ஔவையார் தனிப்பாடல்கள்/அழிவழக்குச் செய்தவன்!
48. அழிவழக்குச் செய்தவன்!
ஒரு வழக்கு ஏற்படுகிறது. எவன் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவன் சமூகத்தில் மிகச் சாதாரணமானவன். ஆனால், அவனுக்கு எதிர்வழக்கு தொடர்ந்திருப்பவனோ பெரிதும் வலியவன்.
இந்தச் சமயத்தில், நியாயம் தீர்ப்பவன் முறையாக நடந்துகொள்ள முடியாமல் பல சூழ்நிலைகள் ஏற்பட்டு விடலாம். வலியவன் தன் பக்கமாக நியாயத்தை திருப்பிக் கொள்ள இடையறாது முயலுவதும் இயல்பு. அவனுடைய வலிமைக்கு ஆட்பட்டு, நியாயம் கோணாமல், முறையாகவே நீதி வழங்குவதுதான் அறமாகும்.
ஆனால், 'முறைமை' என்று ஒன்று ஏற்பட்டால், அதிலிருந்து தவறுவது என்பதும் சிலரின் இயல்பாகி விடுகிறது. வலியோனின் பக்கமே அவர்கள் சார்ந்து நிற்கின்றனர். வலியிழந்தோன் தம்மை எதுவும் செய்ய இயலாது என்ற நிலைமையும் வலியவனின் பகைமையால் விளையும் இடையூறுகளைக் கருதி எழுகின்ற அச்சமும், அவர்களை நீதியற்றவர்களாக்கி விடுகின்றன.
அழுது அழுது கண்ணிர் பெருக்குகின்றான் வலியற்றவன். அவன் சுற்றமும் அவனுடைய கண்ணிர்ப் பெருக்கில் கலந்து கொள்ளுகின்றது. அவர்கள் அழுது வடித்த கண்ணிர் வீண் போகாது. அது நீதி பிழைத்தவனின் குடியையே வேரறுத்துவிடும்.
நீதி பிழைப்பவர்க்கு எச்சரிக்கையாக இந்த அறநெறியை அன்று கூறினார் ஔவையார். 'உண்மையானால் கிழியே நீயும் அற்று வீழ்க’ என்றார். அதனை உண்மை என்று உறுதியுரைப்பது போல நான்காவது முடிச்சும் அற்று வீழ்ந்தது. அந்தப் பாடல் இது:
வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை யழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமிறும் என்றால் இறு.