ஔவையார் தனிப்பாடல்கள்/நான்கு!

62. நான்கு!

லக வாழ்வில் மனிதரின் செயல் முயற்சிகள் பலபடியாக அமைகின்றன. இவற்றையெல்லாம் 'அறம் பொருள் இன்பம் வீடு' என்னும் நான்கினுள் ஆன்றோர் அடக்கிக் காண்பார்கள்.

நான்கான இவற்றை விளக்கி உரைக்க எழுந்த அறநூல்கள் கணக்கில் அடங்கா. இவை நான்கின் தத்துவப் பொருளை ஒரே செய்யுளில் அடக்கி, அனைவரும் எளிதாகப் புரிந்து மேற்கொள்ளும்படியாக உதவுகின்றார் ஔவையார்.

நம்மிடம் நிரம்பப் பொருள் இருக்கிறது. அதனை நாடி வந்து இரக்கின்றனர் இரவலர் சிலர். அப் பொருளை நாமே அனுபவிக்கலாமே என்று கருதி முடக்கி வைப்பது தர்மமா? செல்வம் நமதன்று; உலகிலே பெறும் இது, உலகினராகிய அனைவருக்குமே உரியது என்பதனை உணர்ந்து, வந்தவர்கட்கு மனமுவந்து ஈதல் வேண்டும். இவ்வாறு மனமுவந்து ஈதலே 'அறம்' எனப்படுவதாம்.

பொருள்களைத் தேடுவது கடமை. பொருளில்லாதவர்க்கு இவ்வுலக வாழ்வும் சிறப்பாக வாயாதன்றோ! இப் பொருளைத் தேடும் முறையில்தான் நீதி குறுக்கிடுகிறது.

தீய வழிகளால் சிலர் பொருளைச் சேர்ப்பார்கள். 'நாய் விற்ற காசு குரைக்குமோ?' என்று அதற்கு நியாயமும் பேசுவார்கள். இவர்கள் அறியாமையாளர்கள். பொருள் என்பது தீவினைகளைக் கைவிட்டுச் சம்பாதிப்பதுதான்.

பிறவெல்லாம் பொருளாக மாட்டா. 'தீவினை' என்பது இன்று வியாபார தந்திரம் என்று புனைவுக்குள் பதுங்கி உள்ளது: 'கலப்படம்' 'ஏமாற்று' 'கைக்கூலி' ஆகியவற்றையும் குறிப்பது.

அன்பினாலே இணைந்த இருவரும் தம் மனத்தாலும் ஒன்றுபட்டவர்களாக, ஒருவருக்கொருவர் ஆதரவாகக் கூடி இன்புற்று வாழ்வதே, 'இல்லற இன்பம்' ஆகும்.

'அறம், பொருள், இன்பம்' ஆகிய இம் மூன்றையும் கைவிட்டு விட்டுப் பரமனையே நினைத்திருக்கும் அந்த ஒரு நிலைப்பட்ட மனத்தோடும் கூடியதான தியானமே, வீடு அடைதற்குரிய வழியாகும்.

இதனால் 'வீடு' அடைய விரும்புகிறவர்கள் அறம் பொருள் இன்பங்களை அனுபவித்து முடிவிலே அவற்றிலே கொள்ளும் பற்றைத் துறந்துவிடல் வேண்டும் என்பது தெளிவாகும்.

ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

"அறம் என்பது உவப்போடு பிறருக்கு ஈதல். பொருள் என்பது தீவினைகளை நீக்கிவிட்டுத் தன் முயற்சிகளால் தேடிக் கொள்ளுதல். காதல் கொண்ட இருவர் எந் நாளும் தம்முடைய கருத்துக்களிலே இணைந்தவராக ஆதரவுபட்ட நிலையில் வாழ்ந்து வருதலே இன்பம். பரம்பொருளை நினைவிற்கொண்டு அறம் பொருள் இன்பமாகிய இவற்றின் பால் கொள்ளும் பற்றினை விட்டுவிடுவதே வீடு ஆகும். அதுவே நிலையான பேரின்பம் தருவதும் ஆகும்."