ஔவையார் தனிப்பாடல்கள்/சோம்பரைத் தாக்குக!

52. சோம்பரைத் தாக்குக!

லகிலே வேண்டிய வளம் இருக்கிறது. வானம் மழையினைப் பெய்கிறது. எங்கும் விளைவுகள் பெருகின்றன. தான தர்மங்கள் நிகழ்கின்றன. வருந்துபவருக்கு இரங்கும் இரக்ககுணமும் மனிதரிடையே உண்டாகிறது.

இவை எல்லாம் நல்லன எனப்படுபவை. முயற்சியெடுத்துப் பயன்பெற்று இவற்றைத் துய்த்து இன்புறலாம். ஆனால், சிலர் மிகவும் சோம்பேறிகளாகவே இருக்கின்றனர். இயற்கை தரும் இந்தச் செல்வ நலங்களை அவர்கள் விரும்பாமல் இல்லை. ஆனால், ‘களைப்புற்றோம் நலிந்தோம்' என்று ஏதாவது போக்குக் காட்டிக் கொண்டு, பிறரை உழைக்கச் செய்து, தாம் அதனாற் பயன்பெற்று வாழ்ந்து வருகின்றனர்; வாழவும் நினைக்கின்றனர்.

உழைப்பதற்குச் சோம்பித் திரியும் இந்த மனிதர்களைக் 'கயவர்கள்' என்றே ஆன்றோர் கருதுவார்கள். பிறரின் உழைப்பினாலே உண்டு திரியும் இவர்களை, அவர்களின் உழைப்பினைத் திருடும் கொடியவராகவும் கொள்வார்கள்.

"பேயே! வானமும் உள்ளது! மழையும் உள்ளது! மண்ணுலகில் தானமும் உள்ளது. இவை எல்லாம் உள்ளபோதும், சிலர் 'எய்த்தோம், இளைத்தோம்’ என்று சொல்லித் தம்மை உணராமல் ஏமாந்துபோய் இருக்கிறார்களே! அத்தகைய, வாழும் வகையறியாத மக்களைச் சென்று நீ தாக்குவாயாக!” என்று, மீண்டும் அப் பேய்க்குக் கூறினார் ஔவையார்.

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் - ஆனபொழுது
எய்த்தோம் இளைத்தோமென் றேமாந் திருப்பாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

"வானமும் அழியாதே இருக்கின்றது. அவ் வானத்தினின்று மழையும் பெய்கிறது. மண்ணுலகில் தங்குவதற்கு இடமும் உளதாயிருக்கிறது. மக்களிடத்தே சிலரிடம் இரக்க குணமும் இருக்கிறது. இவை எல்லாம் இருக்கிறபொழுதும் இவற்றால் வாழ்வினைச் சீராக்க முனையாது, 'நாங்கள் களைத்துப் போயினோம்; இளைத்துப் போயினோம்' என்று சொல்லியபடி ஏமாந்து இருப்பவர்கள் சிலர். பேயே! நீ அத்தகையவரைச் சென்று தாக்குக தாக்குக தாக்குக!” என்பது பொருள்.