ஔவையார் தனிப்பாடல்கள்/என் குற்றம்!

106. என் குற்றம்

தொண்டை நாட்டில் சோழகுளம் என்றொரு ஊர் உள்ளது. இதன் பண்டையப் பெயர் 'சோழி சொற்கேளோம்’ என்பது என்பார்கள் ஔவை துரைசாமி பிள்ளை அவர்கள்.

இந்த ஊரிலே செல்வன் ஒருவன் இருந்தான். இவன் தமிழ்ப் புலவர்களுக்கு ஓரளவு கொடுத்து வந்தவன்தான். எனினும், சோழ நாட்டவரைக் காணவும் பிடிக்காத ஒரு தன்மை உடையவனாகவும் இருந்தான். அவர்கள் பாடினாலும் அவன் எதுவும் தருவதில்லை.

அவனுடைய இந்த உறுதியை அறியாத ஔவையார், அவன்பாற் சென்று அவனை போற்றிப் பாடிப் பரிசிலும் வேண்டினார். அவன், "இல்லை" என்று கூறி மறுத்துவிட்டான்.

ஔவையார் மனம் வெதும்பியவராக வெளியேறிச் சென்றார். எதிர்ப்பட்ட மற்றொரு புலவர், “ஏதாவது பெற்றீர்களோ?” என வினவினார். அவருடைய கேள்வி ஔவையாரின் உள்ளத்தைக் குமுறச் செய்தது. அவர் அப்போது பாடிய செய்யுள் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
காடேறித் திரிவானை நாடா என்றேன்
பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை
வழங்காத கையனையான் வள்ளால் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

மல்லார்தல் மற்போர் ஆற்றுதல், தேம்பல் தோள் - மெலிவான தோள். இச்செய்யுளின் பொருள் வெளிப்படை ஆனது. "அவனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாது சொன்ன குற்றத்தால் அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே நான் ஏதும் பெறாது போகின்றேன்” என்கின்றார், ஔவையார்.