ஔவையார் தனிப்பாடல்கள்/இல்லை இனிது!

565531ஔவையார் தனிப்பாடல்கள் — இல்லை இனிது!ஔவையார் (தனிப்பாடல்கள்)

42. இல்லை இனிது!

ழையனூரில் காரி என்ற பெயருள்ளவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் எளியவன். ஆனால், மிகவும் நல்ல குணம் உடையவன். அவனுக்கு உதவ நினைத்தார் ஔவையார். வாதவன் வத்தவன் யாதவன் என்பாரை நாடினார். அவர்கள் யாதும் தாராது போக, அது குறித்துப் பாடியது இது.

கொடை சிறந்த குணம் ஆகும். ஆனால், செல்வர்களுக்கு எளிதில் கொடைக் குணம் வாய்த்துவிடுவது இல்லை. பெரிதாக இல்லாமற் போனாலும் சிறிதளவேனும் கொடுத்து உதவலாம். அதற்கும் பலர் விரும்புவதில்லை.

ஔவையார் காரிக்கு உதவ நினைத்துச் சென்றார். அவனுக்கு வேண்டியது எல்லாம் ஒன்றிரண்டு ஆடுகள்தாம். அதனை வளர்த்து அவன் தன்னைப் பேணிக் கொள்வான். அதனை நிறைவேற்றுவதும் அவ்வளவு எளிதாயில்லை.

முதலில் வாதவர் கோனைக் கண்டார். அவன் “இப்போது தருவதற்கு இல்லை; பின்னர் ஒரு சமயம் தருகின்றேன்” என்றான். அது, தருவதற்கு விரும்பாமல் சொன்னது. அதனை ஔவையார் அறிந்து, வத்தவர் கோனிடம் சென்று முயன்றார். அவனும் அப்படித்தான் “நாளைக்கு வாருங்கள்” என்றான். அவனை விட்டு யாதவர் கோனிடம் சென்று கேட்டார். அவனோ தருவதற்கு “இல்லை” என்றான். தான் கொடுக்க விரும்பாததனை வெளிப் படையாகவே அவன் சொல்லிவிட்டான். பிறர் கொடுக்க விரும்பாததுடன், ஔவையாரை வீணாக அலைக்கவும் முயன்றனர்.

அதனால் ஔவையார் மனம் நொந்து போனார். அந்த நிலையிலே எழுந்த பாட்டு இது.

கொடுக்கும் குணமுடையவன் ஒருபோதும் நாளைக்கு என்றோ, பின்னைக்கென்றோ கூற மாட்டான். அப்படிக் கூறுவது கொடுக்க விரும்பாததற்கு அறிகுறியே. இதனை உணர்த்துவது இச்செய்யுள்.

வாதவர்கோன் பின்னையென்றான்
வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும்
இல்லையென்றான் - ஆதலால்
வாதவர்கோன் பின்னையிலும்
வத்தவர்கோன் நாளையிலும்
யாதவர்கோன் இல்லை இனிது.

“வாதவர் கோமான் பின்னொரு சமயம் வருக என்றான். வத்தவர் கோமான் நாளை வருக, நாளை வருக என்று நாட் கடத்தினான். யாதவர் கோமானோ யாதொன்றும் தருவதற்கு இல்லை என்றான். இவர்கள் அனைவரும் கொடுக்க மனமின்றியே இப்படிக் கூறியதனால், வாதவர்கோன் பின்னை என்றதிலும், வத்தவர்கோன் நாளை என்றதிலும், யாதவர்கோன் இல்லை என்றதே எனக்கு இனிதாக இருந்தது" என்பது பொருள்.

இப்பாடல் பலவகையாக வழங்கும்! பொருளும் பலபடியாக உரைக்கப்படும். அவற்றைப் பிறவற்றான் உணர்க.