேண்டாம்.

அதற்காக நாங்களும் உங்களைப் போல் நாட்டுவாசிகளாகவும் வேண்டாம்; நாகரிகத்தில் மிதக்கவும் வேண்டாம்.

உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்—தயவு செய்து எங்களைக் காட்டு வாசிகளாகவே வாழவிடு!

அங்கே ஒன்றுக் கொன்று உதவி நாங்கள் நடத்தும் கூட்டு வாழ்க்கையில் தாயும் பிள்ளையும் மட்டும் அல்ல, வாயும் வயிறும்கூட ஒன்றாகவே இருக்கும். பசிக்காகப் பனங்காயை மட்டுமே நாங்கள் பதம் பார்த்துப் பறிப்போம்; சொத்துக்காகப் பங்காளியின் தலையைப் பதம் பார்த்துப் பறிக்க மாட்டோம்.

என்ன இருந்தாலும் நாங்கள் மிருகங்களல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓ_மனிதா/16._யானை_கேட்கிறது&oldid=1638422" இலிருந்து மீள்விக்கப்பட்டது