ஔவையார் தனிப்பாடல்கள்/கொடாத செல்வர்!
73. கொடாத செல்வர்!
ஔவையார் மிக நல்ல பண்பினைக் கொண்டவர்.மக்களின் துயரங்களைக் கண்டால் அவர் மனம் உருகும். மக்களின் இன்பத்தைக் கண்டால் அவர் உள்ளம் உவக்கும். அன்பினுக்கு அவர் எளியவர். ஆனால், அதிகாரத்திற்கோ, அல்லது போலிச் செருக்கிற்கோ அவர் பணிபவர் அல்லர்.
ஔவையாரின் இந்தப்பண்புகளை நாடெங்கணும் அறிந்தவர் பலர். அதனால், அவருக்கு ஏற்பட்டிருந்த புகழும் பெரிது!ஒரு சமயம் ஔவையார் ஓர் ஊரிடத்தே சென்றிருந்தார். அவ்வூரில் சிலர் செல்வர்களாக இருந்தனர். ஈவதற்கு மனம் வராத உலோபியர் அவர்கள். என்றாலும், ஔவையாரின் வாயால் தம்மையும் பாடும்படியாகச் செய்து கேட்க வேண்டும் என்ற அவா அவர்கட்கும் ஏற்பட்டது.
ஔவையாரிடம் சென்று பணிந்து நின்று, தம்முடைய ஆர்வத்தை வெளியிட்டனர். ஔவையார் அவர்களுடைய உள்ளப் போக்கினை அறிந்தார். அதற்கேற்ப ஒரு செய்யுளையும் சொன்னார். அஃது அவர்களின் இயல்புகளைப் புலனாக்கி அவர்களை இடித்துரைத்ததாக அமைந்தது.
மேலும்,நற்குணங்கள் அமையாதவரையும், நல்ல செயல்களை நாடாதவரையும் புலவர்கள் பாடுதல் பொருந்தாததென்ற உண்மையினை வலியுறுத்துவதாகவும் அது அமைந்தது.
"அயன், அரன், அரி என்பவர் முக்கடவுளர். அவர்கட்கும் நாயகனாக விளங்குபவன் பரம்பொருள். அவனைப் பாடினேன்!
சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தமிழகத்தே உள்ளனர். இளமை நலமுடைய அவர்களின் சிறப்பையும் பாடினேன்.
என் வாய் செய்யுள் மணம் கமழ்ந்து கொண்டிருப்பது. அத்தகைய முப்பெரும் வேந்தரையும், மூவர்க்கும் முதலையும் பாடிப் போற்றிய பெருமை உடையது.
அத்தகைய என்னுடைய வாயினால், 'எம்மையும் பாடுக’ என்று நீங்களும் வந்து கேட்டீர்கள். நூம்மை இவ்விடத்தே யான் எவ்வாறு பாடுவேன்? அது செந்தமிழ் மொழிக்கே பழியாக அமையுமே!
நீங்கள் வீரர்களாக இருந்து, அடுபோர் இயற்றிச் சிறந்த ஆண்மையாளர்களாக இருப்பவர் ஆனால், உங்களைப் போற்றிப் பாடலாம். நீங்களோ வெம்மையான சினம் ததும்பும் கண்களையுடைய போர்க்களிறுகள் வெட்டுண்டு வீழுகின்ற, குருதி வெள்ளத்தாற் சிவந்த போர்க்களத்தினைக் கண்ணாற் காணவும் இயலாத பெருங்கோழைகளாக இருக்கின்றீர்கள்!
உங்கள்பால் கலையார்வம் உளதென்றால், அதனை நோக்கி நும்மிடத்தே குற்றம் நீங்கிய நல்ல யாழிலே இசையினை எழுப்பி, நூம்மை மகிழ்வித்துப் பாடவும் செய்யலாம். அந்த நல்ல யாழிசையினை விருப்பமாகக் கேட்கின்ற தன்மையினைப் பெற்றிராதவர்களாகவும் உள்ளீர்கள்.நும் மனைவியரையன்றிப் பிற மாதரை நினையாத ஒழுக்கம் உடையவர்கள் என்றிருந்தால், அதற்காக யான் நும்மைப் போற்றிப் பாடலாம். நீரோ முருக்கம் பூப்போலும் சிவந்த வாயிதழ்களை உடையவரான நும் மனைவியரின் இளமைத் தன்மை கொண்ட மார்பைத் தழுவியிருக்கும் அந்த இல்லொழுக்கமும் இல்லாதவர்களாகத் தோன்றுகின்றீர்கள்.
புலவர்களின் வாய்ச்சொற்களில் கலந்து வருகிற அவர்களுடைய வறுமையினாலே எழுகின்ற புலம்பலைக் கேட்டு, அதற்கு இரங்கி அவருக்கு உதவுகின்றவர்களும் நீங்களும் அன்று. அதனாலும், யான் உங்களைப் பாடுதற்கில்லை.
பக்குவமாகச் சமைத்த உணவுகளின் சுவையினை அறிந்தவர்களே அன்றித் தமிழ்ச் சுவையினை அறிந்த தமிழன்பர்களாக உங்களைக் கொள்ளுதற்கும் இயலாது!
நன்றாக உடுக்கவும் மாட்டீர்கள். வயிறார உண்ணவும் மாட்டீர்கள். பிறருக்குக் கொடுக்கவும் மாட்டீர்கள். பிறர் கூறும் நல்ல பொருளமைந்த சொற்களைக் கேட்டு மேற்கொள்ளவும் மாட்டீர்கள்.
மரச்செறிவு நீங்காத காட்டினிடையே, உயரமாக வளர்ந்த மரத்தினிடத்தே விளங்கும் உண்ணுதற்காகாத பழத்தினைப்போல, நீங்களும் பயனற்றவர்களாக இவ்வுலகில் பிறந்துள்ளீர்கள்.
உங்களை யான் எப்படிப் பாடுவேன்?" இந்தக் கருத்துக்களுடன் அமைந்தது செய்யுள். அவர்கள் தலை தாழ்ந்தனர். அத்தகையோரைப் பாடுவது என்ற நிலைமையும் ஔவையாருக்கு அதன்பின்னர் அவ்வூரில் ஏற்படவில்லை.
இது, செய்யுள் பாடுவது என்பது புலவர்களின் செயல் மட்டுமாக இல்லை; எவரைக் குறித்துப் பாடுதல் வேண்டுமோ அவருடைய பண்புகளைக் குறித்தே அமைவதாகும், அமைய வேண்டுவதாகும் என்பதனையும் உணர்த்தும்.
மூவர் கோவையும் மூவிளங் கோவையும்
பாடிய வென்றன் பனுவல் வாயால்
எம்மையும் பாடுக வென்றணி நூம்மையிங்கு
எங்ஙனம் பாடுகென் யானே வெங்கட்
களிறுபடு செங்களம் கண்ணிற் காணி
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளிர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர்
இலவு வாய்ச்சியர் இளமுலை புல்லீர்
அவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்
உடீர் உண்ணி கொடீஇர் கொள்ளீர்
ஒவ்வாக் கானத்து உயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே!
முத் தேவர்களின் கோமானான பரம்பொருளையும், இளமைச் செவ்வியுடைய மூவேந்தர்களையும் பாடிய என்னுடைய பாமணக்கும் வாயினால் 'எம்மையும் பாடுக' என்றீர்கள்! நூம்மை யான் எவ்வாறு பாடுவேன்? சினங் கொண்ட போர்க்களிறுகள் வெட்டுப்பட்டு வீழ்தலையுடைய குருதிப் பெருக்காற் சிவந்த போர்க்களத்தினை நீங்கள் கண்ணாற் காணவும் மாட்டீர்கள்; குற்றமற்ற நல்ல யாழினின்றும் எழுகின்ற இசையினை விரும்பிக் கேட்கவும் மாட்டீர்கள்; புலவரின் வாய்ச்சொற்களாக வெளிப்படும் புலம்பலுக்கு இரங்கவும் மாட்டீர்கள்; முருக்கம்பூப் போன்ற இதழ்களையுடைய நும் மனைவியரின் இளைய முலைகளைத் தழுவி இருக்கவும் மாட்டீர்கள்; சமைத்த உணவின் சுவையின்றித் தமிழ்ச்சுவை யாதும் தெளியமாட்டீர்கள், உடுக்கமாட்டீர்கள்; உண்ண மாட்டீர்கள்; கொடுக்கமாட்டீர்கள்; கொள்ளவும் மாட்டீர்கள். தொலையாத காட்டின் நடுவே உயரமான மரத்தில் பழுத்துள்ள உண்ணற்காகாக் கணியென நீங்கள் தோன்றினர்களே!” என்பது பொருள்.
இச் செய்யுள், உலகுக்கு உதவி வாழாதவரைப் புலவர்கள் பாடமாட்டார்கள் என்பதையும் உணர்த்தும்.