ஔவையார் தனிப்பாடல்கள்/எண் சாண்!
38. எண் சாண்!
ஔவையாரின் புகழ் தமிழகம் எங்கணுமே பரவி இருந்தது. அவர் வாயினாற் பாடப் பெறவேண்டும் என விரும்பினோர் பலர். அவருடைய வாக்கினைத் தமிழ்த் தெய்வத்தின் வாக்கு எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தோரும் மிகப் பலர்.
ஔவையாரிடம் ஒரு சிறப்பான தனித்தன்மை இருந்தது. அரசரைப் பாடி, அரசரிடம் பரிசில் பெற்றுப் புலவர்கள் இருந்த காலம் அது. அந்த நாளில், அரசரையும் மக்களையும் அன்பு என்னும் அளவுகோல் ஒன்றினாலேயே அளந்து, அதற்காகவே பாடிப் புகழ்பெற்ற மானுடப் பெருங் கவிஞராகவும் ஔவையார் திகழ்ந்தனர்.
தாசி சிலம்பியும், குறவனும், பூதனும், முல்லானும் மற்றும் பலரும் ஔவையாரால் பாராட்டிப் பாடும் நிலை பெற்றனர். இவற்றை நாம் கண்டோம்.
ஆனால், 'ஔவையார் பெரும் புலவரோ? தெய்விக ஆற்றல் உடையவர் என்பதும் உண்மையோ? எம்போன்று சொற்களைக் கவினுற யாத்தமைப்பவரோ?' என்றெல்லாம் அவரைக் குறித்து ஏளனமாகக் கருதினவர்களும் இல்லாமல் இல்லை. ஒரு புலவர், இந்த எண்ணத்துடன் ஒருநாள் ஔவையாரைச் சந்தித்தார். அவருடைய கையில் மண் இருந்தது. குறிப்பால் தன் கையினைக் காட்டி, அதனுள் இருப்பதனைக் குறிக்கும் வகையாற் செய்யுள் ஒன்று இயற்றுமாறு கேட்டனர்.
ஔவையார் அந்தப் புலவரின் குறும்புச் செருக்கினை உணர்ந்தார். அந்தப் புலவருடைய குறும்பினை ஒடுக்க வேண்டும் என்ற நினைவும் எழுந்தது. பிறருடைய தகுதியைச் சரியாக உணராமல் அவசரப்பட்டு வம்பு செய்ய முன்வந்த அவருடைய அறியாமையினை எண்ணினார்.
அவர் அங்ஙனம் கேட்டது தம்மை இழிவுபடுத்தும் கருத்துடன் என்பதையும் புரிந்து கொண்டார். அந்தப் புலவரை நோக்கிக் கூறத் தொடங்கினார்.
“நும் கையிலிருக்கும் மண்ணின் அளவே தான் கற்றதெனக் கொண்டவளாகவும், கல்லாதது உலகளவு பரந்தது எனக் கருதியவளாகவும், கலைமகள் இன்னமும், ஓதிக்கொண்டே இருக்கின்றாள். அங்ஙனமிருக்கவும் நீரோ வீணாகப் பந்தயம் இட்டு வருகின்றீர். இது மிக மிக நன்று” என்று கூறி, அவரின் செருக்கினை அடக்கினார் ஔவையார்.
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்
றுற்ற கலைமடந்தை ஒதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்.
“புலவரே! நான்முகனின் நாவிலே வீற்றிருக்கும் கலைக்குத் தெய்வமான கலைமகள், தான் கற்றது ஒரு கைம்மண்ணின் அளவே எனவும், கல்லாதது உலகளவு பரந்தது எனவும் கருதி, இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறாள். அதனால், வீணாகப் பந்தயம் கூறி வாதிட முயலல் வேண்டாம். எறும்பும் தன் கையால் எண்சாண் அளவே என்பதை உணர்ந்து, பிறர்பால் அடக்கங்காட்டி வாழ்வீராக” என்பது பொருள்.
நீர் இன்னும் அறிவு பெறவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.