ஔவையார் தனிப்பாடல்கள்/நான்கு பிறை!
40. நான்கு பிறை!
ஒரு சமயம் சோழனுடைய புலவரவையிலே கம்பர், ஔவையார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்கள் கூடியிருந்தனர். மற்றும் பலப்பல தமிழறிந்தார்களும் குழுவி இருந்தனர்.
அவ்வமயம், ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இடையே மனக்கசப்பு நிலவிவந்த காலம். அதனால், கூத்தர் சமயம் கிடைத்தபோதெல்லாம் புகழேந்தியாரைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டார்.
கூத்தர் முதியவர்; சிறந்த புலவர். அரசனுக்கு மிக வேண்டியவர். அந்த அவையின் தலைவராகவும் விளங்கினார். எனினும், புகழேந்தியாரைக் கண்டால் ஏனோ அவர் உள்ளம் குமுறியது. அவரை மடக்கி விடுவதிலேயே எப்போதும் கவனம் செலுத்தினர்.புகழேந்தியும் நற்றமிழில் வல்லவர். அரசிக்குக் குருவாக இருந்து அவருடன் சோழ நாட்டிற்கு வந்தவர். கூத்தரின் சொல்லம்புகளை எல்லாம் தம் பொறுமையினால் தாங்கிக் கொண்டு வென்று வந்தார்.
அன்றும், விவாதம் எங்கோ சென்று, இறுதியில் கூத்தரும் புகழேந்தியாரும் ஒருவரோடு ஒருவர் கடுஞ்சொல் நிகழ்த்தும் அளவிலே வளர்ந்து கொண்டிருந்தது. மற்ற புலவர்கள் அது என்றும் காணும் காட்சியாதலால், எதுவும் பேசாது அந்தப் புலமைச்சண்டையிலே எழுகின்ற தமிழ் வெள்ளத்தைச்சுவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஔவையாரால் அந்தப் போக்கைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலவில்லை.
"கூத்தரே, இத்துணைப் பெரிதுபடப் பேசும் நீர் மூன்று பிறை வருமாறு ஒரு செய்யுள் இயற்றும் கேட்போம்” என்றனர்.
கூத்தர் புன்சிரிப்புடன், 'வெள்ளத் தடங்காச் சினவாளை’ என்ற செய்யுளைச் சொன்னார். அதில் இரண்டு மதியே வர, ஔவையார் "ஒட்டா மதிகெட்டாய்!” என்று கூற, கூத்தர் தலைகவிழ்ந்தார்.
பின்னர் புகழேந்தியார், 'பங்கப்பழனத்து' எனத் தொடங்கும் பாடலைச் சொல்லி மூன்று பிறை முறையே வரச்செய்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.
தாம் தோற்றுப் புகழேந்தி பாராட்டப் பெற்றதைக் கண்ட கூத்தர் சினங்கொண்டார். “எம்மைப் பாடச் சொன்ன தாமே பாடுதற்கு இயலுமோ?” என்றார்.
“மூன்றென்ன? நான்கு பிறையே வருமாறு பாடுவேன்” என்று உரைத்து, ஔவையார் பாடிய செய்யுள் இது;
செம்மான் கரத்தனருள் சேயா நெடியோனை
அம்மான் எனப்பெற்ற அருள்வேலா - இம்மான்
கரும்பிறைக்கும் வெண்பிறைக்கும் கண்ணம் பிறைக்கும்
அரும்பிறைக்கும் கூந்தல் அணை.
கூத்தர் பாடியது
வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
துளியோ டிறங்கும் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த
கண்டா வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டெம்பேதை
பெரிய மதியும் இழந்தாளே!
புகழேந்தி பாடியது
பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா!
கொங்கைக் கமரா பதியளித்த
கோவே ராஜ குலதிலகா!
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்தம் பிறைக்கும் விழிவேலே!