ஓ மனிதா/9. சிட்டுக்குருவி கேட்கிறது
9. சிட்டுக்குருவி கேட்கிறது
உலகத்தில் எத்தனையோ பறவைகள் இருந்தாலும் என்னைப்போல் வேறு எந்தப் பறவையும் உங்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகுவதில்லை.
உங்கள் வீட்டு விட்டங்களின் மேலும், சாளரங்களின் மேலும் நாங்கள் ‘ஜிவ்’வென்று பறந்து வந்து உட்காருவதையும், ‘கிச்சுக் கிச்சு’ என்று காதல் மொழி பேசிக் களிப்பதையும் நீங்கள் அன்றாடம் பார்த்துப் பெருமூச்சு விடுகிறீர்கள். அவ்விதம் பெருமூச்சு விடும் போதெல்லாம் இந்தச் சிட்டுக் குருவிகளுக்குள்ள நிம்மதிகூட நமக்கு இல்லையே? எந்த நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு கவலை நம்மைப் பிடித்து வாட்டிக் கொண்டே இருக்கிறதே! என்று நீங்கள் குமைகிறீர்கள்.
மாதம் நூறு ரூபாய் வருமானம் வரும்போது இருந்த கஷ்டம், ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் போதும் அப்படியே இருக்கிறது.
இரண்டு ஏக்கர் விளைநிலத்துக்கு அதிபதியாயிருந்த போது பட்ட, அல்லல்கள் இருபது வேலி விளைநிலத்துக்கு அதிபதியான பிறகும் குறையவில்லை.
குச்சு வீட்டில் வாசம் செய்தபோது இருந்த மன உளைச்சல், மச்சு வீட்டுக்குக் குடியேறியும் தீரவில்லை.சைக்கிள் ஸ்கூட்டராகி, ஸ்கூட்டர் கார் ஆகி என்ன பயன்?—அப்போது காலை வலித்தது; இப்போது இதயத்தை வலிக்கிறது!
ஏன் இந்தத் துன்பம்? இந்தத் துன்பத்துக்கெல்லாம் யார் காரணம்?
ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்காத அதிபரா?
இன்னும் கொஞ்சம் கூடுதலாக விளையாத விளைநிலமா?
இமய மலையின் உச்சியை எட்டிப் பிடிக்காத மச்சு வீடா?
ஏரோப்பிளேன் ஆகாத காரா?
இல்லை; இவற்றில் எதுவுமே உன் துன்பத்துக்குக் காரணமில்லை.
பின் யார் காரணம்? எது காரணம்?
எல்லாவற்றுக்கும் காரணம் நீயும், நீ கண்ட சொத்துரிமையுமே.
சுதந்திரம் உன்னுடைய ‘பிறப்புரிமை’யாயிருக்கலாம், ஆனால் சொத்துரிமை உன்னுடைய பிறப்புரிமை அல்ல; அது இயற்கையின் பிறப்புரிமை. அந்த உரிமையை நீ இயற்கையினிடமிருந்து அபகரித்தாலும் அபகரித்தாய், அதன் பலனை இப்போது நன்றாக அனுபவிக்கிறாய்!
சொத்துரிமைக்கு முன்னால் உன்னை ஆள உனக்கு மன்னன் தேவைப்படவில்லை; மந்திரிப் பிரதானிகள் தேவைப்படவில்லை. படை தேவைப்படவில்லை; படைக்கலன்களும் தேவைப்படவில்லை.
பின்னாலோ?—அவை எல்லாமே உனக்குத் தேவைப் பட்டன. முதலில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த உங்களிடையே மூண்ட உரிமைப் போர், ஒரு கூட்டத்துக்கும் இன்னொரு கூட்டத்துக்கும் இடையே மூண்ட போராயிருந்தது. நாளடைவில் அதுவே ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் மூண்ட போராயிற்று.
போர், போர்! ஓய்வில்லாத போர்; ஒழிவில்லாத போர்!
ஓர் உரிமைக்கா? - இல்லை; ஓராயிரம் உரிமைகளுக்காகப் போர்!
ஏன், ஒரு காலத்தில் வரைமுறையற்ற காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நீங்கள் உங்களுடைய நாகரிகத்தையே போரைக் கொண்டு தான் அன்றும் வளர்த்தீர்கள்; இன்றும் வளர்க்கிறீர்கள்.
ஆனால் அன்று இருந்த ராஜாக்கள் இன்று இல்லை; தப்பித்தவறி ஓரிருவர் இருந்தாலும் அவர்கள் வெறும் ‘பொம்மை ராஜாக்க’ளாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக ‘மக்கள் பிரதிநிதிகள் என்று’ சொல்லிக் கொள்வோர், எல்லாம் ‘மக்களுக்காக’ என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் ‘தங்களுக்காக’வே செய்து கொண்டிருக்கிறார்கள். தெருவோரத்தில் துண்டு விரித்து மூன்று சீட்டு ஆடுவோர், ‘வா ராஜா; வா; பத்து பைசா வைச்சா இருபது பைசா தரேன். ஒரு ரூபா வைச்சா இரண்டு ரூபா தரேன். பத்து ரூபா வைச்சா இருபது ரூபா தரேன்; வா ராஜா, வா!’ என்று வருவோர் போவோரை யெல்லாம் கூவி அழைத்துக் கூட்டம் சேர்த்து, ‘இதோ பார், கிங்! இதோ பார் க்வின்! 'இதோ பார் ஜோக்கர்!’ என்று ‘ஜோக்’ காட்டுவது போல, ‘இதோ பார், ஜனநாயகம் இதோ பார், சோஷலிஸம்! இதோ பார், ஜனநாயக சோஷலிஸம்!’ என்று அவர்கள் ஒரு கண்ணை உங்கள் மேலும் இன்னொரு கண்ணை உங்கள் வோட்டின் மேலும் வைத்து மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷன், நீதி மன்றம், சிறைச்சாலை, தூக்கு மேடை, ராணுவம்—இவையெல்லாம் மக்களின் பாதுகாப்புக்காக இருக்கின்றனவா? மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காக இருக்கின்றனவா?
யோசிக்க வேண்டிய விஷயம்.
இந்த நிலைமையில் நீங்களும் உங்கள் சொத்துரிமையை விட யோசிக்கிறீர்கள்; சொத்துரிமையும் உங்களை விட யோசிக்கிறது! இதனால் ஏற்பட்ட சொந்தமும் பந்தமும் வேறு சிலந்தி வலை பின்னுவது போல் பின்னி உங்களைத் தங்களிடையே சிக்க வைத்துக் கொண்டு விட்டன. அப்புறம் கேட்க வேண்டுமா?— நல உரிமை, நாட்டுரிமை என்று உங்களிடையே எடுத்ததற்கெல்லாம் போர்! எப்போது பார்த்தாலும் போர்!
போர் வரும் போதெல்லாம் சும்மாவா வருகிறது?—புதுப்புது ஆயுதங்களையும், புதுப்புது நாகரிகங்களையும் கொண்டு வருகிறது.
அது கடைசியாகக் கொண்டு வந்துள்ள ஆயுதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட்; நாகரிகமோ எதைப் பற்றியும் கவலைப்படாத பழைய காட்டுமிராண்டி நாகரிகம்—அதற்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள பெயர் ஹிப்பிஸம்!
எந்த ஆயுதம் வந்தென்ன, எந்த நாகரிகம் வந்தென்ன, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட பேதம் குறையவில்லை; வளருகிறது.
இருப்பவனைப் பார்த்து இல்லாதவன் குமுறுகிறான்; அந்த இல்லாதவன் ‘குமுற’லை இருப்பவன் ‘பொறாமை’ என்று பொய் சொல்லி மறைக்கப் பார்க்கிறான்.
இவர்கள் இருவரையும் ஏககாலத்தில் ஏமாற்றிப் பிழைக்க விரும்புபவனோ, ‘எல்லாம் அவன் செயல்; அவன் திருவுள்ளத்தை யாரே அறிய வல்லார்?’ என்று சூனியமான வானத்தைக் காட்டிக் கதைக்கிறான்.
இவனால் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளோ, பகல் வேடதாரிகள் பலருக்கு ‘முதல்’ இல்லாத ‘மூலதன’மாக இருக்கிறார்.
இவரை வைத்து, ‘உண்டு’ என்பவனும் பிழைக்கிறான்; ‘இல்லை’ என்பவனும் பிழைக்கிறான்.
இவர்களுக்கு இடையே இருப்பவன் மட்டுமல்ல; இல்லாதவனும் இளிச்சவாயன் ஆகிறான்!
ஒ மனிதா! நீ சொத்துரிமை தேடியது எதற்காக?—நிம்மதிக்காக அந்த நிம்மதி இப்போது எங்கே இருக்கிறது?‘மதுவில் இருக்கிறது’ என்கிறான் குடிகாரன்; மங்கையில் இருக்கிறது என்கிறான் பெண் பித்தன்.
ஞானியோ, ‘மதுவிலும் மங்கையிலும் உள்ள நிம்மதி ஒரு கணந்தான்; முக்தியில் தான் அது நிரந்தரமாக இருக்கிறது’ என்கிறான்.
இந்த ஞானிகளில் இன்று எத்தனைப் பேர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களாக, விவேகானந்தர்களாக இருக்கிறார்கள்?
சொல்வது கடினம்,
அது போகட்டும்; உன்னைப் பொறுத்தவரை நீ அந்த நிம்மதி எங்கே இருக்கிறதென்று நினைக்கிறாய்?
‘கண்டு கொண்டேன்; கண்டுகொண்டேன்; நிம்மதி வேறு எங்கேயும் இல்லை, என் உள்ளத்தில் தான் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன்!’ என்று ‘நாராயணா’ என்னும் நாமத்தைக் கண்டு கொண்ட வைணவன் மாதிரி நீயும் குதிக்கிறாயா?
நில்; அப்படியெல்லாம் நினைத்து உன்னை நீயே மேலும் மேலும் ஏமாற்றிக் கொண்டிருக்காதே!
ஏனெனில், நீ எப்போது சொத்துரிமையை அடைந்தாயோ, அப்போதே உன் உள்ளத்தில் இருந்த ‘நிம்மதி’ உன்னை விட்டுப் போய் விட்டது,
அதற்குப் பதிலாக எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும், ஆசைகளும் பாசங்களும் வந்து உன்னை அடைந்துவிட்டன.
இனி அவற்றை என்னைப் போல் நீயும் அவ்வப் போது உதறி எறிந்து விட்டு எந்தவிதமான கவலையும் இல்லாமல் நீ வாழ முடியுமென்று நினைக்கிறாயா?ஒருநாளும் முடியாது.
அப்படியானால் நிம்மதிக்கு வழி?—கபீர்தாசர் சொல்லும் கதையைக் கேள்.
ஒன்றன் பின் ஒன்றாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. முன்னால் சென்ற எறும்பின் வாயில் ஒரு குறு நொய் இருந்தது. வழியில் இன்னொரு குறு நொய்யைக் கண்டது அது. உடனே அதையும் எடுக்க அந்த எறும்பு முயன்றது— எப்படி முடியும்? அதன் வாயில் தான் ஏற்கெனவே ஒரு குறு நொய் இருக்கிறதே? —தவியாய்த் தவித்தது!
பின்னால் வந்து கொண்டிருந்த எறும்பு சொலலிற்று; ‘ஒன்றை விடு, இன்னொன்றை எடு.’
ஆம்; ஒன்றை விடாமல் இன்னொன்றை எடுப்பது எப்படி?
‘சொத்துரிமை’ வேண்டுமானால் ‘நிம்மதி’யை விடு; ‘நிம்மதி’ வேண்டுமானால் ‘சொத்துரிமை’யை விடு.
இல்லாவிட்டால் என்னைப் போல் ஒரு நாளும் உன்னால் நிம்மதியாக வாழ முடியாது.