ஔவையார் தனிப்பாடல்கள்/அவளாகத் தோன்றும்!
100. அவளாகத் தோன்றும்!
"கடைவாயிலில் மணியோசை ஓயாது எழுந்து கொண்டிருக்கும், வள்ளல் தன்மையினை உடையவன் ஜவேல் அசதி என்பவன். அவனுடைய அழகான மலைப்பகுதியினிடத்தே...
நீண்ட கயல்மீனைப் போன்ற கண்களையுடையவளான இவள் எனக்குத் தந்த ஆசையின் பெருக்கத்தினை, என்னால் எடுத்துச் சொல்வதும் அரிதாகும்.
மலையுச்சிகளும், குளமும், குளத்து அருகே நிற்கும் குன்றுகளும், காடும், செடியும் ஆகிய அனைத்துமே என் கண்களுக்கு அவளாகத் தோன்றுமே!"
என்கிறான் அவன். காண்பவை அனைத்திலுமே அவளைக் காணுகின்ற அரிய காதற்செல்வன் அவன்!
ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமேல்
நீடுங் கயற்கண்ணி டந்த வாசை நிகழ்த்தரிதால்
கோடுங் குளமும் குளத்தரு கேநிற்கும் குன்றுகளும்
காடுஞ் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.
'கடைமணி ஆடல் வருகின்ற விருந்தினர் பற்றிய அறிவிப்பு. கயல் - கெண்டை மீன்.