ஔவையார் தனிப்பாடல்கள்/உறங்காது கண்!

565931ஔவையார் தனிப்பாடல்கள் — உறங்காது கண்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

54. உறங்காது கண்!

ருசமயம், ஔவையார் காட்டு வழியிலே போய்க் கொண்டிருந்தார். அவ்வேளை முருகப்பெருமான் அவரைச் சோதிக்க நினைத்தான். மாடு மேய்க்கும் சிறுவனைப்போல வடிவெடுத்தான். வழியிலிருந்த நாவல் மரத்தின் மீதமர்ந்து, அதன் பழங்களைச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான்.

ஔவையாரும், அம் மரத்தின் அடிப்புறமாக நிழலுக்காக வந்தார். 'பாட்டி' என்று அழைத்த இனிமையான மழலைக் குரலைக் கேட்டு மேலே நிமிர்ந்தார்.

முருகச் சிறுவன் மரத்தின்மேல் தோன்றினான். அவனைச் சாதாரணச் சிறுவனாகவே கருதிவிட்டார் ஔவையார்.

“பாட்டி பாட்டி பழம் வேண்டுமா உனக்கு?” என்றான் அவன். அவன் குரலில் அன்பு நெகிழ்ந்தது.

“கொஞ்சம் போடு அப்பா” என்றார் ஔவையார்.

“சுட்ட பழமா? சுடாத பழமா? உனக்கு எவை வேண்டும்?" என்று கேட்டான் சிறுவன்.

“சுடுகிற பழமா? சுடாத பழமா? பழமும் சுடுமா? சரி! சரி எனக்குச் சுடுகிற பழந்தான் கொஞ்சம் போடேன்” என்றார் ஔவையார் சிரித்தபடி

சிறுவன் நாவற்கிளையை நன்றாக உலுக்கினான். பொல பொலவெனக் கனிந்த பழங்கள் உதிர்ந்தன. ஒவ்வொன்றாகப் பொறுக்கி, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை ஊதிப் போக்கிவிட்டுத் தம் வாயில் இட்டுக் கொண்டிருந்தார் ஔவையார்.

"பழம் நிரம்பச் சுடுகிறதா பாட்டி! நன்றாக ஊதி ஊதிச் சாப்பிடு!” என்று சொல்லிக் கலகலவென எள்ளற் சிரிப்புச் சிரித்தான் சிறுவன்.

ஔவையார், ஒரு கணம் திகைத்தார். சிறுவனின் குறும்பான புத்திநுட்பத்திற்குத் தாம் தோற்றதை நினைத்தார். தம் தலையை மேலே நிமிர்த்தினார்."நான் உனக்குத் தோற்றேன் தம்பி! நீ நன்றாக வாழ்க!” என்று வாழ்த்தினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்.

"உறுதி மிகுந்த கருங்காலிக் கட்டையைப் பிளப்பதற்குப் பின்னிடாத கோடாரியானது, எளிதாக ஒடியும் வாழைத் தண்டினைப் பிளப்பதற்கு முடியாமல் தோற்றுப் பின்னடையும். அதனைப்போலப் பெரிய இந்தக் காட்டிடத்தே, எருமை மாடு மேய்க்கின்ற இச் சிறுவனுக்கு நான் தோற்றுவிட்டேனே! என் கண்கள், இனி இரண்டிரவுகளுக்கு உறங்க மாட்டாவே" என்பது பாட்டின் பொருள்.

தம்முடைய அந்த அறிவுத் தோல்வியை ஔவையாரால் எளிதாக மறக்க முடியவில்லை. அந்த வேதனை அனுபவத்தை அவராகவே உரைத்தது இச் செய்யுள்.

அப்போது, அங்கே மயில்வாகனன் மந்தகாச நகையுடன் தோன்றினான். அவனைப் பணிந்து போற்றினார் ஔவையார். அவனும் மகிழ்ந்து, அவரை வாழ்த்தி நிற்கின்றான்.