ஔவையார் தனிப்பாடல்கள்/நெல்லித் தீங்கனி!

566625ஔவையார் தனிப்பாடல்கள் — நெல்லித் தீங்கனி!ஔவையார் (தனிப்பாடல்கள்)

109. நெல்லித் தீங்கனி!

தியமான் தமிழார்வத்தோடு, தமிழ் மருத்துவ முறைகளுட் பலவற்றை அறிந்தவனாகவும் இருந்தான். அவனுடைய தகடூர் மலைச்சாரலும், அந் நாளிலே வளமுடனும் செறிவுடனும் திகழ்ந்தது.

அந்த மலைச்சாரலிலே, ஒரு பாறைப் பிளப்பின் உச்சியிலே, ஒரு கருநெல்லி மரம் இருந்தது. அதனை, ஒருநாள் மலைவளம் காணக் கருதிச்சென்ற அதியன் கண்டுவிட்டான். அவன் உள்ளத்திலே அளவற்ற மகிழ்ச்சி பிறந்தது.

காடு காவலரை அதியன் அழைத்தான். “இந்தக் கருநெல்லி மரத்தை நன்றாகப் பேணி வாருங்கள். இதனுடைய கனி மிகவும் சிறப்பானது.பல ஆண்டுகட்கு ஒருமுறைதான் இம்மரம் காய்ப்பது இயல்பு. அதனால், இதன் கனிகளை எல்லாம் விழிப்புடன் சேகரித்து எனக்கு அனுப்புவீராக” என்றான் அவன்.

காடு காவலரும் அரசனாணையை ஏற்று, அப்படியே செய்வதாக உறுதியும் கூறினார்கள்.

பல மாதங்கள் கழிந்தன. ஒருநாள், அதியமான் அவையில் அமர்ந்திருந்தபோது, காடு காவலர்களுட் சிலர் அங்கே வந்தனர். அரசனைப் பணிந்து சில நெல்லிக்கனிகளை அவன் முன்பாக வைத்தனர்.

“அரசே! தாங்கள் குறித்த மரத்திலே கிடைத்தவை இவை. இவற்றைச்சிதையாமற்கொய்வதற்கு மிகவும் இடருற்றோம்.தங்கள் ஆர்வம்தான் எங்களை ஊக்கியது. எப்படியோ கொய்து கொணர்ந்து விட்டோம், ஏற்றருள்க" என்றனர்.

அவர்களைப் பாராட்டிச் சில பரிசுகளையும் வழங்கி விடுத்த பின்னர், அதியமான் கனிகளுடன் அரண்மனையுட் சென்றான். ஓரிடத்திலே அமர்ந்து, அவற்றை உண்ணக் கருதியவனாக, ஒன்றைக் கையில் எடுத்தான். அவன் கை அப்படியே மேலெழாமல் தடைப்பட்டது. கனியைக் கீழே வைத்துவிட்டுக் காவற்காரனை அழைத்தான் அவன்.

"நீ சென்று, ஔவையாரைக் கையோடு அழைத்து வருக” என்றான்.

ஏவலனும் சென்று, அரசனாணையை ஔவையாரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக் கொணர்ந்து அதியனிடம் சேர்ப்பித்தான்.

"சுவையான இந்த கனிகளை உண்ணுக" என்றுகூறி, அவற்றை ஔவையாரின் முன்பாக நீட்டினான் அதியன்.

"நீயும் நின் மனைவி மக்களும் உண்டாயிற்றோ?" என்றார் ஔவையார்.

"யாங்கள் உண்டாயிற்று, இது தங்களின் பங்கு” என்றான் மன்னன்.

ஔவையாரும் அந்தக் கனிகளை உண்டபின், நீர் அருந்தி விட்டு, அதன் இனிமையை வியந்தவராக, அதியன் அருகே அமர்ந்தார்.

“அரசே! இந்தக் கனியை உண்பதற்கோ என்னை விரைந்து வரச் செய்தனை” என்று ஔவையார் கேட்டனர்.

"ஆமாம்! இது கருநெல்லியின் கனி. இதனை உண்பவர் நெடுநாள் வாழ்க்கையினர் ஆவர். இதனை அறிந்த யான் மிக முயற்சியுடன் இவற்றைக் கொணரச் செய்தேன். ஆனால் உண்ண எடுத்தபோது தங்களின் நினைவு வந்தது. யான் போரே தொழிலாகிவிட்ட நாடு காவலன். இதனை உண்டு என் உடலை வலிமையாக்குவதாற் பயன் யாதுமில்லை. தங்களை உண்ணச் செய்தால், நெடுநாள் தாங்கள் தமிழ்ப்பணியைத் தொடரக் கூடுமென்று கருதினேன்.நான் உண்பதை நிறுத்திவிட்டுத்தங்களை அழைத்து வரச்செய்து உண்ண வைத்தேன்” என்றான் அதியன்.

அதியனின் அளவற்ற அன்பை அறிந்ததும், ஔவையாரின் உள்ளம் பெரிதும் கனிந்தது. தாம் நெடுநாள் வாழக் கருதுவதுதான் உலகினரின் இயற்கை. அதற்கு மாறாகத் 'தன்னினும் தமிழறிஞர் வாழ்வதே சிறப்பானது' என்று கருதினான் அதியன். அவன் அன்பு வியக்கத்தக்கது! அவன் செயல் போற்றத்தக்கது!

‘தேவர்கள் அமுதம் கடைந்தபோது, அதனிடையே கொடிய நஞ்சும் எழுந்தது. அதனால் தேவர்கள் நடுநடுங்கினர். அப்போது சிவபிரான் நஞ்சை அள்ளித் தானே உண்டான். அது அவன் கழுத்திலே நின்று, செம்மேனிச் செல்வனின் கண்டத்தை நீலகண்டமாக ஆக்கிற்று. தேவர்கள் அதன்பின் அமுதைக் கடைந்து எடுத்து, உண்டு, சாவை வென்றவராயினர்.

தேவர்களை வாழ்விக்கக் கருதித் தான் நஞ்சையுண்டு அருளாளனாக நின்ற அந்த நீலமணிமிடற்றணின் செயலையும், அதியனின் செயலையும் ஒன்றாகவே எண்ணி இன்புற்றார். அவர் முகத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் இணைந்து நிழலாடின.

“யான் சொன்னவை அனைத்தும் உண்மையே. இதனை யுண்டவர் நீண்ட நாள் வாழ்வர். அதனைத் தாங்கள்தாம் அடைதல் வேண்டும். அதற்கே தங்கட்கு ஊட்டினேன், முதலிற் சொல்லியிருந்தால் தாங்கள் உண்ணாது என்னை உண்ணுமாறு வற்புறுத்தியிருக்கவும் கூடும்! அதனையும் விலக்கவே, இவ்வாறு செய்தேன்” என்று அதியன் மீண்டும் கூறினான்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்,
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே!

இவ்வாறு தமிழ் மணக்கும் செய்யுளால், அந்தச் செயற்கரிய செயலை வியந்து பாடிப் பரவசமுற்றார் ஔவையார். அந்தச் செய்யுளைக் கேட்டுப் பெருமிதங் கொண்டான் அதியன். அவன் காலத்தையும் கடந்த புகழ் வாழ்வைப் பெற்றுவிட்டான்!

"பார்த்தீர்களா இப்பொழுது யானும் நெடுநாள் என்ன, என்றைக்கும் வாழும் நிலைபேற்றை அடைந்து விட்டேன். தங்கள் செய்யுள் தமிழுள்ளவரை வாழும்; அது வாழும்வரை யானும் வாழ்வேன்” என்று கூறிக் களிப்பிலே திளைத்தான் அதியமான்.

அவனது பேரன்பின் முதிர்ச்சியையும், வள்ளன்மையின் உயர்ச்சியையும் உன்னியபடியே, ஔவையாரும் களிப்பு அடைந்தார்.

இந்த நெல்லிக்கனி, உண்டாரை நெடுநாள் வாழவைக்கும் சக்தி படைத்தது என்றும், இதனை உண்டதனாலேயே ஔவையார் நெடுநாளைய வாழ்வினராயினர் என்றும் கூறுவார்கள். இதனைப் பற்றிய மற்றொரு செய்யுளை முன்னர்க் கற்றிருப்பீர்கள் (செய்யுள் 90). அதனையும் இங்கே நினைக்கவும்.