ஔவையார் தனிப்பாடல்கள்/திருகிப் பறிப்பேன்!

14. திருகிப் பறிப்பேன்!

வையாரை உபசரித்த கணவனின் நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது. அவன் அவரைப் போகவிடுவதாக இல்லை. இறைஞ்சியபடி கண்களில் நீர் மல்க அவரைப் பணிந்து வேண்டி நின்றான்.

'அவள் பிறந்த வேளைப் பயன் அப்படி! என் கதியும் இப்படியாயிற்று. அவளை மறந்துவிடுங்கள். எனக்காக மனம் இரங்குங்கள்’ என்றான்.

'அவள் பிறந்த வேளை' என்ற சொற்கள் ஔவையாரைச் சிந்தனைக்கு உள்ளாக்கின. இப்படிப்பட்ட பெண்களையும் படைத்தானே? 'அந்தப் பிரமனை என்ன செய்வது?'

'அவர் சினம் அந்தப் படைப்புக்கு நாயகன்மீது சென்றது. பெண்மையின் இலக்கணம் மென்மையும் அன்பு செறிந்த பண்பும் அல்லவோ அங்ஙனமிருக்கவும், இந்த அகங்காரியையும் அவன் எங்ஙனம் படைத்தான்?'

'படைத்ததுதான் செய்தான்; அது போகட்டும், அவள் அகம்பாவத்தை அடக்கும் உள்ளத்திண்மையுடைய ஒருவனையாவது அவளுக்குக் கணவனாக வகுத்திருக்கக் கூடாதா? உணர்வற்ற மரமாக இருக்கிறானே இவன்! இவனுக்கு அவளை வகுத்துப் பெண்மையைப் பிறர் கைகொட்டி நகைக்கச் செய்துவிட்டானே?'

அவனை, அந்தப் பிரமனை இப்போது கண்டால்..?

சிவனோடு தருக்கிப்பேசி முறைகெட்டு நடந்த அவனுடைய தலைகளில் ஒன்று, அந்தச் சிவனாலே அன்று அறுக்கப்பட்டுப் போய்விட்டது என்பர். அதுபோக எஞ்சி அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி நானே பறித்து எறிந்துவிட மாட்டேனோ?

இவ்வாறு குமுறினார் ஔவையார். படைப்புக்கு இறையவன் அவருடைய சினத்துக்கு உள்ளாகின்றான். 'அவள் பிறந்த வேளை’ என்ற கையாலாகாத கணவனின் சொற்கள், அவரை இவ்வாறு கூறச் செய்தது. அந்தப் பாடல்,

அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றன்
பிடத்தக்க மரமனையா னுக்கிந்த மானை வகுத்த
பிரமனையான் காணப் பெறின்.

“வற்றல் மரத்தினைப் போன்றவனான இந்த மனிதனுக்கு இத்தகைய பெண்ணை மனையாட்டியாக விதித்தவன் பிரமன் என்கிறான். அந்தப் பிரமனை யான் நேராகக் காணப்பெற்றால்.

முன்னால் சிவபெருமானாற் கிள்ளப்பட்டுப்போன ஒரு தலை நீங்கலாக அறுபடாமல் இருக்கும் நான்கு தலைகளையும் பற்றித் திருகி, யான் பறித்துவிட மாட்டேனோ?” என்பது பொருள்.

'மரமனையாளுக்கு இந்த மகனை வகுத்த' எனவும் மூன்றாவது அடி வழங்கும். அது 'வற்றல் மரம்போல அன்பற்ற இவளுக்கு இவனைக் கணவனாக விதித்த என்று பொருளைத் தரும்: அதுவும் பொருந்துவதே!

முதல் அடி, ‘அற்ற தலையின் அருகின் தலையதனை' எனவும் வழங்கும். 'அறுபட்ட தலைக்குப் பக்கத்திலுள்ள தலையை என்று அப்போது பொருள்படும்.

அந்தக் கணவனின் உள்ளத்தில் அவர் சொற்கள் ஆழப் பதிந்தன. அவன் துணிவு பெற்றான். இல்லற வாழ்வை வெறுத்து வெளியேறிவிடத் துணிந்தான். அதனை அடுத்த செய்யுள் கூறும்.

திருவள்ளுவரும் ஒரு குறளில் படைப்புக்கு நாயகனை நொந்து கொள்ளுகின்றனர்.

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’

என்பது அது.