ஔவையார் தனிப்பாடல்கள்/தேய்ந்த கொடை!

35. தேய்ந்த கொடை!

‘கோரைக்கால்’ என்னும் ஊரில் ‘ஆழ்வான்’ என்னும் பெயரினையுடைய ஒரு செல்வன் இருந்தான். அவன் மிகவும் கருமி. ஒரு செப்புக்காசினையும் வறியவர்க்கு வழங்கி அறிய மாட்டான்.

ஆனால், அவனுடைய செல்வமிகுதியினைக் கண்டு பலரும் மயங்கினார்கள். அவனை நாடிச் செல்வதும், அவனைப் போற்றிப் புகழ்வதும், அவன் மனம் உவக்கப் பழகுவதுமாகப் பலர் இருந்தனர்.

அவனுக்கு, இப்படி வலிய வரும் புகழை விட்டுவிடவும் விருப்பமில்லை. அதனால் வருகிறவர்களுக்கு பெரும் பரிசு தருவதாக வாக்களித்துத் தன்னைப் புகழுமாறு செய்து கேட்டு இன்புறுவான். முடிவில் ஏதாவது காரணங்களைப் புனைந்து, அவர்களைப் பல நாள் இழுத்தடித்து, அவர்களாகவே அவனிடம் ஏதும் எதிர்ப்பார்ப்பதைக் கைவிட்டு விடுமாறும் செய்து விடுவான்.

இந்த ஏமாற்றுக்காரனிடம் பல புலவர்கள் சென்று, இவனைப் புகழ்ந்து பாடி, ஏதும் பரிசில் பெறாது மனம் நொந்து சென்றனர். அவனை எதிர்த்து உரையாடுதற்கோ, குறைத்துப் பேசுதற்கோ வேண்டிய துணிவை எவரும் பெறவில்லை.

ஒரு சமயம், ஔவையார் அவ்வூருக்குச் சென்றார். அவனைச் சென்று கண்டார். ஔவையாரைப் பற்றி அவன் கேள்வியுற்று இருந்தான். 'அரசர்க்கு வேண்டியவர் அவரைப் பகைத்துக் கொள்வது கூடாது. அவரை நயமாகப் பேசியே அனுப்பிவிட வேண்டும்' இப்படி அவன் நினைத்தான்.

“உங்களுக்கு ஒரு யானையைப் பரிசுதரப் போகிறேன். நாளைக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி முதல் நாள் அவரை வழியனுப்பினான்.

மறுநாள், "யானைக்குத் தீனி போடுவது மிகச் சிரமம். ஒரு குதிரை தருகிறேன். ஏறிச் செல்வதற்கு உதவும். நாளைக்கு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

அடுத்த நாள், “குதிரையைவிட எருமை மாடு மிகவும் உபயோகமாக இருப்பது. அதனையே தரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அனுப்பினான்.

அதற்கும் அடுத்த நாள், எருமை எருதாயிற்று. ஔவையாரும் சளைக்காமல் சென்றார். எருதும் போய், புடவையாக ஆயிற்று. அதனைக் கேட்டதும் ஔவையார் சொன்னார். “நாளைக்குச் சேலை திரிதிரியாகப் போகுமோ?" என்று. அத்துடன், அவன் வீட்டில் தாம் பெற்ற அனுபவத்தைச் செய்யுளாகப் பாடி, அதனை அவன் வீட்டுச் சுவரிலேயே எழுதிவைத்தும் சென்றார்.

அந்தச் செய்யுள் ஊர் முழுதும் பரவலாயிற்று. அவனுடைய உண்மையான தன்மையினை அனைவரும் உணர்ந்து பழித்தனர். அவன் புலவர்க்குச் செய்த கேடும் அன்றுடன் நின்றது. அந்தச் செய்யுள் இது :

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

"கோரைக்காலிலே இருக்கும் ஆழ்வான் என்பவனின் ஈகை யானையாகி, குதிரையாகி, கருநிற எருமையாகி, எருதாகி, ஒரு முழப் புடவையாகி, முடிவில் அந்தப் புடவை திரிதிரியாய்க் கிழிந்து கந்தலாவதுபோல, எதுவும் இல்லாததாயிற்று. என் கால்கள் தேரைக்காலின் தன்மையடைந்தன. மிகவும் தேய்ந்து நடந்து நடந்து ஓய்ந்தும் போயின.(அதுதான் நான் பெற்றது)" என்பது பொருள்.

இந்நாளிலும் இப்படித் தாராளமாக வாக்களித்துக் கொண்டே, ஏதும் செய்யாமல் இருப்பவர் பலர். ஆனால் அவர்களைப் பாடிப் பழிப்பதற்கு ஔவையார்தான் இல்லை.