ஔவையார் தனிப்பாடல்கள்/அரியது எது?

58. அரியது எது?

சிலவற்றை அரியதென்று கருதுகின்றோம். அரிய அவற்றை முயன்று அடைவதனைப் பெரிதான பேறாகவும் கருதுகின்றோம். அந்த முயற்சியிலே தளராதும் தயங்காதும் ஈடுபடுகின்றோம். இவ்வாறு அரியதெனக் கருதும் பொருள்களும், குணங்களும் அவற்றைக் கொள்பவரின் கருத்துக்களுக்கு ஏற்ப மாறுபடுவதும், வேறுபடுவதும் உண்டு.

முருகப் பிரானாகிய வேலன், அடுத்தபடியாக ஔவையாரை வினவியது, 'அரியது எது?’ என்பதாகும். அதற்கு விடை கூறுகிறவர், சிறந்த சில உண்மைகளையும் விளக்குகின்றார்.

ஒன்று முதலாகிய அறிவுடன் விளங்கி வருகிற கோடானு கோடி உயிர் வகைகளுள், மானுடராகப் பிறவி எடுத்திருக்கும் அந்தப் பாக்கியம் ஒன்றே, நாம் அரியதாகக் கொள்ள வேண்டியது. மானிடப் பிறப்பினும் ஊமை, கூன், குருடு, அலி என்றவாறு குறைப் பிறவிகளாகப் பிறந்துவிட்டால், அது பெரிய வேதனையாகப் போய்விடும். அப்படி இல்லாமல், நல்ல உடல் வளத்துடன் பிறப்பது அதனினும் அரிதாகும்.

நல்லுடல் அமைந்தாலும், மனிதனை மனிதனாக உயர்த்துவதும், நன்மை தீமைகளை உணர்ந்து, உயர்வுக் கானவற்றில் மனிதனைச் செலுத்துவதும் ஆகிய, ஞானமும் கல்வியும் முதன்மையானவை என்று உணர்தல் வேண்டும். உணர்ந்து, அவற்றில் விருப்புடன் ஈடுபடுதல், அதனினும் அரிதாகும்.

ஞானமும் கல்வியும் அடைய விரும்பினால் மட்டும் போதாது; அவை கைவரப்பெறினும், 'உயிர்கட்கு உதவ வேண்டும்' என்னும் தானம் செய்கிற பண்பும், தன்னிச்சைகளை ஒடுக்க வேண்டும் என்னும் தவம் பேணுகிற உறுதியும் ஒருவனிடம் படிவது மிகவும் அரிதாகும்.

இவையும் ஒருவனிடம் படிந்து விடுமானால், அவனே பெறற்கு அரிதான பேற்றினைப் பெற்றவன். அவனுக்கு, வானவர் நாடு வழி திறந்திருக்கும். அவன், பிறவி நீத்த பெற்றியனும் ஆவான். இந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது ஔவையாரின் செய்யுள்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறத்தலும் அரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும்
மூங்கையும் செவிடும் கூனும் குருடும்
பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நன்குறல் அரிதே
ஞானமும் கல்வியும் நன்குறும் ஆயினும்
தானமும் தவமும் தரித்தலும் அரிதே
தானமும் தவமும் தரித்தார்க் கல்லது
வானவர் நாடு வழிதிற வாதே.

"குருதிக் கறை தோய்ந்த வடிக்கப்பெற்ற வேலினை உடையவனே! மக்கள் யாக்கையில் வந்து பிறவி எடுத்தல் அரியதாகும். அப்படிப் பிறவி எடுத்தபோதும், ஊமையும், செவிடும், கூனும், குருடும், அலியுமாகிய குறைகள் நீங்கிப் பிறத்தல் அரிதாகும்.

அப்படியே குற்றமற்றுப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நன்றாக வந்தடைதல் அரிதாகும். அவையும் நன்றாக வந்தடைந்தாலும், தானமும் தவமும் மேற்கொள்ளல் அரிதாகும். அவற்றை மேற்கொண்டவர்க்கு அல்லாமற் பிறர்க்குச் சுவர்க்கம் வழி திறவாது போய்விடும். எனவே, தானமும் தவமும் மேற்கொள்ளலே அரிய பேறு ஆகும்" என்பது பொருள்.