ஓ மனிதா/17. காகம் கேட்கிறது

17. காகம் கேட்கிறது

கொஞ்ச நாட்களாக உங்களை இந்த ‘சோஷலிஸ பைத்தியம்’ பிடித்து ஆட்டி வைக்கிறது. எங்களையும் நீங்கள் ‘சோஷலிஸ்டுகள்’ என்று சொல்லிராது கிடைத்தாலும் அதை நாங்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவ‘தாகப் போற்றி வருகிறீர்கள்.

இது எந்த அளவுக்கு உண்மையென்றால், நீங்கள் ‘சோஷலிஸம் பேசும்’ அளவுக்குத்தான் உண்மை !

அதாவது, கீழே ஏதாவது இருந்து, அதைக் கொத்திக் கொண்டு மேலே போக முடியாமலிருந்தால், நாயோ பூனையோ வந்து விரட்டி விட்டுத் தின்றுவிடக் கூடாதே என்பதற்காகக் ‘கா, கா, கா’ என்று கரைந்து நாங்கள் பக்க பலத்துக்காக மேலும் கொஞ்சம் கூட்டம் சேர்ப்போம். உங்களுக்கு முன்னால் அதைக் ‘கலந்துண்டு’, எங்களை சோஷலிஸ்ட்டுகளாகவும், காட்டிக்கொள்வோம். கிடைத்ததை எடுத்துக் கொண்டு மேலே போக முடிந்தாலோ?—அதைக் கொண்டு போய் ஒரு மரக்கிளையின்மேல் வைத்து, அது தவறிக் கீழே விழுந்துவிடாதபடி அதன்மேல் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, சக காக்கைகள் பகிர்ந்துண்ண அவற்றைச் சிறகால் அடித்து விரட்டிக் கொண்டு, அதை நாங்களே, நாங்கள் மட்டுமே எங்கள் அலகால் பிய்த்துப் பிய்த்துத் தின்று தீர்ப்போம்.

இந்த விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஓர் அபூர்வ ஒற்றுமை என்ன– வென்றால், நீங்களும் கீழே உள்ளவரை சோஷலிஸம் பேசிவிட்டு, மேலே போனதும் அதை மறந்து விடுகிறீர்கள்; நாங்களும் கீழே எதையாவது வைத்துத் தின்ன நேர்ந்தால் சோஷலிஸ்ட்டுகளாக இருக்கிறோம்; மேலே வைத்துத் தின்ன முடிந்தால் ‘சுதந்திரா’வாகி விடுகிறோம்.

அடாடா! இந்த ‘அழுமூஞ்சி உலக’த்தையே ‘ஆனந்த உலக’மாக்கப் போகும் சோஷலிஸத்தில் நமக்குள்ளே என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!

து போகட்டும்; இது என்ன சங்கதி?—உங்களில் சிலர் உண்பதற்காகக் காடை, கவுதாரி போன்றவற்றைப் பிடிக்கிறார்கள், அதை நான் பார்த்திருக்கிறேன். வளர்ப்பதற்காகக் கிளி, மைனா போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். எங்களையோ?—யாரும் எதற்காகவும் பிடிக்கவுமில்லை; பிடிப்பதாகத் தெரியவுமில்லை. அப்படியிருந்தும் இந்தக் ‘காக்கா பிடிக்கும் கலை’ என்று உருவாகி வளர்ந்தது?...

அதைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களோ இல்லையோ, நான் யோசித்தேன், யோசித்தேன், அப்படி யோசித்தேன். கடைசியில் அந்தக் கதைதான் என் நினைவுக்கு வந்தது. ‘எந்தக் கதை?’ என்கிறீர்களா?—சொல்கிறேன்:

தங்களைப் பற்றியே. இன்னும் சரி வர ஆராய்ந்து தெரிந்துகொள்ளாத உங்களில் சிலர், எங்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறார்களல்லவா? அவர்கள் எங்கள் இனத்தைத் ‘திருட்டுப் பறவை இன’த்தில் சேர்த்திருக்கிறார்கள். ‘இது ஏன்?’ என்று எனக்குப் புரியவில்லை. யாரோ படைத்த பொருட்களுக்குச் சொந்தம் கொண்டாடும் ‘யோக்கியர்கள்’ எங்கே இருக்கிறார்களோ, அங்கேதானே ‘திருடர்’களும் இருக்க முடியும்? எங்களிடையேதான் எதற்கும் சொந்தம் கொண்டாடும் ‘யோக்கியர்கள்’ இல்லையே? ‘திருடர்கள்’ எப்படி இருக்க முடியும்?

என்ன ஆராய்ச்சியோ உங்கள் ஆராய்ச்சி!

இந்த அழகான ஆராய்ச்சியை ‘உண்மை’ என்று நிரூபிப்பதற்காகவோ என்னவோ, உங்களில் ஒருவர் என்னை வைத்து ஒரு கதை கட்டி விட்டுவிட்டார். ஒரு நாள் ஒரு செட்டியார் கடையிலிருந்து ஒரு வடையைத் திருடிக் கொண்டு வந்து நான் மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டேனாம். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு நரி என்னிடம் வந்து, ‘காக்கா காக்கா, இவ்வளவு அழகாயிருக்கிறாயே! உன் வாயைத் திறந்து ஒரு பாட்டு பாடேன்?’ என்றதாம். உடனே நான் உச்சி குளிர்ந்து, ‘கா, கா’ என்று பாட, வாயிலிருந்த வடை கீழே விழ அதைக் கவ்விக்கொண்டு ஓட்டம் பிடித்ததாம் நரி, நான் ஏமாந்து போனேனாம். இப்படி ‘வஞ்சகப் புகழ்ச்சியால் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் கலை’தான் உங்களிடையே ‘காக்கா பிடிக்கும் கலை’யாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்; இல்லையா?

அந்தக் கலையும் உங்களில் சிலருக்குத்தான் கை கொடுக்கிறது; சிலருக்குக் கை விரித்து விடுகிறது.

ஓர் அவசரத் தேவை—உங்கள் நண்பர்களில் யாரிடமாவது போய்க் கை மாற்றாக ஒரு பத்து ரூபா வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். அதற்காக நீங்கள் முதலில் நுழையும் வீடு ஒரு பாடகரின் வீடாயிருக்கிறது “வணக்கம், வணக்கம். நேற்று உங்கள் கச்சேரி பிரமாதமாயிருந்தது. இந்த ‘சீச’னிலேயே ‘ஏ ஒன் கச்சேரி உங்களுடையதுதான்' என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள்!’ என்று ‘காக்கா பிடித்து’க் கொண்டே உள்ளே நுழைகிறீர்கள்.

“ஏன் ஐயா, என் மானத்தை இப்படி வாங்குகிறீர்? இந்த சீசனிலேயே அந்த ஒரு கச்சேரிதான் எனக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நிமிஷத்தில் கான்சலாகி விட்டது!” என்கிறார் அவர்.

அப்போதுதான் அன்றைக்கு முதல் நாள் அவருடைய கச்சேரி நடக்காமற்போனது உங்களுக்குத் தெரிகிறது. “ஹிஹி, அப்படியா? நான் வரேன்!” என்று போன சுவடு தெரியாமல் திரும்பிவிடுகிறீர்கள்.

இது ஒரு விதம்.

அலுவலகத்தில் ‘பத்தோடு பதினொன்’றாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மானேஜர் தம் அறையிலிருந்தபடி, “யார் அங்கே?” என்கிறார். அவர் ‘எள்’ என்பதற்குள் எண்ணெயையே கொண்டுபோய்க் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காக, “இதோவந்து விட்டேன்,” என்று நீங்கள் எல்லாரையும் முந்திக்கொண்டு ஓடுகிறீர்கள். எங்கேயோ போயிருந்த ‘ஹெட் கிளார்க்’கைத் தேடிப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் மானேஜருக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள், “நான் இவரையா கூப்பிடச் சொன்னேன்?” “ஸ்டெனோவையல்லவா கூப்பிடச் சொன்னேன்?” என்கிறார் அவர். “ஹிஹி, ஸ்டெனோவையா? இதோ கூப்பிடுகிறேன்” என்று பிடரியை ஒரு காரணமுமில்லாமல் தடவிக்கொண்டே, திரும்புகிறீர்கள்.

இது இன்னொரு விதம். ஆக, எல்லாக் கலைகளிலும் உள்ள ‘நுணுக்கம்’ இந்தக் கலையிலும் இருக்கிறது. அந்த நுணுக்கம் தெரிந்தவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்கள் தோல்வியையே தழுவ நேருகிறது.

மனிதா! ஒரு பாவமும் அறியாத என்னை இந்தக் ‘காக்கா பிடிக்கும் கலை’யில் சம்பந்தப்படுத்தியதோடு நீ நின்றாயா?—இல்லை; தெருவில் நீ அடித்துப் போடும் எலிகளையும், உன் காலடியில் சிக்கிச் செத்துக்கிடக்கும் தவளைகளையும் அப்புறப்படுத்தி நான் துப்புரவாக்கு கிறேன் என்பதற்காக நீ என்னை ‘ஆகாயத் தோட்டி’ என்ற ‘சிறப்புப் பெய’ரால் வேறு அழைத்துத் தொலைகிறாய்!

இதில் ‘தோட்டி’ என்னத்துக்கு, ‘தோட்டி?’ அதற்குப் பதிலாக ‘ஆகாயத் தொண்டன்’ என்றோ , ‘ஆகாய ஊழியன் என்றோ’ அழைத்தால் என்னவாம்?

எப்படி அழைப்பாய்? தொழிலுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு தொழில்; என்று அந்த நாளிலேயே கண்டவனாயிற்றே நீ நாளது வரை ‘ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும், ஒழிக்கவேண்டும்’ என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘சவரத் தொழிலாளி’ என்றும், ‘சலவைத் தொழிலாளி’ என்றும் ‘அரிஜன்’ என்றும் பழைய பெயர்களுக்குப் பதிலாகப் புதிய புதிய பெயர்களைச் சூட்டி, ஜாதிக்கு ஒரு தொழிலையும், தொழிலுக்கு ஒரு ஜாதியையும் ‘நவீன முறை’யில் வளர்த்து வருபவனாயிற்றே நீ!

இந்த நிலையில் தன் ஜாதிக்கு விரோதமாகச் சவரத் தொழிலை மேற்கொண்டு ‘தொழிலுக்கு ஒருஜாதியில்லை?’ என்பதை நிரூபிக்க உங்களிடையே உள்ள ஒரு முதலியாரோ, ஒரு நாயுடுவோ எங்கே முன் வரப் போகிறார்?

சலவைத் தொழிலை மேற்கொண்டு, ‘ஜாதிக்கு ஒரு தொழில் இல்லை’ என்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ, சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?

என்னை ‘ஆகாயத் தோட்டி’ என்று இழித்துரைக்கும் மனிதனே! உங்களிடையே உங்களில் ஒருவகை நடமாடும் தோட்டியை நீ ‘நகர சுத்தித் தொழிலாளி’, என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனை விட்டுப் போய்விடுமா?

ஒரு நாளும் போகாது.

அதணால்தான் ‘வைசிய’ரான மகாத்மா, தாமே ‘தோட்டி வேலை’ செய்து காட்டினர். அவரையே டாக்டர் அம்பேத்கார் கேட்டார்:

”அரிஜனங்கள் ‘கடவுளின் மக்கள்’ என்றால் மற்றவர்கள் யாருடைய மக்கள்?”

இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது; அகப்புரட்சி மூலமே சாதிக்க முடியும்’ என்று தெரியவில்லையா?

அந்த அகப் புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்?

அதைச் செய்தால், ‘ஜாதி இருக்காது; ஜாதி இல்லாவிட்டால் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற முடியாது; தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் எம். எல். ஏ. வாகவோ, அமைச்சராகவோ ஆக முடியாது; ஆகாவிட்டால் ஜனநாயகம் பிழைக்காது’ என்கிறாயா?

அதுவும் சரி; எது பிழைத்தால் என்ன, எது பிழைக்காவிட்டால் என்ன?-நீ பிழைத்தால் சரி!

‘சுயநல’த்தில் பிறந்த சோஷலிஸம் இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?

முற்றும்